Tuesday, May 21, 2013

பேசுகின்றான் பாலச்சந்திரன்......


தப்பிக்கத் தெரியாமலா
கடைசி வரையில்
களத்தில் நின்றோம்?
பதுங்க வழியின்றியா
பகைவனிடம் சிக்கினோம்?
பிரபாகரனின் இன்னொரு பிள்ளை
எங்கோ ஓடி
ஒளிந்து கொண்டான் - என
எள்ளி நகையாட
அந்த ஈனக்
கும்பலுக்கு எப்படி இடம்
கொடுக்க முடியும்?
அந்த பயந்தாங்கொள்ளிகளை
அவர்களின் பதுங்கு குழிகளிலேயே சந்தித்தோம்

பாவம்
பாலச்சந்திரன்!
பசிக்கு ஏதோ
சாப்பிடுகின்றான் என்று
என் மீது உங்களுக்கு பரிதாபம்!
நாங்கள்
சயனைட் நஞ்சைக் கூட
அப்படித் தான் சுவைத்துத்
தின்போம்!
சாவுக்கு அஞ்சினால் தானே
பகை கண்டு
அச்சம் வரும்?



என் விழிகளில் அவனுக்கு
மிரட்சி தெரியவில்லை
புரட்சி அனல் வீசியிருக்கின்றது
என் முகத்தில் அவன்
ஒரு அப்பாவியை பார்க்கவில்லை!
என் அப்பாவை பார்த்திருக்கின்றான்!

ஈழ மண்ணில் முளைக்கும்
புல்லும் அவனுக்கு புலியாய் தெரியும்
வன்னிக் காட்சியும்
வன்னிக் காட்டில் மலரும்
காந்தள் பூக்களும்
அவனுக்கு புதர்களிலிருந்து
நீளும் புலிகளின் நாக்குகளாய் தெரியும்
புலிகளுக்கு பிறந்த குட்டிப்புலியை
அவனால் எப்படி
குழந்தையாய் பார்க்க முடியும்?
பனிக்குடத்தில் புரளும்
பிஞ்சுக்கும் அஞ்சி
கர்ப்பிணிகளின்
அடிவயிறு கிழித்த
கோழைகளுக்கு
வளரும் என் மீது
எப்படி கருணை வரும்?

நாங்கள் களமாடியது
கருணைக்காக அல்ல விடுதலைக்காக…
என் துணிச்சலின் அழகு
அவனைத் துளைத்திருக்கும்!
தன் நெருப்புத் துண்டுகளால்
என் நெஞ்சைத் துளைத்தான்!
என் குருதியில் குளித்த
குண்டுகள் யாவும்
இவன் குட்டி புpரபாகரன் என
கூவிச் சொன்னது!
வீரச்சாவை தழுவிக்கொண்டே
ஈழத்தாயின் மடியில் விழுந்தேன்

எனக்கு
இரக்கம் வேண்டாம்
என் குடும்பத்தின் மீது
பரிவு வேண்டாம்
பரிவு போராளிகளுக்கு இழிவு
என் குடும்பத்தின்
உறுப்பினர்கள்
ஐந்து பேரல்ல
எட்டுக் கோடிப் பேர்
எனக்கு பாசம் வேண்டும் அதைவிட
என் இனத்திற்கு தேசம் வேண்டும்!

தொல் திருமாளவன்

படித்ததில் பிடித்த கவிதை. இதன் ஒவ்வொரு வரிகளிலும் என் ஈழத்திற்கான அடித்தளம் இருப்பதாக தோன்றியது. வீரகேசரியில் பிரசுரமாகியிருந்தது. இந்தியாவிலிருந்து தொல் திருமாளவன் இதனை எழுதியிருந்தார்.








No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை