அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து……. 03
Feb 07th - Rose Day: Expression on Admiration
Feb 08th - Propose Day: Sharing feelings and Commitment
Feb 09th - Chocolate Day: Symbol of Joy
ஆனால் அதிக சொக்கலேட்டும் ஆபத்தானது. வியாதிகளை கொண்டு வந்து சேர்க்கும். “கொக்கோ” தான் சொக்கலேட்டிற்கான பிரதான பொருள். மிகவும் கசப்பானதொன்று. ஆனால் இதில் கலக்கப்படுகின்ற இனிப்பே நமது நாக்கில் தித்திக்கின்றது. இது போன்று தான் “மகிழ்சி”யும். எது இன்று வலிக்கின்றதோ எது எம்மை அழுகையுடன் கடக்கின்றதோ அது ஒரு நாள் மாறும். இதன் அளவு, விலை எதுவாகவேனும் இருக்க கூடும். ஆனால் இதுவும் ஒரு நாள்; கடந்து போகும்….
அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து…….
பக்கம்: 732
நாட்குறிப்பே!
இன்றைய நாள் என்னளவில் அவ்வளவு நல்லதன்று. ஏறத்தாழ ஒரு வருடத்தின் பின்னர் அவரை சந்திக்கின்றேன். இலங்கைக்கு வந்து மூன்றாம் நாளே எனது மண்ணுக்கு வந்துவிட்டார். அம்மா, அண்ணாக்களிடம் கேட்டு என்னை வெளியில் கூட்டிப்போக வந்திருக்கின்றார். முதல் தடவை அவருடன் நான் பயணித்த நாள். வாகனத்தை செலுத்தியபடி பேசிக்கொண்டே வந்தார். புதிதாக என் குடும்பத்தினருடன் இணைந்து கட்டவுள்ள வைத்தியசாலை குறித்து பேசினார். செலுத்திக்கொண்டிருந்த வாகனம் பற்றி பேசினார். கொழும்பில் நாம் வாங்கவுள்ள வீடு பற்றி பேசினார். இதையெல்லாம் பேசி என்னாகப்போகின்றது? ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் முதன் முதலில் இருவரும் பயணிக்கின்றோமே கோயிலுக்கும், தேவாலயத்திற்கும் போவோமா என்று கேட்டேன் தனக்கு நம்பிக்கையில்லை என்று மறுத்துவிட்டார். மறுபடியும் எனக்காக என்று கெஞ்சி கேட்டேன். இதெல்லாம் எனக்கு பிடிப்பதில்லை. வாகனத்தை நிறுத்துகின்றேன் போய் வாருங்கள் என்று கோயில் வாசலிலேயே நிறுத்தி விட்டார். இப்படி போவதற்கு நான் எங்கள் சாரதியுடன் வந்திருக்கலாமே. கவலையாகிவிட்டது. சரி பொதுவெளியில் சண்டை வேண்டாம் என்று முன்னின்றே கும்பிட்டு விட்டு மறுபடி வாகனத்தில் ஏறிவிட்டேன். அடுத்ததாக தேவாலயத்தில் விடவா என்று கேட்டார். மறுத்துவிட்டேன் நான்.
உடுப்புக்கடை, நகைக்கடை, பூங்கா பின்னர் ஹொட்டல் என்று ஏறத்தாழ ஆறு மணி நேரம் பயணித்திருந்தோம். ஆனாலும் ஏதோவொன்று எம்மை இடைவெளியில் நிறுத்திவிட்டதை உணர்கின்றேன். எனக்குப்பிடித்த நிறம், விடயங்கள், இசை, ஓவியம் பற்றியெல்லாம் பேசுவார் என எதிர்பார்த்தேன். முழுநேரமும், வேலை, பணம், நகை என தான் நீண்டிருந்தது எம் பொழுது. வீடு வந்து சேர்ந்து இரு வீட்டாரும் பேசி உணவுண்டு அவர்கள் திரும்பும் போது இரவு 10 மணி.
உன்னில் நான் எழுதிக்கொண்டிருக்கும் நேரம் 11.40. இவ்வளவு நேரமும் அவருடனான பொழுதில் ஏதாவது இருக்கின்றதா என தேடிப்பார்க்கின்றேன். ஏதோவொன்றினை இழந்திருப்பதாக தோன்றுகின்றது. இந்த ஒரு வருடத்தில் 20 தடவைக்குள் தானே பேசியிருக்கின்றோம். நேரவித்தியாசம். அவர் வேலைப்பளு, என் படிப்பு என நமக்கான நேரங்கள் இல்லை என நினைத்திருந்தேன். ஆனால் இன்று புரிகின்றது. இந்த இடைவெளியில் நிறைய பணம், பதவி தான் நிரம்பியிருக்கின்றன. எனக்காக வெறும் பத்து நிமிடம் ஒதுக்கி அவர் கோயிலுக்குள் வந்திருக்கலாம். இருவரும் தேவாலயத்தில் மெழுகுதிரி ஏற்றியிருக்கலாம். இறைவன் சந்நிதி முன் இணைந்து நின்று வணங்குவதை விடவும் பெறுமதியானது எது… ஏதோவொன்று மனதிற்குள் கனதியாகின்றது........ குட்நைட்
பக்கம்: 810
ஹேய்!
இன்று சந்தோசமான நாள். நானும் இளைய அண்ணாவும் இணைந்து பயணிப்பதற்கு ஒழுங்குகள் முற்றுப்பெற்றுவிட்டன. பெரியண்ணா- அண்ணியுடன் தங்கப்போகின்றோம், அவர்கள் குழந்தைகளுடன் விளையாடலாம். அவரையும் அங்கு சந்திக்கலாம். மூன்று மாதகாலம் தங்கப்போவதால் அடிக்கடி சந்திக்கலாம். நிறைய பேசலாம். இது இருவருக்கும் நல்லதொரு புரிதலை தரும் என நினைக்கின்றேன்.
என்னுடன் அவர் மணித்தியால கணக்கில் பேசாவிட்டால் என்ன…. விருப்பு வெறுப்புகளை இதுவரை பகிராவிட்டால் என்ன… நான் தான் அங்கு போகப்போகின்றேனே… நிச்சயம் அவரது வீட்டிற்கு போகும் போது அவரது அறையை பார்க்க வேண்டும். ஒவ்வொருவருடைய அறையும் அவரவர் இரசனைகளை சொல்லிவிடும். இணையர்களில் ஒருவர் அன்பை பகிர்ந்தால் ஒருவர் அதனை ஏற்பதாக மட்டும் இருப்பார் என உளவியல் சொல்கின்றது. பரவாயில்லை நானே நம்மிருவரில் கொடுப்பவளாக, பகிர்பவளாக இருந்துவிட்டு போகின்றேன். நமக்குள் ஈகோ என்னத்திற்கு…. ஆனால் தினமும் குறைந்த பட்சமாக காலையில் குட்-மோனிங்… இரவில் குட்-நைட்டாவது அனுப்பச்சொல்ல வேண்டும். எப்படியாவது என் விடியலும் உறக்கமும் உன்னில் தான் தொடங்கி முடியவேண்டும்.........
பக்கம்: 871
இனிய நாட்குறிப்பே!
இங்கு வந்து ஒரு வாரமாகிவிட்டது. நாளை பல்கலைக்கழகமும் தொடங்குகின்றது. ஏன் இவர் இன்னும் வந்து சந்திக்கவில்லை? 24 மணிநேரமுமா சத்திரசிகிச்சை செய்கின்றார்? என் சகோதரர்களும் இதைத்தானே செய்கின்றார்கள். ஆனால் குடும்பத்திற்கும் நேரம் ஒதுக்குகின்றார்கள் தானே… நாளை அண்ணா கூட்டிப்போவதாக சொல்கின்றார். சந்திக்கப்போகும் உணர்வே இந்த நகரம் மாதிரி சில்லென்றிருக்கின்றது.
பக்கம்: 900
நாட்குறிப்பே!
இன்றைய நாளில் நான் என்ன உணர்வில் இருக்கின்றேன் என்றே எனக்குப் புரியவில்லை. ஆனால் இது வாழ்க்கையின் முக்கியமான நாள். ஒவ்வொரு பொறியில்துறையினரதும் மாபெரும் கனவு. நாம் ஆராய்ந்த, தீர்வு கண்ட விடயத்தினை நம்மை விடவும் கல்வியில், அனுபவத்தில் முதிர்ந்த ஜாம்பவான்கள் முன் சமர்ப்பிக்கும் நாள். கடந்த வாரம் முழுவதும் பெரியண்ணாவும் , அண்ணி , சின்னண்ணா மூவரும் எப்படி பேசவேண்டும் என்று பயிற்சிகொடுத்து பாசமாக வறுத்தெடுத்துவிட்டார்கள். ஆனால் காலையில் எழும்பியதில் இருந்து நெஞ்சை அடைத்த மாதிரியான உணர்வு.
நிகழ்வில் பேசவேண்டிய தருணம் வந்த போது ஒளிவாங்கி முன்னின்று ஆசுவாசப்படுத்தி விட்டு முன்னிருப்பவர்களை நிமிர்ந்து பார்த்தேன். பெரியண்ணா, சின்னண்ணா அருகில் அவர். மூவரும் இருப்பதே போதும். மீண்டுவிட்டது அறிவு. முதன் முதல் புடவை உடுத்து அவர் முன் நிற்கின்ற நாள் இது. வணக்கத்துடன் ஆரம்பித்து சுருக்கத்தினை ஓரிரு நிமிடங்கள் என் இனிய தமிழில் பேசிவிட்டு பின்னர் தான் ஆங்கிலத்தில் பேசினேன்.
எல்லாம் முடிந்து நால்வரும் உணவருந்த போகும் போது ஏன் தமிழில் பேசினீர்கள்? இது ஆங்கில உலகம் என்றார். இதில் இருந்த நான்கு தமிழ் பேராசியர்களுக்கு மட்டும் தான் விளங்கியிருக்கும் என சிரித்தார். எனக்குள் பயங்கர எரிச்சல். என் மொழியில் பேசியது விளங்குவதற்கல்ல என் மொழியை பெருமைப்படுத்த, என் அடையாளத்தினை காட்ட என பதிலளித்துவிட்டேன் நான்.
எனக்குள் வலிக்கின்றது. என் மண்ணை, என் இனத்தை, மொழியை நேசிப்பவரை நான் நேசிக்க வேண்டும் என்று நினைத்திருந்தது பொய்த்துவிட்டதா…..இதெல்லாம் எதிர்காலத்தில் திருத்தும் விடயங்களல்ல. இது உணர்வு. ஆழ்மனதிலிருந்து வரவேண்டியது….
வீடு திரும்பியவுடன் அண்ணி எனக்குப்பிடித்த Toblerone பல Flavors வாங்கி வைத்திருக்கின்றார். ஏன் இவ்வளவு என்று கேட்டதற்கு நல்ல விடயங்கள் நடக்கும் போது வாழ்வின் முக்கிய தருணங்ளை அதன் அளவிற்கேற்ற சொக்கலேட்டுகளுடன் கொண்டாட வேண்டும் என்றார்.
இப்போது தான் வீட்டாக்களுக்கு வீடியோ அழைப்பேற்படுத்தி இன்றைய நிகழ்வைப் பற்றி புளுகாக சொல்லி அண்ணி தந்த சொக்கலேட்டுக்களை காட்டி அவர்கள் முன் ஒன்றை உடைத்து சாப்பிட்டு கடுப்பேத்தி விட்டு படுக்கைக்கு வந்து உன்னில் கிறுக்குகின்றேன்.இந்த சொக்கலேட் Flavors போல் வாழ்வில் தான் எத்தனை உணர்வுகள் ……..

Comments
Post a Comment