அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து…….04
Feb 07th - Rose Day: Expression on Admiration
Feb 08th - Propose Day: Sharing feelings and Commitment
Feb 09th - Chocolate Day: Symbol of Joy
Feb 10th - Teddy Day: Gesture of warmth and care
கரடியைக் கண்டால் ஓட்டமெடுக்கும் நாம் கரடி பொம்மையை நேசிப்பதற்கு அது தருகின்ற வெம்மையும் முக்கிய காரணம். கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்கினால் ஒருவர் அருகில் இருப்பது போன்ற கதகதப்பினை அனுபவிக்க முடியும். ஆனால் இதன் முடியில் உள்ள சிறு துணிக்கைகள் மூக்கினுள் சென்றால் சுவாச நோய்கள் உருவாக கூடும் எனவும் மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து…….
பக்கம்: 955
இனிய டைரியே,
இன்று இதனை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே உன்னில் கிறுக்குகின்றேன். இன்று பல்கலைக்கழகத்தின் இறுதி நாள். சில நாட்களாகவே என்னை கவலையும் மகிழ்வும் சூழ்ந்திருப்பதான கலவை உணர்வை உணர்ந்திருந்தேன். கவலை- இந்த மூன்று மாதங்களில் அமெரிக்க மண்ணில் எனக்கு கிடைத்துள்ள நண்பர்களது பிரிவு, பெரியண்ணி- அண்ணாவின் பிரதிகள் மூன்றினையும் பிரியப்போகின்றோம் என்கின்றது…. சந்தோசம்: அம்மாவை பார்க்க போகின்றேன், எப்போது போய் வீட்டில் அம்மா மடியில் தூங்குவேன் என்றிருக்கின்றது…..
பல்கலைக்கழகத்தில் மதியத்துடன் பிரிவுபசாரங்கள் முடிந்து விட்டன. இரவு அவர் என்னை ஓரிடத்திற்கு அவர்கள் நண்பர்களுடனான விருந்துக்கு அழைத்திருந்தார். அவர் எனக்கு தந்த சிவப்பு புடவை தான் அணிந்து சென்றேன். இவ்வாறானதொரு புடவை அணிந்து போனது இது தான் முதல் தடவை. உடை என்றாலே எனக்கு கூச்சமின்றி நடமாடக்கூடிய உணர்வை, இலகு தன்மையை தரவேண்டும் என்று நினைப்பேன். அதிக விலை கொடுத்து வாங்குவதிலும் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் நிறைய கல் பதித்த, இவ்வளவு பாரமான, அதிக விலையுள்ள புடவையை அவர் தந்த போது என்ன சொல்வது? சிவப்பு நிறமும் எனக்கு பிடிப்பதில்லை. முதலில் மறுத்துப்பார்த்தேன். அவர் பிடிவாதம் தான் உலகறிந்த விடயமாயிட்டே…
மாலை வீட்டிற்கே வந்து கூட்டி போனார். எவ்வளவு பிரமாண்டமான கட்டடம். ஏவ்வளவு கூட்டம், அதிர்வும் பாடல் இரைச்சலும், இருளும் என நான் பயந்து போய்விட்டேன். அவரிடமும் சொன்னேன். இது நம்மைப் போன்றவர்கள் பழகிக்கொள்ள வேண்டிய இடம் என்றார். நண்பர்களை அறிமுகப்படுத்தினார். அநேகர்களின் பெண் நண்பிகளும் வந்திருந்தனர். உணவின் பின்னர் எல்லோரும் நடனமாட ஆரம்பித்து விட்டனர். இவரும் போய்விட்டார். எனக்கு அந்த சூழலே பிடித்திருக்கவில்லை. திடீரென அவரது நண்பன் ஒருவன் அருகில் வந்து கதைக்க ஆரம்பித்தார். உரசியபடி பேசியது எனக்கு பிடிக்கவில்லை. சற்று விலகி இவருக்கு அழைப்பெடுத்தேன். வருகின்றேன் என்று அழைப்பை துண்டித்துவிட்டார். அவர் நண்பர் அருகில் மீண்டும் வந்து அமர்ந்துவிட்டார். முதன் முறை ஒரு அன்னிய ஆண் என் அருகில்… தடாரென You are chubby and Cute என்று கட்டிபிடித்து முத்தமிட்டு விட்டான். விலத்தி எழும்பி நின்ற பின்னும் என்னுள் அதிர்ச்சி அடங்கவில்லை. இவரும் வந்துவிட இதனை பற்றி சொன்னேன். அழவும் ஆரம்பித்தேன். வா என கையைப்பிடித்து இழுத்து வெளியில் வந்துவிட்டார். அங்கிருந்து இங்கு என்னை விடும் வரை நாகரீகம் பற்றி எனக்கு பாடம் எடுத்தபடி தான் வந்தார்.
நான் வழி முழுதும் அழுதுகொண்டு தான் வந்தேன். இவர் அருகில் இருப்பது எனக்கு அன்னியமாகவுள்ளது. முறையான உறவில் இணைந்து ஒருவன் விரல் மட்டுமே என்னில் படவேண்டும் என நினைப்பவள் நான். ஆனால் இதனை இவர் இவ்வளவு இலகுவாக எடுப்பார் என நான் நினைக்கவில்லை. குறைந்த பட்சம் தன் நண்பனையாவது கண்டிப்பார் என எதிர்பார்த்தேன்.
நான் உயர் தரத்தில் படித்துக்கொண்டிருந்த போது வகுப்பிற்கு சைக்கிளில் செல்லும் போது ஒருவன் வழிமறிக்க கையை பிடித்து கடிதத்தினை திணித்துவிட்டான். இதற்காக நான் வீட்டில் அழுத போது என் அண்ணாக்கள் அவன் கையை முறித்ததை நினைத்துப் பார்க்கின்றேன். இன்று நடந்துத தெரிந்தால் போதும் இவரை அடித்தாலும் அடிப்பார்கள். என்னுடைய நெருங்கிய நண்பன் ஜே.பி எனக்கு பின்னேர வகுப்பிருந்தால் அது முடியும் வரை காத்திருந்து என் பின்னாலேயே வந்த வீட்டில் விட்டுச்செல்வார். வீதியில் நின்று கூட என்னுடன் பேசமாட்டார். அவ்வளவு அக்கறையும் அன்பும் என் மேல். அவரையும் இந்த நிமிடம் நினைத்தப்பார்க்கின்றேன்.
ஆனால் இவர் தன் நண்பனை நியாயப்படுத்தி பேசுகின்றார். வந்திறங்கும் போது “நீங்களும் இப்படித்தான் நண்பிகளையும் நண்பர்களின் வருங்கால மனைவிகளையும் முத்தமிடுவீர்களா?” என்று கேட்டுவிட்டேன். வீட்டிற்குள் வந்து அரை மணி நேரத்திற்கும் மேல் குளித்துவிட்டேன். ஆனாலும் அருவருப்பு அடங்கவில்லை எனக்குள்; ஏதோவொன்று மறுபடியும் உடைந்திருப்பதை உணர்கின்றேன். ஓரு பெண் எதை மானமென்று கருதுகின்றாளோ அதை காத்திடாத ஆண் எப்படி அவள் வாழ்க்கைத் துணையாவது……? எப்போது போய் அம்மா மடியில் தலை புதைப்பேன் என்றிருக்கின்றது.
பக்கம்: 989
இனிய நாட்குறிப்பே,
அங்கிருந்து வந்து 20 நாளாகிவிட்டது. அன்றைய சம்பவத்தின் பின்னர் நானாக இவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டேன். என்னளவின் என் வாழ்க்கைத்துணை என்னை செதுக்க வேண்டும், அன்பு காட்ட வேண்டும் முக்கியமாக நான் அவரிடம் பாதுகாப்பை உணர வேண்டும் என்று கற்பனையில் நினைத்திருந்தேன். எனக்குள் இவையனைத்தும் மிச்சமின்றி உடைந்துவிட்டது. இன்று திடீரென அவரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி. “உனக்கு என்னில் சந்தேகமா?” என்று அதில் கேட்டனுப்பியிருக்கின்றார். இன்னும் தன் பக்க பிழையை இவர் உணரவில்லையா? அல்லது என்னைப் புரிந்துகொள்ளவில்லையா? எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்களுள் அநேகர் ஆண்கள். என் வருங்கால துணையிடம் அறிமுகஞ்செய்து வைக்குமளவு உறவில் நேர்மை இருக்கின்றது. நான் ஏன் சந்தேகப்பட வேண்டும். என்னைப் போல் தான் எல்லோருக்கும் உள்ள உறவில் நேர்மை இருப்பதாக நான் நினைக்கின்றேன். அவ்வளவு தான்!
பக்கம்: 994
என் இனிய நாட்குறிப்பே,
இன்று எம் பிறந்தநாள், பல வருடங்களின் பின் எல்லோரும் ஒன்றாக இன்றைய நாளில் சேர்ந்து கொண்டாடினோம். 12 மணிக்கே என் பாதியின் அறைக்கதவை திறந்து கேக்குடன் சென்றால் அவர் அங்கு இன்னுமொரு கேக்குடன் எனக்காக காத்திருக்கின்றார். நாம் இருவரும் அப்படி தானே… ஒரே சிந்தனை ஒரே உணர்வு…. 298 நாட்கள் ஒன்றாக இருந்தவர்கள் அல்லவா…. நள்ளிரவிலிருந்தே வீடு விழித்திருக்கின்றது. ஐந்து வருடங்களின் பின் நாம் அறுவரும் ஒன்றிணைந்துள்ள பிறந்த நாள் இன்று!
காலையில் கோயில், பிறகு ஊர்சுற்றல், வெளியே மதிய உணவு என்று இந்த நாள் இறக்கை கட்டி பறந்துவிட்டது. மாலையில் தம்பி தான் யதார்த்தமாக இவரிடமிருந்து வாழ்த்து வரவில்லையா என்று நினைவூட்டினான். அந்த நிமிடத்திலிருந்து ஒருவித எதிர்பார்ப்பு என்னை சூழ்ந்துவிட்டதை உணர்கின்றேன்.
பிறந்த நாளில் கிடைத்த பரிசுகளில் குட்டியண்ணா தந்த டெடி எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. இரு மாதங்களுக்கு முன்னரே வெளிநாடு போய் திரும்பும் போது வாங்கிவந்து மறைத்து வைத்திருந்திருக்கின்றார். ஆறடி உயரமான இதனை எப்படி மறைத்து வைத்திருந்தாரோ…. புசுபுசுவென்று பால் வெள்ளை நிறத்தில் இருக்கின்றது. இதன் வெண்மையில் கறைபட்டுவிடுமோ என்று கையால் தொடவும் யோசிக்கின்றேன். நானும் சின்னண்ணாவும் இதற்கு குட்டி
கதிரையும் வாங்கிவந்துவிட்டோம். இரகசியமாக இதற்கு அம்மு என்று பெயர் வைத்திருக்கின்றேன்.

Comments
Post a Comment