அண்மையில் ஒரு ஆடைவடிவமைப்பு நிறுவனத்திற்கு சில ஆடைகளில் வடிவமைப்புக்களை வரைந்துகொடுத்திருந்தேன். இந்நிறுவனத்தின் தலைமை என் தமையனார் என்பதாலும் அவருக்கு தங்கையின் இரசனை மேல் இருந்த நம்பிக்கையிலும் வடிவமைப்புகளுக்கான மொடல்களையும் தெரியும் குழுவில் என்னையும் உள்வாங்கியிருந்தார். என்னுடைய பரிந்துரைகள் அல்லது தெரிவில் பெரும்பாலும் தாடி வைத்த ஆண்களை தேர்ந்தெடுத்திருந்தேன். என் கற்பனையிலும் ஆண்களுக்கான உடை வடிவமைப்பில் கற்பனை பண்ணும் போது ஆண் என்பவன் தாடியுடன் தான் உலா வந்திருந்தான். அண்ணா உட்பட குழுவில் இருந்தவர்கள் இது குறித்து கேட்ட போது ஆண்கள் எப்போதும் தாடியுடன் இருக்கும் போது மிக அழகாகின்றார்கள். மீசையுடன் இருக்கும் போது பேரழகாகின்றார்கள் என்று குறிப்பிட்டேன். சரி தாடி பற்றி நம்முடையவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்று பார்ப்போமா?
தாடிக்கு அணல் என்ற பெயரும் உண்டு, தாழ்ந்திருப்பதால் தாடி எனப்பட்டது, எனவே தாடி என்பது தூய தமிழ்ச்சொல்தான்!
- ' சுருளிடு தாடி... ' - (சிலப்பதிகாரம் ) .
- ' மருப்பிற் றிரிந்து மறிந்துவீழ் தாடி... ' - (கலித்தொகை ).
கலித்தொகையில் வரும் "மருப்பிற் றிரிந்து மறிந்துவீழ் தாடி" என்ற தொடர், யானையின் வளைந்த தந்தங்கள் தாடி போலத் தொங்குவதை விவரிக்கிறது. இத்தொடரின் மூலம் சங்க காலத்திலேயே 'தாடி' என்ற சொல், தாடியைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது தெளிவாகிறது.
- கம்பராமாயணத்தில் 'தாழ்சடை' - என்று தாடியைக் குறிப்பிடுகிறார் கம்பர். தாழ்தல் - என்றால் தாழ்ந்திருத்தல், தொங்குதல். தாழ் கழுத்து மயிர் = தாடி. தாழ்ந்து, தொங்கும் மயிர் = தாடி.
- தாடி என்பது அன்றைக்கு ஆண்மையின் அடையாளமாக விளங்கியதை புறநானூறு குறிப்பிடுகிறது.
- சங்க இலக்கியங்கள் தாடியை 'அணல்' என்றும் குறிப்பிடுகிறது. அணல் - என்ற சொல் மனிதர்களின் தாடியை மட்டும் குறிப்பிடாமல், கோழி, சேவல், மந்தி, குரங்கு ஆகியவற்றின் தாழ் கழுத்து மயிரையும் குறிப்பிடுகிறது.தாழ் என்பது எப்படி மருவி தாடி ஆகியுள்ளது என்பதற்கும் எமது இலக்கணங்களுள் விளக்கமுண்டுதாழ் > தாழி > தாடி.தாழ் > தாழை > தாடை.தாழ் + வாய் = தாழ்வாய் > தாவாய். ( தாவாங்கட்டை).(ஒப்பு நோக்குக : தாவாய், மோவாய்) .( ழகரம் > டகரம் ஆவது இயல்பான திரிபே!இதே போன்றே மீசை - மேலிட மயிர். மீ - என்றால் மேலிடம் /மேல்புறம்
தாடி - என்ற தமிழ்ச்சொல்லே திரிந்து வடமொழியில் 'தாடிகா' - ஆகிவிட்டது.
சேவலின்
கழுத்தில் அமைந்த தொங்கு சதைக்கும் தாடி என்று பெயர். ஆடு, மாடுகளின்
கழுத்தின் கீழே தொங்கும் சதைக்கு 'அலைதாடி' - என்று பெயர். (ஆங்கிலத்தில்
dewlap).
நம்முடைய தமிழ் ஆண்கள் மூன்று தருணங்களில் தான் அழகாகின்றார்கள். ஒன்று வேட்டியுடுத்தி கம்பீரமாக வலம் வரும் போது, இரண்டாவது மீசை மற்றும் தாடியுடன் இருக்கும் போது மூன்றாவது ஒரு பெண்ணை மட்டும் முழுதாக நேசிக்கும் போது.... என்ன நான் சொல்வது சரிதானே... விரைவில் வடிவமைக்கப்பட்ட ஆடைகளுடன் புகைப்படங்களை எதிர்பார்த்திருங்கள்.
பிற்குறிப்பு: நம்முடைய ஆள் சூர்யாவை கறுப்பு சேட் வேட்டியுடன் தேடித்தேடியே என்னுடைய டைப்பண்ணின விரல்கள் சற்று தேய்ந்து போய்விட்டன.

No comments:
Post a Comment