ரகசியத்தை சொல் கிளியே – அநுராதாரமணன்

அன்றாடம் நாம் பலவித விடயங்களை கடந்து செல்கின்றோம். என்றாலும் சில விடயங்கள் நம் உள்ளங்களில் ஏதோவொரு புள்ளியை தொட்டு தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அவ்வாறான ஒரு தாக்கத்தினை என் மனதில் ஏற்படுத்திய ஒரு படைப்பு தான்  அண்மையில் நான் வாசித்த ஒரு புத்தகம். “ரகசியத்தை சொல் கிளியே” என்ற பிரபல இந்திய எழுத்தாளர் அநுராதாரமணன் எழுதிய இந்நூல் கங்கை புத்தக நிலையத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நூலில் “ரகசியத்தை சொல் கிளியே” “உனக்காக உமா” என்கின்ற இரு நாவல்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இரண்டுமே வரதட்சனை எவ்வாறு திருமண சந்தையிலும் காதலிலும் செல்வாக்கு செலுத்துகின்றது என்பதை வௌ;வேறு கோணங்களில் விளக்கியிருந்தது.

ரகசியத்தை சொல் கிளியே

இம் முதல் கதையில் தன் தங்கை குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்து அவளது மகளை தனது மகனுக்கு மணமுடித்துக் கொடுக்க நினைக்கின்றார் ஒரு தாராள மனப்பான்மை உடைய தந்தை. ஆனால் ஒரு காலகட்டத்தில் பொருளாதார அழுத்தங்கள் தாளாமல் மற்றதொரு பணக்கார தங்கையின் மகளுக்கு மகனை மணமுடித்து கொடுத்து விடுகிறார்.
இக்கதையின் நாயகி “கிளி” சிறு வயது முதல் அத்தானுக்காக வாழ்ந்து வரும் ஒரு கதாபாத்திரமாக சித்தரிக்கப்படுகிறாhள். கிராமத்து வெகுளித்தனமும் குழந்தை மனமும் முகத்திலடித்தால் போன்று பேசும் குணமும் சேர்ந்த கலவை. தன் அத்தான் இன்னொருத்திக்கு கணவனாக போவது தெரிந்து “ இன்றிலிருந்து ஒரு வருடத்தினுள் உன் கையால் மறு தாலி வாங்குவேன்” என சபதமிடுவதும் “நீ அவளை தொடக் கூடாது “ என அத்தானிடம் சத்தியம் வாங்குவதும் யதார்த்தத்திற்கு பொருந்தாவிட்டாலும் கிராமத்து பெண்ணின் வைராக்கியத்தினை மனதில் வரித்துவிட்டவனை அடைய வேண்டுமென்ற பிடிவாதத்தினை காட்டுவதாக அமைந்திருந்தது.

நகரத்து பணக்கார பெண்ணாக வரும் நளினா வாசலில் நைட்டியுடன் நின்று கோலம் போடுவது நிச்சயம் இன்றைய நாகரீக பெண்களை கண்முன் நிறுத்துகிறது. தனது கணவனுக்கு தினமும் பாடம் சொல்லிக் கொடுப்பதும் பணக்கார திமிறின்றி ஏழையான கிளியுடன் சகஜமாக பழகுவதும் நளினாவின் குணாம்சங்களாக கூறப்படுகின்றது. இது நடைமுறைக்கு சாத்தியமா என்பது கேள்விக்குறி....

நளினா மற்றும் கிளியின் பாட்டி காவேரி முதலில் கிளியுடன் பாசமக இருப்பதும் பின் புதுப் பணக்கார பேத்தியை கண்டதும் அவள் கட்சிக்கு தாவி கிளியை உதாசீனம் செய்வதும் “பணத்தைக் கண்டவுடன் நிறம் மாறும் பச்சோந்தி மனிதர்கள்” இன்றும் எம்முடன் வாழ்கின்றனர் என்பதை நிரூபிக்கின்றார்.

கிளியின் அத்தானாக வரும் முத்து பிரச்சினைகள் பூதாகரமாக வெடிக்கும் போது “மூட்டை தூக்கியாவது கிளியை காப்பாற்றுவேன்” என்றும் திருமணத்திற்கு முதல் நாள் கிளியை சந்திக்கும் போது “அப்பா ரொம்பக் கஷ்டத்தில இருக்கார் கிளி... இல்லையினா அவரும் இப்படிப் பேசக் கூடியவர் இல்லே....” என்று நழுவியதும் தான் ரொம்ப நல்லவன் என்று புது மனைவியிடம் காட்டுவதற்கு “என்னைக் கூடுமானவரைக்கும் கூப்பிடாம இருக்கிறதே நல்லது....” என எரிந்து விழுவதும் அதே மனைவியிடமே சில நாட்களில் “ மச்சமா இது … நான் ஏதோ மை ஒட்டிருக்கோ என பார்த்தேன்...” என வழிவதும் இன்றைய யதார்த்தம்.

முத்துவை விடவும் படித்த பணக்கார மாப்பிளைகளை பெற்றோர் பார்கும் போது இப்போது எனக்கு திருமணம் வேண்டாம் என்பதும் எனக்கு திருமணம் தேவைப்படும் போது உங்களுக்கு சொல்கின்றேன் என முகத்திலடித்தால் போல சொல்வதும் கிளியின் காதலின் அளவை அவளோடு ஒப்பிடும் போது முத்துவின் கயமையை காட்டுகிறது.

நளினாவிற்கு ஏற்படும் சிறு சிறு விபத்துக்களுக்கு கிளியை சூழ்நிலைக் கைதியாக்கி அடித்துக் கொடுமைப்படுத்தும் போதும் வாசிப்பவர்களுக்கே நெஞ்சம் கணக்கின்றது. இறுதியாக முத்து – நளினாவின் குழந்தையை கையில் ஏந்தியபடி “ அட நான் தானே உனக்கு இப்ப பொண்டாட்டியையே திருப்பிக் கொடுத்திருக்கிறேன்? இதைவிட வேற என்ன தரமுடியும்.....?” என்பதும் “ஒரு தாங்க்ஸ் கூட சொல்ல முடியாத பயந்தாங்கொள்ளி அப்பனுக்கு பொண்ணாh பொறந்து....” என கிளியின் கடைசி உரையாடலாக கதையின் இறுதி வரிகளாகவும் அமைகின்ற இவ்வாத்தைகள் நிச்சயம் இன்று சமூகத்தில் உள்ள முதுகெலும்பில்லாத ஒவ்வொரு சூழ்நிலையை காரணங்காட்டி தப்பித்துக்கொள்ளும் “முத்து” கதாபாத்திரங்களை நிச்சயம் ஒரு தடவை சுட்டியுமிருக்கும் சுட்டுமிருக்கும் வசனங்கள்.

இந்நூல் என்னைக் கவர்ந்திருந்தது என்பதனை விட என் உணர்வுகளை மிகவும் பாதித்திருந்தது. கிட்டத்தட்ட ஒரு வாரம் இத் தாக்கத்தின் பிரதிபலிப்பு எனக்கு இருந்தது என கூறலாம். “ஏன்?” என்ற வினாவினை என்னுள்ளே எழுப்பிய போது “கிளி” பாத்திரத்தின் வெகுளித்தனம், பிடிவாதங்கள் என்னிலும் அடக்காமாகியிருந்ததினை உணர முடிந்தது. ஆனால் இதன் முடிவினை வாசித்த போது என் மனதின் ஒரு புள்ளியில் வலித்ததையும் உணர்ந்தேன்.

உங்களுக்கும் இப்புத்தகத்தினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் வாசிக்கத் தவறாதீர்கள் நிச்சயம் நீங்களும் ஒரு கிளி, முத்து , காவேரி என நீளும் இக்கதையின் பாத்திரங்களுள் யாராவது ஒருவரை கடந்திருப்பீர்கள்.

Comments

Popular posts from this blog

நிறம் மாறும் மனிதர்கள்

இரும்பில் முளைக்கின்ற இதயங்கள்

மனம் + மனம் = திருமணம் (02)