Wednesday, December 31, 2025

(நான் ) மலர்கள் கேட்டேன்


அணையப்போற விளக்கு சுடர் விட்டெரியும் என்றொரு சொலவடை எங்கட ஊர்களிலுண்டு. இது சரி தான் போல… நேரம் நெருங்க நெருங்க வேலைகள் என் ஒவ்வொரு மணித்துளிகளையும் ஆக்கிரமிப்பதை உணர முடிகின்றது. நேரம் நகர்கின்றதே தவிர வேலைகள் முடிந்த பாடில்லை. இன்றுடன் வருடமும் முடியப்போகின்றது. இன்னும் சில மணித்துளிகள் தான் மீதமுண்டு. இதன் பதற்றம் என்னுள் இருந்தாலும் அடுத்த வருடத்தில் எனக்கென காலம் பல அன்பளிப்புகளை கையில் வைத்துக்கொண்டு காத்திருக்கின்றது என்பதனை மட்டும் எனக்குள் உணரமுடிகின்றது. கூடவே அதற்கேற்ப நடக்கின்றவையெல்லாம் இந்த எதிர்கால நன்மைகளுக்கே என்பதை முன்கூட்டிய நிகழ்வுகளும் தெரிவிக்கின்றன. 

கடந்த வருடம் நான் எடுத்துக்கொண்ட தீர்மானங்களில் ஒன்று இவ்வருடத்தில் சிறுவர்கள் குறித்து ஏதாவதொரு முன்னெடுப்பினை மேற்கொள்ள வேண்டும் என்பது. குறிப்பாக வீதியோரங்களில் கையேந்தி நிற்கின்ற குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்றினை திறக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் என்னுடைய நிறுவனங்களில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகள், அடுத்த கட்டம் நோக்கிய நகர்த்தலுக்கான வேலைப்பளுக்கள் மற்றும் தனிப்பட்ட ரீதியில் வாழ்க்கைசார் விடயத்தில் எடுத்த தீர்மானம் அதையொட்டிய குடும்ப அழுத்தங்கள் , மன உடைவுகள் மற்றும் இவ்வருடம் எனக்கிடம்பெற்ற சத்திரசிகிச்சை , அதனால் பாழாகிப்போன மூன்று மாதகாலங்கள் என தீர்மானத்தினை நோக்கி என்னால் ஓரடி கூட எடுத்துவைக்க முடியவில்லை. இது பெரும் உறுத்தலாகவே என்னை தொடர்ந்திருந்தது. 

தித்வா புயல் நம்முடைய நாட்டை புரட்டிப்போட்டதை குறித்து எமக்கு நன்றாகவே தெரியும். இதுவொரு கவலைக்குறிய விடயம் என்றாலும் எல்லாவற்றிக்கும் பின்னர் சில நல்ல விடயங்கள் உண்டு என்பதனை இதிலிருந்தும் நான் உணர தலைப்படுகின்றேன். வருடக்கடைசியில் இடம்பெற்ற இந்த அனர்த்தம் என்னுடைய நோக்கத்திற்கு எவ்வாறு வழிகோலியுள்ளது என்று பாருங்கள்……. 

நோபாளத்தினை சேர்ந்தவர்  Dr. Navneet Bitchcha  நாம் இருவரும் Internews இனால் முன்னெடுக்கப்பட்ட சுகாதார அறிக்கையிடல் நிகழ்வில் பங்கேற்றிருந்தோம். அப்போது கொவிட் காலம்.  Dr. Navneet Bitchcha  கொவிட் தடுப்பூசி தொடர்பில் ஆராய்வுகளை நிகழ்த்திக்கொண்டிருந்தவர். நாம் இருவரும் இணைந்து இது குறித்த ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தோம். நான் பயணித்த நாடுகளில் நேபாள், சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளுக்கு பல தடவைகள் பயணித்துள்ளேன். 2022 இற்கு பின்னர் நேபாள் சென்ற போதெல்லாம் …. சந்திக்கவும் பழகவும் நிறைய வாய்ப்புக்கள் கிடைத்திருந்தன. நேபாளின் பல பகுதிகளுக்கு ஒன்றாக பயணித்திருக்கின்றோம். பல ஆய்வுகளை தொடர்ந்துகொண்டுமிருக்கின்றோம். சாதாரண நட்பினைத்தாண்டியும் நல்லதொரு உறவு எம்மிடையே உண்டு. தன்னுடைய குடும்பத்தினரிடம் கூட என்னை அறிமுகப்படுத்தியிருந்தார். நேபாளத்தில் இடம்பெறுகின்ற கலாசார விழாவில் குடும்பத்திற்கு வருகின்ற மருமக்களுக்கு பரிசளிப்பதுண்டாம். … அம்மாவும் எனக்கு சிகப்பு புடவை பரிசளித்திருந்தார். ஏன் எனக்கு இதனை தந்தார் என்று கேட்டால் மளுப்புகின்ற நண்பர் இவர். அந்த நிதானம் , முதிர்ச்சி, பண்பு, வெளிப்படுதன்மை என்பன எனக்கு அவரிடம் மிகப்பிடித்தவை.

புயலடித்து தொடர்புகள் அறுந்திருந்த நேரத்தில் பல நூறு முறை எனக்கு அழைப்பெடுத்தும் கிடைக்காததால் கடும் பாதிப்புக்குள்ளாகி விட்டார் இந்த ஆள். அப்போது ஜேர்மனியில் ஆய்வுகூட வேலையில் இருந்தவர் உடனடியாக இலங்கைக்கு வந்தது உண்மையில் Sweet Surprise வந்ததுமில்லாமல் எனக்கு அழைப்பெடுத்து சுகம் விசாரிக்கும் போது கூட இலங்கையில் நிற்பதை சொல்லாமல் எங்கள் நண்பர்களின் உதவியுடன் ஊருக்கு தேடியும் வந்துவிட்டார். இந்த நாட்களில் உருவானது தான் எம்முடைய திட்டம். அதாவது பாதிப்புற்ற குழந்தைகளுக்கான உளவியல் ஆற்றுப்படுத்துகையினை முன்னெடுத்தல். 

இந்த அடிப்படையில் கடந்த இரு வார திட்டமிடலில் இதனை இலங்கையிலும், இந்தியாவிலும் நேபாளிலும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். ஆனால் Dr. Navneet Bitchcha  இற்கு இரு வாரங்கள் தான் வீசா கிடைந்திருந்தமையினால் மீண்டும் ஜேர்மன் திரும்பிவிட்டார். எனினும் இருவருக்குமான இலக்கிற்கான பயணத்தினை நான் தொடர்ந்திருந்தேன். கடந்த சில நாட்கள் மலையகத்தின் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பயணித்து 500 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான உளவியல் ஆற்றுப்படுத்துகையினை மேற்கொண்டுள்ளோம். இதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு இந்தியாவிலும் நேபாளத்திலும் போர் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் , வறுமையினால், வன்முறையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆற்றுப்படுத்துகை செய்யவுள்ளோம். நான் மலர்கள் கேட்டேன் இறைவன் வனமே தந்து விட்டான். 

2026 இல் நடைமுறைப்படுத்தவென நான் இம்முறை பெரிதான தீர்மானங்களை எடுக்கவில்லை. தற்போது முன்னெடுத்து வருகின்ற கட்டடம், வியாபாரம் மற்றும் தனியார் நிறுவனங்களையும் அதன் செயற்பாடுகளையும் விருத்திசெய்வதில் தான் இம்முறை கவனஞ்செலுத்த நினைக்கின்றேன். அத்துடன் தனிப்பட்ட வாழ்க்கைசார் முடிவுகள் சிலவும் தற்துணிவுடன் எடுக்க தீர்மானித்துள்ளேன். அநேகமாக அடுத்த வருடம் நான் இலங்கையில் நிற்கும் நாட்கள் மிகக்குறைவாகவே இருக்கும். அத்துடன் எதிர்வரும் நாட்களில் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கின்றது. அதற்காக பெட்டியுடன் தயாராகிக்கொண்டிருக்கின்றேன். கூடவே பல தனிப்பட்ட தீர்மானங்களுடனும். 

இரண்டு நேர்காணல் , மூன்று நிகழ்வுகளை நிகழ்த்திவிட்டாலே தாம் தான் ஜாம்பவான்கள் என்று பீத்திக்கொள்பவர்கள் மத்தியில் உலகலாவிய ரீதியில் பல ஆய்வுகளையும் முன்னெடுப்புக்களையும் நிகழ்த்திவிட்டு மௌனமாக கடக்கின்ற என் நண்பன் குறித்து அறிய வேண்டும் என்றால்  Dr.Navneet Bichha என்று இணையத்தில் தேடிப்பாருங்கள்.
 

பிறக்கவுள்ள புதுவருடம் அனைவருக்கும் அர்த்தமுள்ளதாகவும் உங்களால் மற்றவர்களுக்கு பயனுள்ளதாகவும் அமைய என்னுடைய வாழ்த்துக்கள்

                    Welcome 2026 Images - Free Download on Freepik

 


No comments:

Post a Comment

மனசாட்சி

  கடந்த ஒரு வருடமாக வருகைதரு விரிவுரையாளராக பணியாற்றி வருகின்றேன். விரிவுரையாளர் என்றாலே முகத்தை உர் என்று வைத்துக்கொள்ள வேண்டும், பாடத்தை ம...