Friday, February 15, 2013

கனக்கின்றது மனம்.....


இன்று காலை முதல் இந்நிமிடம் வரை என் மனதில் பாரமாகவே அமைந்துவிட்ட ஒரு விடயத்தினை பகிந்துகொள்ள விரும்புகின்றேன்.
காலையில் கொழும்பு பொறளை – பலவத்தை வீதியில் பேரூந்தில் பயணிக்கும் போது இடம்பெற்றதொரு சம்பவம். நூன் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து ஐந்தாறு வரிசைகளுக்கு முன்பாக ஒரு இளம் பெண் அமர்ந்திருந்தார். தீடீரென நான் ஜன்னலோரம் அமர்ந்து இரசனையிலும் தொலைபேசியில் பாட்டும் கேட்டுக்கொண்டிருந்த போது பெரிய சத்தம் போட்டு ஏதோ கதைத்தார். ஏதோ காசுப் பிரச்சினை போல என்று நினைத்து பழைய படி நானும் பாட்டுக் கேட்கத் தொடங்கிவிட்டேன். பின்னர் அவர் அவரது தந்தையாரிடம் தொலைபேசியில் சொல்லி அழுத போது தான் புரிந்தது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவன் மறைகேடாக நடந்திருக்கின்றான். இந்த பெண் அடித்து விட்டு கூச்சல் போட அவன் இறங்கி போய் விட்டான். ஆனால் அருகிலிருந்த யாரும் அதை கண்டுகொள்ளவில்லை. (நானும் உட்பட பாழாய் போன பாட்டு என்ன வேண்டியிருக்கின்றது எனக்கு)

அவன் ஒரு குற்றவாளியென்றால் சுற்றியிருந்தும் தட்டிக் கேட்காமல் விட்ட நாமெல்லோரும் கூட ஒருவகையில் குற்றவாளிகள் தான். ஒரு ஆண் கூட இருக்கவில்லையா?.  இல்லை சமவுரிமை பேசுகின்ற பெண்கள் இருக்கவில்லையா? நமது தாய்க்கு , சகோதரிக்கு , மகளுக்கு , காதலிக்கு , மனைவிக்கு நிகழ்ந்திருந்தால் சும்மா இருந்திருப்போமா? வெட்கப்பட வேண்டிய தருணங்கள்….
இல்லை தெரியாமத் தான் கேட்கின்றேன்… அதென்ன பேரூந்தில் ஒரு பெண்ணுடன் உரசல் வேண்டியிருக்கின்றது? அப்படியென்ன இன்பம் கண்டுவிடுகின்றீர்கள்? உங்களுக்கு உரசுவதற்குத் தான் எத்தனையோ வழிகள் இருக்கின்றதே.. இரவு விடுதிகள் எத்தனை உண்டு அங்கு போய் உரசிப்பாருங்கள். இல்லை உங்கள் பிறப்பு உண்மையென்றால் உங்கள் அம்மாவிடம் கேளுங்கள்… ஒரு ஆணுக்கு பெருமையே பெண்ணை பாதுகாப்பது தான். எத்தனை பெண்களுடன் உரசினீர்கள் என்பதை பொறுத்து தான் உங்கள் ஆண்மை கணிக்கப்படகிறதா?
இங்கே ஆண்களிடம் மட்டுமல்ல பெண்களிடமும் பிழை இருக்கின்றது. முதல் தடவையிலேயே நீங்கள் தட்டிக் கேட்டிருந்தால் இன்று எவ்வளவோ விடயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். சம உரிமை என்ற பெயரில் ஆடைக்குறைப்புக்கள் , மாலை நேர களியாட்டங்கள் என்று எப்போது படி தாண்டினீர்களோ அன்றே தொடங்கிவிட்டது இவ்வாறான வியாதிகள். பெண்ணியம் என்ற பெயரில் பெண்மைக்கு எதிரியும் நீங்கள் தான்…
அடுத்தது இந்த பாழாய்ப் போன சமூகம். யார் பிழை செய்தாலும் முதல் அடி பெண்ணுக்குத்தான். காலையில் கூட பக்கத்தில் இருந்த ஒன்று சொல்கிறது “ஏன் இந்த பிள்ளை இதை பெரிதாக்குகின்றதென்று?” உங்களுடைய இரத்த உறவுகளுக்கு நடந்தால் இப்படி கேள்வியெழுப்புவீர்களா? இல்லை எல்லோரும் சேர்ந்தாவது தட்டிக் கேட்க நினைத்தீர்களா? ஆறறிவு படைத்த உங்களை விட குறைந்தளவு அறிவுள்ள உயிர்களை பாருங்கள்… அதுகளுக்குள்ள ஒழுக்கங்கள் கூட உங்களிடமில்லை.  மனிதம் எங்கே போகின்றது…?

இந்த கொழும்பிற்கு வந்து நான் படிக்கின்றேனோ இல்லையோ நிறைய விடயங்களுக்கு பயப்படுகின்றேன். எனது ஊரிலெல்லாம் 6 மணிக்கு முதல் வீடு திரும்ப வேண்டும். அல்லது அப்பா அல்லது சகோதரங்களுடன் தான் செல்ல வேண்டும். அன்று ஒரு நண்பி மூலம் அறிந்தேன் இங்கு இரவு விடுதிகள் இயங்குவதாகவும் அங்கு யாரும் யாருடனும் செல்ல முடியும் என்று. இன்னொரு விடயம் அறிந்தேன் “காதல்” என்பது இப்போது வேறு மாதிரியாம். ஒரு பெண்ணுடன் ஒரு ஆணுடன் ஊர் சுற்றி, எல்லாவிடமும் போய் திரியலாமாம். ஆனால் அது திருமணம் முடிப்பதற்கு இல்லையாம். ஆச்சரியமாக உணர்கின்றேன். கூடவே சில அப்பாவிகளும் பாதிப்படைகிறார்கள் என்று கவலையுடன் தட்டிக்கேட்ட முடியவில்லை என்ற இயலாமையும் நெஞ்சை அடைக்கின்றது. 
ஏன் நண்பர்கள் கூறுவது போன்று உலகம் முன்னோக்கி போக நான் தான் பின் தங்கி விட்டேனா? இல்லை என் பாதை சரியாகத் தான் உள்ளதா? ஆயிரம் வினாக்கள் கூடவே காலையில் நானும் சூழ்நிலைக் குற்றவாளியாகி விட்டேன் என்ற மன உளைச்சல்…..



கனக்கின்ற இதயமுடன் மீரா


ஆண் எனப்பிறந்ததை பெருமையாய் கூறுவேன் !
பெண்ணைக்காக்கும் பெருங்கடமை !
எனக்கும் உண்டென்பதால் ......
மீண்டும் மீண்டும் ஆணாய் பிறக்கவேண்டும் !
பெண்மைக்கென்றே மீண்டும் வாழ வேண்டும் !
பெருமையுடன் பாரதி !!!


2 comments:

  1. வணக்கம் மீரா
    ஒரு ஆணாக முதலில் தலை குனிகிறேன்.என் இனத்தை நினைத்து, இன்று எனக்கும் பேருந்தில் ஒரு சம்பவம் நடந்தது எனக்கு இரண்டு வரிசைக்கு முன் ஒரு ஆணும் ,பெண்ணும் அமர்ந்திருந்தார்கள், காதலர்கள் போல அவர்கள் நடந்து கொண்ட முறை ஆணாகிய எனக்கே அருவருப்பை உண்டு பண்ண தொடங்கிவிட்டது,சரி நான்தான் ovar ஆ அலட்டிக்கொள்கிரேனோ என்று யோசித்து அருகே சற்று தள்ளி இருந்த ஒரு 50 வயது மதிக்கத்தக்க அம்மையாரை பார்த்தேன் அவர் இவர்களின் திருவிளையாடல்களை பார்த்து முகத்தை சுளித்துகொண்டிருந்தார் .அப்போது எனக்குள்ளே சில கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன. இவர்கள் தன்னிலை மறந்து ஒரு பொது இடத்தில் இப்படி நடக்க என்ன காரணம் இவர்களின் காதலா அல்லது அதற்கும் மேற்பட்ட எதுவுமா?.சரி ஒரு சராசரி பெண்ணிற்குரிய இயல்பான கூச்சமும் வெட்கவுனர்வும் எங்கே?.இப்போதைய பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்களா?...தனக்கு அருகில் இருக்கும் ஆணை கட்டுப்படுத்தவும் அவள் முயலவில்லை இருவரும் இந்த உலகத்தில் இல்லையா? இப்படி பல கேள்விகள் என்னுள்ளே ஆனால் ஒன்று மட்டும் நன்றாகவே புரிந்தது பெண்களே நீங்கள் சமவுரிமை கேட்கவேண்டியதில்லை,உங்கள் சமவுரிமையை நான் இன்றைக்கு கண்கூடாக பேருந்தில் கண்டேன்
    இதற்கு என்ன சொல்கிறீர்கள் பாரதி

    ReplyDelete
  2. ஒரு பெண்ணாக நானும் இதை கண்டிக்கின்றேன்.அதேவேளை நீங்கள் குறிப்பிட்டது போல் அதென்ன "வெட்கம்" என்பது பெண்ணுக்கு மட்டுமா? ஆணுக்கு இல்லையா ? என நானும் உங்களிடம் ஒரு வினாவை முன்வைக்கின்றேன். இது ஒரு கலாசார சீர்கேடு என கூறுங்கள் சம்மதிக்கின்றேன். ஏன் பெண் கட்டுப்படுத்தவில்லை என கேட்காதீர்கள்....யாருடைய உணர்வுகளையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது அவரவர் சிந்திக்க வேண்டும்
    வெட்கம் , கூச்சம் என்பதெல்லாம் வெறும் சமூதாயம் உருவாக்கியுள்ள பெண்ணுக்கான வேலிகள் என்பது என் அபிப்பிராயம். உணர்வுகள் பால் பார்த்து வேறுபடுவதில்லை.

    ReplyDelete

அதிகம் வாசிக்கபட்டவை