Wednesday, March 6, 2013

கருவாகிறது மௌனம்….

இப்போதெல்லாம்
வார்த்தைகள் தோற்கும் போது தான்
மௌனத்தின் வலிமை புரிகின்றது.

மனதிலுள்ளதை கொட்டிவிடுவது
அழுகி நாற்றமெடுப்பதை விட
அப்பட்டமாக சொன்னால்
வாயாடி என்கிறார்கள் - சற்றுக்
குரலுயர்த்தி விட்டால்
திமிர் என்கிறார்கள்
குறைத்துச் சொன்னால்
முனுமுனுக்கின்றேனாம்…
இவற்றையெல்லாம் விட
மௌனமே மேலெனத் தோன்றுகின்றது..

தட்டிக்கேட்டால்
தற்பெருமை என்கிறார்கள் - அதையே
தடவிக்கேட்டால்
காக்காய் பிடிக்கிறேனாம்
தட்டியும் தடவாமலும்
மௌன மொழிகளே – எனக்குப்
பிடிக்கின்றன இப்போதெல்லாம்….

மலர்கள் மௌனமாகத் தான்
மணம் வீசுகின்றன
மணற்தரை மௌனமாகத் தான்
தாங்குகின்றது….
மரங்கள் கூட மௌனமாகத்தான்
வளர்கின்றன..
எனக்குள் மட்டும் - ஏன்
மௌனமில்லை…?

எதிர்பார்ப்புகள் புதைந்திருப்பதாலா…?
ஆறறிவு படைத்திருப்பதாலா…?
மனதினுள் பதிந்துவிட்ட – பாரதியின்
புதுமைப்பெண் எட்டிப்பார்ப்பதாலா?
அதனால் தட்டிக்கேட்க
நினைப்பதாலா…?

என்னுடைய கனவுகளுக்கு
என்றும் மொழிகளிருந்ததில்லை
என்னுடன் எந்த காலதேவதையும்
பேசியதுமில்லை….
சித்தன் முதல்
சிறுபிள்ளை வரை
தொட்டுவிட்ட மௌனத்தினை
பார்க்கின்றேன்…

குற்றங்களாகி
குட்டப்பட்டு விட்ட
வார்த்தைகளை விட
மௌனங்களே அழகாக
தெரிகின்றன…

பாடலவன் விஜயின்
“ஆமைக்கு ஓடு அலங்காரமுமல்ல
சுமையுமல்ல…
மௌனமும் மனிதனுக்கு அஃதே”
வரிகள் அர்த்தமுள்ளதாகவே
தெரிகிறது….

இக்கணம் மதலே
வார்த்தைகள் மௌனிக்க
கருவாகிறது என்னுள்
மௌனமெனும் குழந்தை….






திகதி -   04.03.2013

நேரம் - 19:26:01

2 comments:

  1. அதிகபடியான மெளனம் புதுமைப்பெண்ணிற்கு அழகல்ல..

    ReplyDelete
  2. வார்த்தைகள் தோற்பதை விட மௌனங்களே அழகானது அது புதுமைப்பெண்ணாலும் குடும்பப் பெண்ணாகும் போது.....http://meerabharathi-veenaganam.blogspot.com/2013/02/blog-post_27.html

    ReplyDelete

அதிகம் வாசிக்கபட்டவை