Tuesday, June 18, 2013

படைப்பின் விந்தை

பிடி மணல் கூட
தனக்கின்றி ஒரு சமூகம் - பல
மனைகளை கட்டி
வாடகையில் வாழ்கிறது
தனவந்த குடும்பங்கள்

பாடப்புத்தகம் வாங்க முடியாமல்
பாதியில் நிற்கிறது பையனின் படிப்பு
பாதித்தூரம் படித்த பின்
படிப்பையே மாற்றிக்கொள்கிறான்
பணக்காரன்

கந்தல் துணியின்
கிழிசலை மறைக்க
அவசரமாக நடக்கிறாள் குடிசைப் பெண்…
இடை முதல் தொடை வரை
அரை குறை உடையில்
பூனை நடை பயில்கிறாள்
ஒருத்தி மேடையில்….

பட்டினியால் சாகின்றது
தெருவோர குழந்தை
தீண்டுவாரற்று கிடக்கிறது
பணக்காரன் வீட்டு மேசை
பதார்த்தங்கள்

பணத்தால் பாதை மாறுகின்றனர்
சிலர் - பணமின்றி
பாடை கூட தூக்குவாறின்றி
பல பிணங்கள்

அறமற்ற காதல்
அரங்கமேறுகிறது
உயிர்வரை வலிக்கின்ற காதல்
உலை வைக்கப்படுகிறது

சீதனமில்லாமல் சிதைகிறது
சில பெண்களின் காதல்
கொட்டிக்கொடுத்த வீட்டில்
காதலின்றி அழுகின்றாள்
ஒரே பெண்….

குடிசையில் பிள்ளைகளின்
ஓலம் தாங்காமல் ஒளிகின்றனர் அம்மா – அப்பா
டாடி மம்மி கிளப்பிலிருந்து
வரமாட்டார்களா என்று ஏங்குகிறது
ஆயா மடியில் மாடிக்குழந்தை…

தின்ற உணவுகள் செமிக்க
கூடவே கொழுத்த நாய்களுடன்
நடைப்பயிற்சியில் சிலர்…
சத்துக்குறைபாடினால்
சத்திரசிகிச்சைக்கு
அனுமதிக்கப்படுகின்றனர் சிலர்…

அடுப்பு மூட்ட வழியில்லை
அடுத்த பிள்ளை நமக்கெதுக்கு…
கருக்கலைப்பிற்கு காத்திருக்கின்றாள் ஒருத்தி…
பரம்பரை பெயர் சொல்ல
பிள்ளை ஒன்றின்றி
வாடகைத்தாய்க்கு வாரிக் கொடுக்கின்றாள்
ஒருத்தி….

அடுத்தவன் பொருள்
கவர்பவன் வாழ்ந்து
கொண்டிருக்கின்றான் - இழந்தவன்
இருந்ததும் கொடுத்து
இருட்டுக்குள் தள்ளப்படுகின்றான்…

இருப்பவனுக்கு இரசிக்க நேரமில்லை
இரசிப்பவனுக்கு இல்லாதிருக்கின்றது இருப்பு...
இருப்பின்மையால் இன்பமின்றி ஒரு சமூகம்
இருந்தும் இயலாமையில் ஒரு சமூகம்
படைப்பின் விந்தையை தான் என்னவென்பது….






No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை