Thursday, April 4, 2013

சுஜாதாவின் “பிரிவோம்… சந்திப்போம்” பற்றிய அலசல்....



இந்தியாவில் திருநெல்வேலியில் வேலையற்ற பொறியியல் பட்டதாரியான இளைஞன் ரகுபதியின் கனவுகளை அடுக்குவதுடன் ஆரம்பமாகின்றது “பிரிவோம்… சந்திப்போம்….”. ஓர் கிராமத்து இளைஞன் அவனது எல்லையற்ற சிறு சிறு கனவுகள்… தான் வேலையற்று இருப்பதால் தனது அப்பாவின் செலவில் புகைப்பிடிப்பதை கூட 100 பரிசீலித்து கடையில் வாங்குவது என பக்குவமான ,கம்பீரமான ரகுபதி முதல் அத்தியாயத்திலேயே அறிமுகமாகின்றான். அடுத்தடுத்து மனைவியை இழந்து ஒரே மகனுடன் தனித்துவிடப்பட்ட நிலையில் தன்னைப் போலவே தன் மகனையும் பொறியியலாளருக்கு படிக்க வைத்து, அவனையும் வேலையிலமர்த்திப் பார்க்கும் இலட்சியத்துடன் ரகுபதியின் அப்பா கோவிந்தராஜன். பத்தொன்பது வயதிலும் குழந்தைத்தனம் மாறாது தம்பியுடன் செல்லச் சண்டைகள் போட்டுக்கொண்டு செல்வச் செழிப்புடன் வலம் வருகின்ற மதுமிதா என்கின்ற அழகுப் பெண். கணவன் பிரிந்து சென்றுவிட்ட நிலையில் கைக்குழந்தையுடன் வீடுகளுக்குச் சென்று வேலை செய்து வயிற்றைக் கழுவி, தன் குழந்தையின் கொஞ்சல்களில் கூட தன் கணவனைக் காண்பதாக சொல்வது முதல் மாறி மாறி கஷ்டங்களை கூறி பொருட்களை யாசிப்பது வரை சராசரி கீழ்மட்ட குடும்பப் பெண் ஜெயந்தி என முக்கியமான நான்கு பாத்திரங்களையும் அடுத்தடுத்து வசிப்பவர்களின் மனதில் குறைந்த இடைவெளி எனினும் இலகுவில் உட்புகுத்தி விடுகின்றார் சுஜாதா.

பார்த்தவுடனேயே மதுமிதாவுடன் காதல் கொள்கின்ற ரகுபதி அதை சொல்லமுடியாமல் திண்டாடுவதும் பழம் நழுவி பாலில் விழுந்தது போன்று மதுமிதாவின் வீட்டாரே ரகுபதியுடன் நிச்சயார்த்தம் செய்து iவைப்பது ஏதோ வழமையானது போன்று போய்க் கொண்டிருந்தாலும் ரகுகுபதி திடீரென வேலை கிடைத்து நகரம் சென்று திரும்புகின்ற போது மாறிக்கிடக்கின்ற காட்சிக்கோலங்கள் நாவலிலிருந்து கண்னை எடுக்க விடாமல் செய்துவிட்டது.

அடுத்தடுத்து நடக்கின்ற திடீர் நிச்சயார்த்தத்தில் பட்டும்படாமலும் இருக்கின்ற கோவிந்தராஜன் மகனிடம் “காதல் என்கின்றது Nature’s way of ensuring a pregnancy! என்று சொல்லி கூடவே சற்றுப் பொறுத்து முடிவுகளை எடுக்கும்படி அறிவுரை கூறுவது அப்பா என்பதையும் தாண்டி ஒரு நிமிடம் நல்லதொரு நண்பனாகவும் அவரை பரிணமிக்கச் செய்கின்றது.




மதுமிதா – ரகுபதி நிச்சயார்த்த முடிவும், ரகுபதி அப்பாவித்தனமாக தேம்பி தேம்பி அழுவதும், மதுமிதா பெரும் பணக்காரன் ராதாகிஷனை திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா சென்று விடுவதும், ரகுபதி தற்கொலைக்கு முயன்று பலத்த அடியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதுடனும் முதல் அத்தியாயம் முடிவுறுகின்றது.

"அந்த அமெரிக்க ராதாகிஷனை விட நான் எந்த வiகையில் குறைந்துவிட்டேன்"  என்ற வைராக்கியத்துடன் ரகுபதி அமெரிக்கா சென்று படிப்பதும் ஏதோ வழமையாக நமது சினிமா ஹீரோக்கள் போல தானோ அல்லது ரமணிச்சந்திரனின் கதாநாயகனை போலவோ என்று அலுக்கின்ற போது மதுமிதாவே ரகுபதியை தொடர்புகொண்டு நட்பு பாராட்டுவதும் மதுமிதா-ராதாகிஷனின் குடும்ப வாழ்வின் அன்னியோன்யத்தையும் அவர்களது புரிந்துணர்வையும் பார்த்து ரகுபதியே திகைப்பதும் சுஜாதாவிற்கான பாணியை காட்டிவிடுகின்றது. தொடர்ந்து ராதாகிஷனின் முறையற்ற தொடர்புகளும் வழமையான நமது கதாநாயகனைப் போன்றே முன்னாள் காதலிக்காக ரகுபதி போராடுவதும் இந்திய எழுத்தாளர்களின் படைப்பாளிகளின் பாணி மாறுவதில்லையோ என சிந்திக்க வைக்கின்றது.
மதுமிதாவே தன்னை ரகுபதி மறக்க வேண்டும் என்று ரத்னா என்கின்ற இந்திய அமெரிக்க பெண்ணை அறிமுகம் செய்வதும் அதே “முன்னாள் காதலன்” என்கின்ற இந்திய பாணியாகவே அமைகின்றது. பின்னரான பல திருப்பங்களுடன் பயணித்து இறுதியில் மதுமிதாவின் இறப்புடன் நாவல் முற்றுப் பெறுகின்றது.

தன் மனைவிக்கு துரோகம் செய்கின்ற ராதாகிஷனுக்கு இறுதிவரை தண்டனை கிடைக்காமை சற்று ஏமாற்றமடைய வைத்திருந்தாலும் என்றோ ஒரு நாள் செய்தவை நம்மை நோக்கித் திரும்பும் என்ற யதார்த்தமான உண்மையை ஆங்காங்கே சுஜாதா முன் வைக்கத் தவறவில்லை. பணத்திற்காக ஆசைப்பட்டு தன் மகளிற்கு முடிவைத் தேடிக்கொடுத்த பெற்றோர்கள் ரகுபதியிடம் மன்னிப்பு கேட்பது நெகிழவைக்கின்றது.
இக்கதையில் பெயருக்கேற்ப மதுமிதா “மது” போதையாகவே ரகுபதியை ஆட்டிவைக்கின்றதால் பெயர் நன்றாகவே பொருந்துகின்றது.

என்னளவில் என்னை இந்த நாவலின் இரு விடயங்கள் கவர்ந்திருந்தது. ஒன்று ரகுபதியின் அப்பா. மிகவும் நிதானமான கதாப்பாத்திரமாக வள்ளுவர், பாரதி என பலரை தன்னுள் கொண்டவராக இறுதியில் வேலைக்கார பெண்ணிற்று சமூக அங்கிகாரம் கிடைக்க வேண்டி மறுமணம் செய்து கொள்வதும், “உடம்பிற்காகவா அப்பா?” என ரகு கேட்கின்ற போது அதுவென்றால் வேறு பெண்களிடம் போயிருப்பேன் 25 வருடம் உனக்காகவே தனியே தூங்கினவன். ஆனாலும் அதுக்காக இல்லாமலும் இல்லை என கூறுவது உண்மையான ஒரு வெளிப்படையான மனிதனை காட்டுகிறது. இன்று சமூகத்தின் உயர் பதவிக்குள் ஒளிந்து இருமுகம் காட்டிக்கொண்டு பலருடைய வாழ்வில் விளையாடுகின்ற எத்தனையோ பேரை விட இவர் கருத்து என்னளவில் ஏற்றுக்கொள்ளக்கூடியதொன்று.

அடுத்த பாத்திரம் ரத்னா. தன் மண்ணை அதன் பெருமையை நேசித்துக் கொண்டு அதே வேளை அமெரிக்க சூழலுக்கு ஏற்பவும் வாழ்கின்ற ரத்னா மனதில் படுவதை வெளிப்படையாக கூறுவதும் நிதானமாக ஒவ்வொரு விடயத்தினையும் ஆராய்ந்த முடிவெடுப்பதும் தன்னுடைய குடும்பத்தினரை ரகுபதிக்கு அறிமுகம் செய்து வைப்பதும் மிகமிக பாராட்டத்தக்கதொன்றும் கூட. இன்றைய காலகட்டத்தில் ஒரே சமயத்தில் பலருக்கு தண்ணீர் காட்டுபவர்கள் மத்தியில் பொறுமையாக தன்னுடைய ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கின்ற ரத்னா இன்றைய இளைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு. ரத்னா ரகுபதியிடம் “நீங்கள் மதுமிதாவை நேசித்த காதலின் புனிதம் தான் என்னை உங்களையும் நேசிக்க வைக்கிறது” என்று சொல்வது மிகவும் அழகிய வரிகள்….

சுஜாதாவின் எழுத்துநடை வழமை போன்று முன்னுக்கு ஒரு சம்பவம் நடப்பதாகவும் அதில் பார்வையாளராக நாம் இருப்பது போன்றும் செல்கிறது. ஆரம்ப அத்தியாயங்களில் பாத்திரங்களின் அறிமுகம் முதல் இறுதியில் ராதாகிஷனுக்கான தண்டணையை வாசகரின் கற்பனைக்கே கொடுத்து விடுவது வரை சுஜாதாவின் பாணி மாறவில்லை. ஆனாலும் தான் மிகவும் நேசித்த ,அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்த கணவன் பல பெண்களுடனும் தொடர்பு வைத்துள்ளான் என தெரிந்தவுடன் மதுமிதா தன் முன்னாள் காதலனிடம் தன்னை மறுமணம் செய்யும் படி கெஞ்சுவது சுஜாதா முன் அத்தியாயங்களில் தோற்றுவித்திருந்த மதுமிதாவிற்கும் இறுதியில் முடிக்கின்ற மதுமிதாவிற்கும் இடையில் பல முரண்பாடுகளை தோற்றுவித்திருந்தது. ஒரு சராசரி கிராமத்துத் தமிழ்ப் பெண்ணால் நிச்சயம் அவ்வாறு செய்ய முடியாது அமெரிக்க நாகரீகத்திற்கமைய விவாகரத்து பெற்றிருக்க கூடும் அல்லது அழுது கொண்டு “கல்லானாலும் கணவன்” செண்டிமென்டுடன் வாழ்ந்திருக்கக் கூடும். அல்லது புரட்சிப்பெண்ணாக திருத்தியிருக்க கூடும்.

ஒரு வேளை மதுமிதா பத்திரத்தினை சாகடிக்காது ரகுபதியுடன் முறைப்படி இணைத்து வைத்திருந்தால் சபல புத்தியுள்ள ஆண்களுக்கு சுஜாதாவின் நாவல் சுட்டிருக்கும். பெண் நினைத்தால் அவளாலும் சபலப்பட முடியும் இன்னொரு வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும் என்று உணர்த்தியிருக்கலாம். எப்படியோ தன் பிரிவோம் சந்திப்போம் நாவல் மூலம் சிறந்ததை தேடி ஓடுகின்ற பெண்ணுக்கான முடிவுரை எழுதியிருக்கின்ற சுஜாதா அதே சிந்தனையுடன் ஓடுகின்ற ஆணுக்கான இறுதி வரிகளையும் படைத்திருக்கின்றாரா? அல்லது அவரும் பால்நிலை பேணுகின்ற சராசரி எழுத்தாளர் தானா? என்ற கேள்வியையும் தோற்றுவித்திருந்தது. அதிலும் ஒரு திருப்தி என்னவென்றால் தன்னுடைய சபலத்தினை நியாயப்படுத்த தன் மனைவியை முன்னாள் காதலனுடன் இணைத்துப் பேசி அவளை நோகடிக்கின்ற ராதாகிஷன் மூலம் சராசரி ஆண் ஆதிக்கத்தினை காட்டிவிடுகிறார். ( இப்போதெல்லாம் தன்னுடைய காதலுக்கு சம்மதிக்காத பெண்களை ,தன் விருப்புகளுக்கு இணங்காத பெண்களை பற்றி அவதூறு பேசுகின்றதும் இன்னொருவருடன் இணைத்துப் பேசி தம் குற்றங்களை மறைப்பதுவும் சமூகத்தில் இன்று நிறையவே உண்டு)

முதல் பாகம் மது – ரகு காதலில் தொடங்கி மது- ராதாகிஷன் திருமணத்தில் முடிய இரண்டாம் பாகம் ரகு – மது சந்திப்பில் தொடங்கி மது மரணத்தில் நிற்கிறது பிரிவோம் சந்திப்போம் ஆக மொத்தத்தில் எதையும் தீவிரமாக எதிர்கொள்ளும் இளைஞன் ரகுபதி , அலட்சியமான நடத்தை கொண்ட அமெரிக்க இளைஞன் ராதாகிஷன் , மனதில் குழந்தைத்தனம் மாறாத தேவதைப் பெண் மதுமிதா , தீர்க்கமான அமெரிக்க தமிழ்ப் பெண் ரத்னா , நட்புடனும் யதார்த்தத்துடன் இணைந்ததாகவும் விடயத்தினை அணுகுகின்ற ரகுபதியின் அப்பா கோவிந்தராஜா என முக்கிய ஐந்து கதாபாத்திரங்களுடன் திருநெல்வேலி பாபநாசத்தில் தொடங்கி அமெரிக்காவில் நிறைவடைகிறது சுஜாத்தாவின் பிரிவோம் சந்திப்போம்…

( “பிரிவோம் சந்திப்போம்…” வாசித்த போது நேரம் போனதும் தெரியவில்லை கூடவே சந்தர்ப்;பங்கள் கிடைத்தும் ஒழுக்கத்துடன் நடந்து கொண்ட நேர்மையான ,நிதானமான , இறுதிவரை எந்த கட்டத்திலும் குழந்தை மனதை நேசிக்கின்ற ஒருவன் எனக்கும் கிடைக்க மாட்டானா என்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும் ஒட்டிக்கொண்டது மறுக்க முடியாத உண்மை )



I love u sometimes foolishly and at those moments I do not understand that I could not, would not and should not be so absorbing a thought for u as u are for me….  
 படித்தில் மிகப் பிடித்தது

No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை