இப்போது தான் சின்னன்கள் முதல் பெரிசுகள் வரை சின்னதாக தூறல் விழுந்தால் போதும் அல்லது கொஞ்சம் வெயிலுக்குள் போய் வந்தால் போதும் சளி, காய்ச்சல், தும்மல் என்று ஆயிரத்தெட்டு வருத்தம் வந்துவிடுகின்றது. நான் சின்னப்பிள்ளையாக இருந்த காலத்தில் பனடோல், விக்ஸ் எல்லாம் பாவிப்பதும் இவ்வாறான சளி காய்ச்சலில் அல்லல்படுவதும் மிகவும் அரிதானது.
எங்கட வீட்டைப்பொறுத்தளவில் இருப்பவர்களிலேயே மருந்துக் கள்ளி என்றால் அது நான் தான். கையில் மருந்தைத்தந்து கண்ணசைக்காமல் பார்த்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் மருந்து மயமாகிவிடும். இப்படிப்பட்ட எனக்கே மருந்து பிடித்திருந்தது என்றால் அது ஊதுமாகஞ்சி தான்.எமது வீட்டில் பிள்ளைகள் மணல் அளைவதற்கோ மழை வெயிலில் நனைவதற்கோ பெரிதளவில் கட்டுப்பாடு இருந்ததில்லை. இதையொரு நல்ல விடயமாக கூட கருதினார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் எவ்வளவு விளையாடினாலும் சரி விளையாடாவிட்டாலும் சரி இரு விடயம் கட்டாயம் தவறாமல் வீட்டில் இருக்கும். ஒன்று கருக்கல் மற்றது ஊதுமாக்கஞ்சி.
நாம் குழந்தைகளாக இருக்கும் போது கொத்தமல்லியை சற்று வறுத்து அதனுடன் வேர்கொம்பு அல்லது இஞ்சி துண்டுகள் , மிளகு நான்கைந்து போட்டு தண்ணீர் ஊற்றி நீர் பாதியாகும் வரை கொதிக்க வைத்து சற்று ஆறவைத்து சூடு போகும் முன்னர் கொஞ்சம் சீனி அல்லது தேன் சேர்ந்து கலக்கி சூப்பி போத்தலில் போட்டு எமக்கு காலை பத்து மணியளவில் தரப்படும். அதுவே கொஞ்சம் வளர்ந்த பின்னர் கோப்பைகளில் வழங்கப்படும். குடித்தேயாக வேண்டும். அந்தக்கால அண்டீபயற்றிக் இது தான். எவ்வளவு தான் புழுதியில் உருண்டு பிரண்டாலும் சரி, ஈரத்துடன் திரிந்தாலும் சரி சளி நம்மட பக்கம் எட்டிக்கூட பார்க்காது.
அப்படியே தப்பித்தவறி சளி பிடித்து நெஞ்சுத்தடுமல் ஆகிட்டுது என்றால் அடுத்த ஆயுதம் ஊதுமாக்கஞ்சி. அம்மம்மா மதியமளவில் இரண்டு கைபிடி பச்சரிசியையும் அதனுடன் நாலைந்து மிளகையும் நீரில் ஊறப்போட்டுவிடுவார். மாலையளவில் வீட்டு வேலியோரங்களில் இருக்கும் தூதுவளை இலைகளை கொய்து அதன் விளிம்பில் இருக்கும் முட்களை நீக்கி உப்பு நீரில் கழுவுவார்கள். ஆறுமணியளவில் குளித்து, விளக்கேற்றி படிக்க அமறவேண்டும் என்கின்ற எழுதாத சட்டம் எம் வீட்டில் உண்டு. அதற்கமைய அனைவரும் படிக்க அமர்ந்த பின் ஊறவைத்த இளகிய அரிசி, மிளகு, தூதுவளை இலை அனைத்ததையும் ஆட்டுக்கல்லில் அரைத்தெடுப்பார்கள். அரைத்தெடுத்த கலவைக்கு சற்று உப்பிட்டு கொஞ்சம் நீர் ஊற்றி அடுப்பில் வைப்பார்கள். மையாக அரைக்கப்பட்ட அரிசி சற்று வெந்ததும் தேங்காய்ப்பால் ஊற்றி கொதிக்க விடுவார்கள். கொதித்த கஞ்சில் கொஞ்சமாக சீனி அல்லது சக்கரை சேர்க்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படும். அதனை சூடாற முன்னர் ஊதி ஊதிக் குடிக்க வேண்டும். இதனால் தான் ஊதுமாக்கஞ்சி என்ற காரண பெயரும் வந்திருக்கும் போல. சூடாக குடிக்கும் போது நெஞ்சுக்குள் இருக்கும் அடைப்பு விலகுவது விளங்கும். அடுத்த நாள் சளி மலத்துடன் வெளியேறி இருமலும் நம்மை விட்டு தொலைந்திருக்கும்.
நம் ஊர்களில் நாம் இழந்துள்ள பல மூலிகைகளுள் தூதுவளையும் ஒன்று. முன்னர் வேலியோரங்களில் கள்ளி, நித்தியகல்யாணிக்கு அடுத்ததாக இருந்தது தூதுவளை கொடி தான். இன்று சில கிராமப்புற இடங்களில் மட்டுமே இதனை காணமுடிகின்றது. இந்த தூதுவளை இலைகளை சில நேரங்களில் கருக்கல் கலவையினுள்ளும் போடுவதுண்டு. அடுத்ததான விடயம் தூதுவளை சம்பள். தூதுவளை இலைகளை முள் நீக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பச்சைகொச்சிக்காய், உப்பு, தேங்காய் பூ கொஞ்சம் வைத்து அம்மியில் நன்றாக அரைக்க வேண்டும். பின்னர் சுளீரென தேசிக்காய் புளிவிட்டு சுடுசோறுடன் சாப்பிட்டால் போதும் சளி நம்மை அண்டாது.
அடுத்தது முட்டை கோப்பி. தமிழர்களது பாரம்பரியம் எனும் போது கோப்பி அதற்குள் எப்படி வந்தததோ தெரியவில்லை. ஆனால் இந்தப் பெயரில் சுக்கு, வறுத்த மிளகு, கொத்தமல்லி வறுத்து இடித்த தூள் தான் முன்னர் பாவிக்கப்பட்டதாக வயதானவர்களிடமிருந்து அறிய முடிகின்றது. இந்த கொத்தமல்லி கலவைக்குள் நாட்டுக்கோழி முட்டையின் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு வெள்ளைக்கருவினை நன்றாக கலக்க வேண்டும். சூடாறும் முன்னரே குடித்துவிட்டால் நெஞ்சுச்சளி ஓடிப்போய்விடும்.
ஆனால் எனக்கு இந்த முட்டைப்கோப்பி சிறுவயதில் இருந்தே அருக்குளிப்பான விடயம். ஆனால் சளி , தடுமல் போன்ற விடயங்களை பூமாலை போட்டு வரவழைக்கும் ஆளும் நான் தான். நன்றாக புழுதியில் புரள்வது, சமையல் செய்கின்றேன் எனும் பெயரில் மண் அளைவது, ஈரமான உடுப்புடன் விளையாடுவது, நீரில் தாரா போன்று ஊறிக்கொண்டிருப்பது எல்லாமே நான் தான். மருந்து விடயத்தில் மட்டும் வரிசையில் கடைசியில் நிற்பதும் நானே. முக்கியமாக மேல் சொன்னவற்றில் முதல் மூன்றும் பரவாயில்லை. ஆனால் இந்த முட்டைக்கோப்பி இருக்கின்றதே….. இதற்கு பதிலாக முட்டையை தனியாக பொரித்தும் கோப்பியை பெரிய வாளியில் ஊற்றியும் தந்திருந்தால் கூட நன்றாகவிருக்கும். ஆனால் முட்டைக்கோப்பி குடித்தால் ஓங்காலம் வருவதுண்டு. இங்க தான் நான் ஒரு டீல் வைத்திருந்தேன். தம்பி என்னுடையதையும் சேர்த்துக்குடிக்க வேண்டும். அப்படி செய்து நான் தப்பித்தால் என்னுடைய விளையாட்டப்பொருட்கள் சில மணி நேரங்கள் தம்பிக்கு பகிரப்படும். என்ன ஒரு கவலையென்றால் இதனால் நான் மட்டும் இருமித்திரியும் போது வீட்டாக்கள் அம்மம்மாவிடம் வாங்கிக்கட்டிக்கொள்வார்கள். “மற்றாக்களுக்கு நெஞ்சு சளி போயிட்டுது பிள்ளைக்கு மட்டும் ஒழுங்கா முட்டைக்கோப்பி குடுபடல போல அதுதான் இன்னும் இருமுகிறா” என்று…. சில நேரங்களில் மீண்டும் நான் இந்த முட்டைக்கோப்பி குடிக்கும் வலையில் சிக்கிகொள்வதுமுண்டு.
இன்றெல்லாம் என் பயணங்களின் போது Vitamin C, Cough syrup, Piriton Syrup என்று வாங்கி இரசாயனங்களை அருந்தும் போது என் குழந்தைப்பருவத்தினையும் என்னை சூழ இருந்திருந்தவர்களது கைப்பக்குவத்தினையும் உணவிலேயே எம்மை மருந்துண்ண வைத்த அன்பினையும் அதன் நினைவுகளையும் மீட்டிப்பார்க்கின்றேன்.
No comments:
Post a Comment