இன்று காதலர் தினம். உள்ளவர்கள் என்ன செய்யலாம் என திட்டமிட்டுக்கொண்டிருக்க இல்லாதவர்கள் யாராவது கிடைக்க மாட்டர்களா? ஏன எதிர்பார்த்துக் கொண்டிருக்க இழந்தவர்கள் தம்மவர்களுடனான இனிய நினைவுகளை (???) நினைத்து கண்களை கசக்கிக்கொண்டுமிருக்க இவ்வருட காதலர் தினம் வந்துவிட்டது. நடைபாதை எங்கும் இயற்கை. செயற்கை ரோஜாக்கள் கண்ணைப் பறிக்க கூடவே சிந்தையிலுதித்த சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றேன்.
காதலென்பது தாக்காத உள்ளங்கள் நிச்சயம் இருக்காது. நிச்சயம் ஒருதலைக் காதலாகவென்றாலும் ஒருவரை இது தழுவிச் சென்றிருக்கும் .“எனக்கு காதலே வந்ததில்லை “ என்பவர்கள் நிச்சயம் பொய்தான் சொல்கிறார்கள். அல்லது சிந்தைக்குழப்பத்தில் உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். துறவியினுள்ளும் கூட காதலென்ற ஒன்று எட்டிப்பார்த்திருக்கும். ஆனால் அந்தக்காதல் எவரில்? ஏன்? எப்போது? என்பதில் தான் ஆளாளுக்கு வேறுபடுகிறது.
இதில் முதலாவது விடயம் நாம் ஏதோவொன்றை எதிர்பார்த்து தான் ஒருவரை விரும்புகின்றோம். அவர்கள் பதில் தரும் வரை பின் தொடர்கின்றோம். அதுவே அவர்களை துன்பப்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது. “ இவன் இவள் என்னைத் தொந்தரவு செய்ததால் தான் காதலித்தேன் “ என்று ஒருவர் கூறுவாராயின் அது காதலே இல்லைங்க. அங்கே நிச்சயம் காதல் செத்திருக்கும். இரு மனங்கள் ஒன்றிணைந்து ஒரு புள்ளியில் அழகிய மலரொன்று மலர்வது தான் காதல். அதை சொல்வதை விட பரிசுகளால் காட்டுவதை விட இரு பக்கத்திலும் உணர வேண்டும். எனக்கு இவள் தான் மனைவி அல்லது இவர் தான் என் கணவர் என்று தீர்மானித்துவிட்டால் அதற்காக போராட வேண்டும். இடையில் விட்டுவிட்டு ஓடிவிடுவதோ அல்லது இன்னொன்றினை கண்டவுடன் “ நானெங்கே உன்னைக் காதலித்தேன். எனக்கு அவ்வாறான எண்ணமில்லை “ என்று சொல்வதெல்லாம் கோழைத்தனம். இது ஆண்மைக்கும் அழகில்லை பெண்மைக்கும் அழகில்லை.
இரண்டாவது காதலிக்கும் காலத்தில் வரும் ஊடல்களும் கூடல்களும். செல்லச் சண்டைகள் இல்லாமல் சிறு சிறு சேட்டைகள் இல்லாமல் ஒரு காதல் இருந்தால் அது நிச்சயம் இரு ரோபோக்கிடையில் தான் ஏற்பட்டிருக்கும். சில இனிமைகள் சில கசப்புக்கள் நிறைந்தது தான் காதல். இருவருக்குமிடையான பொறமைச் சண்டைகளும் அன்புத் தொல்லைகளும் தான் இதனை சுவாரஸ்யமாக்குகின்றன. ஆனால் அவையே எல்வை கடக்குமாயின் வலியாகிவிடும் என்பதை மறக்காதீர்கள். நம்மவர்களை கடுப்பாக்குகின்றோம் என்ற பெயரில் காயப்படுத்திவிடாதீர்கள். “காதல் என்பது கண்ணாடி போன்றது” இன்றைய சிறு கீறல்கள் கூட நாளை வெடிப்பாக மாறி உடைந்து போய்விடலாம்.
அடுத்த விடயம் “ஈகோ” பார்க்காதீர்கள். “நீ எனக்குத் தான்” என்று சொல்லிச் சொல்லியே சண்டை போடுங்கள். பிழை செய்துவிட்டால் “நான் ஏன் இறங்க வேண்டும்” என்றில்லாமல் மன்னிப்புக் கேட்டுவிடுங்கள். நம்மவர்களிடம் இறங்கிப்போவதில் நமது கௌரவம் ஒன்றும் தாழ்ந்துவிடப் போவதில்லை. அதற்காக ஒரேடியாக உங்கள் சுயகௌரவங்களை இழந்த விடாதீர்கள். சின்ன சின்ன திமிர் கூட காதல் என்ற இலக்கணத்தில் வேண்டும். அல்லது சப்பென்றாகிவிடம்.
இன்னுமொரு விடயம் உண்மையாயிருங்கள். யார் நினைத்தாலும் சாட்சியில்லாமல் தவறுகளை செய்யக் கூடிய காலமிது. அதற்காக அவள் அல்லது அவனுக்கு எங்கே தெரியப் போகின்றது என்றெண்ணி தவறான விடயங்களை செய்யாதீர்கள். “கற்பு’ என்பது மனசுக்குத்தான். ஒருவருள்ள மனதில் இன்னொருவரையும் கூடவே நினைக்கின்றோம் என்றால் அங்கே நாம் விபச்சாரம் செய்கின்றோம். நம்பிக்கையாயிருங்கள். நம்மவர்கள் கேள்வி கேட்கும் போது நமது பக்கத்தில் நியாயமிருந்தால் கண்ணைப் பார்த்து பதில் சொல்லுங்கள். நம்மவர் கேள்வி கேட்டால் ‘என்னை உன்னிடம் நிரூபிக்க வேண்டியதில்லை” என்று கூறுகின்றீர்கள் என்றால் உங்கள் பக்கத்தில் நிச்சயம் தவறிருக்கின்றது. நம்முடன் வாழ்நாள் முழுவதும் வரவேண்டும் என நினைப்பவர்கள் தான் நம்மை விட்டுக்கொடுக்க கூடாது என்பதற்காக கேள்வி கேட்பார்கள். பணத்திற்காக பதவிக்காக அழகிற்காக நேசிப்பவர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள். அவர்களது தேவை வேறு என்பதால் செய்வதற்கெல்லாம் தலையாட்டி அனுமதிப்பார்கள். “மனம்’ என்பதை நேசிப்பவர்கள் தான் அதில் இன்னொருவர் அமரக் கூடாது என்பதற்காக நூறு கேள்வி கேட்பார்கள். ஆனால் அதுவே சந்தேகமாகி விடாமல் இருசாராரும் பார்த்துக்கொள்ளுங்கள்.
மற்றது உங்களவருக்காக நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் சமூகத்தில் எவ்வளவு பெரியவரானாலும் உங்களவர் உங்களிடத்தில் எதிர்பார்ப்பது “அன்பு” மட்டும் தான் தினமும் எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் சில நிமிடங்கள் அவர்களக்காக ஒதுக்குங்கள். நீங்கள் வேலையில்லா நேரங்களில் கடலை போடு;வதை விட வேலைகளுக்கு மத்தியிலும் ஒதுக்கும் சில நிமிடங்கள் உங்கள் அன்பை பன்மடங்கு உயாத்திக் காட்டும்.
மிகமுக்கியமான விடயம் “காதல்” உங்கள் இலட்சியங்களை தடைசெய்வதை அனுமதிக்காதீர்கள். எவர் உங்களிடம் உங்கள் இலட்சியங்ளை அறிந்து காதலிக்கின்றாறோ அல்லது உங்கள் இலட்சியங்களுக்கு உதவுகின்றார்களோ அவர்களிடம் தான் உண்மையான காதலுண்டுங்க. இது தாங்க சாதிக்க வைக்கின்ற காதல். அவ்வாறான காதலை தேடிப் பிடித்து காதலியுங்கள். காதலென்பது நம்மை செதுக்க வேண்டும்.சறுக்க வைக்க கூடாதுங்க.
இறுதியான விடயம் உங்களவர் உங்களை விட்டு விலக ஆரம்பிப்பதை உணர்ந்தால் காரணத்தினை ஆராய்ந்து திருத்த முயற்சியுங்கள். அதையும் தாண்டி உங்களை விட வேறு விடயங்கள் தான் அவருக்கு பெரிதாயிருக்கின்றது என்றால் இது பாலியல் ரீதியில் அல்லது பொருளாதார ரீதியில் கூட இருக்கலாம். காதலிலேயே நிலையில்லாதவரை நம்பி எவ்வாறு கழுத்தை நீட்டுவது. இதை வருமுன் காத்தலாக நினைத்து போய்விடுங்கள். அவர் தான் நல்ல வாழ்க்கைத்துணையை மிஸ் பண்ணிவிட்டார் என நினைத்துக் கொள்ளுங்கள். “நம்மை பிரிவது தான் நம்மவருக்கு பிடிக்கும் “ என்றால் நமது அன்பை நிரூபிப்பதற்காகவே வலித்தாலும் விலகிவிடுங்கள்.
“காதல் என்பது குழந்தை மாதிரி அழுதாலும் சிரித்தாலும் குழந்தை மாதிரி இருக்க வேண்டுமுங்க. தோற்றாலும் ஒரு நிமிடம் ஒரு துளி கண்ணீர் ஏற்படுகிறதென்றால் அது தாங்க உண்மைக்காதல் வரிக்குவரி கவிதையாக காதலியுங்கள் கடைசி வரை போராடுங்கள். இருபக்க காதலும் உண்மையாகவிருந்தால் காலம் அது கடந்தும் வாழும்.
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
அன்புடன் மீரா
( கடந்த வருடம் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற எனது கட்டுரை)
No comments:
Post a Comment