கட்டடங்களும் பேசுவதுண்டு - 02
ஒவ்வொரு விடயத்திலும் முதல் என்பதற்கான மதிப்பே தனி தான். முதல் காதல், முதல் முத்தம், முதல் விபத்து, மூத்த பிள்ளை என்று முதல் என்பதே ஒரு இனிமையான விடயம் தான். மனித மனதில் முதல் என்பது விதைத்து விடுகின்ற விம்பம் தான் பின்வரும் அனைத்திலும் தேடவைத் தொடங்குகின்றது. என்னுடைய பொறியியல் வாழ்க்கையின் முதல் குழந்தை வெள்ளவத்தை ருத்ரா மாவத்தையில் உள்ளது. LandMark கம்பனியில் களப்பயிற்சியினை ஆரம்பித்த நான் ஆறு மாதகாலத்தின் பின்னர் அதனை நிறைவுசெய்த பின்னர் அங்கேயே உதவிப்பொறியியலாளராக இணைந்தேன். இதில் அதியம் என்னவென்றால் பல்கலைக்கழகத்தினால் களப்பயிற்சிக்கான தேடலில் சிக்கிய முதலாவது நிறுவனம் இது தான். கடிதத்தினை சமர்ப்பித்து இரு நாட்களில் நேர்காணலுக்கு வரச்சொல்லியிருந்தார்கள். நானும் என்னுடைய சக பல்கலைக்கழக நண்பனும் நேர்காணலில் தெரிவுசெய்யப்பட்டோம். ஆனால் ஒரு நிறுவனத்தின் வெவ்வேறு கட்டுமானங்களில் எமக்கான பயிற்சி ஆரம்பமாகியது.
பயிற்சிக்கான முதல் நாளன்று எமது விடுதியின் தேவாலயத்திற்குச் சென்று வணங்கி, இன்னும் பல சம்பிரதாயங்கள் எல்லாம் முடித்து சைட்டுக்கு போன நாள் இன்னும் பசுமையாக உள்ளது. இதில் மிகவும் முக்கியமான புள்ளி அன்று தான் அந்த சைட் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டாவது நாள். ஆக கிட்டத்தட்ட இரண்டு நாள் தான் நான் பிந்தியிருந்தேன். இதுவும் நான் அந்தக்கட்டடத்தினை இன்று வரை நேசிக்க முக்கிய காரணம். எதுவும் அப்படித்தானே அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் போது ஆழமான பற்றுதலை உருவாக்கி விடுகின்றது.
அத்திவாரத்திற்கு தோண்டிய குழியில் சறுக்கி விழுந்து உடம்புமுழுக்க சேறாகிப்போனது, கட்டடம் ஒரு நிலைக்கு வரும் வரை அலுவலகம் இன்றி மரத்திற்கு கீழ் மேசை , கதிரையைப் போட்டு இருப்பது, இரவில் மையிருட்டுக்கு நடுவில் தட்டுத்தடுமாறி இடறி விழுந்து வேலை பார்ப்பது என அத்திவாரம் எழும்பும் வரை எம் நிலையிருந்தது. இதற்கிடையில் நான் இணைந்தது நவம்பர் 01 ஆம் திகதி. எனவே இணைந்து இரு வாரங்களில் என்னுடைய பிறந்தநாள் வந்துவிட்டது. வழமை போன்று அம்மா உடுப்பெடுத்து அனுப்பியிருந்தார். பொதுவாக சைட்டில் வேலை இலகுவிற்காகவும் மரியாதைக்காகவும் ஜீன்ஸ்- டொப் தான் அணிவதுண்டு. ஆனால் அம்மா சல்வார் அனுப்பிவிட்டார். புளுகு குணத்தில் அதை அன்று போட்டுப்போய் விட்டாகிட்டு. போதாக்குறைக்கு சைட்டில் இருக்கும் அலுவலகர்களுக்கு மதிய உணவு வாங்கிக்கொடுக்கும் படி வங்கியில் பணம் வேறு போட்டுவிட்டார். அத்துடன் கேக் மற்றும் பலகாரங்கள் செய்தும் அதை பஸ்ஸில் கொடுத்து விட்டிருந்தார். (அம்மா எப்போதும் அப்படித்தான்) இதற்குப்பிறகு சொல்லவா வேண்டும்… கலக்கலாக சைட்டுக்கு போயாயிட்டு. காலை தேநீர் இடைவெளியின் போது பிரதான பொறியியலாளர் கேக் வெட்டுவதற்கான ஏற்பாடுகளை எனக்குத் தெரியாமல் செய்திருந்தார். ஆக கலகலப்பாக கேக் வெட்டி அலுவலகர்களுக்கு பகிர்ந்த பின் அம்மா அனுப்பியிருந்த கேக்கினை கூலிவேலை செய்பவர்களுக்கு கொடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது புதியதொரு நபர் எமது சைட்டுக்குள் நுழைந்தார். வந்ததும் வராததுமாக ஹலோ இது சைட் இப்படி உடுப்பு போட கூடாது. கையில் கேக் வைத்திருக்கின்றீர் எனக்குத் தாரும் என்று வலுக்கட்டாயமாக கையிலிருந்து தட்டை இழுத்து கட கடவென்று சாப்பிட ஆரம்பித்தார். இதென்னடா புதுசா இருக்கென்று அலறியடித்து அலுவலக அறைக்குள் புகுந்து பிரதான பொறியிலாளரான அண்ணாவிடம் சொன்னேன். அண்ணா வெளியில் வந்து அவரைக் கூப்பிட்டு விசாரித்தார். அப்போது தான் அந்தாளும் வெறொரு பல்கலைக்கழகத்திலிருந்து பயிற்சிக்கு வந்தவரென்று அறியக்கிடைத்தது.
நுழைந்தவுடனேயே அதிரடியான வேலைகளைச் செய்த அந்த நபரை எனக்கு முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போய்விட்டது. அன்று ஆரம்பித்த சண்டை இன்று வரை தொடர்கின்றுத. இந்த ஆளுக்கு மணிக்கொரு தரம் டீ குடிக்க கொடுக்க வேண்டும். அதுவும் நான் போட்டுக்கொடுக்க வேண்டும். மதியம் சாப்பிடும் போது சடாரென்று என்னுடைய சாப்பாட்டில் கைவைத்து எடுப்பார். சைட்டில் ஒவ்வொருவருடைய தலைக்கவசத்திலும் பெயரிடப்பட்டிருக்கும். அடுத்தவருடையதை மாற்றிப் போடாமல் இருக்க இந்த ஏற்பாடு. ஆனால் இவர் என்னுடைய தலைக்கவசத்தினைத் தான் எப்போதும் எடுப்பார். கேட்டால் ஓ… பெயரைப்பார்க்காமல் எடுத்துவிட்டேன் என்பார். யாராவது தன்னுடைய நண்பர்கள் வந்தால் இவர் என்னுடைய கேர்ல் பெரண்ட் என்று தான் என்னை அறிமுகம் செய்யும் அந்த கழுதை. எனக்கு சிகரெட் வாசம் பிடிக்காது என்று தெரிந்தும் வேண்டும் என்று என்னருகில் நின்று தான் ஊதும். யுhராவது எனக்கு கோல் எடுத்தால் யாரது? பெயரைக் காட்டும் என்று என்னை வதைக்கும். எமது நிறுவனத்திற்கு 5 தளங்கள் அப்போது இருந்தன. அவற்றிலுள்ள பொறியியலாளர்களும் மாத கூட்டத்தில் ஒன்றுசேர்வதுண்டு. நான் மட்டும் தான் பெண் பொறியியலாளர். யாராவது வந்து என்னுடன் கதைத்தால் போதும். சடாரென்று நடுவில் புகுவார். அல்லது நாகரீகமற்ற முறையில் அருகில் கதிரையை இழுத்துப்போட்டு அமர்வார். நான் மீதம் வைத்த உணவுகளை எடுத்து சாப்பிடுவார். இவரை நான் வெறுத்தளவு வேறு யாரையும் என் வாழ்வில் நான் வெறுத்ததேயில்லை. தினமும் சண்டை தான் கடைசியில் அண்ணா தான் நாட்டாமை வேலை பார்த்து சண்டைகளுக்குத் தீர்ப்பு வழங்குவார். தீர்ப்பு சாதகமானால் சரி நீர் பெரிய சிவாஜி அவ சரோஜா ரெண்டும் பாசமலர்கள் என்று மீண்டும் சண்டை ஆரம்பமாகும். ஆனால் ஒருவகையில் உண்மை இல்லாமலுமில்லை. நிவேதன் அண்ணா எப்போதும் எனக்கு இன்னுமொரு அண்ணா தான். எனது பாதுகாப்பை உறுதிசெய்வது தொடக்கம் தெரியாத விடயங்களை சொல்லித் தருவது வரை மிகவும் அக்கறை எடுத்துக்கொள்வார். பாசக்கார பயபுள்ள. ஓரு மிட்டாய் கூட என்னை விட்டுவிட்டு சாப்பிட மாட்டார்.
இப்படி பலவிதமான பாசம், கோபம், சண்டை, பொறாமை என இருந்தாலும் வேலையில் சேட்டை விடுவதில்லை. இதுவும் பொறியியலாளர்களின் இன்னுமொரு பக்கந்தான். வெள்ளவத்தை தமிழ் சங்கத்திற்கு போகும் போது பாருங்கள் அதன் அருகிலேயே நிமிர்ந்து கம்பீரமாக நிற்கின்றது எமது முதல் குழந்தை. இன்றும் வெள்ளவத்தை போனால் அதனருகில் போகாமல் வருவதில்லை. எப்போதும் முதல் என்பது ஸ்பெஷல் தானே. அடுத்த பதிவில் கட்டடப்பொறியியலாளர்களது வாழ்க்கைத்தெரிவு எவ்வாறிருக்க வேண்டும் என்பது குறித்து அலசுவோம்.
Comments
Post a Comment