அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து……. 01

 Feb 07th - Rose Day:  Expression on Admiration 

உலகத்தில் பல கோடி பூவினம் உண்டு. ஆனால் அன்பினை ஒரு பூவுடன் இணைப்பதென்றால் முன்னிப்பது ரோஜா தான். ஏனைய பூக்களிலும் பல நிறங்கள் உள. ரோஜாக்களை விடவும் வாசனை மிகுந்த மலர்கள் பலவுண்டு. இலகுவில் நிறைந்தளவில் கிடைக்கக்கூடிய பூக்களும் உண்டு. ஆனால் ரோஜா போன்று வர்த்தக ரீதியில் பிரசித்தமான பூ வேறில்லை. ரோஜா பணக்கார பூ. ரோஜாவை பற்றி கவிகளில் இழுக்காத கவிஞர்கள் உண்டா என்ன? 
 

நான் நினைக்கின்றேன் ரோஜாவை அன்புடன் இணைப்பதற்கு அதன் அழகு , நிறம், மணம், இதழமைப்பு தாண்டி எந்தப்பூவிலும் இல்லாத |முள்| தான் முக்கியமாகின்றதென்று. அன்பும் அப்படி தானே அடிக்கடி நம்மை வலிக்கச்செய்கின்றது. 

அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து……. 

பக்கம்: 117

இனிய நாட்குறிப்பே இன்று உன்னில் எழுதும் போது என் கடிகார முட்கள் இரவு 12 ஐ நெருங்கிக்கொண்டிருக்கின்றன. இன்றைய நாள் நீண்டதொரு நாள். நிறைய நிகழ்வுகளால் நிரம்பியிருக்கின்றது. ஆனால் மனதினுள் நிம்மதியும் உடலில் களைப்பும் இன்னும் மிகுதியாய் இருக்கின்றன….
அதிகாலையில் இரண்டு மணிக்கு என்னை எழுப்பும் போது அம்மா தந்த நெற்றி முத்தத்தில் அவரது கனவு இன்று நிறைவேறப்போவதன் திருப்தியை என்னால் உணரமுடிந்திருந்தது. தன் ஒரே பெண்ணின் அரங்கேற்றம் அவளின் நீண்ட கனவு தானே…. எழுந்து முழுகி வெறும்வயிற்றுடன் வந்தமர்ந்தவுடன் என் குரு பூஜையை ஆரம்பித்து கையில் தீர்த்தமும் தந்துவிட்டார். இன்றைய நாளில் இது தான் ஆகாரம் என்று எனக்கு ஏற்கவே சொல்லப்பட்டுவிட்டது. அடுத்ததாக அலங்காரங்கள் ஆரம்பித்துவிட்டன. சற்றே கண்ணயர்ந்த நான் எழுப்பப்பட்டு கண்ணாடியை பார்க்கின்றேன். முன்னிற்பது நானா என்று எனக்கே ஆச்சர்யமாகவிருக்கின்றது. அம்மா, என் நடன குரு காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் போது என் கையில் சட்டென்று விழுந்து சுட்ட அந்த துளி என் அம்மாவின் ஆனந்த கண்ணீராகத்தானிருக்க வேண்டும். 

ஆலயத்திற்கு அழைத்து செல்ல பெரியண்ணா – அண்ணி கூட தயாராகிவிட்டார்கள். முதல் பயணம் பொன்னம்பலவாணேஸ்வரரிடம். இத்தனை நாட்கள் நான் பார்த்ததை விடவும் இந்த பிரம்பமுகூர்த்தத்தில் பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயம் மிகவும் அழகாகத்தெரிகின்றது. பூஜை முடிந்ததும் படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டது. என் குருவானவர் சொல்லும் அடவுகளை அபிநயம் பிடிக்க கமராவின் கிளிக்குகளுக்குள் சிக்கிக்கொண்டேன் நான். அடுத்து மண்டபம். அங்கும் மண்டப பூஜை, நமஸ்காரங்கள்…. தனியறையில் அலங்கார திருத்தத்திற்கு வந்தமரும் போது எட்டை நெருங்கியிருந்தது நேரம். இன்னுமொரு மணித்தியாலத்தில் அரங்கேற்றம். வழமை போன்றே சபை பதற்றம்.. கூடவே இனந்தெரியாத உணர்வு. இது புதிதானது. இன்று ஏதோ மாறவுள்ளது என தோன்றிக்கொண்டேயிருந்தது. எப்போது சபை வணங்கினேன், ஆடினேன், முடித்துக்கொண்டேன் என்று ஆச்சர்யம் பரவுகின்றது. இன்றுடன் விரதமும் முடிகின்றது.

மேடையில் இருக்கும் போது வழமை போன்று முன்வரிசையில் அம்மாவுடன் அமர்ந்திருந்த அண்ணாக்கள், அண்ணிகள் முகத்தினை மட்டும் பார்த்த ஞாபகம் இருக்கின்றது. அம்மாவின் வலக்கையை பெரியண்ணாவின் கை பற்றியிருந்ததும் தெரிந்தது. பெரியண்ணாவின் மறுபக்கம் பெரியண்ணி. மற்றுமொரு அம்மா. இரு அம்மாக்களுக்கு நடுவில் பெரியண்ணா. அவர்கள் உணர்வுபூர்வமாக இருப்பதை மேடை உயரத்திலிருந்தும் உணர முடிந்திருந்தது என்னால்.

அப்பாடா ஒரு மணியுடன் முடிந்துவிட்டது எல்லாம். இப்போது தான் எங்கிருந்தோ சோர்வு என்னை ஓடிவந்து பற்றிக்கொண்டுவிட்டிருந்தது. எப்போது வீடு போவேன் என்றிருந்தது. வீட்டவர்கள் மதிய உணவு மண்டபத்தில் வரவேற்க போய்விட்டார்கள். நேரம் பார்த்து நுழைந்துவிட்டது என் பாதி. பின்தொடர்ந்து வந்துவிட்டது கடைசி மீதி. இருவர் கையிலும் பார்சல். நாம் மூவரும் தானே கூட்டு களவாணிகள். பார்சலுக்குள் றொலெக்ஸ் ஹொட்டல் பிட்டு, கோழிக்குழம்பு, முட்டைப்பொரியல். கடந்த ஒன்பது நாட்களாக வீட்டில் தொடர்ந்த மரக்கறி விரதத்தினை முடித்துக்கொண்டோம். இது நாம் செய்துகொண்ட இரகசிய உடன்படிக்கை.

வீடு திரும்பி, காலையில் குடிக்காத கோப்பியையும் சேர்த்துக்குடித்து, எல்லா உடைகளும் களைந்து, அம்மாவின் மடியில் கொஞ்ச நேரம் அண்ணா மடியில் கொஞ்ச நேரம் என தலைவைத்திருந்து, வந்த வாழ்த்துக்கள், பரிசுகளை பார்த்து, அரட்டை அடித்து, அம்மா எனக்கு இரும்பு சுற்றிப்போட்டு என என் அறைக்குள் வந்து உன்னைத்தூக்கி எழுதுவதற்குள் தான் எத்தனை இனிய நினைவுகள். 

ஐயோ மறந்துவிட்டேன் என் பெரியண்ணா தந்த கறுப்புக்கல் மூக்குத்திபற்றி. எனக்குப்பிடித்த கறுப்பு நிறம். ஆனால் அம்மா தான் கறுப்பில் மூக்குத்தி வேண்டாம் என மறுத்திருந்தார். ஆனால் பெரியண்ணா இன்று தந்துவிட்டான். மிக அழகாக இருக்கின்றது. என்னைப்போல் கூர் மூக்கும் சுருள்முடியும் கொண்ட சிவப்பு நிற பெண்களுக்கு கறுப்புகல் அழகாயிருக்கும். பெரியண்ணா எப்போதும் இப்படித்தான்….அப்பா இல்லாததால் சுமர்த்தப்பட்ட கடமைகள் அதன் பாரங்கள் தான் அவனை அதிகம் பேசவிடுவதில்லை போலும். மௌனஞானி. எம்மை பெயர் சொல்லி கூப்பிட்டாலே எம் ஐவர் மனதிற்குள் இனந்தெரியாத பயம் வந்துவிடுவதும் இதனால் தான்! வார்த்தைகளில் காட்டாவிட்டால் என்ன கண்களால், மனதால் எம்மை தொடர்கின்ற கல் மனசுக்காரன். கொதியன்……..  

பக்கம் 118

விடியலே சோம்பலுடன் தான் ஆரம்பித்திருந்தது…. எழும்பும் போது காலை 10 ஐ தாண்டிவிட்டது. எழும்பியதில் இருந்து கவனிக்கின்றேன். பெரியண்ணா – அண்ணி, அம்மா முகங்களில் ஏதோ புதிதான உணர்வு தெரிகின்றது. அம்மாவிடம் தன்pயே குசினியில் இருக்கும் போதும் கேட்டுப்பார்த்துவிட்டேன். மளுப்புகின்றாள். இது அவருக்கு பொருத்தமற்றதொன்று… மனதில் ஒன்றும் வெளியில் ஒன்றும் அவளால் பேசிட முடியாது. ஆனால் இன்று ஏதோவொன்று இருக்கின்றது. பெரியண்ணியிடம் கேட்டால் பிறகு சொல்கின்றேன் என்கிறார். பார்ப்போம் கத்தரிக்காய் மலிந்தால் கடைக்கு வந்து தானே ஆகவேண்டும்.  

இதைவிட இன்றைய நாளில் ஒன்றுமில்லை. மீதி நேரத்தில் சாண்டில்யனின் கடற்புறாவினுள் மூழ்கிவிட்டேன் நான். இவ்வாறு மூழ்குவதும் மூச்சடைத்து போவதும் நான்காவது தடவை….. 

பக்கம் 121  

இன்று என் பாதி எங்கிருந்தோ புதிய மூன்று நிற ரோஜா கன்றுகளை வாங்கி வந்துள்ளார். மொட்டுக்கள் அரும்பி நிற்கின்றன. நாளை அல்லது நாளை மறுநாள் மலர கூடும். இதில் ஒரு நிறம் ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றது என்கின்றான் தம்பி… இல்லை என்கின்றான் பாதி. சரி இருந்தால் தான் என்ன? இன்னுமொரு மரம்… இன்னுமொரு அன்பு….. அவ்வளவு தானே…..  

நாளை எப்போது விடியும் என்றிருக்கின்றது ரோஜாவின் நிறம் பார்ப்பதற்கு…….. 



Comments