புதுவருடம் பல புதிய அனுபவங்களுடன் ஆரம்பித்துள்ளது…
01. நீதிமன்றம் உள்ளும் புறமும்
எல்லாவிடங்களுக்கும் பயணிக்க வேண்டும் அனுபவம் பெற வேண்டும் என்ற என்னுடைய கொள்கை இறைவனுக்கும் தெரிந்துவிட்டது போல சம்பந்தமில்லாத விடயத்தில் நானும் கோர்க்கப்பட்டு நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியாகிவிட்டது. வீட்டிற்கு இது குறித்த பதிவுத்தபால் வந்த போது வீட்டாக்களுக்கும் பதட்டமாகி அவர்களது பதற்றம் என்னையும் தொற்றி அது ஒருவித பயம் கலந்த பதற்றத்தினை என்னுள் விதைத்துவிட்டது. எத்தனை படம் பார்த்திருப்போம் எத்தனை சட்டத்தரணிகள் கைகாலை அசைத்து பொயின்ட்டை பிடித்து குற்றவாளியை வாங்கு வாங்கு என்று வாங்கியிருப்பார்கள். சட்டத்தரணிகள் என்று நினைத்து கண்ணை கொஞ்சம் மூடினாலும் சிவாஜி, விஜய், நம்மட ஆள் சூர்யா என்று எத்தனை லோயர்கள்…… சரி இவர்கள் மாதிரி இல்லாட்டியும் வீட்டாக்கள் தேடிப்பிடித்த சட்டத்தரணியுடன் பேசி சகலதையும் சொல்லி …(வைத்தியரிமும் சட்டத்தரணியிடமும் பொய் சொல்லக்கூடாதாம்) தயாராகியாயிட்டு. நாளை வழக்கு என்றால் இன்றே எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது. அன்றிரவு நித்திரையும் இல்லை. காலையில் போட்ட கோப்பியை குடிப்பது கூட மறந்துவிட்டது. மனதுள் அவ்வளவு பதட்டம் இருந்தாலும் அவ்வளவு நாளும் காட்டி வந்த கெத்து லைட்டா என்னை விட்டு போறமாதிரி வேற இருந்தது. நான் இருந்த நிலையை பார்த்து ஏதாவது சாப்பிட்டு போ அல்லது நீதிமன்றத்தில் மயங்கிவிட்டால் என்று நச்சரிப்பு வேறு.. ஒரு மாதிரி சாப்பிட்டு தண்ணி குடித்து நெஞ்சைப்பிடித்த படி போனால் நடுப்பகுதியில் போய் அமரும் படி என்னுடைய சட்டத்தரணியும் சொல்லி விட்டார். நேரம் 9 மணி உள்ளே போய் பார்த்தால் ஏகப்பட்ட சனம். ஒரு பக்கம் ஆண்கள் மறு பக்கம் பெண்கள். போய் அமர்ந்தால் அவர்கள் ஏதோ வெளிநாட்டால் வந்து நடுவில் குந்தின மாதிரி என்னிடம் நூறு கேள்விகள் கேட்கிறார்கள். பதட்டத்தினை மறைத்து எப்போ ஆரம்பிக்கும் என்று காத்திருந்தால் 10 மணிக்கு திடீரென உரத்த குரலில் அறிவிப்பு. சற்று நேரம் கழித்து நீதிபதி உள்ளே வர அனைவரும் எழுந்துநின்று அவர் அமர்ந்த பின் அமர ஒரு சின்ன சத்தம் கூட இல்லை.
முன்னாலிருப்பவர் வழக்கெண் மற்றும் பெயர்களை உரத்த குரலில் சொல்ல சட்டத்தரணிகள் அங்கு போகின்றார்கள் மெல்லிய குரலில் பேசுகின்றார்கள். கூப்பிட்ட வழக்காளியும் பிரதிவாதியும் எழுந்து அருகில் போகுமுன்னரே அடுத்த வழக்கிற்கான திகதி நீதிபதியால் வழங்கப்படுகின்றது. எழுந்து போனவர்கள் அப்படியே வெளியே போகின்றார்கள். என்னுடைய பெயரும் வாசிக்கப்பட்டு கிட்ட போகுமுன்னரே எல்லாம் சொல்லி முடிந்தாயிட்டு. அப்பாடா என்றிருந்தது. ஆனால் ஒரு கேள்வி இந்த படத்தில் காட்டுவது போல் நம்முடைய சட்டத்தரணிகள் குரலெழுப்பி, பொயிண்ட்ஸ் கண்டுபிடித்து கிழிகிழி என்று கிழித்து தொங்கவிடுவதெல்லாம் பொய்யாடா….. எத்தனை சினிமா எத்தனை வழக்கு எம்மை கதிரை நுனியில் அமர்ந்து பார்க்க வைத்திருக்கும். சட்டத்தரணி, எதிர்கட்சி வக்கீல், கள்ள பொலீஸ், நடுவில் அடிபட்டு தப்பிவந்து வாயால் இரத்தம் ஒழுக சாட்சி சொல்லும் ஹீரோ…………. சை சப்பென்றாகிவிட்டது எனக்கு…இனி எத்தனை வழக்கிற்கு கூப்பிட்டாலும் சங்கத்தின் சார்பில் ஆஜராக நான் தயார்.
02. நடிப்பு…
இம்முறை இந்தியாவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற திரைப்பட விழாவில் என்னுடைய இரு ஆவணப்படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. அதற்காக இங்கு நின்றுகொண்டிருக்கின்றேன். மன்னிக்கவும் இதை தட்டச்சு செய்யும் போது காவா சாய் குடித்துக்கொண்டிருக்கின்றேன். கடையில் இல்லை நண்பனின் கைகளால் தயாரிக்கப்பட்டது. இவ் ஆவணப்படம் மற்றும் இது பெற்றுள்ள விருதுகள் குறித்து பத்திரிகை நிரூபர் என்னிடம் பல கேள்விகளை அடுக்கியிருந்தார். அதில் இரு வினாக்களும் பதில்களும்…..
நீங்கள் ஏன் ஆவணப்படங்களில் மட்டும் கவனஞ்செலுத்துகின்றீர்கள்? திரைப்படத்தில் ஆர்வமில்லையா?
இல்லை குறுந்திரைப்படங்கள் சில இயக்கியுள்ளேன். ஆனால் பிறரை நடிக்க வைப்பதில் எனக்கு பிடித்தம் இல்லை. தனிப்பட்ட முறையிலும் எழுத்திலும் கருத்திலும் என்னால் நடிக்க முடிவதில்லை. உள்ளதை உள்ளபடி ஆவணப்படுத்தல், தரவுகளை சேகரித்தல் எனக்கு பிடித்துள்ளது. அதிலும் எனக்கு மருத்துவம் சார் ஆவணப்படங்கள் இயக்குவதில் தான் ஆர்வம். இதற்காக நிறைய மனிதர்களை சந்திக்கின்றேன். அவர்களுடன் பேசுகின்றேன். அவர்கள் மொழியிலேயே கலைப்படைப்பை நெறியாள்கை செய்கின்றேன்……கலையென்பது பிடித்ததை செய்வது தானே… அதை செய்கின்றேன்.
உங்கள் நாட்டில் இடம்பெறுகின்ற விழாக்களில் உங்கள் திரைப்படங்களை காணவில்லையே….?
முதலில் சில படங்களை அனுப்பியிருந்தேன். என்னுடைய படம் தெரிவுசெய்யப்பட வேண்டுமாயின் பலரிடம் சிரித்து பேசவேண்டியிருந்தது…. அங்கிருப்பவர்கள் அல்லது தெரிவு குழுவில் இருப்பவர்களின் இரட்டை அர்த்த பேச்சுகளை சகிக்க வேண்டியிருந்தது. எனக்கு இதில் உடன்பாடில்லை. என்னுடைய திறமை தான் மதிக்கப்பட வேண்டுமேயன்றி என்னுடைய மனம், முகம் அல்ல. படைப்பென்பது படைத்தவனுக்காக மதிக்கப்பட கூடாது. அல்லது தன்னுடைய படைப்பு மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக படைப்பாளி முகங்காட்டக்கூடாது. ஒரு காதல் எப்படி இனம், மதம், பணம், சாதி சக்கட்டு பாராமல் எம்மை கடக்குமோ அப்படி கலையும் படைத்தவனுக்காகவன்றி பிடித்துப்போக வேண்டும். ஒருவேளை என்னுடைய துணைவரே கூட தேர்வுக்குழுவில் இருந்தாலும் எனக்காகவோ எம்முடைய காதலுக்காவோ அன்றி கருத்தியல் , காட்சியமைப்பு, கலைக்காக தான் என்னுடைய படைப்பு தேர்வுசெய்யப்பட வேண்டும் என விரும்புகின்றேன். எந்த விழா என்றாலும் நேர்மையாக தேர்வுகள் இடம்பெறுகின்றதென்றால் என்னுடைய படைப்பு அனுப்பிவைக்கப்படும். முகப்பூச்சு விருதுகள் எனக்கு வேண்டாம். என் மானம் சுயகௌரவம் விற்று தான் என் படைப்புக்களை காட்சிப்படுத்தவேண்டும் என்பதில்லை.
3. குடையில்லா பொழுதில் கொட்டித்தீர்க்கும் மழை….
சும்மாயிருக்கும் போது எதுவும் நடக்காது அதேவேளை வாய்ப்புக்கள் வந்தால் குடையில்லாத நேரத்து மழை மாதிரி கொட்டித்தீர்த்து விடுகின்றன. ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பிற்காக வாய்ப்புக்கிடைத்து தயாராகிக்கொண்டிருக்கும் போது அடுத்தடுத்து நிறைய வாய்ப்புக்கள் என் அறைக்கதவினை தட்டோ தட்டென்று கட்டுகின்றன. திரைப்படத்துறை சார் பயிற்சியினை பெறுவதற்கு உலகலாவியரீதியில் 20 பேரில் ஒருவராக தேர்வுசெய்யப்பட்டுள்ளேன். இதற்கு 03 மாதகாலம் தேவை. அடுத்தது கடந்த ஆண்டு கட்டடத்துறை சார் விருதும் உலகின் முதல் 100 வடிவமைப்பாளரில் ஒருவர் என்ற பெருமையும் விருதும் இத்தாலியில் இடம்பெற்ற விருதுவிழாவில் கிடைத்திருந்தது. இதன் போது பல்வேறுப்பட்ட நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். எம்முடனும் கலந்துரையாடியிருந்தனர். புத்தாண்டு அன்று அதிகாலையில் ஓர் இனிய மின்னஞ்சல். குறிப்பிட்ட நிறுவனம் அடுத்த 03 ஆண்டுகளில் ஐந்து திட்டங்களை வெவ்வேறு நாடுகளில் முன்னெடுக்கவுள்ளதாம். அதற்கான வடிவமைப்புக்குழுவில் இணைந்துகொள்வதற்கான அழைப்பு அது. கூடவே இதில் ஈடுபடும் போது குடும்பத்தவர்களுடன் (துணைவர் மற்றும் குழந்தைகள் மட்டும் - அட ஒரு வருடத்திற்கு முன்னர் சொல்லியிருந்தால் ரெடியாகிருக்கலாம்..) பயணிப்பதற்கான பயண செலவு மற்றும் தங்கியிருப்பதற்கான பொறுப்பு அனைத்தும் அவர்களே முன்னெடுக்கின்றார்களாம்.
இப்படியே ஊர் உலகம் சுற்றினால் வீட்டில் இருப்பது எப்போது… குடும்பம், குழந்தை எப்போது என நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள் வீட்டாக்கள்…. முடிவெடுக்க முடியாமல் ஒதுங்குவதா அல்லது நனைந்துவிடுவதா என்று தடுமாறிக்கொண்டிருக்கின்றேன் நான்...
4. வெள்ளை முக கற்பிதங்கள்
அண்மையில் பழைய மாணவர் கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அங்கு போனால் எல்லாம் புதுமுகங்கள். அட நம்முடன் 12, 13 வருடங்கள் படித்தவர்கள் எங்கே என்று தேடினால்…. பெரும்பாலானோரை மதிக்கவே முடியவில்லை. எல்லாம் வைட்னிங் கிறீம் உபயம்…. அட கடவுளே வெள்ளை முகங்கள் தான் அழகு என்ற கற்பிதங்கள் எப்போது தான் இவர்களை விட்டுப்போகுமோ…. ஏன் இப்படி இரசாயனங்களை போட்டு இயற்கையழகை கெடுக்கின்றீர்கள் என்று பகிடியாக கேட்டால் “நீ வெள்ளையாக இருப்பதால் இப்படி பேசுகின்றாய்..” என்று மறுமொழி கிடைக்கின்றது. நான் கருப்பாயிருந்தாலும் இப்படித்தான் பேசியிருப்பேன். நிறத்தில் முகத்தில் என்ன இருக்கின்றது. பொதுவாக இந்த அழகுபடுத்தல்கள் எல்லாம் பெரும்பாலும் இன கவர்ச்சியக்கானவை தானே. என்னைப்பொறுத்தளவில் நான் ஓர் ஆணை என்னுடைய படிப்பு, திறமையால் குணத்தால் தான் கவரநினைப்பதுண்டு. அதேபோன்று ஓர் ஆண் என்னை கவரவேண்டுமென்றாலும் இவை தான் என்னை ஈர்க்கும். முற்போக்கு சிந்தனையும், முதிர்ச்சியும் ஆளுமையும் தான் தேவையேயன்றி வெளிப்பூச்சுகள் அல்ல… இதை சொல்லப்போனால் என்னை வித்தியாசமாக பார்க்கின்றார்கள்… அப்படியென்றால் இவரை பிடிக்குமா அவரைப்பிடிக்குமா என்று அவர்கள் எதையெல்லாம் இழிவென நினைக்கின்றார்களோ அதனை முன்னிருத்தி ஆண்களை சுட்டி என்னிடம் கேட்கின்றார்கள். இவ்வாறானவர்களிடம் சில விடயங்களை பேசாமல் கடப்பதே மேல்…..

No comments:
Post a Comment