Wednesday, June 12, 2013

பூவெல்லாம் உன் வாசம்.....

ஒவ்வொரு மனிதர்களுக்கும் தமக்கான நண்பர்களையும், துணையினையும் தேடிக்கொள்கின்ற உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் துணையினை தேடிக்கொள்ளும் போது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவதானமாகவும், பொருத்தமானவராகவும் தெரிய வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. ஏனெனில் வாழ்க்கை என்பது ஆயிரங்காலத்துப் பயிர். எமக்கு துணையாக வருபவர் நமது முன்னேற்றங்களுக்கு படிகள் அமைத்துத் தருபவராக இருப்பதோடு நம்மைக் கண்கலங்காமல் வைத்திருப்பதும் மிகவும் முக்கியம். அது மட்டுமல்ல நம்மவர்களின் “குடும்பம்” கூட நல்லதாக அமையும் போது தான் நம்மவர்களின் குணம், பண்பும் நல்லதாக இருக்கும். தமது குடும்பத்தில் பற்று, பாசம், பயம் உள்ள ஒருவன் அல்லது ஒருத்தி நிச்சயம் அமைக்கும் குடும்பத்தினையும் சிறப்பாக அமைப்பார்கள்.

அண்மையில் என் ஆருயிர் நண்பன் (சிடு மூஞ்சி – நான் வைத்துள்ள பெயர்) என்னிடம் ஒரு திரைப்படத்தினை பார்க்கும் படி கூறியிருந்தார். சினிமாவில் எனக்குப் பெரிதாக ஆர்வம் இல்லாவிடினும் அன்பு நண்பனின் வார்த்தைக்கு மதிப்புக்கொடுத்து அத்திரைப்படத்தினை பார்த்தேன்

திரைப்படம் - “பூவெல்லாம் உன் வாசம்”
2011 இல் ஆஸ்கார் பிலிம் தயாரிப்பில் எழில் கதையமைத்திருந்ததார். அஜித்குமார், ஜோதிகா, சிவக்குமார், நாகேஷ், கோவை சரளா, விவேக் . வையாபுரி நடிப்பில் வெளிவந்திருந்தது. வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

மூன்று தலைமுறையாக நட்புறவுடன் இருக்கும் இரு குடும்பங்கள் பற்றிய அருமையான குடும்பப்படம். மூன்றாவது தலைமுறையான ஜோவும் அஜித்தும் சிறுவயது முதல் நண்பர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் விரும்பிய போதும் சொல்லிக்கொள்வதற்கு தயங்குவதும் (இப்போ தான் புரிகிறது ஏன் பார்க்க சொன்னார் என்று) இடையில் புகும் வில்லன் கபட நாடகம் ஆடுவதும் (நிஜத்திலும் வில்லன்கள் உண்டு) பின் உண்மை அறிந்து ஈகோவை விட்டு இருவரும் சேர்வதும் தான் கதை. சில விடயங்கள் இதில் மனதை தொட்டிருந்தது
  • கண்களால் இருவரும் பேசிக்கொள்வது
  • ஒருவருக்கொருவர் செல்லச் சண்டைகள் பிடிப்பதும் அடுத்த நிமிடம் மறந்து விடுவதும்
  •  தன் நண்பனின் முன்னேற்றத்திற்கு ஜோ கஷ்டப்படுவதும். முதலில் மறுத்தாலும் பின் ஜோவிற்காக அந்த கட்டடத்தினை வடிவமைப்பதும்
  • ஒருவருக்கொருவர் அடுத்தவர்களிடம் விட்டுக்கொடுக்காமை
  • ஒருவருக்கொருவர் விரும்புகின்றார்கள் என்று தெரிந்தும் அவர்களிடையான ஊடல்கள் 
  • வில்லன் கூட ஓரிடத்தில் “இவனை கட் பண்ணினால் தான் இவளை நான் அடையலாம்” என எண்ணுவது கூட இருவருக்குமான அன்னியோன்யத்தினை காட்டுகிறது.

ஆக மொத்தத்தில் அருமையான நட்பு ஆழமான காதலுக்கு வித்திடுவதை அழகாக கூறுகிறது பூவெல்லாம் உன் வாசம்….

அதிலும் கீழ்வரும் பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு பெண் தன் பிறந்த வீடே புகுந்த வீடாகும் போது உண்டாகும் மகிழ்வுடன் பாடுவதாக அமைந்திருந்தது இப்பாடல். உண்மை தாங்க பெண்களைப் பொறுத்தளவில் புகுந்த வீட்டுப்பயம் என்பது மறுக்க முடியாததொன்று. அந்த பயம் இல்லாமல் கல்யாண சந்தோஷத்துடன் பாடுவதாக அமையும் இப்பாடலில் என்னைத் தொட்ட சில வரிகள்….

திருமண மலர்கள் தருவாயா தோட்டத்தில் நான் வைத்து பூச்செடியே…
தினமொரு கனியை தருவாயா வீட்டிற்குள் நான் வைத்த மாதுளையே…
மலர்வாய் மலர்வாய் கொடியே கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கதிரும் அருகே நானும் அவனும் அருகே
பிறந்த இடம் புகுந்த இடம் வேறுயில்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரமில்லை…

தாலி கொள்ளும் பெண்கள்
தாயை நீங்கும் பெண்கள் போது
கண்ளோடு குற்றாலம் காண்பதுண்டு……

அந்த நிலை இங்கேயில்லை… அனுப்பி வைக்க வழியேயில்லை
அழுவதற்கு வாய்ப்பேயில்லை அது தான் தொல்லை…

கன்னம் கிள்ளும் மாமி காதை திருகும் மாமா இது போல் சொந்தம் பார்த்ததுண்டா?

பாவாடை அவிளும் வயதில் கயிறு கட்டி விட்டவன் எவனோ
தாலி கட்ட வந்தவன் அவனே உறவானவன்…

தெய்வங்களும்; எங்களை நேசிக்குமே….
தேவதைகள் வாழ்த்துமடல் வாசிக்குமே….


இதன் ஒலிவடிவம் - http://isaithooval.com/flies/2001/Poovellam%20Un%20Vaasam/Thirumana%20Malargal.mp3

பிற்குறிப்பு – கையில் நெய்யை வைத்துக்கொண்டு வெண்நெய்க்கு அலைவானேன்…. ஆருயிர் நண்பன், அவனது அருமையான குடும்பம் நமக்காக காத்திருக்கும் போது மூன்று முடிச்சு போடுவதற்கு தலைகுனிய ஏன் தயங்க வேண்டும்….

"பாவாடை அவிளும் வயதில் கயிறு கட்டி விட்டவன் எவனோ
தாலி கட்ட வந்தவன் அவனே உறவானவன்…
" (Super)


No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை