நாம் வேலை செய்யும் இடங்களில் வயதில் மூத்தவர்கள் அல்லது அதிக ஆண்டுகள் பணிபுரிபவர்கள் சில இளசுகளை மட்டந்தட்டுவதைப் பற்றி எனது இந்த வலைப்பூவில் பதியவுள்ளேன்.
பொதுவாக ஒரு குடும்பத்தினை எடுத்தக்கொண்டால் வயதில் மூத்தவர்கள் பிழை செய்யும் சிறியவர்களை தண்டிப்பதும் அன்பால் திருத்துவதும் உண்டு. அவை ஒவ்வொன்றும் “தொற்றுநோய்களுக்கு முன்னரான அம்மாவின் கைமருந்து” போன்று மூத்தவர்களிடமிருந்து இளையவர்களுக்கு கிடைப்பதான அனுபவ பகிர்வுகள். ஏன் வாழ்க்கையிலும் அத்தகையவர்கள் எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள்.; இளையவள் நான் அந்த நிமிடம் கோபப்பட்டாலும் முரண்டு பிடித்தாலும் காலம் கடந்து இன்றும் யோசிக்கும் போது அம் மூத்தவர்கள் எடுத்துக்கொண்ட உரிமைகள் அவர்களது கண்டிப்புக்கள் தங்களை எந்தளவு என்னை செதுக்கியுள்ளதென்பதை உணர்ந்திருக்கின்றேன். ஆனால் இன்று அலுவலகத்தில் பணிபுரியும் போது எனக்கு ஏற்படுகின்ற அனுபவங்கள் என்னை செதுக்கும் உளிகளல்ல பாதத்தினை பதம் பார்க்கும் விஷ முட்கள் என உணர்கின்றேன்.
அலுவலகம் என்று வரும் போது ஏன் இளையவர்களை மட்டந்தட்டுகின்றோம்? எவ்வளவுதான் படித்து பட்டம் பெற்றிருந்தாலும் யாருமே எல்லாவற்றையும் நூறு வீதம் அறிந்து வருவதில்லை. காலங்கள் தான் ஒவ்வொருவரையும் அனுபவஸ்தவராக்குகின்றது. ஏன் இன்று “சீனியர்ஸ்” என்று சொல்லிக்கொள்பவர்களும் ஒரு நாள் “ஜீனியராக” இருந்திருப்பார். அப்படியிருக்கும் போது ஏன் பிழை பிடித்து எமது சிறு குறைகளை பெரிதுபடுத்தி அதிகாரங்களின் விரல் கொண்டு நசுக்குகின்றார்கள். எங்களது மனதில் தினம் ஒருவித பயத்தையும் “என்னால் முடியுமா?” என்ற ஐயத்தினையும் எங்கள் மனதில் தோற்றுவிக்கின்றார்கள்.?
ஒரு வேளை எங்கள் திறமையை கண்டு பயப்படுகின்றார்களோ? என்றும் நினைக்கத் தோன்றுகின்றது. ஆனால் உங்கள் அனுபவர்கள் தான் எம்மை முன்நோக்கி கொண்டு செல்லும் என்ற உண்மையை இளையவர்கள் நாம் மிகவும் உணர்ந்திருக்கின்றோம்.
இனிமேலாவது எம்மைப் புரிந்து கொண்டு எமக்கு களம் அமைத்துத் தாருங்கள். உங்கள் அனுபவம் + எங்கள் திறமை சேரும் போது பல வெற்றிகளை உருவாக்க முடியும் எடின்பதை புரிந்து கொள்ளுங்கள். “ஒரு தாய் தவறி விழுந்த குழந்தையை கைதூக்கி விடுவதால் அவளுடைய தாய் என்ற பதவி பறிபோய்விடுவதில்லை”. “சீனியர்” என்ற ஆயுதம் ஏந்தி தினமொரு போர் தொடுக்காமல் உங்கள் அனுபவ உளியால் எம்மை செதுக்குங்கள். உங்களது செதுக்கல்கள் எங்களை சிற்பங்களாக்குவதுடன் உங்களையும் சிறந்த சிற்பிகளாக்கும்.
பதுங்கியிருந்து பாதையில் முட்களை தூவாமல் தினமொரு பூ கொடுங்கள்….சீனியோரிட்டி (seniority) என்றால் அது தாங்க “சிறந்த சிற்பங்களே சிற்பியின் வெற்றிச்சின்னங்கள்” எனபதை உணருங்கள்.
இது யாரையும் தனிப்பட்ட ரீதியாக புண்படுத்துவதற்காகவோ அல்லது அவர்களை சாடுவதற்காகவோ எழுதப்பட்டதல்ல. தினம் எனது அலுவலகத்தில் பணிபுரிபவர்களினால் என் பாதையில் சந்திக்கும் சம்பவங்களின் வலிகளே ஆயினும் அண்மையில் எனது ஊடகபணியின் நிமிர்த்தமாக பயணத்தினை மேற்கொண்ட போதான எனது கசப்பான அனுபவங்களின் வெளிப்பாடு இவ்வலைப்பூவினை உடன் என் அதிமுக்கிய வேலைப்பளுக்களின் மத்தியிலும் எழுத தூண்டியது. வலிகளை வரிகளில் வடிக்கும் போது ஒருவித ஆற்றுகை ஏற்படுவதாக உணர்கின்றேன்.இதனை வாசிக்கும் உள்ளங்கள் தங்களை திருத்திக்கொண்டு இளையவர்களை தட்டிக்கொடுத்தால் அதுவே எனது எழுத்தின் வெற்றியும் எனது உள்ளத்தில் ஏற்பட்ட வடுவிற்கான மருந்தும் ஆகும்
No comments:
Post a Comment