Thursday, July 4, 2013

படைப்பு

காட்டுச் சிங்கம் ஒன்று தன் குட்டிக்கு நகரத்தினை சுற்றிக்காட்ட புறப்பட்டு நகரக்குள் நுழைந்ததாம். ஓவ்வொன்றாக அதற்குக் காட்டி விளக்கம் கொடுத்துக்கொண்டு வந்ததாம். புத்திசாலியான குட்டிச்சிங்கமும் வினாக்களை எழுப்பி தன் சந்தேகங்களை நிவர்த்தித்துக் கொண்டு வந்ததாம்.

இவ்வாறு உலா வரும் போது பூங்காவொன்றில் சிலையொன்றை குட்டிச் சிங்கம் கண்டதாம். “சிங்கமொன்றின் வயிற்றுப்பகுதியை மனிதனொருவன் ஈட்டியால் குத்திக் கிழிப்பதாகவும் அவன் காலொன்று தலையைத்திருப்பி கடிக்க முயல்கின்ற சிங்கத்தின் பிடிறிப்பகுதியில் அழுத்துவது” போன்றும் அமைந்திருந்ததாம். 

விடுமா அந்த சிங்கக்குட்டி?... “அப்பா அப்பா ஏன் இப்படி செய்திருக்கிறார்கள் இந்த சிலையை? நம் இனம் தானே காட்டின் ராஜா… காட்டு விலங்குகள் முதல் காட்டுக்கு வரும் மனிதர்கள் வரை நமது கர்ச்சிப்பை (ஹலோ மூஞ்சு துடைக்கும் துணியில்ல சிங்கத்தின் சவுண்டு)  கேட்டாலே ஓடி விடுகிறார்கள் அல்லது கூட்டாக வந்து பல பொறிகளை பாவித்து பிடிக்கிறார்கள். அப்படியிருக்க இந்த சிலையில் மட்டும் ஏன் தனித்து நின்று எம்மினத்தவனை கொல்லுவது போன்று சிலை வடித்திருக்கிறார்கள்” என்று கேட்டதாம்.

தன் குட்டியை அர்த்தத்துடன் திரும்பிப் பார்த்த அப்பா சிங்கம் சற்றே சிரித்துக்கொண்டே (சிங்கம் கதைக்கும் போது சிரிக்காதா?) சொன்னதாம் “மகனே இதை மனிதன் செய்ததால் தன் இனத்தவன் நம்மினத்தவனை கொல்வது போன்று சிலை வடித்திருக்கின்றான். இதே சிலையை நமக்குச் செய்யத் தெரிந்திருந்தால் அவனை நம்மினத்து சிங்கம் ஒன்று கடித்துக்குதறுவது போன்று வடித்திருப்போம். அது தான் யதார்த்தம். நம்மைப் பற்றி நாமே பெருமைப்பட்டுக்கொள்வது தான் மனதின் இயல்பு” என்று நீண்ட விளக்கமொன்றினை அளித்ததாம்.

மீண்டும் அந்த வாலு (அதான் குட்டிச் சிங்கம்) கேட்டதாம்.... “அப்பா  அப்படியென்றால் உண்மை நிலையை காட்டுவதில்லையா… நாளைய தலைமுறை இதை பார்க்கும் போது கேவலமாக நினைக்கமாட்டார்களா எம்மினத்தவர்களின் வீரத்தினை…?” என்று…

அதற்கு அப்பா சிங்கம் “அன்னம் போன்று இருக்க வேண்டும் மகனே.. நல்லதை மட்டும் எடுக்க வேண்டும்! மாடு போல் இருக்க வேண்டும்… படித்தவற்றினை அசை போடுவதில்! (ஒரே அனிமல்சா இருக்கில்ல…ம்ம்ம்ம்ம்.. சிங்கம் அதன் லாங்குவேஜ்ஜில் தான் பேசுமுங்க..) படைப்புக்களை இரசிக்கலாம் ஆனால் படைப்புக்களை மட்டுமே சரித்திரமென்றிட முடியாது. நீயும் இச்சிலையை, அதில் அவன் கலையை இரசி! ஆனால் இது தான் உண்மை என்று தீர்மானித்திடாதே! என்று கூறியதாம். குட்டிச்சிங்கமும் அதானே பார்த்தேன் என்று பிடறி முடியை சிலிர்த்துக்கொண்டதாம்.

இது ஒரு உருவகக்கதையாக இருக்கலாம். ஆனால் இக்கதையின் கருவென்னவோ உண்மையானதொன்று.

சில மனிதர்கள் இப்படித்தான் தம் படைப்புக்களில் ஒழுக்கங்கள் பற்றி பிதற்றிக்கொண்டிருப்பார்கள் ஆனால் நிஜத்தில் ஒழுக்கம் கெட்டவர்களாக இருப்பார்கள். பெண்ணியம் பற்றி, தாய்மை பற்றி பேசுவார்கள் ஆனால் இரசியமாக பல பெண்களின் வாழ்வில் விளையாடுவார்கள்.. இதுவே பெண்கள் என்றால் மேடையில் பேசும் பெண்ணியத்தினை தம் வீட்டு அடுப்படியில் சாம்பலாக்கியிருப்பார்கள்.

இப்படிப்பட்டவர்களை பார்க்கும் போது “சிகரெட் பெட்டி” இன் ஞாபகம் தான் எனக்கு வரும். (உடனே இந்த பொண்ணு சிகரெட் குடிக்கிறதோ என்று வழமை போன்று சிந்திக்க நினைத்தால் மண்டையில் குட்டு போட வேண்டும்) அந்த பெட்டியில் பார்த்தீர்கள் என்றால் சிகரெட்டின் தீமை பற்றி வெளி மட்டையிலேயே அச்சிடப்பட்டிருக்கும். உள்ளுக்குள் சிகரெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

எப்போதும் நாம் நாமாக வாழ வேண்டுமுங்க… இந்த பில்டப்புகள் நமக்கெதற்கு? போக்கிரியாக இருக்கின்றோமென்றால் அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ண என்ன தகுதியிருக்கிறது? அடுத்தவரை விமர்சிக்க என்ன உரிமையிருக்கிறது..? மானங்கெட்டு இரட்டை வாழ்வு வாழ்வதை விட உடையில்லாமல் திரியலாம்…..






No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை