என்னவன் அருகில்
குழந்தையாய் ஆயிரம்
கேள்வி கேட்டு பதிலிற்காக
நச்சரிப்பேன்…….
உனக்கு
ஏன்?
எதற்கு?
எவ்வளவு என்னை பிடிக்கும் ?- என்று
கேட்டு தினம்
ஆழிச்சாட்டியம் பண்ணுவதில்......
அன்பை கைகளால் காட்டும் படி
பிடிவாதம் பிடிப்பதில்…. – என்னில்
அன்பில்லையா உனக்கு? - என்று
அதட்டுவதில்– எனக்குள்
எல்லையற்ற ஆனந்தம்….
அதிகம் பேசியறியாத – என்னவன்
மழுப்புவான் அல்லது
சிரித்தே நழுவிவிடுவான் - அதை
இரசிப்பதை விடவும்
இன்பம் வேறில்லை எனக்கு…
என் இறுதி கணங்களில்
மருந்திற்கு முகஞ்சுழிக்கும் போதான
அவன் தடுமாற்றங்களும்
மாபெரும் வைத்தியனவன் - எனக்கு
ஊசியேற்றும் போதான விரல் நடுக்கங்களும்
என் கண்கள் சொருகும் போது
கலங்குகின்ற அவன் கண்களும் - என்
வலிகளின் போதான அவன்
திடுக்கிடல்களும் - நான்
கண் விழிக்கும் போது தெரிகின்ற
அவன் கன்னத்து தாடியும்
என் பல வினாக்களுக்கு
பதிலாகின்றன….
தடுமாற்றமாய்…
நரம்பின் நடுக்கமாய்
கண்ணீராய்…
திடுக்கிடலாய்….
உடல் மொழியென சகலமுமாய்
நானிருக்கும் போது – வார்த்தைகள்
தேவையில்லை என்னவனே……
No comments:
Post a Comment