பனாட்டு
போதாக்குறைக்கு எனக்கு விளக்குகள் மீதான பிரியத்தில் சேர்த்த பல்வேறு விளக்குகளை பல இடங்கள், நாடுகளில் இருந்து தேடிப்பிடித்து இங்கு அலங்காரத்திற்கு வைத்திருக்கின்றேன். இவற்றினை பார்த்துக்கொண்டு ஊஞ்சலாடுவது விபரிக்க முடியாததொரு உணர்வு. (விளக்கேற்ற வந்த மருமகள் என்று என்னை சாதாரணமாக சொல்லக்கூடாது. விளக்குகள் கொண்டுவந்த மருமகள் நான்). மூன்றாவது விடயம் ஒவ்வொரு இராசிகளுக்குமான வீணைகள் என மொத்தம் 12 வீணைகள் எம் வீட்டில் உண்டு. (இராசிகளுக்கு வீணையா என்று கேட்டால் இது பற்றி விபரித்து விரைவில் எழுதுகின்றேன். ஆனால் இதை யாரிடமும் பரப்பாதீர்கள். படம் எடுக்க வீணை வேண்டும் என்று கேட்டு எடுத்துப்போய் அதன் முட்டியில் கீறலை ஏற்படுத்தியதில் அந்த விளம்பரபடகுழு மீதான கடுப்பு இன்னும் மாறவில்லை.) நான் போகின்ற நாட்களில் விரைவாக வேலைகளை முடித்துவிட்டு நானும் மாமியும் வீணை வாசிப்பதுண்டு. மாமியின் குரல் கணீரென்றிருக்கும். அதனுடன் இழைந்து பாடுவதில் சில இடங்களில் நான் தடுமாறுவதுண்டு. ஆனால் கற்றுத்தருவதில் மாமி வல்லவர். இவற்றிற்காகவும் இவர்கள் அடிக்கடி என்னை பார்க்க வேண்டும் என கேட்பதாலும் நேரங்கிடைத்தால் யாழ் மண்ணிற்கு பறந்துவிடுவேன்.
ஆனால் எனக்கு இவரிடம் பிடிக்காதவொரு விடயம் என்னவென்றால் காலையில் பழங்சோற்றினை பனாட்டு போட்டு பிசைந்து வலுக்கட்டாயமாக எனக்கு தீத்திவிடுவது. எனக்கு சிறுவயதில் இருந்தே இந்த பனாட்டு மட்டும் பிடிப்பதில்லை. ஒருமுறை இதன் செய்முறையை விபரித்து காலால் உழக்கித்தான் இதனை நிலத்தில் பரத்துவார்கள் என்று கேள்விப்பட்டதில் இருந்து வந்த அருவருப்பு இது. மற்றவர்கள் பனாட்டை கையில் வைத்து சாப்பிடும் போது எனக்குள் குமட்டலே வந்து விடும். ஆனால் இந்த மாமி இருக்கின்றாரே எப்படியாவது சோற்றுக்குள் ஒளித்து வாய்க்குள் சிறு துண்டுகளை திணித்துவிடுவார். கேட்டால் பெண்களுக்கு சத்து முக்கியம். பிறகு கர்ப்பமாகும் போது இவையெல்லாம் நல்லது என்பார். நல்லெண்ணையை சேர்த்து சமைப்பதிலும் இவரது கோட்பாடு இது தான். நல்லெண்ணெய்யை போத்தலோடு தந்தாலும் மடக்கென்று குடிப்பேன் ஆனால் இந்த பனாட்டினை மட்டும் கண்ணில் காட்ட கூடாது. இன்று பல்கலைக்கழகம் இல்லை என்பதால் சில இலக்கிய புத்தகங்களை புரட்ட நேர அவகாசம் கிடைத்தது. இதில் இந்த பனாட்டு குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளதை பார்த்தேன். இதனை ஆராய்ந்ததில் கிடைத்த விடயங்கள் இவை.
தொல்காப்பியம், சங்க இலக்கியங்களில் “பனா அட்டு” என தமிழர்களின் பாரம்பரிய உணவொன்றினை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பனா என்பது பனையை குறிக்கின்றது. அதேவேளை “அட்டு” எனும் சொல்லை தேடிப்பார்த்ததில் “காய வைத்து உறையச்செய்தல்” என்று பொருள்படுகின்றது. இவ்விரு பதங்களையும் புணர்ச்சி செய்யும் போது “பனாட்டு” என்பகின்ற பதம் பிறக்கின்றது. இச்சொல் குறிப்பிடப்பட்டுள்ளது 2000 வருடங்களுக்கு முந்திய இலக்கியங்களில். இதனை உறுதிசெய்ய இரு விடயங்கள் ஏதுவாகின்றன.
1. கற்பக தரு என அழைக்கப்படுகின்ற பனை தமிழரின் வாழ்வியலில் இணைந்ததொன்று. முன்னைய காலங்களில் கடற்கோள்களின் உயரத்தினை அளப்பதற்கு கூட “பனையளவு” என்கின்ற சொல்லாடல் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
2. பனாட்டு செய்கின்ற முறையை எடுத்துக்கொண்டால் பழுத்த பனம் பழங்களிலிருந்து எடுக்கப்பட்ட சதை களியை சேகரித்து அதனை மிதமான தீயில் கிளறி கட்டிப்பதமடைந்தவுடன் தட்டுகளில் பரப்பி வெயிலில் உலரவைக்கப்பட்டு பனாட்டு தயாரிக்கப்படுகின்றது. இச்செய்முறையை கவனித்துப் பாருங்கள். தீ, வெயில் என இயற்கையுடனான பதப்படுத்தல். இவ்வாறான உணவுகள் நீண்டகாலம் கெடாமல் இருக்கும். இது கூட பனாட்டு பண்டையகால உணவு என்பதற்கு சான்றாகின்றது.
இன்னும் தேடியதில் இதில் நார்ச்சத்து, இரும்புச்சத்து இயற்கைச்சக்கரை போன்றவை செறிந்து காணப்படுவதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதனை உண்ணும் போது செரிமான பிரச்சினைகள் தீர்க்கப்படுவதுடன் உடல் வெப்பநிலையும் சமனிலையடைவதாக மேலும் அறியக்கிடைக்கின்றது. அத்துடன் பனாட்டு பண்டையகாலங்களில் கிராமிய பொருளாதாரத்திலும் ஆதிக்கம் செலுத்தியதை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்களது வீட்டு உற்பத்தியாகவும் இதனை பண்டமாற்று முறையில் பயன்படுத்தியதாகவும் குறிப்புக்கள் உள. விருந்தினர்களுக்கு உணவளிக்கும் போதும் இது பரிமாறப்பட்டமை குறித்தும் கூறப்பட்டுள்ளன. சங்ககால இலக்கியங்களில் வறட்சி காலங்களில் உணவு பாதுகாப்பிற்கு பாரம்பரிய தீர்வாக பனாட்டு பயன்பட்டுள்ளது. அந்தக்காலங்களில் விவசாயிகளின் முக்கிய உணவாகவும் இது இருந்துள்ளது. அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை போன்றவற்றில் இவ்விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அத்தடன் சேரவம்சாவளியினரின் குடிப்பூ பனை. இவர்களது கால இலக்கியங்களில் பனையை மரமல்ல என்றும் அதனை புல் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் போந்தை, பெண்ணை என்றும் வேறு பெயர்களால் குறிப்பிடுகின்றார்கள். பிற்பட்டதான சங்கமருவிய கால இலக்கியங்களில் காலம், புற்பதி, புற்றாளி, தாளி போன்ற பதங்களையும் பனையை குறிக்க பயன்படுத்தியுள்ளனர்.
இன்று நமது சொல்லாடல்களில் பனாட்டு என்பது மருவி பினாட்டு என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஆனால் இதனை தவிர்த்து இனிவரும் காலங்களில் பனாட்டு என்று உச்சரிப்பது நாம் தமிழுக்கு செய்கின்ற உபகாரம் என நினைக்கின்றேன்.
மேலும் பழந்தமிழ் உணவுப்பண்டமான இந்த பனாட்டு செய்முறையையும் அதன் பயன்பாட்டினையும் எதிர்வரும் தலைமுறைக்கு கடத்த வேண்டிய பொறுப்பு எமக்குள்ளதாக தோன்றுகின்றது. கடந்த போரில் நாம் இழந்தது மனிதர்களை மட்டுமல்ல பல பனை மரங்களையும் தான். நான் இவ்வளவு காலமும் நிராகரித்திருப்பது பனாட்டினையும், அதன் பின்னுள்ள பாரம்பரியத்தினையும் கூடவே என் மாமியின் அன்பையும் என கடந்தகாலம் என் உச்சந்தலையில் நச்சென்று குட்டிச்சொல்கின்றது.

Comments
Post a Comment