21.24

26.10.2026 இரவு 9.24 வாழ்வில் மறக்க முடியாதவொரு கணம். பிரசவம் என்பதும் குழந்தையென்பதும் எப்படி வாழ்க்கையின் இனிய தருணமோ அப்படியொரு தருணத்தினை நான் நேற்று கடந்திருக்கின்றேன். கடந்த இரு மாதங்களாக நாடுகள், ஊர்கள் என சுற்றி வருதும் என்னுடைய வேலைப்பளுவின் அழுத்தங்கள், தனிப்பட்ட விடயங்களில் ஏற்பட்ட வலி என எவ்வளவோ இருந்தும் அது நேற்று இந்த குறிப்பிட்ட கணத்திலிருந்து மறைந்து விட்டதாகவே மனது உணர்கின்றது. ஏன் ஐந்து வருட உழைப்பின் பலன் இது. 

என்னுடைய தொழில் முயற்சியாண்மையில் மிகவும் முக்கியமானது நான் நடாத்துகின்ற வைன் உற்பத்தி. இதன் வரலாறு நீண்டது. என்னுடைய அம்மம்மா அதிபராக பணியாற்றிய ஒருவர். இவர் குறிப்பாக பெண்கள் பாடசாலைகள் பலதில் அதிபராக கடமையாற்றியமையால் பல அருட்சகோதரிகளிடம் இவரது நட்பு வட்டம் இருந்திருந்தது. அப்படியானதொரு காலத்தில் தான் ஒரு வெளிநாட்டு அருட்சகோதரியின் வழிகாட்டலில் வைன் தயாரிக்க ஆரம்பித்திருந்தார். அந்த நாட்களில் எம்முடைய வீட்டில் ஈஸ்டர், நத்தார் போன்ற விசேட வைபவங்களின் போது எமது வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட வைன் பரிமாறப்படுவதுண்டு. அம்மம்மாவிடம் இருந்து அம்மா கற்றுக்கொண்டார். அம்மாவின் காலத்தில் வீட்டுப்பாவனைக்கு மட்டுமன்றி குடும்ப நண்பர்களின் நிகழ்விற்கும் எம் வீட்டில் வைன் தயாரிக்கப்படுவதுண்டு. அம்மாவின் அலுவலக ஊழியர்கள் மற்றும் எமது வீட்டின் அயலவர்கள் உட்பட பலரும் வாங்கிச்செல்வார்கள். அம்மாவிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன். 2017 இல் இவ்வாறு மூன்று தலைமுறைகளாக வீட்டில் தயாரிக்கப்படும் வைன் ஏன் பதியப்பட்ட தயாரிப்பாக மாறக்கூடாது என்கின்ற கேள்வி என்னுள் எழுந்திருந்தது. இதனை என் அம்மாவிடமும் கேட்டிருந்தேன். ஆனாலும் எம்முள்ளான கலந்துரையாடல் என்னுடைய உயர் கல்வி, வெளிநாட்டுப் பயணங்களினால் வெறும் கிடப்பிலேயே சில வருடங்கள் இருந்திருந்தது. 2021 இல் என்னால் இது வியாபாரமாகப் பதியப்பட்டது. புதியப்பட்ட அடுத்த வருடமே UNDP எமது நிறுவனத்தினை சுயதொழில் முயற்சியில் ஈடுபடும் இளைஞர்களுக்கான பயிற்சிப்பட்டறைகளில் உள்ளெடுத்து செதுக்க ஆரம்பித்தது. 

வைன் செய்வதொன்றும் அவ்வளவு இலகுவான விடயமல்ல. பழங்களை சுத்தமாக்கி பதப்படுத்தி குறைந்தது ஆறு மாதகாலம் ஊறவைக்க வேண்டும். பின்னர் வடிகட்டி போத்தல்களில் நிரப்பலாம். ஆனால் எவ்வளவு காலம் ஊறவைக்கப்படுகின்றதோ அதற்கமைய அதன் தரம் கூடிக்கொண்டே செல்லும். தரம் கூடும் போது சந்தைப்படுத்தலிலும் விலை அதிகம். 2021 ஆரம்பிக்கப்பட்ட என்னுடைய இரண்டாவது தொழில் இது. 2020 இல் கட்டட நிறுவனத்தினை பதிவுசெய்திருந்தேன். எனவே இது என் இரண்டாவது குழந்தை. முதலில் சிறிதாக ஆரம்பிக்கப்பட்ட இது சிறிது சிறிதாக வளர ஆரம்பித்தது கூடவே இது சார்ந்த பிரச்சினைகளும். இதனை வெளிநாட்டிற்கு அனுப்புவதில் மூன்று வருடங்கள் முட்டி மோதியிருக்கின்றேன். இது குறித்த ஆவணங்களை பெறப்போகும் போது அதிகாரிகள் என்னை பார்க்கும் பார்வை ஏதோ நான் வடிசாராயம் காய்ச்சுவது போன்றிருக்கும். சிலர் லஞ்சம் கேட்டிருக்கின்றார்கள். ஆனால் நாம் ஒன்றை நேர்மையாக அடைய முயலும் போது பிரபஞ்சமே வழியமைக்கும் என நம்புபவள் நான். எனக்கும் பிரபஞ்சம் பலரை வழிகாட்டிகளாக அனுப்பியிருந்தது. பலர் என்னை செதுக்கியிருக்கின்றார்கள். என் குடும்பம் பக்கபலமாக இருந்திருந்தது. 


வைன் தயாரிப்பு அதன் நுணுக்கங்களுடன் நான் முட்டிமோதிக்கொண்டிருந்த காலங்கள் கள்ளு மற்றும் பனம்பழ வைன் என்பன வெளிநாடுகளுக்கு நம் நாட்டில் இருந்து ஏற்றுப்பட ஆரம்பித்தன. எனக்கும் வாய்ப்புகள் கிடைத்திருந்தன. ஒரு ஆண் எனில் அவனுக்கு இலஞ்சம் கொடுக்கும் வழி மட்டும் இருக்கும். ஆனால் அதுவே பெண் எனும் போது அவள் சில நேரங்களில் அஜெஸ்ட்செய்ய அழைக்கப்படுவாள். இதில் அறம் நேர்மை என்று இறுகிய கொள்கைகளுடன் இருப்பவர்கள் எப்போதுமே பின்னுக்குத்தள்ளப்படுவதுண்டு. இங்கு தன் மனைவியை அதிகாரிகளின் படுக்கைக்கு அனுப்பியவர்கள், அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்து முன்னுக்கு சென்றவர்கள், பொதுவிடங்களின் சொந்த துணையின் மார்பை காட்டி வாய்ப்புபெற்றவர்கள் என சிலர் என்னை முந்திக்கொண்டு தானிருந்தார்கள். அறமற்ற வழியில் முன்னுக்கு ஓடுவதை விட நேர்கொண்ட பார்வையுடன் பின்னால் நடந்துசெல்வது நல்லதென எனக்குப்பட்டது. நடந்துகொண்டே அவமானங்களை கடந்திருந்தேன். ஆனால் என் வெற்றிகளுக்கு பின் என் குடும்ப அடையாளமோ, என் உடலோ அல்லது கையூட்டோ இல்லையென என்னால் ஒருவரின் கண்களை சந்தித்துசொல்ல முடிகின்றது.  

பொறியியல் துறை, வடிவமைப்புக்கள் அதன் பளுக்கள் ஒருபக்கம் அழுத்த வைனை ஏற்றுமதிசெய்வதற்கான சுமை என்னை மறுபக்கம் அழுத்தியிருந்தது. பல தூங்கா இரவுகள் என் நாட்களை நிறைத்திருந்தது. என்னுடைய வைன் தயாரிப்பு நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவருமே செவிப்புலனற்றவர்கள். இதன் பளுவும் என்னை சேர்ந்திருந்தது. 2023 USAID எனக்கு இளம் தொழிலதிபர் விருதும் 2024 கைத்தொழில் அமைச்சின் உயரிய விருதும் என்னை வந்தடைந்திருந்தன. சோர்ந்திருந்த எனக்கு இவை பெரும் மனபலத்தினை கொடுத்திருந்தன. 2024 இல் நான் விருதுபெற்ற அதேநாளின் பொழுதில் என் தனிப்பட்ட வாழ்வில் சேறும் பூசப்பட்டிருந்தது. அதில் ஏதோவொன்று உடைந்திருந்தது. அதன் பின்னர் பாரியதொரு சத்திரசிகிச்சை என நிறையவே சந்தித்திருந்தேன். முட்டி மோதி… முட்டி மோதி… விழுந்து எழுந்து…. வாழ்வின் இருண்ட கண்ணீர் நிறைந்த நாட்கள் அவை. 

எமது தயாரிப்பு இரசாயனமற்ற பாரம்பரிய முறையிலானது. அத்துடன் உற்பத்தியினை சந்தைப்படுத்த ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும். என்னதான் நிகழ்ந்தாலும் தரத்தில் கடைசி வரை கைவைப்பதில்லை. சிலநேரங்களில் சுற்றுலாத்தலங்கள் அதிகளவாக கேட்கும் போது கையிருப்பு இல்லையென்றால் இருப்பதனை தரும்படி கெஞ்சுவார்கள். விலையேற்றுவார்கள். ஆனால் எதற்கும் நாம் உடன்படுவதில்லை. தரம் என்பது வாடிக்கையாளர் எம் மீது வைக்கும் நம்பிக்கை. இது உணவுசார் உற்பத்தி. அன்பில், காதலில், உறவுகளில் , உணவில் துரோகம் செய்பவர்கள் மிகவும் கேவலமானவர்கள். அதனை நாம் விரும்புவதில்லை. 

நான் எந்த நாட்டிற்கு போனாலும் அங்குள்ள வைன் தயாரிப்புகளை சுவை பார்க்கவும், தயாரிப்பு நிறுவனங்களை பார்வையிடுவதையும் தவறவிடுவதில்லை. இயந்திரங்கள் மூலமான தயாரிப்புகள் குறித்தும் யோசிக்க ஆரம்பித்திருந்தேன். கடந்த மாதம் உலக வைன் திருவிழா இலங்கையில் நடைபெற்றது. எனக்கு விசேட அழைப்பு வந்திருந்தது. சிலநேரங்களில் நம் குழந்கைளது அறிவுதிறன் குறித்து பிறர் சொல்லும் போது எவ்வாறு மனம் துள்ளுமோ அதேயளவு என் தயாரிப்பு குறித்து பேசும் போதும் அப்படியொரு திருப்தி, குதூகலம் என்னுள் ஏற்பட்டிருந்தது. அந்தவேளை கூட இப்படியெல்லாம் நடக்கும் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. இறைவனின் ஆசீர்வாதத்துடன் 2026.10.26  எமது தயாரிப்பின் 5000 போத்தல்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான வேலைகளை முடித்து இறுதியாக அனைத்தையும் அதிகாரியுடன் கைகுலுக்கும் போது வழமை போன்று என் மணிக்கூட்டை பார்த்தேன் நேரம் அதில் நேரம் 21.24 .என் அருகில் இருந்த என் செயலாளர் எனக்கு சொன்ன வாழ்த்தில் அவ்வளவொரு இது இருந்திருந்தது. “Miss Finally you won the Game” சில வலிகளையும் சில வெற்றிகளையும் சொல்வதற்கு வார்த்தைகள் இருப்பதில்லை. இரு நாட்களாக எடுக்காத பசி இதன் பின்பு தான் எனக்குள் உணரப்பட்டிருந்தது. தலைமுழுகி , உடைமாற்றி நன்றாக சாப்பிட்ட பின் தான் ஒருவித முழுமை என்னை ஆக்கிரமித்திருந்தது. சிறிது நேரத்தில் யாழ்ப்பாணம் புறப்பட்டுவிட்டோம். வரும் வழியில் எனக்கு ஒரு தடவை கூட நித்திரை மயக்கம் வரவில்லை. பாடல்கள், இரவுப்பயணம், ஜில்லென்ற காலநிலை, மனநிறைவு என உணர்வுக்கலவையுடன் இங்கு வந்திறங்கினால் யாழ் மண் என்னை பனிப்பொழிவுடன் அதிகாலையில் வரவேற்கின்றது. 

வாழ்க்கை நமக்கு பல ஏற்ற இறக்கங்களை காட்டும், வலிகளை கொடுக்கும் ஆனால் முயற்சியை மட்டும் விட்டுவிடாதீர்கள். ஒருவன் முயலவில்லை என்றால் அவன் வாழ்வில் நகரவில்லை என்றால் அவன் வெறும் சவம் மட்டுமே. ஆனால் நேர்மையுடன் , நேர்கொண்ட பார்வையுடன் முயலுங்கள் அந்த வானம் ஒரு நாள் நம் வசப்படும். இன்னும் ஒரு வருடத்தில் நீங்கள் என் மட்டக்களப்பு மண்ணை நோக்கி பயணக்கும் போது அதன் வாயில் எல்லையில் எமது தொழிற்சாலை பிரமாண்டமாக நிற்கும். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இதன் வடிவமைப்பு கூட என்னால் வரையப்பட்டிருக்கும். அதன் உச்சியில் RBW என்று எழுதியிருக்கும்.  அதேபோன்று நான் விதைத்திருக்கும் விதைகளுக்கு என்னவர் வேலியாக எப்போதும் இருப்பார் என நம்புகின்றேன். எம் குழந்தைகள் இதை விருட்சமாக்குவார்கள். உங்களை, அறத்தை ,இறைவனை , இயற்கையை  நம்புங்கள்.... முயலுங்கள்....

TRY & TRY, ONE DAY YOU CAN FLY! 

அம்மா உங்கள் மகள் எப்போதுமே WARRIOR!    

No comments:

Post a Comment

பதிவுகள்

21.24

26.10.2026 இரவு 9.24 வாழ்வில் மறக்க முடியாதவொரு கணம். பிரசவம் என்பதும் குழந்தையென்பதும் எப்படி வாழ்க்கையின் இனிய தருணமோ அப்படியொரு தருணத்தின...

அதிகம் பார்க்கப்பட்டவை