
நேற்று நண்பர்களுடன் கலந்துரையாடுவதற்கானதொரு சந்தர்ப்பம். பேசிக்கொண்டிருக்குமு; போது எழுத்துப்பிழைகள் விடுவது குறித்து பேச்சு திரும்பியது. இன்று பெரும்பாலும் பலருக்கு எந்தவிடத்தில் ண, ன வரவேண்டும் ல,ழ,ள வரவேண்டும் என்பதெல்லாம் சற்று குழப்பமாகிவிட்டது. சில அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்கள் கூட எழுத்துப்பிழையின் காரணமாக கருத்துப்பிழையாக எழுதுவதை அவதானிக்க முடிகின்றது என்ற ரீதியில் கருத்துக்கள் பகிரப்பட்டன. எனக்கும் பொதுவாக எழுத்துப்பிழைகள் இருப்பது பிடிப்பதில்லை. இப்படி எழுத்துபிழைகள் விடுதல் நாம் மொழிக்கு செய்கின்ற துரோகம் என்று சிறுவயதிலேயே எனக்குள் தலையில் குட்டி ஏற்றிவிட்டார் என் ஆசான். என்னுடைய நண்பர் “ நான் அவதானித்த வரையில் உங்கள் படைப்புக்களில் எழுத்துப்பிழைகளை தேடிப்பார்க்க வேண்டியுள்ளதே. ஏப்படி மீரா உங்களால் முடிகின்றது என்று வினவினார்.. இதற்கு காரணம் ஒரு குட்டி சைக்கிலும் அதன் மீதான மோகமும் தான் என்றேன் நான். எப்படியென்று கேட்கின்றீர்களா….?
எனக்குச் சிறுவயதில் இருந்தே இந்த வாகனங்கள் மீதான மோகம் அதிகம். அதிலும் சைக்கிள் மோட்டார் வண்டி போன்ற இருசக்கர வாகனங்கள் மீது அலாதியானதொரு மோகமுண்டு. இந்த ஆசையில் எண்ணெய் ஊற்றுவது போல் மாமி தன்னுடைய மகனுக்கொரு சைக்கிள் வாங்கிக்கொடுத்திருந்தார். மச்சானுக்கும் எனக்கும் ஐந்து வயது வித்தியாசம். மாமியின் வீடு எங்கள் வீட்டிலிருந்து சற்றுத்தொலைவில் தான். மாலையில் அம்மா வேலை விட்டு வந்த பின்னர் அப்போதைய நிலையில் சுற்றியிருந்த பிரச்சினைகளுக்கு நடுவில் நாம் காற்றாட செல்லும் இடம் மாமியின் வீடு தான். அவருக்கும் மூன்று பிள்ளைகள். நாமும் போனால் பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது நாம் விளையாடிக்கொண்டிருப்பதுண்டு. இந்த சைக்கிள் வாங்கப்பட்டதிலிருந்து மச்சானின் வேலையே நம்மை இருத்திவிட்டு அந்த சைக்கிளை வீட்டு முன்னறையில் அங்கிருந்து இங்கு, இங்கிருந்து அங்கு என்று ஓடிக்காட்டுவது தான். வாங்கியதை சும்மா ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்தால் பிரச்சினையிருந்திருக்காது. இப்படியப்படி ஓடிக்காட்டும் போது அதை ஓடிப்பார்க்க வேண்டும் என்பது விஸ்வரூபமாகிவிட்டது. அவர்கள் வீட்டிற்கு போய் வரும் வழியெல்லாம் அம்மாவிடம் எனக்கும் சைக்கிள் வாங்கித்தாங்க என்று அழுதுகொண்டுதான் வருவதுண்டு. அம்மா ஒவ்வொரு நாளும் அதற்கொரு சாட்டு வைத்திருப்பார். சின்னப்பிள்ளை தானே கொஞ்சம் வளர்ந்த பிறகு வாங்கித்தாறன் என்பார் ஒரு நாள்........, 5 ஆம் ஆண்டு கொலர்ஷிப் பாஸ் பண்ணினால் வாங்கித்தருவேன் என்பார் மற்றொரு நாள்........, சைக்கிள் ஓடி கீழே விழுந்தால் காயம் வரும் மகள் என்பார் இன்னொரு நாள். இவையெல்லாம் சாட்டுக்கள் என்றும் அப்பா இல்லாத குடும்பத்தில் தலைமைதாங்குகின்ற ஒரு தாயினால் அப்போது அந்த சைக்கிளை வாங்கித்தருமளவு பொருளாதாரம் இருக்கவில்லை என்பது தான் உண்மை என்று நான் உணர்ந்துகொள்ளுமளவு வயதில்லை எனக்கும்.
இப்படியானதொரு நாளில் தான் அவர்கள் வீடு சென்றிருந்த போது வழமை போன்று புளுகு குணத்தில் சைக்கிளிலில் வலம் வர ஆரம்பித்தார் மச்சான். ஒரு தடவை ஓடிப்பார்க்க கேட்டேன். மறுப்பில்லாமல் தந்துவிட்டார். அந்த குட்டி சைக்கிளை ஓடும் பிள்ளைகள் விழாதிருக்க இரு பக்கமும் சில்லுகள் பொருத்தப்பட்டிருந்தன. (உண்மையில் அது இரு சக்கர வாகனமல்ல நான்கு சக்கர வாகனம்). நானும் ஏறி இரண்டு தரம் ஓட ஆரம்பிக்க திடீரென சைக்கிளை தரும் படி மச்சான் கேட்க ஆரம்பித்து விட்டார். அவர் கேட்க நான் இறங்க மாட்டேன் என்று சொல்ல இருவருக்கும் சண்டையாகிவிட்டது. இந்த அடிபுடியில் வீட்டுக்குள் இருந்த மாமி வெளியில் வந்து செய்தது தான் ஹலைட். வந்த வரத்தில் எனக்கு முதுகில் அடித்து சைக்கிளிலிருந்து இறக்கிவிட்டார். அம்மா எப்போதும் சின்ன சின்ன விடயங்களுக்கு அடிப்பதில்லை. அடித்தாலும் காலுக்கு கீழ்தான் வெளுப்பார். அதுவும் பாடசாலை ரிப்போட் வரும் போது தான் நிகழும். எங்கிருந்து தான் நளினி (அம்மா) பிரசன்னமானார் என்று தெரியாது. மாமி என் மேல் கைவைத்த கோபம், தன்னுடைய இயலாமை எல்லாம் சேர்ந்து அருகிலிருந்த பிரம்பால் நன்றாக வெளுத்துவிட்டார். வெளுத்ததும் இல்லாமல் தரதர என்று இழுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டார். அழுதபடியே தூங்கிவிட்டேன் நான். இதெல்லாம் நடக்கும் போது எனக்கு 9 வயதிருக்கும். அதற்கு பின் நான் அம்மாவிடம் சைக்கிள் கேட்டதில்லை.
ஆனால் அடித்த இரவு என்ன நடந்திருக்கும் என்று என்னால் ஊகிக்க முடியும். நான் உறங்கிய பின் அம்மா பல தடவை என்னுடைய கால் தழும்புகளை தடவிப்பார்த்து அழுதிருப்பார், சகோதரன்கள் அம்மாவை எதிர்த்து பேசியிருக்க மாட்டார்கள். ஆனால் சாப்பாட்டில் காட்டியிருப்பார்கள். அம்மம்மா இப்படியா "மாட்டடிக்கின்ற மாதிரி அடிப்பாய்" என்று அம்மாவை திட்டியிருப்பார். ஆனால் எப்படியோ இது நடந்த சில நாட்களில் எனக்கு அம்மா சைக்கிள் வாங்கி தந்துவிட்டார். ஆனால் இந்தப்பிரச்சினையின் தாக்கத்தால் மாமி வீட்டிற்கு போவது தடைப்பட்டுவிட்டது. தான் அடுத்த பிள்ளைகளில் கைவைப்பதில்லை அப்படியிருக்கும் போது தன் பிள்ளையில் மாமி கைவைத்துவிட்ட கோபம் அம்மாவிற்கு…..
இவ்வளவு அமளிதுமளியின் பின் தான் சைக்கிளும் வந்தது. அதற்கிருந்த மரியாதையே தனி. யாரும் அதை தொடக்கூடாது. அதில் பாபி ஸ்டிக்கர் எல்லாம் ஒட்டி அதுவொரு இந்திரலோக வாகனம் போன்று மரியாதையாக தான் வைக்கப்பட்டிருந்தது. இதில் குஞ்சமாக அண்ணா செய்து தந்த காற்றாடி செருகப்பட்டிருந்தது முன்பக்கம். சைக்கிள் ஓடும் போது அது வேறு சுழலும். ஆனால் சைக்கிள் வந்த பிறகு தான் அடுத்த பிரச்சினையும் வந்தது. சைக்கிளை எவ்வளவு நாள் தான் வீட்டுக்குள் ஓடுவது? நாலு வாகனங்களுக்கு நடுவில் வீதியில் ஓட வேண்டாமா..? அது தானே சைக்கிள் வாங்கினதுக்கும் அதனை ஓடும் எனக்கும் மரியாதை… இப்படியான நேரத்தில் தான் சாரங்கபாணி வாத்தியார் என் வாழ்க்கையில் என்டர் ஆகினவர்.
சாரங்கபாணி வாத்தியார் (அவருக்கு மாஸ்டர் என்ற ஆங்கில வார்த்தை பிடிக்காது) அதீத தமிழ் பற்றாளர், தமிழ் புலவர்…. அவரது அன்றாட வாழ்க்கையும் இயற்கையோடு அமைந்ததொன்று. இவர் மட்டக்களப்பின் பாடசாலையொன்றில் அதிபராகவிருந்தவர். இவர் அதிபராகவிருந்த காலத்தில் என்னுடைய அம்மம்மாவும் அதிபராக பணியாற்றியதில் எம்முடைய குடும்பத்தினருக்கு அவரை நன்கு தெரியும். சைக்கிள் வாங்கிய இக்காலப்பகுதியில் தான் எமது வீட்டிற்கு இருபது வீடுகள் அளவில் சற்றுத்தள்ளி வாடகை வீட்டிற்கு இவர் வந்திருந்தார். முதன் முறை வீட்டிற்கு அவரது மனைவியுடன் வந்த போது நான் வீணை வாசித்துக்கொண்டிருந்தேன். (மாலையில் சாமி விளக்கேற்றி வீணை வாசிப்பது இன்று வரையானதொரு பழக்கம்) அப்போது தான் சாரங்கபாணி வாத்தியார் பிள்ளைக்கு நல்ல உச்சரிப்பு ஏன் தழிழை கற்க என்னிடம் அனுப்ப கூடாது என்று தூண்டலை போட்டுவிட்டு போய்விட்டார். அம்மா என்னிடம் கேட்கும் போது நான் சைக்கிளில் போவதென்றால் தான் போவேன் என்று சொல்லிவிட்டேன். அம்மாவின் தமிழ் பற்றும் என் சைக்கிளை றோட்டில் ஓடும் ஆசையும் சங்கமித்தது இப்படி தான். ஆனால் இந்த 20 வீட்டை கடந்து போவதற்கு எனக்கு வீட்டிலிருந்த அக்கா அல்லது அம்மம்மா காவல் வருவார்கள். அவர்கள் நடக்கும் போது அவர்களை முந்திப்போய் திரும்ப திருப்பிக்கொண்டு வந்து மீண்டும் போய் என்று நான் பல தடவை ஓடி முடிப்பதுண்டு. எப்படியே இப்படி ஆரம்பித்தது தான் தமிழ் கற்றல்.
சாரங்கபாணி வாத்தியார் எப்போதும் சுத்த தமிழில் எந்த மொழி கலப்படமும் இல்லாமல் தான் பேசுவார். லகரம் , ணகரம் எல்லாம் அவர் வாயில் தாண்டவமாடும். ஓவ்வொரு நாளும் போனவுடன் வணக்கம் சொல்லி ஒரு திருக்குறளை பாவோதல் செய்ய வேண்டும். கருத்தும் சொல்ல வேண்டும். அவரது வீடு முழுவதும் நிறைய புத்தங்கள் வாரியாக பிரிக்கப்பட்டு வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். அந்த தட்டில் 5 வது புத்தகம் தான் மகாவம்சம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு போய் எடுக்கலாம். அவ்வளவு நேர்த்தி. செம்பில் தான் நீர் தருவார். “தண்ணீர்” என்று கேட்க கூடாது. “தண்” என்பது குளிர். தண்ணீர் என்றால் குளிர் நீரை குறிக்கும். குடிக்க நீர் தான் கேட்க வேண்டும் என்பார். அவ்வளவு மொழிச்சுத்தம் கொண்ட மனிதர். எழுதும் போது எழுத்துப்பிழை விட்டால் அழித்து எழுத விடமாட்டார். மீண்டும் எழுத வைப்பார். இப்போது கூட எனக்கு இந்தப்பழக்கம் உண்டு. அழிக்காமல் வெட்டிவிட்டு மீண்டும் எழுதுவேன். இது அப்போது விழுந்த அடிப்படை தான். பிழை விட்டால் தலையில் நானே குட்ட வேண்டும். என்ன சீழ்தலைசாத்தனார் போன்று கையில் எழுத்தாணி இருந்திருக்கவில்லை இல்லாவிடில் என் தலையில் பல புண்கள் உண்டாகியிருக்கும். ஒன்றரை மணிநேர வகுப்பின் இறுதியில் இதிகாச கதைகளை சொல்லி முடிப்பார். அவர் ஒரு நல்ல கதைசொல்லியும் கூட.
வீதியில் சைக்கிள் ஓட வேண்டும் என்பது இறுதியில் தமிழை கற்றுத்தேர்வதில் வந்து நின்றது. என்னை சித்தவைத்தியம் படிக்க வைக்க வேண்டும் என்பதிலும் வாத்தியார் குறியாயிருந்தார். சித்தர் புத்தகங்களை என்னிடம் தந்து வாசிக்க வைப்பார். ஏறத்தாழ ஏழு வருடங்கள் அவரிடம் கற்றிருக்கின்றேன். உயர்தரத்தில் நான் கணிதத்துறையை தேர்ந்ததில் அவருக்கு அவ்வளவு விருப்பமில்லை. அவரிடம் ஆசீர் பெற போன போது சரி "கணிதத்திலும் தழிழைக்காண்" என்று தான் வாழ்த்தினார். இன்று எனக்கு தெரிந்திருக்கின்ற கைமருத்துவம், மூலிகையறிவு, கட்டக்கலையில் வாஸ்து குறித்த கற்றல் எல்லாமே அவர் போட்ட அத்திவாரம் தான். பல எழுத்தாளர்கள் தங்களுடைய புத்தகங்களை எழுத்துப்பிழை, கருத்துப்பிழை பார்க்க அனுப்பிவைப்பார்கள். நான் சரிபார்த்த பின்னர் பல புத்தகங்கள் அச்சாகியிருக்கின்றன. இவையனைத்தின் பெருமையும் அவரையே சாரும். இன்று அவர் உயிருடன் இல்லை. ஆனாலும் என்னைச் சேர்கின்ற அனைத்து பெருமைகளிலும் என் தமிழ் ஆசான் வாழ்ந்துகொண்டுதானிருக்கின்றார். சிலருக்கு சாவென்பதேயில்லை… அதில் இவரும் ஒருவர்.
இப்போது புரிகிறதா என்னுடைய குட்டி சைக்கிள் எங்கு என்னை இழுத்துப்போனதென்று… (இந்த குட்டி சைக்கிள் இன்று எவ்வாறு என்பீல்ட் இல் வந்து நிற்கின்றதென்பது வேறு கதை…) நமக்கு பிடித்தவர்கள் விடுகின்ற தமிழ்ப்பிழைகளை அவர்களிடம் சொல்லி திருத்திப்பாருங்கள்.... இதுவும் காதல் என்பார்கள் ... இல்லை இது தான் அவர் மீதானதும் தமிழ் மீதானதுமான காதல் என்பேன் நான்......

No comments:
Post a Comment