எடை போடல்

வீட்டில் ஏதாவது பொருட்களை வாங்கிவந்தால் சும்மா கைகளால் தூக்கி பார்த்து அண்ணளவாக இத்தனை கிலோ இருக்கும் என்று எடை போட்டு பார்த்துள்ளீர்களா? அப்படித்தான் மனிதர்களை கூட அவர்களது சிறு சிறு செயல்கள் வைத்து நம்மால் எடை போட முடியும் அல்லவா?

நான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் பொறளை புனித அந்தோனியார் விடுதியில் தான் தங்கியிருந்தேன். நான் கத்தோலிக்க மதத்தவள் என்பதாலும் கொழும்பில் படிக்கும் பெண்களுக்கு இந்த விடுதி மிகவும் பாதுகாப்பான விடுதி என்பதாலும் அம்மா எம்முடைய பங்குத்தந்தை மூலம் அனுமதி பெற்றிருந்தார். உண்மையில் பாதுகாப்புடன் இங்கு ஒழுக்கமும் நேர அட்டவணையும் ஒழுங்காக பின்பற்றப்பட்டு வந்தமையும் இவ்விடுதியினை பெண்களது குடும்பத்தினர் விரும்பியமைக்கு இன்னொரு காரணம் என நினைக்கின்றேன். எமது விடுதி வளாகத்திலேயே சிறு தேவாலயமும் பாலர் பாடசாலையும் அருட்சகோதரிகளுக்கான மடமும் என பெரியதொரு வளாகம் அது. ஆனால் இப்போது வேண்டுமானாலும் உள்ளே எட்டிப்பாருங்கள் ஓரு குப்பை, வாடிய மரம் எதையும் காணமாட்டீர்கள் அந்தளவு சுத்தம். இதன் பின்னுள்ளது அங்கு தங்கியிருக்கின்ற மாணவிகள், அருட்சகோதரிகள் கடைப்பிடிக்கின்ற தூய்மைப்படுத்தலுக்கான நேர ஒழுங்கு. 

என்னை சேர்ப்பதற்காக வந்த போதே அம்மாவிற்கு இந்த தூய்மை பிடித்துப்போய்விட்டது. என்னை விட்டுவிட்டு வரும் போதும் சொன்னதொருவிடயம் இங்கு உங்களுக்கு படிப்பதற்கு மட்டுமல்ல உங்கள் பண்பை வளர்க்கவும் தளம் கிடைக்கும் என்பது தான். எனக்கென்னால் சட்டியிலிருந்து எம்பிக்குதிக்க அடுப்பில் விழுந்த கதை தான். எற்கனவே எங்கள் வீடு இராணுவ முகாம் போல தான் இயங்கும். லெப்டினன் கேர்ணல் நளினி கடிகார முள் சுணங்கினாலும் நேரவிடயத்தில் சுணங்க மாட்டார். நாலு மணிக்கே நம்மையும் எழுப்பி படிக்க வைத்து தானும் எஸ்.எல்.ஏ.எஸ் எல்லாம் படித்தவர் அவர். குசினியிலும் சமையல் நடக்கும் அதேவேளை அவர் ஐம்புலனில் இரண்டு தசம் ஐந்து அதாவது சரி பாதி எம்முடைய படிப்பில் இருக்கும். இப்படிப்பட்ட ஆளிட்ட வளர்ந்து இனியாவது பல்கலைக்கழகம் போய் தனியறை எடுத்து தனியாகவிருந்து நல்லா விளையாடுவம் என்டு நினைக்க இங்கே இஸ்ரேல் இராணுவம் போன்ற பொறளை புனித அந்தோனியார் விடுதியில் என்னை சேர்த்துவிட்டார் லெப்டினன் கேர்ணல் நளினி. (இதற்கு பரிந்துரை செய்த பங்குத்தந்தையும் வாழ்க) 

காலையில் 4.30 மணிக்கு தேவாலய மணி ஒலிக்கும் 5 மணிக்கு திருப்பலி ஆரம்பமாகிவிடும். அதுவும் ஆங்கில திருப்பலி. முன்னுக்கு போய் பைபிள் வாசிப்பதற்கும் ஒழுங்குண்டு. இந்த நாளில் இவர்கள் வாசிக்க வேண்டும் என்கின்ற நேரசூசி பொறுப்பாகவிருந்து அருட்சகோதரியில் வாசலில் தொங்கும். அதன் அடிப்படையில் நாளை நாம் வாசிக்க வேண்டியிருப்பின் முதன் நாளே இரவு அவருக்கு வாசித்துக்காட்ட வேண்டும். திருத்தங்கள் இருந்தால் சொல்லித்தருவார். திருப்பலி முடிய விடுதிக்கு வந்தால் கோப்பி பில்டரில் இருக்கும். 7 மணிக்கு காலையுணவு என்று இரவு படுக்கும் வரை கூட நேர அட்டவணை தான். ஆனால் இதில் எனக்கொன்றும் இவ்வளவு கடினம் இருக்கவில்லை. எல்லாம் லெப்டினன் கேர்ணல் நளினியின் வளர்ப்பு. சோம்பல் பிடிக்கும் நாட்களில் மட்டும் இவர்கள் எல்லாரையும் திட்டிதீர்ப்பதுண்டு. (மனதுக்குள்….. )

விடுதி அருட்சகோதரி திடீரென எமது அறைகளுக்கு விஜயம் செய்வார். வந்தவரத்தில் படுக்கை விரிப்புக்கள் ஒழுங்காகவுள்ளதா என பார்ப்பார். இல்லாட்டி கூப்பிட்டு திட்டி விரிக்க வைப்பார். மற்றது ஹங்கரில் உள்ள உடுப்புக்கள் ஒழுங்காக இல்லாமல் அல்லது நிறைந்திருந்தால் அனைத்தையும் அள்ளி கீழே போடுவார். அடுத்ததாக அலுமாரிகளை திறப்பார். சிலருடையது திறக்கும் போதே கொட்டும். இன்னும் சிலர் அலங்கோலமாக மடிக்காமல் சுருட்டி வைத்திருப்பார்கள். அவற்றினை ஒரே இழுவையில் கீழே இழுத்து போடுவார். என்னடா இது ஒரு அருட்சகோதரி இப்படியா செய்வது என்று எனக்குள் ஆச்சரியமாகவிருந்தது. தினசரி அதிகாலை திருப்பலிக்கு போய்க்கொண்டிருந்த நாலைந்து சிறகு முளைக்காத சம்மனசுகளில் நானும் ஒருத்தி. (இது அந்தகால கதை. இப்போது கொம்பு முளைக்காத சாத்தான்). போதாதற்கு எமது தோட்டத்தில் ஒக்கீட் செடிகளை வளர்த்து பூக்களை பீட அலங்காரங்களிலும் பயன்படுத்தி வந்தேன். எனவே அருட்சகோதரிக்கு என் மேல் தனி பாசம். இவ்வாறானதொரு பாசப்பொழுதில் ஒரு நாள் அவர் நன்றாக மனம்விட்டு கதைத்துக்கொண்டிருந்த நேரத்தில் ஏன் இப்படி மாணவிகளின் உடைகளை இழுத்து போடுகின்றீர்கள் என்று கேட்டேன். “ அலுமாரி என்பது நம்முடைய உள் மனது போன்றது. மனம் குழப்பமென்றால் தான் அலுமாரியும் குழம்பும். அலுமாரியை சீராக வைத்திருப்பவர்களது மனமும் சுத்தமாகவிருக்கும்.” என்றார். இதை அம்மாவிடம் சொன்ன போது;. “நாம் பதற்றமாக , தெளிவில்லாமல் இருக்கும் போது உடை தெரிவுகளிலும் நிதானமின்றி இருப்போம். எனவே அலுமாரி குப்பையென்றால் மனமும் பதற்றத்தில் நிதானமிழந்து குப்பையாக இருக்கும்” என அம்மா இதனை உளவியல் ரீதியான எனக்கு விளங்கப்படுத்தினார்.

இதேபோன்று தான் வாசலில் செருப்புகளை அங்குமிங்குமாக போடுபவர்கள், காலையில் எழுந்தவுடன் படுக்கை விரிப்பை சீராக்காதவர்கள், மலசல கூடங்களை நேர்த்தியாக வைத்திருக்காதவர்கள் குறித்தும் உளவியல் இருப்பதாக சொன்னார். உண்மை தான் போல! இதனை இன்று சமூக ஊடகங்களும் எமக்கு காட்டுகின்றன. அல்லது ஒருவரை குறித்து எடைபோட வைக்க உதவுகின்றன. அண்மைய நிகழ்வான “சுடுவன் நாயே” உம் இதே வகை தான். 

ஒரு சகோதரி தனக்கு வந்த உள்பெட்டி உரையாடலை என்னுடன் பகிர்ந்திருந்தார். இன்று அநேகர் முகநூலை தம்முடைய துணையை தேர்வதற்கான தளமாக பாவிக்கின்றார்கள். அதிலொரு வகை தான் இதுவும். முதலில் முகநூல் பதிவுகளையும் அதற்கு கருத்தூட்டம் இடுபவர்களையும், விவாதிப்பவர்களையும் ஆராயுங்கள். இது குறித்த நபரின் சுற்றம் குறித்து உங்களுக்கு தெளிவுபடுத்தும். 

அடுத்தது உங்களை வாழ்க்கைத்துணையாக தேர்ந்தெடுக்க நினைப்பவர்கள் உங்களுடனான உறவை வெளிப்படையாக வெளிப்படுத்த முயல்வார்கள். உள்பெட்டியில் மட்டும் வந்து அலட்ட மாட்டார்கள். இன்னுமொன்று முக்கியமானது ஒருவர் சமூகத்தில் நேர்மையானவராகவிருந்தால் தன்னுடைய குடும்பத்தினை சமூகத்தில் அறிமுகம் செய்திருப்பார். அதற்காக அடிக்கடி படம் போட்டு, வாழ்த்து சொல்லி அலட்ட வேண்டும் என்பதுமில்லை. சிலர் தாம் பெரிய ஆள் என்றும் அதனால் குடும்பம் குறித்து பகிர்ந்தால் பிரச்சினை வருமென்றும் அலட்டிக்கொள்வார்கள். உண்மையில் அழுத்தம் இருந்தாலும் நாம் நேர்மையாகவிருந்தால் நம் குடும்ப படத்தினை வைத்து யார் என்ன செய்திட முடியும்? நேர்மைக்கு எப்போதும் தைரியம் இருக்கும். 

இது அனைத்தையும் தாண்டி நம்மை உண்மையில் நேசிப்பவர்களாயிருந்தால் நாம் அவர்களை விட்டு விலகும் போது நம்மை தேடி நெருங்க முயல்வார்கள். நீங்கள் நூற்றில் ஒன்று என்றால் உங்கள் இருப்பு அல்லது இழப்பு அவரை பாதிக்கப்போவதில்லை. கானல் நீரை நம்பி ஓடிப்போகாமல் நின்று நிதானமாக அவர்கள் செய்கைகள், சமூக ஊடக பகிர்வுகள் என்பனவற்றினை வைத்து ஒருவரை எடைபோடப் பழகுங்கள். நம்மை மனமாற நேசிப்பவர்கள், நம்முடன் வாழ விரும்புவர்கள் முக்கியமாக இருவருக்கிடையான அந்தரங்கங்களை மூன்றாம் நபருடன் பகிரமாட்டார்கள். அப்படியே பகிர்ந்தாலும் முதிர்ச்சியானவர்கள், நேர்மையானவர்கள் மூலம் நம்மை அணுகமுயற்சிப்பார்கள். நாம் எடைபோடுவது நூற்றுக்கு நூறு சரியாகவில்லாவிட்டாலும் நூறு வீதமுமே பிழையாகாது. 

எனக்கு ஒருவரை பிடித்துப்போனால் அன்பை புரியவைக்க முயற்சிப்பேன். அவர் குடும்பத்தை தெரிந்துகொள்ள முயல்வேன். பிடித்திருந்து அவரும் அன்பை எனக்கு உணர்த்திவிட்டால் முதலில் என் வீட்டில் அறிமுகஞ்செய்வேன். என் தெரிவு குடும்பத்திற்கும் பிடிக்கும் அல்லது போக போக பிடிக்க வைப்பேன். அடுத்த கட்டமாக நண்பர்களை அறிமுகஞ்செய்வேன். எனக்கான பொறுப்புங்கள், அல்லது எம்மிருவருக்கும் எதிர்காலம் குறித்து உள்ள பொறுப்புக்களை உணர்த்த முயல்வேன். எந்தளவு என் துணையிடம் நேர்மையை எதிர்பார்க்கின்றேனோ அதேயளவு நேர்மையாகவும் நடக்க முயற்சிப்பேன். எனவே நான் நினைப்பதை போன்று நீங்களும் நினைத்தால் ஒருவரை எடைபோட்ட பின் பழகுங்கள். பழகிய பின் எடைபோடாதீர்கள். ஏனென்றால் இப்படி செய்தால் நீங்கள் உங்கள் மரியாதையில் எடை குறைந்திருப்பீர்கள். 

அதற்காக எடைபோடுவதை ஒருவரது தோற்றம் , உடை என வெளியலங்காரங்களை வைத்தும் எடை போட்டுவிடாதீர்கள். சில நேரம் சிலர் வெறும் செருப்புடன் நிறமிழந்த உடையுடன் சுற்றுவதால் அவர்கள் ஏழ்மையானவர்கள் என்று அர்த்தமல்ல. நிறையவிருந்தும் எளிமையாகவிருப்பவர்களாகவிருக்கலாம். அமைதியாக இருப்பவர்களுக்கு எதுவும் தெரியாது என எடை போடாதீர்கள் நிறைகுடங்கள் தளும்புவதில்லை. ஒருவர் முகப்பூச்சின்றி இருக்கின்றார் என்றால் அவர் அசிங்கம் என்றல்ல அர்த்தம். பல சந்தர்ப்பங்களில் மனதில் சிறந்த அழகுள்ளவர்களாகவிருக்கலாம். நம் முன்னால் அழுதால், கண்கலங்கினால் பலவீனமானவர்கள் என்று எடைபோடாதீர்கள். அழுகை உடைதலின் அடையாளமே தவிர கோழைத்தனமல்ல. மனதை எடைபோட, பண்புகளை எடை போட , ஒருவரின் நேர்மையை எடைபோட பழகுங்கள். ஒருவரின் குடும்பத்தை ,நண்பர்களை ,சுற்றத்தை எடைபோட பழகுங்கள் வாழ்க்கை அழகாகும் 


No comments:

Post a Comment

பதிவுகள்

நேர்கோடு வட்டமாகலாம்!

எங்களது தலைமுறை ஒரு வகையில் மிகவும் முரண்பட்ட மனநிலையுடையதொன்று. நாங்கள்  வாழ்ந்த போரியல் வாழ்க்கை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்று எம்...

அதிகம் பார்க்கப்பட்டவை