வினா 03:
மீரா நீங்கள் கோவக்காரி, பிடிவாதக்காரி என்றறிந்தேன் இதில் உண்மையுள்ளதா? கோபம் போன பின் என்ன செய்வீர்கள்? உங்கள் சமூகஊடகங்களை பின்தொடர்ந்த வகையில் அப்படித்தெரியவில்லையே அன்பே….
பதில் : சமூக ஊடகங்களில் பின்தொடர்ந்தால் தெரியாது தான். என்னை நேரில் தொடர்ந்தால் தான் என்னைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். எல்லோரும் நடத்தைப் பிறழ்வு காட்டுவது போன்று நானும் சிலநேரங்களில் அந்நியன் போல் நடப்பதுண்டு. நீங்கள் அறிந்ததை போன்று கோபம், பிடிவாதம் கொஞ்ஞ்ஞ்ஞ்…….சம் கூட தான். ஆனால் எல்லா இடங்களிலும், எல்லா நேரத்திலும், எல்லோரிடமும் நான் கோபம் கொள்வதில்லை, பிடிவாதம் பிடிப்பதில்லை. சாது மிரண்டால் காடு கொள்ளாது மாதிரி எப்போதாவது கோபத்தின் உச்சத்திற்கு போவதுண்டு. நிச்சயம் இச்சந்தர்ப்பங்களில் சுற்றியுள்ளவர்களை ஆழமாக காயப்படுத்துவதும் உண்டு. ஆனால் பிடிவாதம் மட்டும் எப்போதும் உண்டு. சின்னச்சின்ன விடயங்களில் கூட பிடிவாதம் பிடிப்பதுண்டு. நான் குழப்படி செய்து அம்மாவிடம் வாங்கிய அடிகளை விட பிடிவாதம் பிடித்து வாங்கிக்கட்டிக்கொண்டவை அதிகம்.
அநேகமாக கோபத்தில் யாரையாவது காயப்படுத்திவிட்டால் கோபம் குறைந்த பின் தனியே இருந்து அழுவதுண்டு. இன்னும் மனதிற்குள் சஞ்சலம் இருந்தால் கடற்கரைக்குச் சென்று காலார நடப்பதுண்டு. அதுவே நெருக்கமானவர்களை காயப்படுத்தி விட்டால் ஏதாவது கிறுக்குவதுண்டு.
மிகவும் சலிப்பான நேரங்களில் ஏதாவது பேரூந்தில் ஏறி அது பயணிக்கும் கடைசி இடம் வரை பயணித்து அங்கு இறங்கி எங்காவது ஓரிடத்தில் நல்ல கோப்பி ஒன்று குடித்துவிட்டு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு வருவேன். எப்போதும் மன சஞ்சலங்களை காயப்படுத்தல்களை ஆசுவாசப்படுத்துவதில் கோப்பி, பயணம், கடல், வர்ணங்கள் என்பவற்றிற்கு பாரிய பங்குண்டு.
என்னுடைய கோபம் பற்றி அறிய வேண்டும் என்றால் என்னுடைய அலுவலகங்களில் கேட்டுப்பாருங்கள். கோபத்தில் விசிறியடிக்கின்ற தாள்களை அநேகமாக சேர்த்தெடுப்பவர்கள் அவர்கள் தான். இனிமேல் என்னைத் தெரிந்துகொள்ள சமூக ஊடகங்களிலன்றி நேரில் தொடருங்கள் அன்பே…. சிலநேரங்களில் நீங்களும் வாங்கிக்கட்டிக்கொள்ள கூடும்.
வினா 04: எப்போது நல்ல செய்தி சொல்லப்போறீர்கள்? மனம் + மனம் = திருமணம் மூன்றாம் பாகம் எப்போது வெளிவரும்?
பதில்: அநேகமாக அடுத்த வருடம் பல நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். மகரராசிக்கு இனித்தான் நல்ல காலம் பிறக்கவுள்ளதாம் என்று சோதிடரும் சொல்கின்றார். வாழ்க்கை நடப்பும் அப்பிடித்தான் சொல்கின்றது.
விரைவில் எழுதுகின்றேன் நண்பி. காலம் நேரமும் கூடி வரவேண்டுமல்லவா……. முதல் இரு பாகங்களும் இரு தலைமுறையின் கதைகள். முடிந்து போன பின் எழுதப்பட்ட கதைகள். ஆனால் இனி எழுதவுள்ள மூன்றாம் பாகம் நடந்துகொண்டிருக்கும் கதை. முடிவினை அறுதியிட்டு கூற முடியாத கதை. எனவே மூன்றாம் தலைமுறையினதை எழுத நேரம் அதிகம் தேவைப்படுகின்றது. அதனால் தான் தாமதமாகின்றது.
வினா 05: முன்னைய காலங்கள் போன்று தற்போது கவிதைகள் எழுவதில்லையா மீரா? உங்கள் கவிதைகளின் வரிகளைத் திருடி காதல் வளர்த்தவன் நான்…..
பதில்: கவிதை எழுத மனதுள் மெல்லிய உணர்வு வேண்டும். தற்போதெல்லாம் வன் உணர்வகள் தான் பெரும்பாலும் தலைதூக்கி நிற்கின்றன. ஊடகவியலும் பொறியியலும் தான் தற்போது என்னை நீரோட்டத்தில் இழுத்துச்சென்று கொண்டிருக்கின்றன. பரபரப்பும் அழுத்தமும் நிறைந்ததாக என் நாட்கள் நகர்கின்ற இதில் கவிதை வருவதெப்படி?
பரவாயில்லையே தெரிந்தோ தெரியாமலோ பல காதல்கள் என் கவிதையால் வாழ்ந்துள்ளன, வளர்ந்துள்ளன என்பது பெருமையே… அதுசரி நீங்கள் இன்னும் கவிதைகளை மட்டுமா கொடுத்துக்கொண்டிருக்கின்றீர்கள்… வளர்ந்த / வளர்த்த காதல் என்னாச்சு? ஆத்மார்த்தமாக கதைப்பதென்றால் இதில் சில கவிதைகள் என் நண்பர்கள் தங்கள் காதலர்களுக்கு கொடுப்பதற்காக கேட்டு நான் எழுதிய கவிதைகள். சிலது எனக்கே எனக்கானவை…..

No comments:
Post a Comment