சிறுவயதில் இருந்தே “சஸ்பென்ஸ்’ எனக்கு மிகவும் பிடித்த விடயம். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி எனது கவிதைகளிலும் சரி இந்த “சஸ்பென்ஸ்” வைப்பதென்பது எனக்கு மிகவும் பிடித்ததொன்று. ராஜேஸ்குமாரின் திரில் மற்றும் இந்திராசௌந்தர்ராஜனின் நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்தவையாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
ஆனால் நேற்று ஒரு சஸ்பென்ஸ் எனக்கு கிடைத்தது பாருங்க அது ரொம்ப ரொம்ப சுவீட்டானதுங்க..
வாழ்க்கையில் நான் நேரில் சந்திக்க வேண்டும் என விரும்பிய விரும்புகின்ற நபர்கள் சில பேர் தான். அதிலொருவர் நான் மிகச்சிறிய வயதில் எழுதிய ( அப்போது 13 வயது தான்) என்னுடைய கிறுக்கல்களுக்கு மதிப்பளித்த ஒரு பெரியவர். இந்த காலத்தில் பெரியவர்களே பெரியவர்களுடைய தரமான படைப்புகளுக்கு மதிப்பளிக்க யோசிக்கின்ற காலம். அப்படியிருக்கும் போது சிறியவள் எனக்காக கடிதமும் பரிசும் அனுப்பிய ஒருவர்.
அவர் அன்று அனுப்பிய கடிதத்தினை இன்றும் நான் வைத்திருக்கின்றேன். அதனை பார்க்கும் போது இவர் எங்கிருக்கின்றாரோ? என்னுடைய எழுத்தினை மதித்து பதில் எழுதிய முதலாமவர் “செல்வராஜா அங்கிளை” சந்திக்க மாட்டேனா என பல தடவை நினைத்ததுண்டு.
நேற்று(08.01.2013) பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் முருகபூபதி மற்றும் டொக்டர்.நொயல் நடேசன் என்பவர்களின் புத்தக வெளியீட்டு நிகழ்விற்கு சென்றிருந்தேன். அவர்கள் ஒவ்வொருவருடைய பெயரையும் வாசித்து புத்தகம் வழங்குவதற்கு நூலக தேட்டம் - செல்வராஜா என்றழைக்கும் போது தான் வாழ்க்கையின் அழகிய தருணமொன்றினை உணர்ந்தேன். அவர் மீண்டும் வந்தமர்ந்தவுடன் ஓடிப்போய் கதைத்தபோது பழைய குட்டி கேஷாவாகவே(????) மாறிவிட்டேன். சில நிமிடங்கள் என்ன பேசுவதென்றே புரியவில்லை. நிகழ்வு முடிந்த பின்பும் போய் பேசினேன். அப்போதும் கூட “என்னிடம் ஒன்றும் இல்லேயே அம்மா உனக்கு தருவதற்கு” என்று சொன்னார். தவறாமல் அவரது தொடர்பிலக்கங்களை பெற்றுக்கொண்டு நேரம் போய்விட்டதால் விடுதி மூடப்பட்டுவிடும் என்றெண்ணி அவசரமாக வந்துவிட்டேன்.
சுpலவற்றினை எழுதிவிட்டாலே சிகரத்தினை தொட்டுவிட்டதாக எண்ணுகின்ற சிலர் மத்தியில் சிகரத்தில் கால்பதித்த பின்பும் பிறரை மதிக்கின்ற “செல்வராஜா அங்கிளை” போன்றவர்களும் இருக்கின்றார்கள்.
“மேன்மக்கள் மேன்மக்களேசங்கு சுட்டாலும் வெண்மை தரும்”
இந்நிகழ்வு எனக்கு மறக்கமுடியாத ஒன்று மட்டுமல்ல சில வேளை சில மனிதர்களின் விமர்சனங்களுக்கு பயந்து இலட்சியங்களை விட்டுவிட எண்ணுகின்ற வேளை இவ்வாறான மாமனிதர்கள் மூலம் இலட்சியவாழ்விற்கான பயணத்தினை தொடர்வதற்கான ஊக்கங்கள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதையும் உணர்கின்றேன்.
அழகுடன் கூடவே முள் குத்துவதால் வலி தருகின்ற ரோஜாவினைப் போன்று சில கவலைகளையும் கூடவே மறக்கமுடியாத இனிய தருணங்களையும் தருகின்ற என்னுடைய வாழ்க்கையை நான் மிகவும் இரசிக்கின்றேன்….
No comments:
Post a Comment