Tuesday, June 25, 2013

மனப்பொருத்தம்....



என்னவர்களே…
எப்படியோ எடுத்துவிட்டீர்கள்….
எனக்கான மாப்பிள்ளை..
என் வைரக் கூண்டை
தெரிந்துவிட்டீர்கள்……

செல்வாக்குக்கேற்ப செருக்கானவன்
பதவியுடன் பவிசானவன்
பார்த்தவுடன் பத்திக்கொள்ளும்
ஆணழகன்…
சாதி சமயத்திலும்
சரிநிகரானவன்…
பல்லிடங்கள் விசாரித்தளவில்
பண்பானவன் - ஜாதகத்தில்
பத்துக்கு ஒன்பது பொருத்தம் வேறு…

அன்று - என்
பிடிவாதங்கள்
பட்டினிகள்
பிராத்தனைகள்…. - மீறி
பந்தல் வரை வந்துவிட்டீர்கள்
பல மைல் தூரத்திற்கு
அனுப்பியும் விட்டீர்கள்….

பத்தில் குறைந்த
அந்த ஒன்று….
மனப்பொருத்தம்
என்பது உங்களுக்கு தெரியுமா?

அதிகாலையில்
அம்மாவின் நெற்றி முத்தத்தில்
பூக்குவியலாய்
கண்மலரும் நான்… - இன்று
தினமும் கசங்கிய மலராய்
திடுக்கிட்டுத் தான் முழிக்கின்றேன்…

அப்பா ஊட்டும்
கவளச் சோற்றுக்கு
ஆவென வாய் திறக்கும்
செல்லப்பெண்…… - இன்று
கண்ணீருடன்….
யாருமற்ற அரண்மணையில்
தனியாக பிசைந்து
கொண்டிருக்கின்றேன் கண்ணீருடன்
காலையுணவை….

வைத்தியரிடும் ஊசிக்கு
ஊரைக் கூட்டிய நான்….
உப்பில்லையென்று எந்;நேரம்
உணவுத்தட்டு என்னைத் தாக்குமோ.. –என்று
உணர்வற்று நிற்கின்றேன்…

தெரியாமல் என்னை உரசியதற்கே
அண்ணா பலரை
வதம் செய்திருக்கின்றான்….. - இன்று
வாங்கிய கன்னத்து
அறைகள் வலித்தாலும்
வரைகின்றேன் மடல்
நலம் என்று…..

தம்பி எத்தனை
தடவை என்னைச் சீண்டுவான்
ஒரு நாளில்……
இப்போதெல்லாம் என்
பொழுதுகளை
தனிமைகளும்
மௌனங்களுமே
அலங்கரிக்கின்றன…

என்னை
மீண்டும் நம்
வீட்டிற்கு கூட்டிப் போக மாட்டீர்களா?
இந்த வைரக்கூண்டு
எனக்குப் பிடிக்கவில்லை…















No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை