நினைவுகள்!

நேற்று நண்பர்களுடன் உலக அதிசயங்கள் பற்றியும் எம்முடைய கலந்துரையாடலில் பேசப்பட்டது. உலக அதியசங்களில் தொடங்கிய அலசல் அப்படியே ஐஸ்வர்யா ராய்க்குத் தாவி பிறகு ஜீன்ஸ் படத்திற்கு தவ்வியது. ஜீன்ஸ் படத்தில் பிரசாந் - ஐஸ்வர்யா காதல் பற்றி பேசத் தொடங்கியது பின்னர் ஐஸ்வர்யா இப்படத்தில் பிரசாந் வீசிய பொருட்களை சேகரித்து வைத்திருந்தது தொடர்பில் வந்து நின்றது. இப்படியெல்லாம் நாம் விரும்பும் ஒருவருடைய பொருட்களை பொறுக்கியெல்லாம் சேர்க்க முடியுமா என்கின்ற விவாதமும் எழுந்தது. இந்த விவாதம் முடியும் போது எனக்குள்ளும் பல நினைவுகள் கடக்காமல் இல்லை. 

ஒரு காலத்தில் என்னுடைய ஆள் பற்றி அறிவதற்கும் அவரது பொருட்களை பொறுக்கிக் கொண்டுவந்து என்னிடம் தருவதற்கும் என ஒரு இரகசிய குழு இருந்தது. இந்த ஆளின் தொலைபேசி இலக்கம் கூட இந்த குழு தான் ஆராய்ந்து தந்திருந்தது. ஆனால் எடுத்துக் கதைப்பதற்கும் அறிமுகம் செய்து கொள்வதற்கும் ஒருவித தயக்கம் இருந்திருந்தது. இதனை தனியே தயக்கம் என்று மட்டும் சொல்லிடவும் முடியாது. சில தடைகள், பொறுப்புக்கள் அது குறித்த தெளிவின்மை, அந்தப்பக்கம் என் மீது இதே உணர்வு இருக்கின்றதா என அறிந்துகொள்ள முடியாமையால் ஏற்பட்டிருந்த குழப்பம் என பல உணர்வு, உணர்ச்சி சிக்கல்கள் கலந்திருந்தன. ஆனால் எப்போதெல்லாம் குரலை கேட்கவேண்டும் என்று நினைக்கின்றேனோ அப்போதெல்லாம் அழைப்பெடுத்துவிட்டு அந்தப்பக்கம் வெறும் ஹலோவை மட்டும் கேட்டுவிட்டு பல தடவை அழைப்பினை துண்டித்திருந்த அதிதைரியசாலிப்பெண் நான். அக்காலத்தில் வெளிநாட்டுப் பயணங்களின் போதும் இவ்வாறு பொதுத்தொலைபேசிகளில் இருந்து அழைப்பெடுத்து குரலை மட்டும் கேட்டுவிட்டு துண்டித்திருக்கின்றேன். இதை விட முக்கியம் அரும்பொருட்சேகரிப்பு. கைக்குட்டை, பாவித்த பேனா , பென்சில்கள், கையிலிருந்து வீசப்பட்ட பில்கள், நோட்புக் தாள்கள் ( அதில் என்ன கிறுக்கியிருந்தது என வாசித்து விளங்கிக்கொள்வதற்கு மாதக்கணக்கான பொறுமை, புராதன எழுத்துக்களை வாசிக்கும் கலையறிவு எல்லாம் எனக்கு வாய்த்திருந்தது என்பதனை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.) என பல குப்பைப் பொருட்களை ஆட்கள் வைத்து சேகரித்திருந்தேன். அதே போன்று பாடசாலைக்கால புகைப்படங்கள், பல்கலைக்கழக புகைப்படங்கள் என அதுவும் நிறைய சேகரிக்கப்பட்டிருந்தது. அதிலும் பாடசாலை பாடகர் குழுவில் ஏனைய மாணவர்களுக்கு மத்தியில் வாக்குக்கண் மாதிரி பார்த்தபடி நிற்கும் அந்தப்படம் இன்றும் நினைவில் இருக்கின்றது. பல்கலைக்கழக காலத்தில் ஒல்லிக்குச்சியாக இருக்கும் புகைப்படங்கள், அரும்பு மீசையுடனான புகைப்படங்கள் என ஆல்பம் ஒன்றே தயாரிக்கப்பட்டிருந்தது. இதற்கு நான் என்னுடைய உளவாளி குழுவிற்கு கொடுத்த KFC சிக்கன்களும் திரைப்படம் பார்ப்பதற்காக எடுத்த டிக்கட்டுக்களும் ஏராளம். ஆனால் எனக்குள் மிகப்பெரியதொரு குறை இருந்தது. பொதுவாக வீட்டில் அண்ணாவின், தம்பியின் டீசேட்டெல்லாம் அடிக்கடி எடுத்து நான் உடுத்துவதுண்டு. இப்படி உடுத்துவது ஒன்றும் குரங்கு சேட்டை பண்ணுவதற்கோ அல்லது என்னிடம் டீசேட் இல்லை என்பதற்காகவோ அல்ல. அவர்களது டீசேட்டுக்களை உடுத்தும் போது அதில் அவர்களது வாசனை இருக்கும். அதில் அன்பும், நெருக்கமும் கலந்திருக்கும். ஆனால் கடைசி வரை என்னவனின் ஒரு டீசேட்டை தானும் என்னால் களவெடுக்கவோ அல்லது என்னுடைய உளவாளிகளால் களவெக்கவோ முடிந்திருக்கவில்லை என்பது எம்முடைய வரலாற்றுத் தோல்வி தான். 

எனக்கு இப்போதுள்ள இளவயதினரின் சமூக ஊடக காதல்களையும், பலருடனான தொடர்புகளையும் அறியும் போது பெரிய ஆச்சர்யமாக இருக்கின்றது. ஏன் கண்டதும் காதல் கொண்டது கோலம் என்று ஓடுகின்றார்கள் என்றும் கேள்விகள் பலவுண்டு. இந்தக்காலத்தில் இப்படியெல்லாம் குறிப்பிட்ட ஒருவரை குறித்து தேடுகின்றார்களா? ஆழமாக நேசிக்கின்றார்களா? என்றும் புரிவதில்லை. 
 
என்னுடைய நண்பியொருத்திக்கு பல பேருடன் நட்பிருந்தது. எந்நேரமும் போனும் கையுமாக திரிவாள். ஒரு நாள் நான் இது பற்றி கேட்டதற்கு “அதெல்லாம் அந்தக்காலம். இந்தக்காலத்தில் பலருடன் பழக வேண்டும். யாருடன் செட்டாகின்றதோ அவர்களுடன் கல்யாணம் செய்தால் போதும். பெண்கள் எப்போதும் நாம் அவர்களுக்காக உருகுவதைக் காட்டக்கூடாது. காட்டினால் நம்மை இளக்காரமாக நினைப்பார்கள்” என்பாள். அவர்கள் வாங்கித்தரும் எதனையும் தன்னிடம் வைத்துக்கொள்ளவோ சின்னச்சின்ன பொருட்களை சேகரிக்கவோ மாட்டாள். அதனை பெரிதாகவும் எடுத்துக்கொள்ள மாட்டாள். எனக்கும் இது குறித்த நீண்ட அறிவுரைகளை கொடுப்பாள். என் வீட்டில் திருமணப் பேச்சுவார்த்தை ஆரம்பித்த போது இதனை விட்டுத்தள்ளிவிட்டு வலிய வரும் நல்ல வாழ்க்கைக்கு சரி சொல்லி கல்யாணத்தை கட்டிக்கொண்டு வெளிநாடு போய்விடு தாயே என்று எனக்கு அறிவுரை வழங்கியவளும் இவள் தான்.   நானறிந்து என் அம்மாவும் அப்பாவின் பல நினைவுகளை பொருட்களாக சேகரித்து வைத்திருப்பார். கேட்டால் இதில் உள்ள அன்பும் ஈர்ப்பும் விரும்புபவர்கள் தவிர்ந்த ஏனையவர்களுக்கு விளங்காது என்பார். நாம் ஒருவரை மட்டும் நேசித்தால் இதில் வெட்கப்பட என்ன இருக்கின்றது அல்லது வெளிப்படையாக சொல்வதற்கு என்ன இருக்கின்றது என்பார்.  அவரவர் நியாயம் அவரவர்க்கு. 

சரி பழையபடி படத்திற்கே வருவோம். இரவு Bethlehem kudumba Unit படம் பார்த்தேன். அதிலும் அப்படித்தான். ஆனால் ஜீன்ஸ் இலும் Bethlehem kudumba Unit இலும் சினிமா தானே...  எனவே காதல் சேர்ந்து விடுகின்றது. ஆனால் நிஜ வாழ்க்கை அப்படியா? நூற்றுக்குத் தொன்னூறு வீதமான காதல்கள் சேர்வதேயில்லை. அப்படியிருக்கும் போது நாம் கஸ்டப்பட்டு சேர்த்த பொருட்களை என்ன செய்வது? ஒரு நிரந்தரப்பிரிவு ஏற்பட்டால் அல்லது இன்னொரு வாழ்க்கைக்குள் போக வேண்டி வந்தால் என்ன செய்வது என நீங்கள் என்னிடம் கேட்க நினைக்கலாம். கடற்கரைக்கு போங்கள்…. நன்றாக மனம் விட்டு அழுங்கள்…. அப்படியே கண்ணைத் துடைத்துவிட்டு நீங்கள் சேகரித்த பொருட்களை கடற்கரையில் வீசி விடுங்கள். வீசிய பின் ஒரு வினாடி கூட நிற்காதீர்கள், கடலை திரும்பி பார்க்காதீர்கள். விறுவிறுரென்று நடந்து வந்துவிடுங்கள். ஏனென்றால் கடலலைகள் நம் நினைவுகள் போன்று வீசியவற்றினை திரும்ப எம் காலடியில் அலை வடிவில் கொண்டுவர கூடும். நம்மை நேசிக்காத, மதிக்காதவர்களது நினைவுகள் , பொருட்கள் கூட தேவையில்லை. உங்களவர்களது பொருட்களை நீங்கள் வீசும் போது வலிக்கின்ற வலி தான் உயிர் வலியாகவிருக்கும். ஆனால் கடந்தாகத்தான் வேண்டும். ஏனென்றால் இது (நினைவுகளுடனான) வாழ்க்கை.

நூற்றில் பத்து வீதமாக உங்கள் காதல் சேர்ந்தால் உங்களவர்களது தோளில் அல்லது நெஞ்சில் சாய்ந்தபடி அவருக்குத் தெரியாமல் அவரிடமே திருடிய பொருட்களை, பொறுக்கிய பொருட்களை, புகைப்பட சேமிப்புக்களை காட்டுங்கள். அதிகாலையின் சாரலை, முகத்தில் படுகின்ற மழைத்துளியின் மென்மையை, மல்லிகையின் வாசத்தை அல்லது நமக்காக எழுதப்பட்ட கவிதையின் வரிகளை அதில் உணரக்கூடும் என நான் நினைக்கின்றேன்.  

Coffee With Love!

கடந்த சில தினங்களாக உலக மனநல தினத்தினை ஒட்டி பல நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான தனியார் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதற்காக எம்மை தொடர்புகொள்வதுண்டு. எமது குழுவில் பெண் புகைப்படபிடிப்பாளர்கள், தொகுப்பாளர்கள் என இதற்கென்றே ஒரு குழுவிருக்கின்றது. உலகின் எந்த மூலையில் நானிருந்தாலும் இந்தவிடத்திற்கு போங்கள், இவ்வாறான படங்கள் மற்றும் ஒளிப்பதிவுகளை மேற்கொள்ளுங்கள் என ஒரு வார்த்தை சொன்னால் போதும் எள் எனும் முன் எண்ணெய்யாக நிற்கும் எனது குழு. நிகழ்வுகள் நடக்கும் போது நான் அப்பிரதேசங்களில் இருந்தால் அந்நிகழ்வுகளில் கலந்துகொள்வதுண்டு. அப்படித்தான் நேற்றும் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்திருந்தது. இதில் நீண்ட காலத்தின் பின்னர் மனநிலை வைத்தியர் கணேஷ் அவர்களையும் சந்திக்கும் தருணம் நீண்ட காலத்தின் பின் கிடைத்திருந்தது.

என்னுடைய பல்கலைக்கழக காலத்தில் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பிலான உளவியல் சமூக பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காக அணுகிய இருவரில் இவரும் ஒருவர். மற்றவர் வைத்தியர் சிவதாஸ். இருவருமே போரியல் வடுக்கள், இழப்புகளை சந்தித்தவர்களது மனநிலை, எதிர்பார்ப்புக்கள் குறித்து நன்றாக விளக்கமளிப்பவர்கள். பல நேர்காணல்கள், ஆய்வுகளுக்கும் இவர்களை அணுகியிருக்கின்றேன். நேற்றும் நிகழ்வினைத்தாண்டி வைத்தியர் கணேஷ் அவர்களுடன் கதைக்க கிடைத்திருந்தது. நிகழ்வின் போது வளவாளரால் “ஒரு நேரமாவது குடும்பத்துடன் உணவருந்துவது நல்லது. ஏன் என்று நினைக்கின்றீர்கள்….?” என வினவப்பட்டத்திலிருந்து எமது உரையாடல் அமைந்திருந்தது. “அன்றைய நாளின் நிகழ்வுகளை பகிர்வதற்கும், ஒருவர் மற்றையவருடைய உணர்வுகளை புரிவதற்கும் , வெளிப்படையாக பேசுவதற்கும் இந்த உணவருந்தும் நேரம் உகந்தது” என பெரும்பாலானோர் பதிலளித்திருந்தனர். 

இதே வினா சில தினங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சியின் போதும் வேறுவிதமாக கேட்கப்பட்டிருந்தது. அதாவது “எத்தனை பேர் ஒருவேளையாவது குடும்பத்துடன் உணவருந்துகின்றீர்கள்?” என அவ்வினா அமைந்திருந்தது. ஏறத்தாழ 20 பேர் அமர்ந்திருந்த அந்த மண்டபத்தில் மூவர் மட்டுமே நானுட்பட கையுயர்த்தினோம்.  சிலர் அதற்கு எங்கே நேரம் என்றார்கள். ஏனையவர்கள் சில வருடங்களுக்கு முன் என்றார்கள். சிலர் பதிலளிக்கவேயில்லை. நீங்கள் இதனை உங்களுக்குள் அல்லது உங்கள் குடும்பத்தினரை கருத்தில் கொண்டு கேட்டுப்பார்த்துள்ளீர்களா? 

நாம் பல தருணங்களில் உணவு உண்ணுதல் என்பதை கடமையாக அல்லது அன்றாட தேவையாகத்தான் பார்க்கின்றோம். இந்த உணவு எப்படி எம்முடைய மேசையில் எமக்கான தட்டில் வந்தது என்பதை மறந்தே விடுகின்றோம். வீடுகளில் உங்கள் முன்னுள்ள ஒவ்வொரு சோற்றுப்பருக்கைகளிலும் இருக்கின்ற உழைப்பையும் இவ்வுணவை தயாரிப்பதற்கு பின்னுள்ள அன்பையும் பெரிதாக கொள்வதேயில்லை. சில உணவுத்தட்டுகளில் அரசியலும் இருக்கும் இதனை பற்றி இறுதியில் சொல்கின்றேன்.

நமது பாரம்பரிய நிகழ்வுகள், சடங்குகள், வைபவங்களை நினைத்துப்பாருங்கள். ஒவ்வொன்றிலும் பலகாரங்கள், மூலிகைகள், சோறு என உணவின்றி அமைந்திருக்காது. ஏன் நாம் ஏதாவது கஷ்டம் வந்தால் கடவுளுக்கு மனதுக்குள் வைக்குள் நேத்திகளில் “பொங்கல் வைப்போம் சாமி” என்பதும் ஒன்று தானே… அதே அந்தோனியாருக்கு என்றால் பணீஸ் தருவதாக வேண்டிக்கொள்வோம் அவ்வளவு தான். குடும்பமாக சமைத்தல் அல்லது ஊர் கூடி சமைத்தல், படைத்தல், சாப்பிடுதல் எல்லாம் ஏன் என்று நினைக்கின்றீர்கள்? ஒற்றுமையையும் அன்பையும் காட்டுவதற்கு சாப்பாட்டையும் சேர்ந்து அருந்துதலையும் விட வேறொரு தளம் இருக்கென்று நினைக்கின்றீர்களா? 

எவ்வளது பெரிய எதிரியாகவிருந்தாலும் துரோகியாக இருந்தாலும் ஒரு மேசைக்கு அழைத்து சேர்ந்து சாப்பிட்டு பாருங்கள் சாப்பாடு தொண்டைக்குழியில் இருங்கும் போது அதனுடன் சேர்ந்து நம் கோபங்களின் சதவீதமும் இறங்கியிருக்கும். இதனை ஒருவரை வசப்படுத்துவதற்கும் செய்யலாம். ஆனால் சாப்பிட்ட பின் அவர் எமக்கு பக்கபலமாக இருந்தால் அவரை சமூகம் “நக்குண்டான் நாவிழந்தான்” என்று சொல்ல வேண்டியிருக்கும். 

குடும்ப சண்டைகளிலும் பாருங்கள் “உன் வீட்டில் இனி பச்ச தண்ணி தானும் குடிக்க மாட்டேன்” என்று எத்தனை சவால்கள் விடப்பட்டிருக்கும். சண்டை போட்ட பின் நம்மைத்தாளிப்பதற்கு எத்தனை பேர் சொக்லேட் தந்த சம்பவங்கள் இருக்கின்றன. நன்றாக நினைவிலிருத்துங்கள் சாப்பாடென்பது வெறும் உணவுக்குழாய் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. இது இதய குழாய்களுக்கான இணைப்பும் கூட. 

உங்கள் அன்புக்குறியவர்கள் அருகில் அமர்ந்து சாப்பிடும் போது அவர்களுக்கு உணவினை பரிமாறிப்பாருங்கள். அவர்களுக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்பது உங்களுக்கு புரியும், அவர்களுக்காக உங்களை மட்டுமல்ல உப்பினளவினைக்கூட மாற்றிக்கொள்வீர்கள். இன்னும் ஒருபடி மேலே போய் ஒரு கவளம் உணவை ஊட்டிப்பாருங்கள். அன்பென்பது வேறில்லை… 

சரி சோத்தரசியல் பற்றி பார்ப்போமா? எனக்கு உப்புமா , பாயாசம் என்றால் மிகப்பிடிக்கும். அதிலும் இந்த உப்புமாவை கறி, சீனி, ஜாம், கிழங்குச்சீவல் என விதம்விதமான கெம்பினேசனுடன் சாப்பிடுபவள் நான். ஆனால் எங்கள் வீட்டு ஹிட்லருக்கு இது பிடிக்காது. எனக்கும் சமையலில் இது இரண்டும் மட்டும் பதமாக வருவதில்லை. ஒன்றில் உப்புமா களி மாதிரி வரும் அல்லது தீய்ந்து போகும். அதே போன்று தான் பாயாசம் ரசம் மாதிரி லொடலொட என்றிருக்கும் அல்லது சீனிப்பாகு போலாகிவிடும். எனவே தான் இவரிடம் “செய்து தாருங்கள் அம்மா” என்று கெஞ்ச வேண்டியிருக்கும். ஆனால் கேர்ணல் இலகுவில் அசையமாட்டார். ஆனால் என்றாவது நாம் கேட்காமலே இது இரண்டும் எம் சாப்பாட்டு மேசையில் இருக்கின்றதென்றால் அதற்கு பின்னால் “மகள் ஒரு கல்யாண வீட்டிற்கு போகனும் என்னுடன் வாருங்கள்….” “அந்த வீட்டுப்பிள்ளைக்கு கட்டுரையொன்று எழுத வேணுமாம்…” “ என்ட ப்ரெண்ட மகனுக்கு கணக்குல கொஞ்சம் சந்தேகம் இருக்காம் ஒருக்கா அங்க போய்ட்டு வருவமா…” “அலுவலகத்தில் சரஸ்வதி பூசைக்கு கோலம் போடனும்….” என்பன போன்ற எனக்குப்பிடிக்காத ஊர் வேலைகள் இருக்கும். எனவே எனக்குத்தெரியும் இந்த உப்புமா , பாயாசத்தில் உள்ள “ஊர் அரசியல்”. அதே போல் இருவருக்குமிடையில் ஏதாவது மோதல் என்றாலும் இவை இருக்கும் என்னை சமாளிப்பதற்காக…. நானும் இதில் சறுக்கி சண்டைகளை மறந்து பாயாசத்தில் விழுந்த கொசு போல ஆகிவிடுவதுண்டு.  சிறுவயதிலும் இதைச்செய்தால் மிட்டாய் தருவேன் என்றும், முத்தத்திற்கு இனிப்புகள் உண்டென்றும் இலஞ்சம் ஆரம்பித்திருப்பதும் இந்த உணவில் தான். உங்கள் வீட்டிலும் நிச்சயம் எங்காவது சோத்தரசியல் ஒளிந்திருந்திருக்குமே…? 

ஏன் நீங்களோ நானோ இறந்த பின் கூட உணவு படையல் வைத்து ஊர், சுற்றம் கூட உண்பது மனக்கவலையை போக்கத்தான். உணவு என்பது உடலுக்கு மட்டுமானதல்ல அது மனதிற்குமானதும். “கண்ணா லட்டு தின்ன ஆசையா?” “Coffee with…” போன்ற விளம்பரங்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் வெற்றிக்குப் பின்னால் கூட இருப்பதுவும் இது தானே. அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி உலகில் பல இலட்சக்கணக்கானவர்கள் தம்முடன் கதைக்க கூட ஆளில்லாமல் தனிமையில் இருப்பதாகவும் இதனால் உளநலம் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு Cadbury நிறுவனம் கூட தன்னுடைய சொக்லேட் கவரில் எழுத்துக்களை நீக்கி இந்த எழுத்தற்ற சொக்கலேட்டுக்களை மற்றவர்களுக்கு கொடுக்கும் போது வார்த்தைகளை பேசி அன்பை பரிமாற இவ் உத்தியை கையாள்வது உங்களுக்கு தெரியுமா? தேடிப்பாருங்கள். 

அண்மையில் ஒரு நண்பர் “எனக்கு கோப்பி கூட போடத்தெரியாது. முதல் அம்மா இப்போ மனைவி தான் போடுறவ…” என்றார். உண்மையில் வாழ்வில் பாதியை தொலைத்தவர் இவர் என்று தான் நினைக்கின்றேன். அதிகாலையில் மெல்லிய குளிரில் சூடாக கோப்பி போட்டு எடுத்துக்கொண்டு நமக்குப்பிடித்தவர்களை நித்திரையில் இருந்து எழுப்பி முடிந்தால் ( முடிந்தால் என்ன கட்டாயமாக) நெற்றியில் முத்தமிட்டபடி கையில் கோப்பையை கொடுத்துப்பாருங்கள். அதுவொரு அலாதியான உணர்வு நண்பர்களே… இதெல்லாம் சொல்வதை விட அனுபவித்தால் தான் புரியும். 

உங்கள் உணவில் உப்பு காரம் மட்டுமல்ல நிறைய அன்பும் தூவப்பட்டுள்ளது. அதே தான் அன்பானவர்கள் உங்களுக்கு நீட்டும் ஒரு கோப்பை கோப்பியில் பால், சீனியுடன் கொஞ்சம் லவ்வும் கலந்துள்ளது என்பதை மறக்காதீர்கள். உங்கள் அன்புக்குறியவர்களும் உங்களுக்கும் இடையில் ஏதாவது சிறு கோபம் அல்லது தவறான புரிதல் அல்லது மனவருத்தம் இருந்தால் உங்கள் ஈகோவை விட்டு சாப்பாட்டு மேசைக்கு கூப்பிட்டு வெறுமனே இருத்துக்கள். நீங்கள் ஒரு வார்த்தை கூட கதைக்காவிட்டாலும் பரவாயில்லை. மௌனமாகவே சாப்பிடுங்கள். ஆனால் சாப்பி;ட்ட பின் கைகழுவும் போது மனதில் உள்ள கோபம், வருத்தம், வலி என ஏதோவொன்றும் கழுவப்படுவதை நீங்கள் உணர்வீர்கள். ஆனால் இன்றெல்லாம் யார் யாரை அழைத்து அருகில் இருத்துவது என்பது தான் பிரச்சினையே. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் உணவில் எப்போதும் காரம் மட்டுமல்ல காதலும் தூவப்பட்டிருக்கும்.  

அதிலும் ஒருநேரமாவது நமக்குப் பிடித்தவர்களுக்காக காத்திருந்து சாப்பிடுவது  கோபம் வந்தாலும் , சண்டை போட்டே பேசாமல் இருந்தாலும்  நீ சாப்பிட்டால் தான் நான் சாப்பிடுவேன் என செல்லமாக அடம்பிடிப்பது , சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது தன் துணைக்கு அல்லது குழந்தைகளுக்கு ஒரு கவளம் ஊட்டிவிடுவது,  தேவையானதை பார்த்துப் பரிமாறுவது எல்லாம் பேரன்பில் அடங்கும். 

எனக்கும்  “நீ சாப்பிட்டாயா?” என்பதிலும் அருகிலிருந்து என்னுடன் பேசியபடியே உண்ணும் அந்த அருகாமையிலும் புரையேறும் போது தலையில் செல்லமாக குட்டுவதிலும் இன்னும் அதிகாலையில் கோப்பி நுரை படிந்த உதடுகளால் தரப்படும் முத்தத்திலும் தான் காதல் என்பது நிறைந்திருப்பதாக மனதிற்குபடுகின்றது. சேர்ந்துண்ணுங்கள். உலகமென்பது பெருவெளி. கொண்டாடவும் நினைவில் சேர்த்து வைக்கவும் நிறையவிருக்கின்றன

நான் யாழ்ப்பாணம்


அண்மையில் பயிற்சியொன்றில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைத்தது. இப்பயிற்சியின் நான்கு நாட்களில் இதன் பயிற்றுவிப்பாளராக கலந்துகொண்டொருவர் “யாழ்ப்பாணம்” எனும் சொல்லை பயன்படுத்தியதை மனதுள் எண்ணிக்கணக்குப்பார்த்தேன். நான்கு நாட்கள் நிகழ்வில் 53 தடவைகள் இதனை உச்சரித்திருந்தார். “நான் யாழ்ப்பாணம்” “எங்கட யாழ்ப்பாணத்தில்” “யாழ்ப்பாண பக்கம்…” “யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பை போன்று காணி உள்ளது” “யாழ்ப்பாண செம்மணியில்….” என்று ஏகத்திற்கு ஏதோவொன்றில் விக்கிரமாதித்தன் முதுகில் வேதாளம் போன்று தன் உரையில் இதனை அடிக்கடி எடுத்துவிட்டார். எனக்குள் இன்னும் இருக்கின்றதொரு கேள்வி “யாழ்ப்பாணம்” என்ற பெயரை தவிர்த்து உங்களுக்கு அடையாளம் இல்லையா என்பது தான்… இது இங்கு மட்டுமல்ல அநேக இடங்களில் நான் அவதானித்திருக்கின்றேன்.

கடந்த மாதம் எமது நிறுவனத்திற்கான நேர்முகத்தேர்விற்கு சிலர் வந்திருந்தார்கள். அதில் ஒரு கேள்வியாக “ ஏன் இந்த பதவிக்கு நீங்கள் பொருத்தம் என நினைக்கின்றீர்கள்?” எனும் வினாவும் அமைந்திருந்தது. வந்திருந்தவர்களில் சிலர் தாம் கற்றவிடயங்கள் திறன் விருத்தியை குறிப்பிட்டு இதற்கு தான் பொருத்தம் என்றார்கள். ஒரு சிலர் தாம் படித்து வேலையன்றி இருப்பதால் இப்பதவி கிடைக்கும் போது தான் உத்வேகத்துடனும் உண்மையுடன் நடப்போம் என்றார்கள். ஆனால் மூவர் மட்டும் “ நான் யாழ்ப்பாணத்திலிருந்து வருகின்றேன்” “யாழ்ப்பாணம் …… இல் தான் இருக்கின்றேன்” “நான் பிறந்தது யாழ்ப்பாணம் இப்போது கொழும்பில்….” என்று ஆரம்பித்தார்கள். நேர்முகம் முடிந்த பின் சுயவிபரங்களை பார்த்ததில் இந்த மூவர் மட்டும் தான் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருந்தார்கள். மூவருமே தம் ஊரை தான் மேற்கோள் காட்டியிருந்தார்கள். ஏறத்தாழ 23 பேர் பங்குபற்றிய இந்நேர்முகத்தேர்வில் ஏனைய மாவட்டங்கள் , ஊர்களில் இருந்து வந்த எவரும் தம்முடைய ஊரைப்பற்றி வினாக்களுக்கு விடையளிக்கும் போது எதுவுமே சொல்லியிருக்கவில்லை.

நேற்றைய சம்பவமொன்று. குறிப்பிட்ட நபர் ஒருவர் மட்டக்களப்பில் பிறந்தவர் என்பது மிகத்தெளிவு. இவரது ஆளுமை பற்றி பேசும் போது, “ இவரது அம்மா யாழ்ப்பாணம், அது தான் இந்த மூளை…” என அருகிலிருந்தவர் விமர்சித்திருந்தார். அப்போது யாழ் - மட்டக்களப்பு கலப்பு பெற்றோருக்கு பிறந்த அனைவரும் அறிவுடையவர்களாகவும் ஆளுமையாகவும் இருக்க வேண்டுமே…? அதெப்படி அம்மா யாழ்ப்பாணம் என்றால் அப்பா மட்டக்களப்பு தானே. அப்படியென்றால் தந்தையின் ஆளுமையும் அந்த நபருக்கு வந்திருக்கலாம் தானே…. அதனை விடவும் முக்கியம் இவரின் அம்மா அடுப்படியைக்கூட தாண்டாதவர்.

இவ்வருட ஆரம்பத்தில் மாநாடொன்றிற்கு சென்றிருந்தேன். அங்கு நண்பர்களுடன் சேர்ந்து உணவருந்தும் போது அதில் ஒருவர் “ இந்த குழம்பு யாழ்ப்பாண தூள் போல இருக்கு. நல்ல வாசனை, அங்கிருந்து தான் வாங்குகின்றார்கள் போல…” என்றார். எனக்கு சிரித்ததில் புரையேறிவிட்டது. காய்ந்த கொச்சிக்காய், மல்லி, மிளகு, சீரகம், கருவேப்பிலை இருந்தாலே போதும் கொச்சிக்காய் தூள் இடிப்பதற்கு. இதில் சேர்க்கும் பொருட்களின் அளவு தான் ஒவ்வொரு வீட்டிற்கும் மாறுபடுகின்றதே தவிர ஒரு பிரதேசத்தில் பௌதீகவியல் அமைப்பிற்கும் அதன் கொச்சிக்காய் தூளிற்கும் என்ன சம்பந்தம் இருந்துவிடப்போகின்றது? 

இன்னுமொன்றும் இங்கு சொல்லியே ஆகவேண்டும். கொஞ்ச காலமாக “யாழ்ப்பாண உணவுத்திருவிழாக்கள்” நடைபெற்று வருகின்றன. பொதுவில் கிழக்கு மக்கள் உணவு தயாரிப்பதிலும் விருந்தினரை வரவேற்பதிலும் முன்னிலை வகிப்பவர்கள் என சொல்லப்படுகின்றது. இவ்வாறு வீட்டுக்கு வந்தவர்களை உபசரிக்க அவர்கள் அந்த உபசரிப்பில் வீட்டிலேயே தங்கிவிட “பாயோடு ஒட்டவைக்கும் மட்டக்களப்பார்” எனும் அவப்பெயரையும் வாங்கிக்கொண்டவர்கள். இதனை சொந்த காசில் சோறு கொடுத்து தமக்குத்தானே அவப்பெயர் எடுக்குமளவு சூனியம் வைத்தவர்கள் என்றும் சொல்லலாம். கதை பரம்பரை பரம்பரையாக இப்படியிருக்க யாழ்ப்பாணத்தாக்கள் இன்று தம்முடைய ஊர் பெயரில் உணவுத்திருவிழா செய்வதையோ எவ்வாறு எடுத்துக்கொள்வது? 

திருமண நிச்சயார்த்தங்களில் கூட “அவன் யாழ்ப்பாணத்து பொடியன்…நிறைய கொடுக்க வேண்டும்” “அந்த பிள்ளைக்கு யாழ்ப்பாணப்பொடியனை பேசியிருக்கு. கொடுப்பதற்கு நல்ல வசதியிருக்கு தானே” என்பனவும் என் காதுகளில் அடிக்கடி அடிபடுவதுண்டு. இல்லை தெரியாமல் தான் கேட்கின்றேன். ஏனைய பொடியன்களை விட யாழ்ப்பாண பொடியன்களுக்கு ஏதாவது உள்ளுக்குள்ள தங்கத்தில் இருக்கின்றதா என்ன?

நண்பியொருவருக்கு வரன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நண்பி மருத்துவராக பணியாற்றுகின்றாள். என்ன தொழில்? வயது என்பது குறித்து பேசும் போது “பொடியனுக்கு கொஞ்சம் வயசு கூட, ஹொட்டலில் தான் வேலை ஆனா யாழ்ப்பாண பொடியன்” என்றார்களாம். நண்பியின் அம்மா எம்மிடம் இதனை சொல்லிச் சிரித்தார். ஆக வயது, தொழில் எல்லாம் அந்த “யாழ்” இல் சமனாகிடும் என நினைக்கின்ற அளவு தான் மண்டைக்குள் உள்ள 100 கிராம் போலும்… பேரில் “பாணன்” இருப்பது போல் இதனை வைத்து தான் இரந்து வாழ்கின்றார்களோ என்றும் நினைக்கத் தோன்றுகின்றது. 

ஆனால் இவற்றிலிருந்துதெல்லாம் ஏனையவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய அரசியல் இது தான். புலம்பெயர் நாடுகளில் சாதித்தவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வம்சாவளி என்றால் “சாதிக்கும் யாழ்ப்பாண வம்சாவளி” என்று வரும் அதே ஏதாவது வன்முறை செய்து, பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபட்டால் “புலம்பெயர் இலங்கையர்” என்றிருக்கும்.  எமது தோல்விக்கு கருணாவின் காட்டிக்கொடுப்பு மட்டுமா காரணம்? எமது மையவாத சிந்தனைகளும் அல்லவா? இன்றுவரை கருணாவை சுட்டுவது கூட இந்த அரசியல் புலம் தான். யாழ்ப்பாணத்தில் துரோகிகளே இல்லையா? அல்லது நான் பட்டியலிட வேண்டுமா என்ன? இவற்றினையெல்லாம் பார்க்கும் போது ஒருவேளை தமிழீழம் கிடைத்தால் என்ன நடந்திருக்கும் என்கின்ற கேள்வி என் தலைமுறையிலுள்ள அனைவருக்குமே இருக்கும் என நினைக்கின்றேன்.

முன்னாள் - இந்நாள் போராளியொருவரை சந்தித்திருந்தேன். உரையாடலிடையே பெரும்பாலும் இயக்கத்தில் முக்கிய போராளிகள் கிழக்குப்பெண்களை தான் மணந்திருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டார். ஏன் அண்ணா அப்படி என்று கேட்டேன். கிழக்கு பெண்களது அன்பு, தைரியம், நின்று போராடுகின்ற தன்மை ஏனையவர்களுக்கு இல்லை என்றார். இதனை இனித்தான் நான் தேடி பார்க்க வேண்டும். ஆனால் எப்போதும் யாழ்ப்பாணத்தவனுக்கும் - மட்டக்களப்பாள்களுக்குமிடையில் கவர்ச்சியிருப்பது என்னவோ உண்மை தான். வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும். அப்படித்தான் யாழ்ப்பாணத்திமிரை மட்டக்களப்பு வைராக்கியத்தால் தான் சமப்படுத்த முடியும். 

வளவாளர்கள் தம்முடைய நெறிப்படுத்தல்களின் போது "சுயம்" பற்றி பேச வேண்டிய தேவையென்ன? உங்கள் மனதுக்கு பிடித்த பெண் அல்லது ஆண் எதிர்ப்பக்கத்தில் இருக்கின்றார்களா என்ன? அப்படி உங்களைப்பற்றி சொல்லி அன்பை வெளிக்காட்ட வேண்டுமென்றால் தனியே கூப்பிட்டு பேசுங்கள். நீங்கள் பொது அறிக்கை விட தேவையில்லை. அன்பிற்கும் அரசியலுக்கும் நீண்டதூர இடைவெளியுண்டு.  என்று நாம் யாழ்ப்பாணம். மட்டக்களப்பு, மலையகம் என்று பிரிந்து போகாமல் "ஈழம்" என பேசுகின்றோமோ அன்று தான் எமக்கு விடிவு.  




குழந்தைகள் மீள்வதில்லை...


பேரூந்து முன்னிருக்கையில்
உள்ள குழந்தையையோ - அல்லது 
கூட்டத்தில் உங்களை உறுத்துப்பார்க்கும் 
குழந்தையையோ
கண்முழிகளைப் பிதுக்கி முறைத்துப்
பார்த்துள்ளீர்களா....?
கணநேரம் முகத்தை 
திருப்பிக்கொண்டாலும் - அது
மீண்டும் உங்களையே 
பார்த்திருக்குமே....?

அருகில் நெருங்கிய குழந்தையின்
கைவிரல்களை விரல்களால் வருடியிருக்கின்றீர்களா...?
குறைந்த பட்சம் - அதன் 
கையிலுள்ள இனிப்பினை பற்றி இழுத்து 
எய்த்திருக்கின்றீர்களா?
கொஞ்சம் சினுங்கல்...
கொஞ்சம் அழுகை... - பின்
உங்கள் அருகில் தானே
வந்து நின்றிருக்கும்...?

ஏதாவதொரு கோபத்தில்...
பொறுமையிழந்த நேரத்தில்....-  ஏன்
உங்களையே இழந்திருக்கும் நேரத்தில்
உங்களுக்காகவே
உங்கள் அருகாமைக்காகவே
அருகில் வந்து கால்களைக்கட்டிக்கொண்ட 
குழந்தையின் ஸ்பரிசம் ஞாபகமிருக்கின்றதா....? 
நீங்கள் அதனை சற்றே தள்ளி விட்டிருக்கலாம்...
அதட்டி காட்டுக்கத்தல் போட்டிருக்கலாம்...
நினைவிருக்கின்றதா - இத்தருணங்கள்?

அது ஒரு நிமிடம் எனும் ஸ்தம்பித்திருக்கும்...
அதன் கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்திருக்கும்...
அடிபட்ட பார்வையுடன் - உங்கள் 
உயரத்திற்கு நிமிர்ந்து பார்த்திருக்கும்... 
உங்கள் கண்களில் ஏதோவொன்றினை 
தேடியிருக்கும்....
நன்றாக நினைவுகளில் தேடிப்பாருங்கள்
மீண்டும் அந்தக்குழந்தை உங்கள்
அருகில் வந்ததா...?
கால்களை கட்டிக்கொண்டதா...? 
நிச்சயம் நிகழ்ந்திருக்காது...

இப்போது உங்கள் கைகளில் பொறுமதிமிக்க
இனிப்புக்கள் இருக்கலாம்...
கவர்ச்சிகரமான பொருட்கள் இருக்கலாம்....
மனதில் புதிதான பாசம் உண்டாகியிருக்கலாம்....
குழந்தையை அடித்ததற்கான 
பரிதாபமிருக்கலாம்...
இம்முறை முன்னரைவிடவும் அழுத்தி
முத்தமிட நீங்கள் நினைந்திருக்கலாம்...
மடியில் இருத்தி தலையை கோதிவிட
எத்தனித்திருக்கலாம்....

ஆனால் குழந்தைகள் மீள்வதில்லை...
அதற்கு பொருட்கள் கணத்தை விடவும்
மனதில் கணமிருக்கலாம்...
இன்னுமொரு தோளில் முகங்சாய்த்து
ஆறுதல் தேடியிருக்கலாம்.... 

குழந்தைகள் மட்டுமல்ல 
குழந்தை மனம் கொண்டவர்களும் தான்...
மீள்வதில்லை... 
இங்கு கோபங்கள் கணக்கிலில்லை...
குழந்தைகள் மறந்துவிடுகின்றன... 
காயங்களை - ஆனால்
காயப்படுத்தியவர்களையல்ல..


எங்கே அருகில் போனால்
தம்மை தள்ளிவிட்டுவிடுவார்களோ 
என்கின்ற வலியேயன்றி
இங்கு வேறெதுவும் பெரிதாகவிருப்பதில்லை...- நீ
எனை காயப்படுத்திய பின்
நான் விலகிப்போவது போன்று.....  
அல்லது உனை - நான் 
கண்டுகொள்ளாமல் இருப்பது போல... 
குழந்தைகள் மீள்வதில்லை...  

11.10.2026




இரு(வர்) விழிகள் !


இரு திணிவுகள் மோதிக்கொண்டால்
வேகம் பறிமாற்றப்படுகின்றது..
இரு முகில்கள் மோதிக்கொண்டால் 
மழை பொழிந்து விடுகிறது
இரு கோள்கள் மோதிக்கொண்டால்
அண்டம் அதிர்ந்து விடுகின்றது... 

இருவர் விழிகள் மோதிக்கொண்டால்...?
இயலாமைகள் பறிமாற்றப்படலாம்
கோபங்கள் கருக்கொள்ளலாம்..
காதல் நிறைந்திருக்கலாம்...
உனக்கு நானிருக்கின்றேன் என்று 
கதை பேசிக்கொள்ளலாம்....
எதிர்கால கனவுகள் அதில் கலந்திருக்கலாம்...
நீ மட்டும் போதும் என்ற நிறைவிருக்கலாம்...
வா வாழ்ந்திடலாம் எனும் அழைப்பு ஒளிந்திருக்கலாம்..
சில நேரங்களில் எனை மன்னித்துவிடு என இரஞ்சல் 
இருக்கலாம்.... இன்னும் சில நேரங்களில்
உனை பழிதீர்க்கும் வஞ்சம் அதில் தெரியலாம்...

நம்மிருவரின் விழிகள் 
மோதிக்கொள்ளும் போது....?
நீண்ட வெற்றிடங்கள்...
கணம் நிறைந்த மௌனங்கள்....
கடக்க முடியாத தூரங்கள்....
உன் திமிர்
என் பிடிவாதம்....
இன்னும் 
இன்னும் முடிவிலியாக
ஏதோவெல்லாம்.....

ஆனாலும்..
சந்தித்து மீண்டு கொண்டன
நேற்றைய நாளின்
பின்னிரவின் 8.16 ற்கும்
இன்று முற்பகலில் 11.20 ற்கும்.... 


04.10.2026 










அன்பார்ந்த மகர ராசிகாரர்களே….....

போன மாதத்தின் நடுப்பகுதியில் இருந்தே பல வீடியோக்கள் மகர ராசி அன்பர்களே உங்களுக்கு இனிமேல் நல்ல காலம் என்று வரத்தொடங்கிய போதே நான் சுதாகரித்திருக்க வேண்டும். ஆனால் நான் இதை சில வீதம் நம்பினேன் பாருங்கள் அதற்காக என்னை ஊறவைத்து செய்கின்றது இந்த காலம். நன்றாக கவனியுங்கள்…. 

கடந்த மாதம் சிங்கப்பூரில் ஆறு நாட்கள் நிகழ்வு. இந்த நிகழ்விற்கு விமான ஒழுங்குகளை மேற்கொள்ளும் போது அடுத்த நிகழ்வு குறித்த மின்னஞ்சல் கிடைத்திருக்கவில்லை. முதல் நிகழ்விற்கான எல்லா ஒழுங்குகளும் முடியும் போது அடுத்த நிகழ்வு இந்தியாவில் உறுதியாகியது. இறுதி வரை முயற்சித்தும் சிங்கப்பூரிலிருந்து நேரடியாக போவதற்கு முடியவில்லை. இறுதி நேரத்தில் மாற்றியமைக்க இதுவென்ன மட்டக்களப்பு - கொழும்பு அல்லது மட்டக்களப்பு - யாழ்ப்பாண பேரூந்தா? சிங்கப்பூரிலிருந்து வந்து காலையில் இறங்கி மாலையில் இந்தியாவிற்கான பயணம். எனவே வீட்டாக்கள் தான் விமான நிலையம் வந்து என்னுடன் நேரத்தை கழித்த விட்டு அங்கிருந்து கொண்டு வந்த பொருட்களை எடுத்துக்கொண்டு வரவேண்டியதாயிற்று. மாலையில் பயணித்து இரவு போய் சேர்ந்தால் என்னை கூட்டிப்போக வந்தது ஒரு இம்சை. 

கடந்த வருடம் கட்டடக்கலை சார் பயிற்சியொன்றில் பங்குபற்றியவர்களுக்கான இரண்டாம் கட்ட நிகழ்வும் பட்டமளிப்பும் இம்முறை நடைபெற்றது. இதற்காகவே இந்த பயணம். எனவே என்னுடைய இம்சை நண்பன் தான் என்னை விமான நிலையத்திலிருந்து கூட்டிப்போவதற்கு வந்திருந்தார். ( வாசகர்களே இங்கு இவரின் முழுச்சம்மதத்துடன் தான் இவரைப் பற்றி எழுதுகின்றேன்). இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி போல இவர் இம்சை மன்னன் 24 ஆம் தண்டபாணி. இந்தாளுக்கும் எனக்கும் என்ன முன்விரோதமோ தெரியாது. போன வருடம் இங்கு படிக்க வந்த நாளிலிருந்தே என்னை தொல்லை படுத்திக்கொண்டிருக்கின்றார். தான் வளர்த்த மரத்திலிருந்து பூக்களை பறித்து வந்து தந்தால் கூட பரவாயில்லை. அந்த மெனக்கெடலுக்காவது அதை வாங்கி வைக்கலாம். ஆனால் இந்தாள் பக்கத்து வீட்டில் , பல்கலைக்கழகத்தில் இருந்தெல்லாம் பூக்களை பறித்து வந்து எனக்கு தருவது முதலாவது இம்சை. 

இதை விடுங்கள் நாம் எத்தனை பேரை சைட் அடிக்கின்றோம். அதிலும் பரதநாட்டியம் படித்த பிள்ளைகளிடம் கேட்டுப்பாருங்கள் கண்ணை வேறெங்கோ நிறுத்தி பார்வையை வேறுபக்கம் வைத்து சைட் அடிக்கும் முறைகலெல்லாம் கூட இருக்கின்றது. ஆனால் இந்த தண்டபாணி வகுப்பறையில் கதிரையை என் பக்கம் வைத்தவாறு அப்படியே திரும்பி அமர்ந்து நமக்கே உடம்பு கூசும் அளவுக்கு பேயன் பிலாக்காயை பார்த்தது போல் தான் பார்த்துக்கொண்டிருப்பார். நான் கொஞ்சம் குண்டாக பிலாக்காய் போலிருப்பதென்னவோ உண்மை தான் ஆனால் அதற்காக இப்படியா சைட் அடிப்பது? சிரிக்கவும் முடியாமல் படிப்பிப்பதை கவனிக்கவும் முடியாமல் கதிரையில் ஒழுங்காக இருக்கவும் முடியாமல் நான் பட்ட அவதிகள் வேறெந்த பெண்ணுக்கும் வரவே கூடாது. 

மற்றொரு இம்சையும் இவர் செய்வதுண்டு. காணுகின்ற காகிதங்களில் மீரா - தண்டபாணி அல்லது கேஷாயினி - தண்டபாணி என்று கிறுக்கி வைப்பது. அது மட்டுமல்ல பெயர் பொருத்தம் எப்படி என்று கேட்டு வெடிச்சிரிப்பு சிரிப்பது. இதில் மனதுக்குள் மத்தாப்பூ வேறு. நீங்களே சொல்லுங்கள் என்னுடைய அழகான பெயருக்கு பின்னால் “தண்டபாணி” என்ற பெயர் நல்லாகவா இருக்கின்றது? தோசைக்கு சொதி ஊத்தினது போல இருக்கின்றதல்லவா? அல்லது பாணுக்கு முருங்கைக்காய் கறி வைத்தது போலில்லை? இதனை சொன்னதற்கு “தண்டபாணி” என்பது விஷ்ணு கையிலுள்ள ஆயுதம், புனிதமானது… அது இது என்று ஒரு புத்தகம் எழுதுமளவிற்கு எனக்கு விளக்கம் தந்தார் பாருங்கள்….. 

காதில் கடுக்கண், கழுத்தில் வெள்ளி சங்கிலி, கையில் கோயில் மரங்களில் கட்டியிருக்குமே அப்படி பல நிறங்களில் கயிறுகள், டீசேட், டைட் பாண்ட் என்று பார்த்தாலே கடுப்பாகும் இந்த ஆளை எனக்கு முதல் நாளே பிடிக்காமல் போனதில் ஆச்சரியம் இருக்காது தானே… அரியண்டம் தாங்காமல் இதனை முகத்திற்கு முன் சொன்னதன் வினை இந்த பயணத்தில் அனுபவிக்க கிடைத்தது தான் ஹலைட். வேட்டி கட்டி கறுப்பு சேட் போட்டு வந்து நின்று “எப்படி டீ மாமா இருக்கின்றேன்?” என்று கேட்டார் பாருங்கள். மேலிருந்து கீழ் பார்த்தால் வெள்ளி சங்கிலி, கயிறுகள் எல்லாம் அப்படியே தானிருந்தது. இவரை பொறியியலாளர் என்று சொல்லாமல் பேட்டை ரவுடி என்று சொன்னால் சத்தியமாக யாருமே கேள்வி கேட்காமல் நம்புவார்கள். இந்த தண்டபாணியின் பூ, பார்வை, அலப்பறை என்று எப்படா முடியும்  என்று ஓடிவந்தால் இலங்கையில் மீதி தொடந்தது.

அங்கு இந்தியாவில் இருக்கும் போது என்னுடைய நண்பி பலமுறை அழைப்பெடுத்தக்கொண்டே இருந்தாள். திரும்பத்திரும்ப ஞாபகப்படுத்தி ஊடக பயிற்சியொன்றிற்கு விண்ணப்பிக்க வற்புறுத்தியிருந்தாள். சரியென்று விண்ணப்பித்தாகிவிட்டேன். 30 ஆந் திகதி வரை அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில் வெளிநாட்டிலிருந்து ஊடக நண்பர் குழு வருவதாகவும் அவர்களை சில இடங்களுக்கு அழைத்து செல்வதற்கும் ஏற்பாடு செய்திருந்தேன். காலையில் ஆறு மணிக்கு ஆரம்பித்த பயணங்கள் தினமும் 11 வரை தொடர்ந்தது. ஈஸ்ட் லகூன் அருகில் வீடிருந்தும் ஹோட்டலிலேயே தங்க வேண்டியதாகிற்று. போதாதற்கு 3 நாட்கள் இடப்பட்ட திட்டம் 4 நாட்களாகிவிட்டன. இப்படி பயணத்தில் இருக்கும் போது தான் இம்மாதம் 2 ஆந் திகதிக்குறிய பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்டதாக அறிவிப்பு கிடைத்தது. ஒரு மாதிரி பயணங்களை முடித்து பயிற்சிக்காக மூட்டை கட்டிக்கொண்டு போய் இறங்கி மண்டபத்திற்கு வந்தால்….. யாரை சந்திக்கவே கூடாது என்று நினைத்திருந்தேனோ…. அது நடந்தே விட்டது. (இது நல்லதற்கா அல்லது கெட்டதற்கா என்றும் குழப்பமாகவிருக்கின்றது.. இன்னும் வலி தரப்போகின்றதோ?) சரி மொழிவாரியாக பிரிக்கும் போதாவது நாம் தப்பலாம் என்று பார்த்தால் அங்கும் வைத்து செய்து விட்டார்கள்! இது தொடரவும் இருக்கின்றது...... 

இதிலிருந்து மீண்டும் வீட்டிற்கு வந்தால் என் அண்ணாவின் குழந்தைகள் வைத்திருந்தார்களே…..? இதனை அடுத்த பதிவில் கிறுக்குகின்றேன். 

சம்பந்தன் ஐயா பொங்கலுக்கு தீர்வு கிடைக்கும் என்று சொன்னார். ஆனால் எந்த பொங்கலுக்கு என்று சொல்லவில்லை…. அது போல் தான் மகர ராசிக்கு நல்ல காலம் பிறக்கப்போகுது என்பது எப்போது என்று தெரியவில்லை. ஆனால் இந்த “அன்பார்ந்த மகர ராசிகாரர்களே….” என்று யாராவது தொடங்கும் இணைப்புக்கள் மட்டும் உங்களுக்கு கிடைத்தாலோ அல்லது கண்ணில் தென்பட்டாலோ எனக்கும் சொல்லுங்கள்….. அவ்வளவு கொலைவெறியில் இருக்கின்றேன் நான்….. 

மழை நீ.......


குடையில்லா நேரத்து மழை நீ
கரு முகில் இல்லாத
மின்னல் வெட்டாத வானத்திலிருந்து
சடாரென என் மேல்
கொட்டிவிடுகின்றாய் அன்பே...
தலையில் தண்ணீர் பட்டதும்
மூச்சுத்திணறி 
சிலிர்த்துக்கொள்ளும் 
குழந்தையாகிப் போகின்றேன் நான்.... 

மற்றும் படி
துகள் போல மிதக்கின்ற - என் 
மனதை
எப்படி தான் மீட்டுக்கொள்வேன்...? 
அனலிலும் புனலிலுமாக தடுமாறி
தொலைகின்றது மனம் 
சொன்னால் மட்டும் - என்
சொல்லை கேட்டுவிடவா போகிறது
இந்த மானங்கெட்ட மனம்!

02.10.2026 @17.34 

பதிவுகள்

நினைவுகள்!

நேற்று நண்பர்களுடன் உலக அதிசயங்கள் பற்றியும் எம்முடைய கலந்துரையாடலில் பேசப்பட்டது. உலக அதியசங்களில் தொடங்கிய அலசல் அப்படியே ஐஸ்வர்யா ராய்க்க...

அதிகம் பார்க்கப்பட்டவை