கடந்த மாதம் எமது நிறுவனத்திற்கான நேர்முகத்தேர்விற்கு சிலர் வந்திருந்தார்கள். அதில் ஒரு கேள்வியாக “ ஏன் இந்த பதவிக்கு நீங்கள் பொருத்தம் என நினைக்கின்றீர்கள்?” எனும் வினாவும் அமைந்திருந்தது. வந்திருந்தவர்களில் சிலர் தாம் கற்றவிடயங்கள் திறன் விருத்தியை குறிப்பிட்டு இதற்கு தான் பொருத்தம் என்றார்கள். ஒரு சிலர் தாம் படித்து வேலையன்றி இருப்பதால் இப்பதவி கிடைக்கும் போது தான் உத்வேகத்துடனும் உண்மையுடன் நடப்போம் என்றார்கள். ஆனால் மூவர் மட்டும் “ நான் யாழ்ப்பாணத்திலிருந்து வருகின்றேன்” “யாழ்ப்பாணம் …… இல் தான் இருக்கின்றேன்” “நான் பிறந்தது யாழ்ப்பாணம் இப்போது கொழும்பில்….” என்று ஆரம்பித்தார்கள். நேர்முகம் முடிந்த பின் சுயவிபரங்களை பார்த்ததில் இந்த மூவர் மட்டும் தான் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருந்தார்கள். மூவருமே தம் ஊரை தான் மேற்கோள் காட்டியிருந்தார்கள். ஏறத்தாழ 23 பேர் பங்குபற்றிய இந்நேர்முகத்தேர்வில் ஏனைய மாவட்டங்கள் , ஊர்களில் இருந்து வந்த எவரும் தம்முடைய ஊரைப்பற்றி வினாக்களுக்கு விடையளிக்கும் போது எதுவுமே சொல்லியிருக்கவில்லை.
நேற்றைய சம்பவமொன்று. குறிப்பிட்ட நபர் ஒருவர் மட்டக்களப்பில் பிறந்தவர் என்பது மிகத்தெளிவு. இவரது ஆளுமை பற்றி பேசும் போது, “ இவரது அம்மா யாழ்ப்பாணம், அது தான் இந்த மூளை…” என அருகிலிருந்தவர் விமர்சித்திருந்தார். அப்போது யாழ் - மட்டக்களப்பு கலப்பு பெற்றோருக்கு பிறந்த அனைவரும் அறிவுடையவர்களாகவும் ஆளுமையாகவும் இருக்க வேண்டுமே…? அதெப்படி அம்மா யாழ்ப்பாணம் என்றால் அப்பா மட்டக்களப்பு தானே. அப்படியென்றால் தந்தையின் ஆளுமையும் அந்த நபருக்கு வந்திருக்கலாம் தானே…. அதனை விடவும் முக்கியம் இவரின் அம்மா அடுப்படியைக்கூட தாண்டாதவர்.
இவ்வருட ஆரம்பத்தில் மாநாடொன்றிற்கு சென்றிருந்தேன். அங்கு நண்பர்களுடன் சேர்ந்து உணவருந்தும் போது அதில் ஒருவர் “ இந்த குழம்பு யாழ்ப்பாண தூள் போல இருக்கு. நல்ல வாசனை, அங்கிருந்து தான் வாங்குகின்றார்கள் போல…” என்றார். எனக்கு சிரித்ததில் புரையேறிவிட்டது. காய்ந்த கொச்சிக்காய், மல்லி, மிளகு, சீரகம், கருவேப்பிலை இருந்தாலே போதும் கொச்சிக்காய் தூள் இடிப்பதற்கு. இதில் சேர்க்கும் பொருட்களின் அளவு தான் ஒவ்வொரு வீட்டிற்கும் மாறுபடுகின்றதே தவிர ஒரு பிரதேசத்தில் பௌதீகவியல் அமைப்பிற்கும் அதன் கொச்சிக்காய் தூளிற்கும் என்ன சம்பந்தம் இருந்துவிடப்போகின்றது?
இன்னுமொன்றும் இங்கு சொல்லியே ஆகவேண்டும். கொஞ்ச காலமாக “யாழ்ப்பாண உணவுத்திருவிழாக்கள்” நடைபெற்று வருகின்றன. பொதுவில் கிழக்கு மக்கள் உணவு தயாரிப்பதிலும் விருந்தினரை வரவேற்பதிலும் முன்னிலை வகிப்பவர்கள் என சொல்லப்படுகின்றது. இவ்வாறு வீட்டுக்கு வந்தவர்களை உபசரிக்க அவர்கள் அந்த உபசரிப்பில் வீட்டிலேயே தங்கிவிட “பாயோடு ஒட்டவைக்கும் மட்டக்களப்பார்” எனும் அவப்பெயரையும் வாங்கிக்கொண்டவர்கள். இதனை சொந்த காசில் சோறு கொடுத்து தமக்குத்தானே அவப்பெயர் எடுக்குமளவு சூனியம் வைத்தவர்கள் என்றும் சொல்லலாம். கதை பரம்பரை பரம்பரையாக இப்படியிருக்க யாழ்ப்பாணத்தாக்கள் இன்று தம்முடைய ஊர் பெயரில் உணவுத்திருவிழா செய்வதையோ எவ்வாறு எடுத்துக்கொள்வது?
திருமண நிச்சயார்த்தங்களில் கூட “அவன் யாழ்ப்பாணத்து பொடியன்…நிறைய கொடுக்க வேண்டும்” “அந்த பிள்ளைக்கு யாழ்ப்பாணப்பொடியனை பேசியிருக்கு. கொடுப்பதற்கு நல்ல வசதியிருக்கு தானே” என்பனவும் என் காதுகளில் அடிக்கடி அடிபடுவதுண்டு. இல்லை தெரியாமல் தான் கேட்கின்றேன். ஏனைய பொடியன்களை விட யாழ்ப்பாண பொடியன்களுக்கு ஏதாவது உள்ளுக்குள்ள தங்கத்தில் இருக்கின்றதா என்ன?
நண்பியொருவருக்கு வரன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நண்பி மருத்துவராக பணியாற்றுகின்றாள். என்ன தொழில்? வயது என்பது குறித்து பேசும் போது “பொடியனுக்கு கொஞ்சம் வயசு கூட, ஹொட்டலில் தான் வேலை ஆனா யாழ்ப்பாண பொடியன்” என்றார்களாம். நண்பியின் அம்மா எம்மிடம் இதனை சொல்லிச் சிரித்தார். ஆக வயது, தொழில் எல்லாம் அந்த “யாழ்” இல் சமனாகிடும் என நினைக்கின்ற அளவு தான் மண்டைக்குள் உள்ள 100 கிராம் போலும்… பேரில் “பாணன்” இருப்பது போல் இதனை வைத்து தான் இரந்து வாழ்கின்றார்களோ என்றும் நினைக்கத் தோன்றுகின்றது.
ஆனால் இவற்றிலிருந்துதெல்லாம் ஏனையவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய அரசியல் இது தான். புலம்பெயர் நாடுகளில் சாதித்தவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வம்சாவளி என்றால் “சாதிக்கும் யாழ்ப்பாண வம்சாவளி” என்று வரும் அதே ஏதாவது வன்முறை செய்து, பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபட்டால் “புலம்பெயர் இலங்கையர்” என்றிருக்கும். எமது தோல்விக்கு கருணாவின் காட்டிக்கொடுப்பு மட்டுமா காரணம்? எமது மையவாத சிந்தனைகளும் அல்லவா? இன்றுவரை கருணாவை சுட்டுவது கூட இந்த அரசியல் புலம் தான். யாழ்ப்பாணத்தில் துரோகிகளே இல்லையா? அல்லது நான் பட்டியலிட வேண்டுமா என்ன? இவற்றினையெல்லாம் பார்க்கும் போது ஒருவேளை தமிழீழம் கிடைத்தால் என்ன நடந்திருக்கும் என்கின்ற கேள்வி என் தலைமுறையிலுள்ள அனைவருக்குமே இருக்கும் என நினைக்கின்றேன்.
முன்னாள் - இந்நாள் போராளியொருவரை சந்தித்திருந்தேன். உரையாடலிடையே பெரும்பாலும் இயக்கத்தில் முக்கிய போராளிகள் கிழக்குப்பெண்களை தான் மணந்திருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டார். ஏன் அண்ணா அப்படி என்று கேட்டேன். கிழக்கு பெண்களது அன்பு, தைரியம், நின்று போராடுகின்ற தன்மை ஏனையவர்களுக்கு இல்லை என்றார். இதனை இனித்தான் நான் தேடி பார்க்க வேண்டும். ஆனால் எப்போதும் யாழ்ப்பாணத்தவனுக்கும் - மட்டக்களப்பாள்களுக்குமிடையில் கவர்ச்சியிருப்பது என்னவோ உண்மை தான். வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும். அப்படித்தான் யாழ்ப்பாணத்திமிரை மட்டக்களப்பு வைராக்கியத்தால் தான் சமப்படுத்த முடியும்.
வளவாளர்கள் தம்முடைய நெறிப்படுத்தல்களின் போது "சுயம்" பற்றி பேச வேண்டிய தேவையென்ன? உங்கள் மனதுக்கு பிடித்த பெண் அல்லது ஆண் எதிர்ப்பக்கத்தில் இருக்கின்றார்களா என்ன? அப்படி உங்களைப்பற்றி சொல்லி அன்பை வெளிக்காட்ட வேண்டுமென்றால் தனியே கூப்பிட்டு பேசுங்கள். நீங்கள் பொது அறிக்கை விட தேவையில்லை. அன்பிற்கும் அரசியலுக்கும் நீண்டதூர இடைவெளியுண்டு. என்று நாம் யாழ்ப்பாணம். மட்டக்களப்பு, மலையகம் என்று பிரிந்து போகாமல் "ஈழம்" என பேசுகின்றோமோ அன்று தான் எமக்கு விடிவு.

No comments:
Post a Comment