கடந்த ஒரு வருடமாக வருகைதரு விரிவுரையாளராக பணியாற்றி வருகின்றேன். விரிவுரையாளர் என்றாலே முகத்தை உர் என்று வைத்துக்கொள்ள வேண்டும், பாடத்தை மட்டும் விளங்கப்படுத்த வேண்டும், பாடத்தில் சந்தேகமிருந்தால் விரிவுரையாளருக்கான அறைக்கு வந்து தான் விளக்கம் கேட்க வேண்டும் என பல வழமையான “வேண்டும்” என்னுடைய கற்பித்தல் அகராதியிலில்லை. ஒரு மாணவியாக மேற்குறித்த “வேண்டும்” களை கடந்தவள் என்ற வகையில் எனக்கு இவற்றில் உடன்பாடில்லை. எமது ஆசிய நாடுகளில் ஒரு பிள்ளை வீட்டை விட்டு 4 அல்லது 5 வயதில் கற்றலுக்காக அடுத்த வட்டத்தினுள் நுழைகின்றது. பதின்மவயது வரை ஆசான்கள் தான் இவர்களது பண்புகளை, கற்றலின் கொள்ளளவினை தீர்மானிக்கின்றார்கள். அதன் பின்னர் தொழிற்பயிற்சி அல்லது பல்கலைக்கழகத்தில் நுழையும் போது விரிவுரையாளர்கள் இவர்களுக்கு கற்றுக்கொடுக்கின்றார்கள். ஆனால் எல்லா ஆசான்களும் மாணவர்களை வழிநடத்துகின்றார்களா என்றால் அது கேள்விக்குறியானதே. என்னைப்பொறுத்தளவில் பாடங்களை கற்பித்தலை விடவும் முக்கியமானது மாணவர்களுக்கான ஆளுமை விருத்தியும் வழிநடத்தலும் என்பேன். இதனை நான் வளவாளராக பயணிக்கும் அல்லது விரிவுரையாற்றும் தரப்பினரிடையேயும் நடைமுறைப்படுத்தி வருகின்றேன். என் மாணவர்களிடம் தோழியாக இருக்கவே நான் விரும்புவதுண்டு.
இதனால் தானோ என்னவோ என் மாணவர்கள் தங்களுடைய அந்தரங்கங்கள், தனிப்பட்ட விடயங்களை கூட என்னிடம் பகிர்வதுண்டு. வகுப்பில் நுழைந்தவுடன் பாடம் எடுப்பதை விடவும் பதினைந்து நிமிடங்களாவது அன்று மனதில் எமக்கு தோன்றிய விடயங்களை நாம் பகிர்ந்துகொள்வதுண்டு. பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படுகின்ற உளவியல் அழுத்தங்கள் மற்றும் இதன் போதான உடல் நோவினை கூட என் மாணவிகளின் முகத்தினை பார்த்து ஓரளவாவது விளங்கிக்கொள்ள என்னால் முடிவதுண்டு. இதனை தாண்டி தனிப்பட்ட விடயம் சார் பிரச்சினை என்றாலும் கூட அவர்கள் முகமே காட்டிக்கொடுத்துவிடும். ஏதாவது பேச வேண்டுமாயின் என் மாணவர்களும் தயங்காமல் என்னிடம் பேசுவார்கள், விரிவுரையாளர்களுக்கான அறை தாண்டி நூலகத்தில், தோட்டத்தில் அமர்ந்து கூட நாம் பேசிக்கொள்வதுண்டு, இதற்கு எம்மிடையான குறைந்தளவு வயது வித்தியாசமும் காரணமாயிருக்கலாம். என் சக விரிவுரையாளர்கள் கூட சில நேரங்களில் நான் மாணவர்களுக்கு அதிக இடம் கொடுப்பதாக பேசிக்கொள்வார்கள். இவ்வாறு செய்வதால் மரியாதைக்குறை ஏற்டும் என்பதும் மாணவர்கள் எம்மை மதிப்பது குறைந்துவிடும் என்பதும் அவர்கள் வாதம். ஆனால் வெளிநாடுகளில் மாணவர்கள் ஆசானை பெயர் சொல்லி கூப்பிடுவது போன்று நாமும் ஆரம்பித்தால் நல்லது என்பதே என்னுடைய கருத்து.
இவை ஒரு புறமிருக்க கடந்த மாதத்திலிருந்து நான் கற்பதற்காக நாடு கடந்து வந்துவிட்டேன். எனினும் இணையவழி மூலம் விரிவுரையாற்றி வருகின்றேன். என்ன தான் பேசினாலும் நேரில் என் மாணவர்களுடன் பேசுவதையும் அவர்களை அவதானிப்பதையும் இணையவழி மூலம் நடைமுறைப்படுத்த முடிவதில்லை. நான் அங்கு விரிவுரையாற்றி வந்த காலப்பகுதியில் என் மாணவியொருத்தி நல்ல கெட்டிக்காரி, எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவள் திடீரென சில நாட்களாக யோசனையுடன் இருப்பதை அவதானிக்க முடிந்தது. தனியாக சந்தித்து பேசிய போது தான் ஒருவரை நேசிப்பதாகவும் அவரும் தன்னுடைய செய்கையில் தன்னை நேசிப்பதை வெளிப்படுத்துவதாகவும் ஆனால் இருவரும் நேரிடையாக சொல்லிக்கொள்ளவில்லை எனவும் இது தனக்குள் ஒருவித பதற்றத்தினை ஏற்படுத்துவதாகவும் பகிர்ந்துகொண்டாள். நேசிப்பென்பது தடால் என்று போய் ஐ லவ் யூ என்று சொல்லிவிடும் விடயமல்ல. இருவரும் முதலில் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளுங்கள். அந்தப்புரிதல் ஆழந்த அன்பை, முதிர்ச்சியை இருவருக்குள்ளும் தோற்றுவிக்கும். அது ஒரு கணத்தில் தன்னை பரிமாறிக்கொள்ளும் என்றெல்லாம் பேசி ஒருவிதமாக அவளை தேற்றியிருந்தேன். அதன் பின்னர் நேரடியாக பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பரீட்சை, என்னுடைய தனிப்பட்ட விடயங்கள், பயணங்கள் என இரு மாதங்களாக அவளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை. ஆனூல் முகநூலில் “மிஸ் நீங்க சொன்னது சரி. நான் இப்போது படிப்பில் மட்டும் கவனஞ்செலுத்துகின்றேன்…” என்று கடந்த பிறந்த நாளின் போது என்னை வாழ்த்திய பின் அனுப்பியிருந்தாள். இன்று அதிகாலையில் எழுப்பி தொலைபேசியினைப் பார்த்தால் அவளிடமிருந்து பல அழைப்புக்கள், ….. என்று குறுஞ்செய்தி வேறு. இலங்கைக்கும் நான் தங்கியுள்ள நாட்டிற்கும் நேர வித்தியாசமுண்டு. நான் அழைப்புக்களை பார்த்த போது அங்கு இரவாயிருக்கும். பரவாயில்லை என்று எடுத்துப்பார்த்தால் அழைப்பு எடுக்கப்பட்டாலும் அந்தப்பக்கம் விம்மல் சத்தம். நானும் சில நிமிடங்கள் பேசாமலிந்த பின்னர் என்னவென்று வினவினால்……..
“மிஸ் நான் உங்களிடம் சொன்னேனே அவர் என்னைப் பற்றி ஒருவரிடம் தவறாக கதைத்துள்ளார்….. எனக்கு அவமானமாகவும் கவலையாகவுமிருக்கு….”
ஏன் அவருக்கு உங்களை பிடிக்கவில்லையா……?
“ தெரியாது.. ஆனால் அவர் செய்தவை நடந்துகொண்டவை அப்படித்தான் இருந்தது…. திடீரென என்னை பொதுவில் அவமானப்படுத்த அல்லது நான் ஏதாவது சொன்னால் மட்டந்தட்டி பேச ஆரம்பித்தார். ஒருவேளை நான் விருப்பத்தினை வெளிப்படையாக சொல்லவில்லை என்பதால் தான் புரிதல் இன்றி அல்லது இயலாமையில் பொறுமையின்றி கதைக்கின்றார் என்று நினைத்தேன். ஆனால் அவர் என் நண்பியிடம் தான் என்னை விரும்பவில்லை என்றும் நான் தான் அவர் பின்னால் விருப்பம் கேட்டுத் திரிந்ததாகவும் அவர் என்னிடம் இல்லை என்று சொன்னதாகவும் சொல்லியிருக்கின்றார். எனக்கு அவமானமாக இருக்கு…….”
இடையில் இருப்பவர்கள் கதைப்பது இருக்கட்டும் நீங்க இது பற்றி அவரிடம் பேசலையா….?
வட்ஸ்அப்பில் வொயிஸ் போட்ட நான் மிஸ், பார்த்திருக்கின்றார் என்று காட்டுகின்றது…ஆனால் அவர் பதில் போடல….
இதே மாதிரியொரு சந்தர்ப்பம் என்னையும் கடந்திருக்கின்றது. இங்கு வட்ஸ்அப் அங்கு மின்னஞ்சல். வுpத்தியாசம் அவ்வளவே. வுலியெல்லாம் ஒன்று தான்…. ஆனால் இதற்காக மனவருத்தப்பட்டு, அழுது சற்று நாள் கழித்து யோசித்துப்பாருங்கள்… ஒருவருடன் வாழ்தல் என்பது சில நாட்களான விடயமல்ல. இன்றைய நாட்களில் சமூக ஊடக ஆதிக்கம் மற்றும் மனிதத்தொடர்புகள் மலிந்துபோய் விட்டன. உறவுகளுக்கிடையான நேர்மை தன்மை குறைந்துவிட்டது.
1. முதலாவது நாம் ஒருவரை நேசித்தால் அவரை மட்டந்தட்டுவது, அவமானப்படுத்துவது , கோபப்பட்டு கத்துவது எல்லாம் எதனால்…? நீங்கள் அந்த உறவிற்கு நேர்மையில்லாவிட்டால் தான் இந்த இயல்புகள் உங்களை ஆக்கிரமிக்கும். கோபம் என்பது ஆண்மையல்ல. அது அதைரியத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் உச்சம்.
2. நாம் ஒருவரை நேசிக்க முன் அல்லது உறவுநிலைக்கு தேர்ந்தெடுக்க முன் ஆழமாக யோசிக்க வேண்டும். நம் வார்த்தைகளாலோ செய்கைகளாலோ ஒருவருக்கு நம்பிக்கை ஏற்படுத்திய பின்னர் அதை பூசிமெழுகுவது ஈனசெயல்.
3. நம்பிக்கையை ஏற்படுத்தும் அதேவேளை திறந்த உரையாடல்களை மேற்கொள்வது, ஒருவேளை உங்களுக்கு கடந்தகால முரண்கள் இருப்பின் அதனை துணையாக வர இருப்பவரிடம் பகிர்வதே நாகரீகம். மற்றும் படி நுனிநாக்கு ஆங்கிலமும் உடுத்துகின்ற உடைகளும் அல்ல
4. நமக்கு சரியென்று சொன்னால் புகழ்வதற்கும் இல்லை என்றால் அவமானப்படுத்துவதற்கும் அன்பு என்பது வியாபாரமல்ல. நம்மைவிட்டு பிரிந்தாலும் நம்மால் அவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும் உபத்திரம் கொடுக்காமல் ஒதுங்குவதே மனிதம்.
5. தவறான புரிதல், இடையில் நிற்பவர்களால் சொல்லப்படும் விடயங்கள் உங்களை ஏதோவொரு கணத்தில் உங்களை நேசிப்பவரைப்பற்றி பிழையாக பேச தூண்டிவிட்டது என வைத்துக்கொண்டாலும் ஒருவர் தன்னுடைய வலியை கண்ணீருடன் சொல்லும் போது உங்கள் மனச்சாட்சி உங்களை உறுத்தவில்லையா? குறைந்தபட்சம் என்னை மன்னித்தவிடு என்று சொல்வதில் நீங்கள் ஒன்றும் குறைந்துவிடுவதில்லை.
6. ஒருவiர் அதுவும் நம்மை நேசித்தவர்களை (நீங்கள் நேசிக்கவில்லை என்றாலும்) காயப்படுத்தி விட்டோம் என்று தெரிந்தும் உலகத்திற்கும் சமூக ஊடகங்களிலும் நடிக்கின்றீர்கள் என்றால் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளலாம். நீங்கள் மகாநடிகர். நீங்கள் இன்று செய்திருப்பது முதல் தடவையாக இருக்காது. பழக்கப்பட்டவர்களால் மட்டுமே அடுத்தவர் வலியை இலகுவாக கடக்க முடியும்.
7. நீங்கள் அடுத்தவர் கௌரவத்தினை குறைக்கும் போதும் அவர்கள் மீதும் கறைபூசும் போதும் இதனை நினைவில் வையுங்கள். இன்று நீங்கள் வென்று விட்டதாக தோன்றலாம் அல்லது நீங்கள் விம்பத்தினை உருவாக்கலாம். பிழையே செய்யாத நல்லவனாக நடிக்கலாம். ஆனால் காலம் சிறந்த நீதிபதி. அதன் கணக்கு என்றும் தப்புவதில்லை. நீங்கள் யாரை காயப்படுத்தினீர்களோ அவர்கள் வாழப்போகும் வாழ்வு உங்களை சுட்டெரிக்கும். நீங்கள் இழந்த வாழ்வை இன்னொருவர் வாழ்ந்துகொண்டிருப்பார். இதை விடவும் தண்டணை உங்களுக்கு ஏது….?
8. சமூகஊடகமும், அதில் நீங்கள் வாழும் இரட்டை அர்த்த வாழ்வும் அல்ல வாழ்க்கை. ஒருவருடன் கைகோர்த்து நீண்ட பயணம் போவதும் வளமான தலைமுறையை உருவாக்குவதுமே வாழ்க்கை. இன்றைய விம்பங்கள் ஒரு நாள் உடையும், முதுமை உங்களை தழுவும். ஒரு பொழுதில் சாய்ந்திருக்கும் போது நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை கண்ணீரை வரவழைக்கும். அதில் ஆனந்தமும் இருக்கும் வருத்தமும் இருக்கும். இந்த இரண்டில் வருத்தம் இருக்குமென்றால் நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்று மட்டுமே அர்த்தம்.
9.ஒருவேளை ஒருவர் உங்களை நேசித்து கேட்டால் கூட ஆம்/ இல்லை என்று சொல்கின்றதை மட்டும் செய்யுங்கள். உங்களை கதாநாயகர்கள் என்று மற்ற ஆண்கள், பெண்கள் என நீங்கள் வழிபவர்களிடம் காட்டிக்கொள்வதற்காக மற்றவர்களை, அவர்களது சுயகௌரவத்தினை காயப்படுத்தாததீர்கள்.
அன்புத்தோழியே, அதிகம் அழாதே.. கண்ணீர் விலை மதிக்க முடியாததொன்று அதனை உயரிவர்களுக்காக மட்டுமே சிந்த வேண்டும். கண்ணீர் இன்றி ஒரு உண்மைக்காதல் இருப்பதில்லை. ஆனால் அந்தக்கண்ணீரை துடைக்குமளவு கம்பீரமான, முதிர்ச்சியான ஒருவரை நாம் நேசிக்க வேண்டும். முதலில் மூன்றாம் நபரிடம் பேசியிருக்க கூடாது, அல்லது சுட்டிக்காட்டப்பட்டவுடன் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் அல்லது இதனை சீர்செய்ய முதிர்ச்சியான நண்பர்கள், உறவுகளை வைத்து உன்னை தொடர்புகொள்ள முயற்சித்திருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாத ஒருவரை தேடாதே அன்பே. இன்று நடுவில் விட்டுவிட்டு கறைபூசுபவர்கள் நாளை வாழ்க்கை நடுவிலும் விட்டுவிட்டு ஓடுவார்கள். அழகு, பணம், செல்வாக்கு, படிப்பு இவற்றைவிட பண்பும் மனச்சாட்சியும் ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு முக்கியம் தோழி. காலத்திடம் விட்டுவிடு. உண்மையில் அன்பிருப்பின் அது நம்மை சேர வழிதேடும். ஒருவேளை நம்மை தேடவில்லை எனில் நம்மை தேடாத அன்பு நமக்கெதற்கு……. ஒருவர் மீதான அன்பிற்காக குடும்பத்தை இழக்கலாம், பதவி, பணம், புகழ் இழக்கலாம் ஆனால் சுயகௌரவத்தினை மட்டும் இழக்கவே கூடாது.
இதெல்லாம் தாண்டி இந்த உறவை உங்களால் தாண்ட முடியவில்லை என்றால் சற்று பொறுத்திருங்கள். இது உண்மையான அன்பு என்றால் அது வழியை கண்டுபிடித்து தானே வந்து சேரும். இது மனதை மட்டும் சாட்சியாக கொண்ட அன்பென்றால்.....


