அயல் நாட்டு இனிப்புகளை விடவும் - என்னவன்
வரிசையில் நின்று வாங்கிக்கொடுத்த
ஐந்து ரூபா மிட்டாயின்
சுவை மிகுந்திருந்தது என்னளவில்
ஆயிரம் அன்புமொழிகளை
முகத்துதிக்காக கூறுபவர்களை விடவும் - அவன்
கோபத்தில் கூறிய “என்னடா”வின்
அர்த்தம் அன்பின் எல்லை…
கட்டியணைத்திட அலைபவர்கள் நடுவில்
நடக்கும் போது உரசுகின்ற – அவன்
மேல் சட்டை நுனியின் ஸ்பரிசம்
அழகிய கவிதை…
முன் நடந்தாலும்
பின் தொடர்கின்ற – அவன்
பார்வை அலாதியானது
என்னவனுக்கு
பதவியில்லை பண்பிருக்கின்றது
பையில் பணமில்லை
மனதில் பாசமிருக்கின்றது..
தூக்கியெறிகின்ற உறவுகள் மத்தியில்
பட்டும் படாமலும் தொடர்கின்ற
கரிசனைகள் சொல்லும்
ஆயிரம் தத்துவங்கள்
இடையில் நிற்பவைகளை விடவும்
இடையறாது தொடர்வது சுகமல்லவா?
அப்பாவின்
அரண்மனையை விடவும் - அவன்
அருகாமை வேலியாகின்றது
அவன் அன்பிற்காக மட்டுமே
அருகில் மண்டியிட்டு
அசைய மறுக்கிறது
என் மனம்…….
No comments:
Post a Comment