Tuesday, January 22, 2013

மாலைநேரம் கடற்கரையில்….


நினைவு தெளிந்த நாளிலிருந்து –
ஓர் ஆசை…..
கடற்கரையில் மாலைநேரமொன்றை
செலவிட வேண்டுமென்று
பலமுறை குடும்பத்தினருடன்
சென்று விட்டேன் - ஆனால்
அந்த தனிமை
அந்த கவிதைப் பொழுது
இதுவரை கிடைத்ததில்லை

அப்பாவிடம் கேட்டுவிட்டேன்
அவருக்கு அலுவலக வேலையாம்
அம்மாவிடம் கேட்டேன்
அவருக்கு வீட்டுவேலை அதிகமாம்
அண்ணாவிடம் அனுமதியே கிடைக்கவில்லை
தம்பிக்கு தன் நண்பர்களுடன்
செல்வது தான் பிடித்திருக்கின்றதாம்
நண்பிகளை கேட்டால் - தம்
ஆண் நண்பர்களுடன் தான் வருவார்களாம்
நான் எதற்கு அங்கே சிவபூஜை கரடியாக…
என் நண்பனிடம் கேட்னே;
எதிர்பார்ப்பை  விதைத்துவிட்டு
கடைசி நேரத்தில் கழுத்தறுத்து விட்டார்
தனியே போவதற்கும் தைரியமில்லை

சில நேரங்களில் சில வினாக்களுக்கு
விடை கிடைப்பதில்லை….
இங்கும்
எனக்கு மட்டும் ஏன்?
யாருடன் தான் நான் போவது?
பல வினாக்கள் …- ஆனால்
இனிமேல் யாரிடமும்
கேட்கப்போவதில்லை..

என்றோ ஒரு நாள்
பௌர்ணமி தினத்தில்
கடற்கரை மணலில்
இனியதொரு மாலைப்பொழுதில்
என்னவனின் விரல்களை பிடித்தபடி
வெண்ணலைகள் எம் கால்களை
செல்லமாக மோத – அவன்
தோளில் முகம் புதைத்து – அவன்
வியர்வை மணம் சுவாசித்து
ஆரவாரங்களுக்கு மத்தியிலும்
மௌன மொழி பேசிக்கொண்டு
ஒரு கவிதைப்பொழுது
எனக்கும் கிடைக்கும் - என்ற
என் நிறைவேறாத
சின்ன சின்ன ஆசைகளுக்கான
(வழமையான) சமாதானத்தினை - என்
கடற்கரைப் பொழுது…
கற்பனைக்கும் - கூறி
கடிவாளமிடுகின்றேன்.



No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை