காதல் சின்னம்


யார் சொன்னது
தாஜ்மஹால்
காதலின் சின்னமென்று?
அந்தப்புரத்தின் தேவதைகளுள்
தன் மனங்கவர்ந்தவளுக்காக
கட்டிய கட்டடமது…..
எந்தப்பெண்ணாவது
அவள் பாரே ஆண்டவளாயினும்
பல ஆண்களுடன்
தன்னை பகிர்ந்திருக்கின்றாளா?
தனக்கென்று அந்தப்புரம் தானில்லை
தன் அந்தரங்கத்திலாவது
பலரை நினைத்திருப்பாளா?
அந்தரப்புரமல்ல
அந்தரங்கத்திலும்
ஒருவரை நிறைத்துக்கொள்வதன்றோ
காதல்…….

யார் சொன்னது
தாஜ்மஹால்
காதலின் சின்னமென்று?
பணம் பாதாளம் வரையே
பாயும் போது
பாராண்ட வேந்தன்
பளிங்கினால் கட்டியதில்
பெருமையென்ன இருக்கிறது…?
வாழும் போது பகிர்ந்திட்ட
காதலுக்கு
சாவின் பின்
சமாதியை பளிங்கினால்
கட்டிப் பயனென்ன?
தன்னை பகிராமல்
இருந்திருந்தால் அதுவன்றோ
வாழும் காதல்….

யார் சொன்னது
தாஜ்மஹால்
காதலின் சின்னமென்று?
அவன் காதல்
கோட்டையை கட்டிய
கரங்களை அறுத்தானாம்…
இன்னொரு மஹால்
உருவாகிட கூடாதென்று….!
கையிழந்தவன் கதறியிருப்பான் - தன்
காதல் மனைவிக்கு
குடிசை கூட கட்டிட முடியவில்லையென்று..
கண்ணீர் வடித்திருப்பான்…
காதலை உணர்ந்து கட்டியிருந்தால்
அடுத்தவன் காதலை
துச்சமாய் நினைத்திருப்பானா…..?
காதல் என்பது
அரசனுக்கு மட்டுமா
ஆண்டிக்கில்லையா?

யார் சொன்னது
தாஜ்மஹால்
காதலின் சின்னமென்று?
அது கண்ணீரின் கோட்டை
காதலிக்கான கல்லறை
பகட்டை காட்டும்
பளிங்கு மாளிகை…
காலவோட்டத்தில்
நிலைத்திடும்
கல்லறைகளை விடவும்
இதயத்துள்ளான
உண்மைக் காதல் போதும்!
கற்களை நடவேண்டியதில்லை
கண்கலங்காமல் பார்த்தாலே போதும்…
காதல் என்பது
கல்லில் கட்டுவதல்ல
மனதில் செதுக்குவது…
சிறு காகிதம் கூட
காவியமாகும் - அதில்
களங்கமற்ற காதலிருந்தால்…..








Comments

Popular posts from this blog

நிறம் மாறும் மனிதர்கள்

இரும்பில் முளைக்கின்ற இதயங்கள்

மனம் + மனம் = திருமணம் (02)