ப்ரத்யேகம்!


திருமணம் என்னும் நிக்கா படத்தில், "என் தாரா என் தாரா நீயே என் தாரா" பாடலை கேட்டிருக்கின்றீர்களா? இந்தப்பாடலின் ஒரு வரியை கார்த்திக் நேத்தா, "ப்ரத்யேக மௌனம் நீ கொண்டு வந்தாய் என் வாா்த்தை ஆனதே!" என்று எழுதி இருப்பார்.. யார் யாரிடமோ ஆயிரம் ஆயிரம் சொற்கள் கேட்டாலும் ஒருவரின் மௌனம் மனதை முழுதாய் நிறையுமெனில் அதுதான் ப்ரத்யேகம்..! நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? 

காதல் மொழிகளிலேயே மிக உயர்ந்த மொழி மௌனம் தான்.. மற்றவர்களுக்கு அது வெறும் சப்தமின்மை..ஆனால், நேசிக்கும் இருவருக்குள் அந்த மௌனத்தில் ஓராயிரம் வார்த்தைகள், நூறு கவிதைகள், பல சிறு ஊடல்கள் பரிமாறப்படும். அந்த ப்ரத்யேக மௌனத்தை வாசிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே ஒருவரின் வாழ்நாள் காதலையும் வாசிக்க முடியும்.. ஆதலால் தான், "காதல் என்பது ப்ரத்யேக தேடல்" ஆகிறது.. தன் மௌனத்தைப் புரிந்துகொள்ளும் அந்த ஒருவரைத் தேடும் முடிவற்ற, இனிமையான பயணமே காதல் என நான் எப்போதும் நினைப்பதுண்டு
 
"உங்களுக்கென்று பிரத்யேகமாக ஒளிர்கிற வெளிச்சத்தில் நீங்கள் யாரை நிறுத்திப் பார்க்கத் துடிக்கிறீர்களோ, அவரே உங்கள் முதல் கனவும் நேசமும் ஆகிறார்.." என்ற இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதிய சொற்களாக அந்த வெளிச்சம், சூரியனோ நிலவோ தரும் வெளிச்சம் அல்ல. அது நம் உள்ளங்கைக்குள், நம் கற்பனையில் நாம் பொத்தி வைத்திருக்கும் உயிரின் வெளிச்சம்! அந்தப் ப்ரத்யேகமான ஒளியில் எல்லாரையும் நாம் நிறுத்திப் பார்த்துவிட முடியாது. யாரை நிறுத்தும் போது அந்த வெளிச்சம் இன்னும் பிரகாசமாகிறதோ, யாரை நிறுத்தும் போது மனம் "இவர்தான் என் உலகம்" எனச் சரணடைகிறதோ... அவரே வாழ்வின் முதல் கனவாகவும், தீராத நேசமாகவும் உருமாறுகிறார்..

இந்த உலகத்தில் நமக்கென்று ஒரு தனித்துவமான கைரேகை இருப்பதைப் போல, நமக்கென்று ஒரு ப்ரத்யேகமான வானம் இருக்கிறது.. அந்த வானத்தில் நமக்கென மட்டுமே ஒரு நட்சத்திரம் பூத்திருக்கும். அந்த பேரன்பை இன்னொருவரிடம் கடனாகவும் பெற முடியாது, திருடவும் முடியாது. அது நமக்காக பிறந்து வாழ்நாள் முழுதும் நம்மோடு மட்டுமே பயணிக்கக் கூடிய, உலகத்தில் ஒன்றே ஒன்றான பொக்கிஷம்.......அதுவே ப்ரத்யேகம்!

உதாரணமாக நாம் எப்போதும் தூறல் மழை என்று நனைந்திருப்போம் எல்லோரும் நனையும் மழை தான்! ஒருவரோடு நடக்கும்போது மட்டும் கவிதையாவது ப்ரத்யேகம்! எத்தனை குரல்கள் ஒலித்தாலும்  ஒரு குரல் மட்டும் இதயத்தின் கதவை நேரடியாகத் தட்டுவது ப்ரத்யேகம்..! கடப்பவர்கள் எல்லோருக்கும் நின்று பதிலளிக்க முடியாது தானே.... ஏதோவொரு இடத்தில் மனம் தேங்கிப்போகும்... மண்டியிட்டு நிற்கும்.... இறுகப்பற்றிக்கொள்ளும். எல்லாவிடத்திலும் தேங்குதென்றால் அது குட்டை. ஒருவிடத்தில் தேங்கினால் ப்ரத்யேகம் !
 
"ப்ரத்யேகம்" என்ற சொல்லுக்கு "தனித்துவம்", "சிறப்பு", அல்லது "தனிப்பட்ட" என்று பொருள் 

No comments:

Post a Comment

பதிவுகள்

பிரண்டை (வச்சிரவல்லி) தொக்கு

கொஞ்ச நாளைக்கு முன்னர் நான் ஊர் சுற்றிய போது பிரண்டைச் கொடிகள் கிடைத்திருந்தன. சரிடியென்டு அதனை விட்டுக்கொண்டு வந்து வீட்டிலிருக்கும் அக்காவ...

அதிகம் பார்க்கப்பட்டவை