இன்று இங்கு வந்திருப்பதும் அமர்ந்திருப்பதும் “ மருதம்” திட்டத்திற்கான முன்னெடுப்புகளுக்காகவே. நேற்று இங்கு மாமியின் வீடு வந்து சேரும் போது இரவு ஒன்பதாகிவிட்டது. குளித்து, கதைத்து, சாப்பிட்டு, மாமி தலையுனாவ அப்பயே நித்திரையாகும் போது பன்னிரெண்டை தாண்டிவிட்டது. அதிகாலையில் கோப்பி போட்டுக்கொண்டிருந்த மாமியை பின்னால் நின்று அணைத்து செல்லம் பொழியும் போது “ ஏன் பிள்ள இப்ப எழும்பினனீர்? கொஞ்சம் படுமனப்பா… அப்படியென்ன அவசரம்…” என்று தான் அன்பாக கடிந்துகொண்டார். நான் கடற்கரைக்கு போகனும் என்றவுடன் மாமாவும் கூட்டிப்போக தயாராகிட்டார். “இல்லை நான் தனியே போகப்போறன். கொஞ்சம் எழுத்து வேலை இருக்கு…” என்று சொல்லி அவரையும் நிறுத்தியாச்சு. “தனியே போய் ஏதாவதென்டால் உம்மட வீட்டாக்கள் எங்கள கேள்வி கேட்பாங்க…” என்று சொல்லி இரு தலைதெறிச்ச பதின்ம வயது மச்சான்களை வரவழைத்து என்னுடன் அனுப்பியிருக்கின்றார்கள். இவர்கள் என்னை பாதுகாக்க வந்தார்களா அல்லது இன்று பாடசாலைக்கு கட் அடிக்க சாட்டுக்கு நான் கிடைத்தேனா என்று எனக்கு புரியவில்லை. மாமி வேறு எனக்கு பிடிக்கும் என்று செய்து வைத்திருந்து முறுக்கு, கறுப்பு எள்ளுருண்டை, காலையில் அவித்த புட்டும் நேற்றைய இரவு நாட்டுக்கோழி குழம்பும் முட்டைப்பொரியலும் பார்சல், பனங்கிழங்கு ஒடியல் என ஒரு மூடையை என்னுடைய சாரதியிடம் எனக்கும் தெரியாமல் கொடுத்து வேறு விட்டிருக்கின்றார். அதனையும் தங்களது பெற்றோர் கொடுத்தனுப்பிய கள்ளத்தீன்களையும் மெல்ல ஆரம்பத்தித்திலிருந்து இந்த பாதுகாவலர்களின் இலட்சணம் எனக்கும் புரிகின்றது. சாப்பாட்டு ராமன்கள் என் மச்சான்கள். எதுவாகினும் அர்ச்சுணனின் இலக்கு மரத்திலிருக்கும் கிளி தானே…! எனவே தனியே தள்ளி வந்து கிறுக்கிக்கொண்டிருக்கின்றேன் நான்.
இன்று மாலை எமது வயல்வெளியில் குறித்த விடுதியமைப்பதற்கான இடம் பார்க்க போவதாக ஏற்பாடு. அதற்காக தான் இந்த முன்னாயர்த்தங்கள். பச்சைப்பசேல் என்ற வயலுக்கு நடுவிலும் கதிரறுக்கும் காலங்களில் கபிலமும் சூழவுள்ள நிலப்பரப்பில் அமைக்கும் கட்டடத்திற்கு என்ன நிறம் கொடுக்கலாம் என்பது முதல் அங்கிருக்கின்ற உயிர்ப்பல்வகைமையை குழப்பாத வகையில் எப்படி எம்முடைய திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்பது குறித்து மூளையை கசக்கிக்கொண்டிருக்கின்றேன். வரைபடங்கள் ஓரளவு எம் குழுவினர் இணைந்து தயாரித்துவிட்டோம். ஏனைய தீர்மானங்கள் குறித்து தான் தற்போதைய யோசனை.
இருந்த இடத்திலிருந்து சற்றுத்தள்ளி நண்டுக்குஞ்சுகள் மறைவதும் மேலேருவதுமாக இருந்தன. இவற்றின் விளையாட்டில் சற்று கவனம் திரும்ப பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு பூச்சியும் ஓடி வந்தது. திடீரென நண்டுக்குஞ்சுகளை காணவில்லை. எப்படி மறைந்திருக்கும் என யோசிக்கும் போது வந்த பூச்சினை கவ்விவிட்டது ஒரு நண்டு குஞ்சு! அட இவ்வளவு நேரமும் அதேவிடயத்தில் தான் இருந்திருந்திருக்கின்றது. அப்படியென்றால் நிறம் மாறியிருக்குமா? பச்சோந்தி போன்றவை தானே அவ்வாறு நிறம் மாறும் என்றறிந்திருந்தேன். உடனே இணையத்தினை தட்டினால் இரையை தேடவும் இனப்பெருக்கத்தின் போதும் சிலவகை மாறும் என்கின்றது இணையத்தின் விஞ்ஞானம்.
இறந்த பூச்சிக்காக மனம் பரிதாபப்பட்டாலும் இது எனக்காகத்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என தோன்றுகின்றது. எமது திட்டத்திற்கான நிறம் இதிலிருந்து தான் கிடைத்திருக்கின்றது. இயற்கை தான் எத்துணை நுட்பங்களை தன்னுள் ஒளித்து வைத்திருக்கின்றது. சிறிது நேரத்தில் என் மச்சினன்கள் கைநிறைய சிப்பிகளுடன் வந்தார்கள். “மச்சாள் நீங்க மேசையில் வைக்க சிற்பம் செய்றனீங்க தானே, உங்களுக்கு இதுகளை எடுத்து வந்தோம்” என்று என்னருகில் குவித்தார்கள். அடுத்த “நெய்தல்” இற்கான தொனிப்பொருள், வடிவம், நிறம் எல்லாம் என் கண்முன் விரிய ஆரம்பித்துவிட்டது.
இங்கு தங்குவதற்காக திட்டமிட்டுள்ள நாட்களில் தினமும் இங்கு வந்து வேலை செய்யலாம் என நினைத்திருக்கின்றேன். இதுவரை வாழ்வில் பல தீர்மானங்களில் கடல் பங்கெடுத்திருக்கின்றது.

No comments:
Post a Comment