Tuesday, April 16, 2013

“குலமும் குணமும்”


எனக்கொரு உற்ற நண்பனிருக்கின்றான். எனது குடும்ப நண்பனும் கூட. சமூகத்தில் பொறுப்பானதொரு பதவியிலிருப்பவர். நல்லதொரு ஓவியன். நாமிருவரும் அநேகமாக பல விடயங்கள் பற்றி பேசி விவாதித்துக் கொள்வோம். அரசியல் அறிவில் எனக்கு குருவும் கூட. அரசியல், கலை , இசை பற்றி இருவருக்கும் பல ஒன்றுபட்ட எண்ணங்கள் உண்டென்றாலும் எனக்கு பிடிக்காத ஒரு விடயம் அவரது “சதி வெறி” இது தொடர்பில் நாமிருவரும் முரண்பட்டுக் கொண்டாலும் இந்த சித்திரை புத்தாண்டன்று நடந்த ஒரு விடயம் பற்றி சொல்லிக்கொள் வேண்டும்.
எனக்கு கவிஞர் நண்பர் ஒருவர் இருக்கின்றார். இந்த கவிஞருக்கும் ஓவியருக்கும் என்ன பிரச்சினை எனக்குத் தெரியாது (தனிப்பட்ட முறையில் ஏதுமுண்டோ???) அவரைப் பற்றி இவரும் இவரைப் பற்றி அவரும் பேசி ஒரே மோதிக்கொள்வதுண்டு. நேரடியாகவல்ல இவர்களிருவரினதும் வீரமும்  என்னிடம் தான். (இருதலைக் கொள்ளி எறும்பு என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். இப்போது தான் புரிகிறது அந்த எறும்பின் அவதி எப்படியிருக்குமென்று). ஆரம்பத்திலிருந்தே என் ஓவிய நண்பனுக்கு அவர் பற்றி நல்ல அபிப்பிராயமில்லை. “எல்லாம் கொஞ்ச காலம் தான் இன்னொன்றை கண்டவுடன் எல்லாம் போய்விடும்…. கவிஞரா? வழிஞ்சலா? என்பது கொஞ்ச நாளில் தெரியும்” என்று ஒரே கூறுவார்.

கடந்த சில நாட்களாக கவிஞர் நண்பர் என்னுடன் பேசுவதில்லை எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்துகொண்டிக்கின்றார் என்பது உண்மை தான். புதுவருடத்தன்று கூட “ என்னை இனி அழைக்க வேண்டாம் எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை” என்று குறுஞ்செய்தியும் அனுப்பியிருந்தார். இது நடக்கும் போது எனது குடும்பத்தினருடன் ஓவிய நண்பன் வீட்டில் விருந்திற்கு சென்றிருந்தோம். கவிஞரின் குறுஞ்செய்தி பார்த்து நான் கண்கலங்கியவுடன் இந்த ஓவியருக்குள் சாத்தான் புகுந்துவிட்டது. “என்ன நான் சொன்னது நடந்து விட்டதா?” என்று தான் கேட்டார். எனக்கு கவிஞரை விட்டுக்கொடுக்க மனமில்லை. “அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவர் வேலையாக இருக்கிறாராம்” என்று முடித்துக்கொண்டேன். ஆனாலும் இந்த சாத்தான் விட்டதா? திரும்ப திரும்ப “குலத்தளவே குணம்” என்று சொல்லி கடுப்பேத்திக்கொண்டிருந்தது.

இந்த நீண்ட சம்ப விபரித்தலுக்குப்பின் ஒரு விடயத்தினை தான் சொல்ல வருகின்றேன். அதென்ன குலம்….? ஒருவனது குலம் அவனது பிறப்பினால் முடிவாகிவிடுவதல்ல குணத்தினால் முடிவாகும் விடயம். ஒரு வேளை அவர் வேலைப்பளுவினாலோ அல்லது வேறொரு கோபத்தினாலோ அவ்வாறு கூறியிருக்க கூடும். அவரும் பொறுப்பானதொரு பதவியிருப்பவர். அதற்காக அவரது குலம் எப்படி காரணமாகிட முடியும். நான் அவருடன் பல மாதங்களாக நண்பியாக இருக்கின்றேன்.. நான் கூட வேலைப்பளுவினால் அதனால் ஏற்பட்ட அழுத்தங்களினால் பலமுறை  காயப்படுத்தியிருக்கின்றேன். அதற்காக வேறொருவருடன் புது உறவு ஏற்பட்டுவிட்டது என்றோ அல்லது பதிதாக நல்லதொன்றை பார்த்துவிட்டேன் என்பதா அர்த்தம்? அல்லது ஏமாற்றப் போகின்றேன் என்பதா பொருள்?
ஆகவே சும்மா சாதிகளை கொண்டு மனித மனங்களை எடை போடாமல் புரிந்துகொள்ளப் பழகவேண்டும். ஒருவனது பண்பும் அவன் அடுத்தவர் மேல் கொண்டிருக்கின்ற அன்பும் தான் அவனது சாதியை தீர்மானிக்கின்றதே அன்றி ஒருவனது பிறப்பல்ல. படித்து பட்டம் பெற்றுவிட்டால் மட்டும் போதாதுங்க அடுத்தவரை மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். ஓவியத்தினை கிறுக்குவதை விட மனிதத்தினை மதியுங்கள் நண்பரே…..

No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை