மௌனராகம்!

இன்று வரையான திரைப்படங்களில மௌனராகம் திரைப்படம் பல தலைமுறைகள் கடந்தும் நிற்கின்றதொரு படமொன்றென நான் நினைக்கின்றேன். 1986 இல் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்ததொரு திரைப்படம் இது. இதில் முக்கிய பாத்திரங்களாக மோகன், ரேவதி, கார்த்திக் நடித்திருப்பார்கள். மணிரத்தினம், மோகன், ரேவதி மூவருக்குமே இதுவொரு அடையாளம் என்று கூட சொல்லாம். ஆனால் மௌனராகம் என்றவுடன் முதலில் நினைவுக்கு பெரும்பாலும் வருவது மோகன் தான். இத்திரைப்படத்தின் இன்னுமொரு ஹலைட் என்றால் இளையராஜாவின் இசையமைப்பு. மன்றம் வந்த தென்றல்….. சின்ன சின்ன வண்ணக்குயில்….., நிலாவே வா…. என்று மூன்று பாடலுமே டிவைன். 

MounaRagam Click to see 150 All-Time Best Cult Tamil Films. URL:  https://t.co/OmgBTqiLxj #Mohan #Revathi #Karthik #ManiRatnam  #GVenkateswaran #GVFilms #BehindwoodsCult 

இத்திரைப்படம் அப்படியொன்றும் சிக்கலானதோ, அதிக பாத்திரங்களை உள்ளடக்கியதோ, என்னாகும் என்று இருப்புக்கொள்ளாமல் பார்வையாளர்களை இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்க தூண்டும் கதையுமல்ல. ஒரு சாதாரண கதை. திவ்யா (ரேவதி) எனும் பெண்ணின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு நகர்கின்றது கதை. திருமணத்திற்கு முன் சமூக போராளியான மனோவினை சண்டையொன்றில் சந்திக்கின்றாள். மனோ திருடன் என நினைத்து பொலிஸாரிடம் அடையாள அணிவகுப்பில் காட்டிக்கொடுத்து விடுகின்றாள் பின்னர் இதன் மறுபக்கம் தெரிந்து தானே முன்னின்று ஜாமீனில் மனோவை வெளியே எடுக்கின்றாள். இப்படியே நீள்கின்ற உறவு காதலாகி இரகசியமாக பதிவுத்திருமணம் செய்யுமளவிற்கு வந்து நிற்கின்றது. பதிவு திருமணத்திற்காக காத்திருக்கும் போது கைதாகிய மனோ தன் நிலையை திவ்யாவிடம் சொல்ல தப்பியோடி வரும் போது சுட்டுக்கொல்லப்பட்டுவிடுகின்றான். இச்சம்பவங்களால் திருமணத்தினை வெறுக்கின்ற திவ்யா தந்தையின் சுகவீனத்தினால் திருமணத்திற்கு சம்மதிக்கின்றாள். விருப்பமின்றி சந்திரகுமாருடன் திருமணம் நடந்தேறிவிடுகின்றது. எப்படி தம்பதியினரிடையே இக்கடந்தகால வாழ்க்கை, திருமண வாழ்க்கையை ஏற்க முடியாத நிலை விவாகரத்து வரை போய்விடுகின்றது என்பதும் அதன் பின் என்னாகியது என்பதுமே கதை.

 இத்திரைப்படம் வெளிவந்த போது நான் பிறந்திருக்கவில்லை. ஆனால் பருவ வயதில் வீட்டில் இப்படம் பார்க்கப்பட்ட போது அதெப்படி மௌனத்தில் மொழியற்ற நிலையில் இராகம் இருக்க கூடும் என்ற கேள்வியை கடந்திருக்கின்றேன். பின்னர் பல்கலைக்கழக காலத்தில் “மௌனராகம்” மோகன் மாதிரி கூட நிதானமான, புரிந்துணர்வுள்ள ஆணொருவர் இருப்பாரா என்பது கேள்வியாகவிருந்தது. என்னைப் போன்ற பெண்கள் மௌனராக மோகனை இரசிப்பதற்கு இரு காரணங்கள் இருக்ககூடும் என நினைக்கின்றேன். ஒன்று சமூகத்தில் உண்மையிலேயே இல்லாத ஹீரோயிசம் என்ற பெயரில் அடிதடி , சண்டை, பெண்ணொருவர் பாதிக்கப்படும் போது பாய்ந்தோடி வந்து காப்பாற்றுவது என்றில்லாமல் நூற்றில் ஒருவராக சாதாரணமாக இருக்கின்ற மோகன், அடுத்தது தாத்தா வயதில் மேக்கப்போட்டு விக் வைத்து “இளங்குமரனாக” நடிக்கும் நடிகர்கள் நடுவில் கன்னத்தில் காணப்படும் பருக்களுடன் யதார்த்தமாக இருக்கும் மோகன். 
இப்படத்தில் எனக்குப்பிடித்த கதை வசனங்களும் இத்திரைப்படத்தினை அடிக்கடி பார்க்க வைப்பதற்கான இன்னுமொரு காரணம். 

நமக்குத் திருமணமாகி உனக்கு எதுவுமே வாங்கித்தரவில்லை. என்ன வேண்டும் என்றாலும் கேளு…”
என்ன கேட்டாலும் வாங்கித்தருவீங்களா…?
நிச்சயமாக….
அப்போ விவாகரத்து வாங்கி தருவீங்களா…?


கையை விட்டுட்டு பேசுங்கள்…
ஏன் தொடுவது பிடிக்கலயா……?
நீங்கள் தொட்டால் கம்பளிப்பூச்சி ஊர்வது போலிருக்கு…..


ஏன் நான் போட்ட Coffee குடிக்க மாட்டீங்களா…?
இன்றைக்கு நீ தாறதை குடித்தால் பழகிடும். ஒரு வருசத்திற்கு பின் நீ போய்விட்டால் யார் போட்டுத்தருவார்கள்…? 

Mouna Ragam (1986)

இப்படி இருவரும் வாய்த்தர்க்கம் செய்துகொள்ளும் இடங்களில் வருகின்ற வசனங்கள் குறுகியவை என்றாலும் அர்த்தம் நிறைந்தவையாகவிருக்கும். இந்த மௌனராகத்தில் கதை நகர்வாகட்டும். பாத்திரங்களது உள்ளக மாற்றங்களாகட்டும் மிகவும் அழகாக செதுக்கப்பட்டிருக்கும். மணிரத்தினத்திற்கு இது மைல்கல்லாக அமைந்ததற்கு இதுவும் ஓரு காரணம். 
எனக்கு இத்திரைப்படத்தின் குறையாக தெரிவது இரு விடயங்கள் தான். ஒன்று விவாகரத்திற்கு விண்ணப்பிக்கும் வரையான திருமணமாகியதிலிருந்து ஏழு நாட்களுக்கும் விண்ணப்பித்த பின்னரான ஓர வருடத்திலுமான சம்பவங்கள் ஏறக்குறைய ஒரே நீளத்திலேயே படமாக்கப்பட்டிருக்கும். விவாகரத்திற்கு விண்ணப்பித்ததன் பின்னரான ஒரு வருட இடைவெளிக்கு இன்னும் சில காட்சிகளை இணைத்திருக்கலாம். அடுத்த விடயம் “Killing Dears!” எனும் தியறி. இது நம்முடைய தமிழ்திரையுலகில் வழமையாகவுள்ளதொரு விடயம். விருப்பத்திற்குறியவர்களை நாம் சாகடிக்க விரும்புவதில்லை. ஆனால் இது யதார்த்தத்திலும் சேர்த்தியில்லை. எத்தனை படங்களில் தான் புகையிர நிலையத்திலும், விமான நிலையத்திலும் சேருவது. இது நிஜ வாழ்வில் சாத்தியமா? அப்படியென்றால் தான் நம்மிடையே இத்தனை விவாகரத்துக்கள் வந்திருக்குமா என்ன…? 

இன்னுமொரு குறிப்பிடத்தக்க விடயம் கதாபாத்திரங்களின் பொருந்திணைவு. குழந்தை போன்ற குணமுடைய திவ்யா, வற்புறுத்தி பணிய வைக்கின்ற மனோ, எதையும் பொறுமையுடனும் முதிர்ச்சியுடனும் அணுகுகின்ற சந்திரகுமார். இணையர்களில் ஒருவர் மற்றவருக்கு எதிர்மறையானவராக இருந்தாலெயே பொருந்திப்போவதுண்டு.. இது தான் வாழ்விலும். ஒரே தொழில், ஒரே குணம், இயல்பு, இரசனை உடையவர்களைப் பாருங்கள். எப்போதும் முட்டிக்கொண்;டேயிருப்பார்கள். ஆனால் ஊருக்கெல்லாம் முரடன் குழந்தைத்தன்மையுடவளிடம் பணிந்து போவான். ஆர்ப்பாட்டமான இயல்புடைய பெண்ணுடன் முதிர்ச்சியான ஒருவர் அணுசரித்துப்போவார். சும்மாவா விஞ்ஞானம் சொல்கின்றது ஒத்த முனைகள் தள்ள எதிர் முனைகள் தானே கவரப்படுவதுண்டு என. கதை, பாத்திரங்கள், வசனம், இசை தாண்டியும் இப்படத்துடன் நான் ஒன்றிக்க இன்னுமொரு காரணமுண்டு.

நிலாவே வா… பாடல் எனக்கு மிகவும் பிடித்ததொரு பாடல். ஏப்போதும் என் பாடல் வரிசையில் இதற்கு இடமுண்டு. இந்தப்பாடலை என்னுடைய மூத்த சகோதரனுக்கும் பிடிக்கும். நாம் சுற்றுலா செல்லும் போது பெரும்பாலும் பாட்டுக்குப்பாட்டு பாடுவதுண்டு. இதில் நிச்சயம் அண்ணா இந்தப்பாடலை பாடியே ஆகுவார். ஒரு வகையில் பார்த்தால் அவரும் இந்த மௌனராக மோகன் போல் தான். எதையும் முதிர்ச்சியுடன், ஆர்ப்பாட்டம் இன்றி அணுகுவார். இந்தக்காரணங்களுக்காகவே இப்பாடலை மிக…மிக பிடிக்கும். வரிகளும் தான். இதைப்படித்து முடிக்கும் போது எனக்காக நீங்களும் இப்பாடலை இன்னுமொரு தடவை கேட்டுப்பாருங்களேன். SPB பாடலை பாடியிருப்பார். வரிகள் வாலி. கன்னத்துப் பருக்களுடனும் வெள்மையான குருத்தாவிலும் வருகின்ற மோகன் அப்படியொரு அபாரம். ரேவதியும் கறுப்புப்புடவையில் குழந்தை முகத்துடன் அவ்வளவு அழகாயிருப்பார். இரவு நேர காட்சிகள் இன்னும் அழகாக்கின்றது.... 

https://www.youtube.com/watch?v=xMI_MhrYmSI&list=RDxMI_MhrYmSI&start_radio=1






Comments