கடந்த சில வாரங்களாக ஒன்றாக பயணிக்கின்றோம் என்று சொன்னேனில்லையா? நான் சில நாட்களாக நல்ல மனநிலையில் இல்லை. இதை என்னுடைய முகத்தையோ என்னத்தையோ வைத்து இந்தாள் கண்டு பிடிச்சுட்டுது. நூறு தரம் குறுஞ்செய்தி, அழைப்பு என்றும் கேட்டுப்பார்த்தார். எனக்கு அந்தவிடயத்தினை பகிர மனமில்லை. நான் வெள்ளைச்சட்டையுடன் வீதியில் போகின்றேன். சேறு சட்டையில் பட்டுவிட்டது. இதனை நீரில் கழுவிப்பார்த்தாகிட்டு, சவக்காரம் போட்டும் பார்த்தாகிட்டு கறை போகவில்லை. இனி சலவைக்குத்தான் போடவேண்டும். இந்த மனநிலையில் நானிருக்கும் போது ஏன் சேறுபட்ட இடத்தை மறைக்கின்றாய் என்று இவர் கேட்டால் நான் என்ன பதிலளிப்பது? இப்படிப்பட்ட மனநிலையை நாமிருவரும் கடந்துகொண்டிருக்கின்றோம். சில நாட்களுக்கு முன்னரான பயிற்சியின் போது எனக்கு மாதவிடாயும் வந்துவிட்டது. ஏன் இன்று சரியில்லை என்று பயிற்சி நாளன்று காலையில் கேட்ட போது நானும் சொல்லிவிட்டேன். எனவே தான் அன்றைய பயிற்சியை முழுமையாக பொறுப்பேற்பதாகவும் அமாந்திருந்து பார்க்கும் படியும் ஏதாவதென்றால் தான் கேட்பதாகவும் வற்புறுத்தி கூறிவிட்டார். எனக்கும் சொல்லிக்கொள்ளா விட்டாலும் இந்தாளுக்கு கொஞ்சம் பயம். இதனாலேயேயும், அந்த கண்டிப்பில் இருந்த அன்பிலும் அருகில் அமர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.
அழகான அர்த்தமானதொரு கதை!
அவர்: ஒருவன் காட்டில் இருக்க வேண்டுமென்றால் என்ன தேவை?
பங்குபற்றுநர்கள்: அறிவு இருக்க வேண்டும், உடல் வலிமையாக இருக்க வேண்டும், விரைவாக ஓட வேண்டும், எதிரிகளை தாக்கும் திறன் வேண்டும், தந்திரமாக இருக்க வேண்டும்.
அவர்: நமக்குத் தெரிந்து காட்டுக்கு யார் ராஜா?
பங்குபற்றுநர்கள்: சிங்கம்
அவர்: சிங்கத்திற்கு இருக்கும் அறிவை விட, பலத்தை விட யானைக்கு அறிவும் பலமும் உண்டு. சிறுத்தை சிங்கத்தை விட விரைவாக ஓடும். ஒட்டகச்சிவிங்கி சிங்கத்தை விட உயரம், மான் சிங்கத்தை விட அழகானது. இப்படி எல்லாமே சிங்கத்தை விட ஏனைய விலங்குகளுக்கு அதிகமுண்டு. பின்னர் எப்படி சிங்கம் அரசனாகவிருக்கின்றது?
பங்குபற்றுநர்கள்: ………..
அவர்: கர்ச்சிப்பதால் தான் சிங்கம் தன்னை நிலைநிறுத்திக்கொள்கின்றது. கர்ஜனை என்பது குரல் உயர்வு, உரத்துக்கத்துதல், கத்துவதன் மூலம் அடுத்தவரை அடக்கியாள்கின்றது.
நான்: ஆக இவ்வளவு நாளும் அடுத்தவர்களை நோக்கி கத்தியது, முறைத்தப்பார்த்தது, கோபப்பட்டது எல்லாம் இதற்கு தானா…. அடப்பாவி (எல்லாம் மை மைன்ட் வொயிஸ் தான் நண்பர்களே… முகத்திற்கு நேரே சொல்லவில்லை. சொல்லி சிங்கம் எல்லோர் முன்னிலையிலும் என்னை நோக்கி கர்ஜிக்கவா…? ) ஆனால் ஒன்று ஆண் சிங்கம் அழகு தான். முடியெல்லாம் சடையாக இருக்கின்றது தான். ஆனால் பெண் சிங்கம் தான் வேட்டையாடுகின்றது என் இனிய நண்பனே!
சரி கதையிருக்கட்டும் முன்னுக்கு சொன்ன Intro எல்லாம் என்னத்திற்கு என்று நீங்கள் புருவம் உயர்த்துவது எனக்கு விளங்குகின்றது. அதனை விரைவில் நாம் உத்தியோகபூர்வமாக சொல்கின்றோம். இன்னுமொரு கொசுறு தகவல். கடந்த வருடம் இருவரும் பாரீஸ் போய் வந்தோம். மீண்டும் நண்பனும் நானும் விரைவில் வெளிநாடொன்றிற்கு பயிற்சிக்காக பயணிக்கின்றோம். அதுவும் வளவாளர்களுக்கான பயிற்சி தான். எப்போதும் எதிலும் நம்முடன் பயணிப்பவர்களுக்கும் நமக்குமிடையில் இரசாயனம் வேண்டுமல்லவா..?

No comments:
Post a Comment