Monday, June 3, 2013

தோல்வி.....

குரு ஒருவர் தன் சிஷ்யன் ஒருவனுக்கு வில்வித்தை கற்பித்து வந்தார். ஒரு மாலை வேளை அந்த சிஷ்யனுடன் திறந்த வெளியொன்றிற்கு வந்த குரு அவன் முன்னால் பொருள் ஒன்றை நிறுத்தினார். பின் தன் சிஷ்யனைப் பார்த்து “உனக்கு விரும்பியளவு எத்தனை அம்புகள் உபயோகித்தாயினும் குறிபார்த்து அம்பெய்” என்று கூறினார். சிஷ்யனும் விளையாட்டாக அம்பெய்ய ஆரம்பித்தான். அவன் எய்த அம்புகளுள் பெரும்பாலானவை குறியை அடைந்ததுடன் சில அக்குறிக்கருகில் குத்திட்டு நின்றன.

சிறிது நேரத்தின் பின் அவனை அழைத்த குரு “ உனக்கு பத்து பொற்காசுகள் தருகின்றேன். விரும்பியளவு அம்புகளை மட்டும் உபயோகித்து குறியை இலக்கு வைத்து அம்பெய்ய வேண்டும்” என்று கூறினார். சிஷ்யனும் தன்னால் முடியும் என்ற எண்ணத்துடன் கூடவே பத்து பொற்காசுகளை பரிசாக பெறவேண்டும் என்ற அவாவுடன் அம்பெய்ய ஆரம்பித்தான். ஆனால் அந்த அம்புகள் குறி தவிர்ந்த அதனைச் சுற்றியிருந்த இடத்திலேயே குத்திட்டு நின்றன. பரிதாபத்துடன் குருவை திரும்பிப் பார்த்தான். (கண்ணில் பத்து பொற்காசுகளை மிஸ் பண்ணிட்டம் என்ற ஆற்றாமையும் அந்த பார்வையிலிருந்தது.)

அவனை அருகில் அழைத்த குரு மீண்டும் அவனிடம் “ விரும்பியளவு அம்புகளை மட்டும் உபயோகித்து குறியை இலக்கு வைத்து அம்பெய்ய வேண்டும். உன் திறமைக்கு பரிசாக என் மகளை உனக்கு திருமணம் செய்து தருவேன்” என்று கூறினார். உடனேயே கண்ணை மூடி கற்பனையில் ஆழ்ந்தான் சிஷ்யன். “ சிவந்த நிறம், கூர் நாசி , மெல்லிடை, கருங்கூந்தல்…….. யப்பா….. என்னா அழகு…. நமக்கா அந்த அழகுப்பெட்டகம் கிடைக்கப்போகிறது.?....... குருவின் கனைப்பு கற்பனைக்கு கடிவாளமிட அம்புகளை எடுத்து வில்லேற்ற ஆரம்பித்தான்.

ஒன்று…

இரண்டு…

மூன்று…

ஐம்பது…

நூறு….

சை… ஒன்று கூட குறியைத் தாக்கியிருக்கவில்லை. (வட போச்சே…)

இப்படித்தாங்க நம் இலட்சியங்களும். நாம் நிபந்தனையற்ற இலட்சியங்களை கொண்டிருக்கும் போது அவை நேர் பாதையில் இடையூறின்றி பயணிக்கின்றன. ஆனால் என்று மனதில் அவற்றை முன்னிருத்தி வேறு விடங்களை பெற்றுக்கொள்ள நினைக்கின்றோமோ அப்போது நம் இலட்சியங்கள்  சிதற ஆரம்பிக்கின்றன. நாம் அடைய நினைக்கும் இலக்கை நோக்கி கவனத்தினை கலைக்காது செல்லும் போது நம் பயணங்கள் வெற்றி பெறுகின்றன. பாதையிலுள்ள கானல்நீரைக் கண்டு அவற்றினை நெருங்குவதற்காக பாதை மாறும் போது நாம் செல்ல வேண்டிய தூரங்கள் அதிகரிக்கின்றன. கானல்நீரினாலும் எதுவும் கிடைக்கப்போவதில்லை.

ஆகவே இலட்சியங்களை மனமாற காதலியுங்கள். பாதைகளில் ஆயிரம் முட்கள் இருக்கலாம். பலவித மிருகங்கள் பயமுறுத்தலாம். பல பள்ளத்தாக்குகள், புதைகுழிகள் இருக்கலாம். ஆனால் சிந்தையில் தெளிவு, மனதில் கடவுள், செயலில் நேர்மை , வார்த்தையில் உண்மை இருக்கும் போது எதுவும் நம்மை , நமது இலட்சியங்களைத் தடுத்திட முடியாது.

நமது இலட்சிய முடிவில் கூட முள் கொண்ட ரோஜா தான் தரப்படும் அதாவது தோல்வியை அருகில் நிறுத்திய வெற்றி தான் கிடைக்கும். முள் குத்தாமல் கவனமாக ரோஜாவினை இரசிக்க வேண்டுமே அன்றி ரோஜாவை எறியவும் முடியாது. முள்ளைப் களைந்திட்டால் ரோஜாவை வைத்திருக்கும் சுவாரஸ்யமும் போய்விடும்.

“தோல்வியைப் பற்றிய பயமே
தோல்வியைக் கொண்டு வருகிறது.
வெற்றியைப்  பற்றிய மிகைப்பட்ட
ஆசை தான் உன் சக்தியை உறிஞ்சுகிறது”



பிற்குறிப்பு
- சிஷ்யன் கடுப்பாகி அம்பெய்தலில் தோற்கடித்து மகளை மிஸ் பண்ண வைச்சிட்டாயே மாமா சொறி குரு என்று கத்தியதும் அது கத்திச் சண்டையாக மாறியதையும் பற்றி நமக்கு இங்கே தேவையில்லை என்பதால் இதை பற்றி நான் விரிவாக சொல்லவில்லை.

No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை