நம்மை கிண்டலடிக்கவும் நையாண்டி பண்ணவும் முடிகிறதென்னவோ நம் அருகில் இருக்கும் நெருக்கமானவர்களால் தான் என நான் நினைக்கின்றேன். எனவே இந்த நெருக்கமானவர்கள் வரிசையில் முதலில் நிற்பவர்கள் நம் குடும்பத்தினர் தான் என்பது மறுப்பதற்கில்லை. இதனால் தான் என்னவோ வெளியில் பெரிய பிஸ்தாவாக இருக்கும் நாம் வீட்டிற்குள் மட்டும் புஸ்வானமாகி விடுகின்றோம். இதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும் என்றாலும் கடந்த வாரம் நடந்தது இதில் ஹைலைட்.
வழமையாகவே எனக்கு ஒருவித மாறுபட்ட புத்தி அடிக்கடி வருவதுண்டு. நாட்கணக்கில் வேலைகளை அள்ளிப்போட்டுக்கொண்டு கிடைத்ததை சாப்பிட்டு அருகில் தட்டுப்படுவதை குடித்து கணணி முன்னுக்கு தூங்கி எழுந்து, சமூக ஊடகங்களை எட்டிக்கூட பார்க்காத நான் ஓரிரு நாட்கள். கணணியை தொடாமல் என் வாழ்க்கையை இரசித்து வாழ்வதுண்டு. இப்படித்தான் சில நாட்களுக்கு முன் இடைவெளி எடுத்துக்கொண்டேன். அப்படியே யூடியூப்பை தட்டிக்கொண்டு போனால் சின்ரெல்லா காட்டூன் கண்களில் பட்டது. பார்க்க ஆரம்பித்த சில நிமிடங்களில் அருகில் மொய்க்க ஆரம்பித்துவிட்டார்கள் என் அன்பிற்குறிய சகோதரன்கள். உடனே பழையதை கிண்டி ஒரு கதையை நினைவுபடுத்தி விட்டார்கள்…..
உயர்தரம் படிக்கும் போது எனக்குள் இருந்த கனவுகளில் ஒன்று கொழும்பு வாழ்க்கையும் அதன் பின்னால் இருந்த சுதந்திரமும். பல்கலைக்கழகம் கிடைத்தால் கேர்ணல் நளினியின் பிடியிலிருந்து தப்பி அங்கு போனால் நன்றாக ஊர் சுற்றலாம், நண்பிகளுடன் படம் பார்க்க போகலாம், கண்டதை வாங்கி சாப்பிடலாம், பெடியன்களுடன் கடலை போடலாம் , வீட்டாக்கள் அனுப்பும் காசை கரியாக்கலாம் என்றெல்லாம் நான் நன்றாக கணக்கு போட்டு வைத்திருந்தேன். ஆனால் வழமை போல் நான் நினைத்ததை நடக்கவிடாமல் இயேசுவோ, சிவனோ, அல்லாவோ அல்லது எல்லோரும் சேர்ந்தோ என் அம்மாவின் பிராத்தனையை நிறைவேற்றி விட்டார்கள். என் குழுமத்தில் யாரும் கொழும்பு பல்கலைக்கு வரவில்லை. இந்த சிங்கம் சிங்கிளாகிவிட்டது முதலாவது பிரச்சினை. சரி கொழும்பில் அறையில் தங்கியிருந்து புதிதாக நண்பர்களை கண்டுபிடித்து நினைத்ததை நிறைவேற்றுவோம் என்றால் பங்குத்தந்தை அதிலும் மண்ணள்ளி போட்டுவிட்டார். அதாவது படிக்கும் பிள்ளைகளுக்கு பொறளை பெண்கள் விடுதியிருப்பதை அம்மாவின் காதுக்கு எட்டவிட்டுவிட்டார். ( இவர் எனக்கு செய்த பாவம் எத்தனை திருப்பலி நிறைவேற்றினாலும் தீராது. கட்டாயம் நரகத்திற்குத்தான் போவார். நான் இயேசுவின் அருகில் சம்மனசு போல் வெள்ளைச் சிறகுடன் இருந்து இவர் படப்போகும் நரக வேதனையை பார்க்கத்தான் போகின்றேன். குறித்து வைத்துக்கொள்ளுங்கள்). இனியென்ன கேர்ணல் நளினி பொறளை அந்தோனியார் மட அருட்சகோதரி பிளஸ் லெப்டினன் கேர்ணல் அவர்களிடம் என்னை கைமாற்றிவிட்டார். வீட்டிலிருந்து பெட்டி படுக்கைகளுடன் என்னை கூட்டிக்கொண்டு போய் அந்த பெண்கள் சிறைக்குள் என்னை தள்ளிவிட்டார். அங்கு முதன்முதல் போன போது முன்னிருந்த பூமரங்கள், சிலைகள், படித்துக்கொண்டிருந்த அக்காமார்களைப் பார்த்து எனக்குள் பூத்திருந்த மகிழ்ச்சி விடுதி பொறுப்பாளரான அருட்சகோதரி சொன்ன ரூல்ஸ் இல் கருகி கருவாடாகிப்போய் விட்டது. இது கூட பரவாயில்லை பின்வந்த நாட்களில் கேர்ணலும் லெப்டினனும் சேர்ந்து செய்த ஒருவிடயம் இந்த பதிவின் முக்கிய பகுதி.
இந்த பொறளை சிறைக்கு வந்து இரு ஆண்டுகள் ஆகிவிட்டிருந்த நாட்களில் நடந்த சம்பவம் இது. இந்த இராணுவ முகாமின் விதிப்படி இந்த மடத்தின் தேவாலயத்தில் அதிகாலை 5 மணிக்கு தினமும் திருப்பலி நடைபெறுவதுண்டு. இதில் விடுதிப்பெண்கள் கட்டாயம் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். 5 மணிக்கு பூசையென்பதால் 4 மணிக்கே எழுந்திருக்க வேண்டும். 4.45 க்கு தேவாலயத்திற்குள் ஆஜராகிவிட வேண்டும். அம்மா என்னைப்பற்றி புளுகியதில் பாடல் குழுவிற்கான பொறுப்பு என் தலையில் விழுந்திருந்ததால் யார் வந்தாலும் வராவிட்டாலும் நான் போயாகியே வேண்டிய நிலை. இந்த நாட்களில் சிங்களம் வாசிக்க தெரியாத நான் சிங்கள பாடல்களை தமிழில் எழுதிவைத்து சிங்களத்தில் பாடியதெல்லாம் விருதுபெறாத சாதனைகள். இப்படியொரு நாளில் தான் பூசைக்கு வந்த ஒருவர் நம்மை பார்த்து, விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரியிடம் விசாரித்து நூல் பிடித்து கேர்ணல் நளினியிடமும் பேசி திருமணத்திற்கான பெண் பார்த்தல் ஏற்பாடாகியிருந்திருக்கின்றது. இந்த ஏற்பாட்டின் பகுதியாக தன் மகளை அழகாக காட்ட நினைத்த கேர்ணல் எனக்கு அழகானதொரு உடுப்பையும் அதற்கு பொருத்தமான காலணியையும் அனுப்பி வைத்திருந்தார். இரவு படித்துக்கொண்டிருக்கும் போது அருட்சகோதரி என்னை வந்து சந்திக்கும் படி அனுப்பிய செய்திக்கு பணிந்து அவரது அறைக்கு போன போது நாளை மாலை சில முக்கியமானவர்கள் எம்முடைய தேவாலயத்திற்கு வருவதாகவும் அதற்காக என்னை தயார்படுத்தி இருக்குமாறும் மாலையில் எங்கும் போகவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
காலையில் வழமை போன்று அழைப்பெடுத்த கேர்ணலும் மாலை அவர்களை சந்திக்கும் போது தான் அனுப்பிய உடை, பாதணிகளை அணிய சொன்ன போது கூட என்னுடைய பிஞ்சு மூளைக்கு இவருக்கு எப்படி தெரியும் என்கின்ற கேள்வி எழுந்திருக்கவில்லை. நானொரு செம்மறி… (இந்த வசனத்தை எனக்கு அர்ச்சுணா எம்.பி குரலில் சொல்லிப்பார்த்துக்கொள்ளுங்கள்)
அந்த பொன்மாலை நேரத்தில் நானும் வெளிக்கிட்டு அருட்சகோதரியுடன் காத்திருந்தேன். திடீரென கார் ஒன்று வந்து நின்றது. படபடவென இரு பெண்கள், மூன்று ஆண்கள் ஒரு குழந்தை என இறங்கினார்கள். அருட்சகோதரியும் என்னை தன்னுடன் வருமாறு அழைத்த படி அருகில் போனார். வந்தவர்கள் அருட்சகோதரியை வணங்கிவிட்டு அவர் என்னை அறிமுகம் செய்தவுடன் என் கையில் ஆண் ஒருவர் பூங்கொத்து ஒன்றினை தந்தார். எனக்கு பெருத்த ஆச்சர்யம். இதென்ன நமக்கு இப்படி தருகின்றார்களேயென்று. பூங்கொத்து என்றால் அப்படியொரு பெரியது வேறு கையில் வைத்துக்கொண்டு பார்த்தால் முன்னால் இருப்பவர்கள் தெரியாதளவு பெரிது. அருட்சகோதரியை தொடர்ந்து நானும் வந்தவர்களும் உள்மண்டபத்திற்குள் போனவுடன் என்னையும் அமர சொல்லிவிட்டார்கள். வந்தவர்களில் வயதானவர் என்னை தன்னருகில் இருத்திவிட்டார். வந்தமர்ந்ததில் இருந்து என்னைப் பற்றி தான் கேள்விகள். கூடவே கையில் பெரியதொரு பார்சலையும் தந்துவிட்டார். அதன் பின்னர் தான் கிளைமாக்ஸ் ஆரம்பமாகியது. அருட்சகோதரி அவருக்கேயுரிய பாணியில் கேர்ணல் நளினியும் அவரும் சேர்ந்து செய்த தில்லுமுள்ளுகளை சொல்லி இது பெண்பார்க்கும் படலம் என்பதில் முடித்தார். இதில் என்னிடம் முடிவு வேறு கேட்டார். இதற்கு பின்னரான நிமிடம் தான் மிக முக்கியம்.
எனக்கு எங்கிருந்து தான் வெட்கம், அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்றெல்லாம் இருக்கின்ற அனைத்தும் வந்தென்று தெரியவில்லை. எழுந்த வாக்கில் ஓட்டமும் நடையுமாக அறைக்கு திரும்ப ஆரம்பித்தேன். இந்த நேரம் பார்த்தா என் காலணி கழற வேண்டும், என்னை இடற வேண்டும்? இடறியதை விட்டு விட்டு ஒற்றைக்காலணியுடன் அறைக்குள் வந்துவிட்டேன். என்னை கடந்த விடுதி மாணவிகள் நிச்சயம் என்னைப்பற்றி ஏதாவது நினைத்திருப்பார்கள். விடுதியறைக்குள் என் கட்டிலில் அமர்ந்தும் படபடப்பு போகவில்லை. சில பல நிமிடங்களில் இரு விடுதி பெண்கள் அருட்சகோதரி அனுப்பியதாக நான் விட்டுவிட்டு வந்த பூங்கொத்து மற்றும் பார்சலை கொண்டு வந்து தந்துவிட்டு சென்றார்கள். எனக்கிருந்த கோபத்திலும் வெப்புசாரத்திலும் அன்றிரவு கேர்ணலின் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை. “ Mahal Answer me, I can explain……” என்பதற்கும் மதிப்புகொடுக்கவில்லை. அடுத்த நாள் நான் கத்திய கத்தலில் இந்தக்கதை அத்துடன் நின்றுவிட்டது. ஆனால் நான் ஒற்றைக்காலணியுடன் ஓடியதை மறக்காமல் அருட்சகோதரி கேர்ணலுக்கு சொல்ல அதனை கேர்ணல் வீட்டிலிருந்த ஏனைய கோணல்களுக்கு சொல்ல இன்று வரை இது என்னை தொடர்கின்றது. அதாவது “ சிறிலங்கன் சின்ரெல்லா..” என்றகின்ற பட்டப்பெயரும் கிண்டல்களும்…..
"ஏன் நேரத்திற்கு வரவேண்டும் என்று சின்ரெல்லா திரும்பும் போது காலணியை விட்டுவிட்டு வந்தாள். அது இடறினாலும் கையிலெடுத்துக்கொண்டாவது ஓடியிருக்கலாமே" என்கின்ற சின்ன வயசில் இருந்து என்னை தொடர்ந்த கேள்விக்கு நானே பதிலாகிப் போனேன் என்பது தான் இந்தக்கதை. சரி உங்கள் மற்ற காலணியை திரும்ப எடுத்தீர்களா? என்கின்ற கேள்வி இதனை நான் வாசித்திருந்தால் எனக்குள் ஏற்பட்டிருக்கும். உங்கள் மனதில் கைவைத்து சொல்லுங்கள் உங்களுக்கும் இக்கேள்வி மனதில் வந்திருக்கும் தானே….. பதில் வழமை போன்று பிற்குறிப்பில் உள்ளது.
பிற்குறிப்பு:
01. ஊர் வம்பு மிகமுக்கியம் அந்த வகையில் பெண் பார்க்க வந்தவரை இன்று நான் அடிக்கடி முகநூலில் போய் தேடிப்பார்ப்பது உண்டு. அந்தப்பொடியனுக்கு என்ன கவலையோ கஸ்டமோ அல்லது நான் தான் விதியோ தெரியவில்லை. இத்தனை வருடங்களில் ரக்பி மற்றும் படிப்பில் தான் முன்னேற்றம் உண்டென முகநூல் சொல்கின்றது. இன்னும் கல்யாணமாகவில்லை
02.வெளிநாடொன்றில் போய் மேற்படிப்பையும் வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ள முன்னர் என்னைக்கடந்தவர்களை, இடங்களை போய் பார்க்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில் பொறளை விடுதிக்கு போய் இருந்தேன். கட்டடங்கள், தேவாலயம், பூந்தோட்டம் எல்லாம் மாறிவிட்டன. என் காலத்தில் விடுதிப்பொறுப்பாளராகவிருந்த அருட்சகோதரியை சந்தித்தேன். வயது போய்விட்டது. அடையாளம் கண்டுவிட்டார். ஆனால் அந்த ஹிட்லர் புத்தி போகவில்லை. இப்பவும் கேள்விக்கணைகளை தொடுத்துக்கொண்டிருக்கின்றார்.
03. மாமி என்றாலே நிகழ்கால. எதிர்கால மருமகள்களுக்கு எப்போதும் பிரச்சினை தான். ஆனால் வெறும் பார்த்தல் மட்டுமே தான் நடந்தது என்றாலும் அந்த அன்ரி என் முகநூலில் இருக்கின்றார். அடிக்கடி ஹாய் போடுவார். நானும் தான்...... ஒருவேளை அவரது முகநூல் வேறு யாராலாவது இயக்கப்படுகின்றதா என புரியவில்லை. (ஆனால் எனக்கு சண்டை போடுகின்ற மாமியார் தான் பிடிக்கும் அன்ரி. அப்போது தான் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்கும்)
04. வீட்டில் ஒரு பெட்டையாக பிறந்து வளர்வதெல்லாம் சிலுவைப்பாதையை விட கடினமானது. ஏதாவது படத்தில் அல்லது சின்னதுகள் “சின்ரெல்லா” என்றால் போதும் நம்மட வீட்டாக்கள் என்னைத் திரும்பிப்பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பதுண்டு. என்னை கிண்டல் செய்யும் போது மட்டும் எல்லோரும் கட்சி பேதமின்றி பொதுவேட்பாளருக்கு பின்னின்ற நம்மட அரசியல் கட்சிகள் போலாகிவிடுதுகள். அந்த நேரத்தில் எனக்கு வரும் எரிச்சலில் மனதுள் நான் கொடுக்கின்ற சாபம் அருட்சகோதரியை சும்மா விடாது. ஏழேழு ஜென்மத்திற்கும் அது தொடரும்.
05.அந்த காலணி….. கருப்பு நிறத்தில் வெள்ளைப்புள்ளிகள் போட்டது. கருப்பு நிற சட்டைக்கு வெள்ளை கழுத்துப்பட்டி, இடுப்பு பட்டி உள்ள சட்டைக்கு ஏற்றது போன்று அம்மா வாங்கி அனுப்பிய காலணி. இதனை மிஸ் பண்ண முடியுமா? சம்பவம் நடந்த அன்று முழு விடுதியும் உறக்கத்தில் இருந்த நேரம் நானும் என் அறைத்தோழியும் பூனை போன்று நடந்த போய் சுவரருகில் தொடுவார் அற்று கிடந்த அந்த காலணியை எடுத்து வந்துவிட்டோம். வேறென்ன சின்ரெல்லா கதை போன்று யாராவது ஒத்த காலணியை வைத்து என்னை தேடிக்கண்டுபிடிக்க போவதில்லை என்பது எனக்கு தெரியும் தானே….


No comments:
Post a Comment