Wednesday, December 31, 2025

(நான் ) மலர்கள் கேட்டேன்


அணையப்போற விளக்கு சுடர் விட்டெரியும் என்றொரு சொலவடை எங்கட ஊர்களிலுண்டு. இது சரி தான் போல… நேரம் நெருங்க நெருங்க வேலைகள் என் ஒவ்வொரு மணித்துளிகளையும் ஆக்கிரமிப்பதை உணர முடிகின்றது. நேரம் நகர்கின்றதே தவிர வேலைகள் முடிந்த பாடில்லை. இன்றுடன் வருடமும் முடியப்போகின்றது. இன்னும் சில மணித்துளிகள் தான் மீதமுண்டு. இதன் பதற்றம் என்னுள் இருந்தாலும் அடுத்த வருடத்தில் எனக்கென காலம் பல அன்பளிப்புகளை கையில் வைத்துக்கொண்டு காத்திருக்கின்றது என்பதனை மட்டும் எனக்குள் உணரமுடிகின்றது. கூடவே அதற்கேற்ப நடக்கின்றவையெல்லாம் இந்த எதிர்கால நன்மைகளுக்கே என்பதை முன்கூட்டிய நிகழ்வுகளும் தெரிவிக்கின்றன. 

கடந்த வருடம் நான் எடுத்துக்கொண்ட தீர்மானங்களில் ஒன்று இவ்வருடத்தில் சிறுவர்கள் குறித்து ஏதாவதொரு முன்னெடுப்பினை மேற்கொள்ள வேண்டும் என்பது. குறிப்பாக வீதியோரங்களில் கையேந்தி நிற்கின்ற குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்றினை திறக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் என்னுடைய நிறுவனங்களில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகள், அடுத்த கட்டம் நோக்கிய நகர்த்தலுக்கான வேலைப்பளுக்கள் மற்றும் தனிப்பட்ட ரீதியில் வாழ்க்கைசார் விடயத்தில் எடுத்த தீர்மானம் அதையொட்டிய குடும்ப அழுத்தங்கள் , மன உடைவுகள் மற்றும் இவ்வருடம் எனக்கிடம்பெற்ற சத்திரசிகிச்சை , அதனால் பாழாகிப்போன மூன்று மாதகாலங்கள் என தீர்மானத்தினை நோக்கி என்னால் ஓரடி கூட எடுத்துவைக்க முடியவில்லை. இது பெரும் உறுத்தலாகவே என்னை தொடர்ந்திருந்தது. 

தித்வா புயல் நம்முடைய நாட்டை புரட்டிப்போட்டதை குறித்து எமக்கு நன்றாகவே தெரியும். இதுவொரு கவலைக்குறிய விடயம் என்றாலும் எல்லாவற்றிக்கும் பின்னர் சில நல்ல விடயங்கள் உண்டு என்பதனை இதிலிருந்தும் நான் உணர தலைப்படுகின்றேன். வருடக்கடைசியில் இடம்பெற்ற இந்த அனர்த்தம் என்னுடைய நோக்கத்திற்கு எவ்வாறு வழிகோலியுள்ளது என்று பாருங்கள்……. 

நோபாளத்தினை சேர்ந்தவர்  Dr. Navneet Bitchcha  நாம் இருவரும் Internews இனால் முன்னெடுக்கப்பட்ட சுகாதார அறிக்கையிடல் நிகழ்வில் பங்கேற்றிருந்தோம். அப்போது கொவிட் காலம்.  Dr. Navneet Bitchcha  கொவிட் தடுப்பூசி தொடர்பில் ஆராய்வுகளை நிகழ்த்திக்கொண்டிருந்தவர். நாம் இருவரும் இணைந்து இது குறித்த ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தோம். நான் பயணித்த நாடுகளில் நேபாள், சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளுக்கு பல தடவைகள் பயணித்துள்ளேன். 2022 இற்கு பின்னர் நேபாள் சென்ற போதெல்லாம் …. சந்திக்கவும் பழகவும் நிறைய வாய்ப்புக்கள் கிடைத்திருந்தன. நேபாளின் பல பகுதிகளுக்கு ஒன்றாக பயணித்திருக்கின்றோம். பல ஆய்வுகளை தொடர்ந்துகொண்டுமிருக்கின்றோம். சாதாரண நட்பினைத்தாண்டியும் நல்லதொரு உறவு எம்மிடையே உண்டு. தன்னுடைய குடும்பத்தினரிடம் கூட என்னை அறிமுகப்படுத்தியிருந்தார். நேபாளத்தில் இடம்பெறுகின்ற கலாசார விழாவில் குடும்பத்திற்கு வருகின்ற மருமக்களுக்கு பரிசளிப்பதுண்டாம். … அம்மாவும் எனக்கு சிகப்பு புடவை பரிசளித்திருந்தார். ஏன் எனக்கு இதனை தந்தார் என்று கேட்டால் மளுப்புகின்ற நண்பர் இவர். அந்த நிதானம் , முதிர்ச்சி, பண்பு, வெளிப்படுதன்மை என்பன எனக்கு அவரிடம் மிகப்பிடித்தவை.

புயலடித்து தொடர்புகள் அறுந்திருந்த நேரத்தில் பல நூறு முறை எனக்கு அழைப்பெடுத்தும் கிடைக்காததால் கடும் பாதிப்புக்குள்ளாகி விட்டார் இந்த ஆள். அப்போது ஜேர்மனியில் ஆய்வுகூட வேலையில் இருந்தவர் உடனடியாக இலங்கைக்கு வந்தது உண்மையில் Sweet Surprise வந்ததுமில்லாமல் எனக்கு அழைப்பெடுத்து சுகம் விசாரிக்கும் போது கூட இலங்கையில் நிற்பதை சொல்லாமல் எங்கள் நண்பர்களின் உதவியுடன் ஊருக்கு தேடியும் வந்துவிட்டார். இந்த நாட்களில் உருவானது தான் எம்முடைய திட்டம். அதாவது பாதிப்புற்ற குழந்தைகளுக்கான உளவியல் ஆற்றுப்படுத்துகையினை முன்னெடுத்தல். 

இந்த அடிப்படையில் கடந்த இரு வார திட்டமிடலில் இதனை இலங்கையிலும், இந்தியாவிலும் நேபாளிலும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். ஆனால் Dr. Navneet Bitchcha  இற்கு இரு வாரங்கள் தான் வீசா கிடைந்திருந்தமையினால் மீண்டும் ஜேர்மன் திரும்பிவிட்டார். எனினும் இருவருக்குமான இலக்கிற்கான பயணத்தினை நான் தொடர்ந்திருந்தேன். கடந்த சில நாட்கள் மலையகத்தின் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பயணித்து 500 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான உளவியல் ஆற்றுப்படுத்துகையினை மேற்கொண்டுள்ளோம். இதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு இந்தியாவிலும் நேபாளத்திலும் போர் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் , வறுமையினால், வன்முறையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆற்றுப்படுத்துகை செய்யவுள்ளோம். நான் மலர்கள் கேட்டேன் இறைவன் வனமே தந்து விட்டான். 

2026 இல் நடைமுறைப்படுத்தவென நான் இம்முறை பெரிதான தீர்மானங்களை எடுக்கவில்லை. தற்போது முன்னெடுத்து வருகின்ற கட்டடம், வியாபாரம் மற்றும் தனியார் நிறுவனங்களையும் அதன் செயற்பாடுகளையும் விருத்திசெய்வதில் தான் இம்முறை கவனஞ்செலுத்த நினைக்கின்றேன். அத்துடன் தனிப்பட்ட வாழ்க்கைசார் முடிவுகள் சிலவும் தற்துணிவுடன் எடுக்க தீர்மானித்துள்ளேன். அநேகமாக அடுத்த வருடம் நான் இலங்கையில் நிற்கும் நாட்கள் மிகக்குறைவாகவே இருக்கும். அத்துடன் எதிர்வரும் நாட்களில் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கின்றது. அதற்காக பெட்டியுடன் தயாராகிக்கொண்டிருக்கின்றேன். கூடவே பல தனிப்பட்ட தீர்மானங்களுடனும். 

இரண்டு நேர்காணல் , மூன்று நிகழ்வுகளை நிகழ்த்திவிட்டாலே தாம் தான் ஜாம்பவான்கள் என்று பீத்திக்கொள்பவர்கள் மத்தியில் உலகலாவிய ரீதியில் பல ஆய்வுகளையும் முன்னெடுப்புக்களையும் நிகழ்த்திவிட்டு மௌனமாக கடக்கின்ற என் நண்பன் குறித்து அறிய வேண்டும் என்றால்  Dr.Navneet Bichha என்று இணையத்தில் தேடிப்பாருங்கள்.
 

பிறக்கவுள்ள புதுவருடம் அனைவருக்கும் அர்த்தமுள்ளதாகவும் உங்களால் மற்றவர்களுக்கு பயனுள்ளதாகவும் அமைய என்னுடைய வாழ்த்துக்கள்

                    Welcome 2026 Images - Free Download on Freepik

 


Monday, December 22, 2025

அனைத்து Toxic ஆண்களுக்குமானது........

 

நீண்ட வேலைப்பளு நிறைந்த நாட்களின் பின்னர் திரைப்படம் பார்ப்பதற்கு இன்றைய நாளை திட்டமிட்டு ஒதுக்கியிருந்தேன். இதற்காக இரு படங்களையும் மனதினுள் நினைத்திருந்தேன். ஒன்று 12 வருடங்களுக்கு முன் வெளிவந்தது மற்றது அண்மையில் வெளிவந்தது.  

சில திரைப்படங்கள் எத்தனை தடவைகள் பார்த்தாலும் அலுப்பதில்லை. அல்லது ஏதோவொரு வகையில் நமக்கும் அந்த திரைப்பட பாத்திரங்களுக்குமிடையில் இருக்கின்ற உணர்வுநிலை தொடர்பு திரும்பத்திரும் பார்க்கத் தூண்டுவதுண்டு. அப்படி ஐந்தாவது தடவையாக நான் பார்க்கின்ற திரைப்படம்  Queen ஹிந்தித்திரைப்படம். இன்னும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் ஆங்கில உபதலைப்புகளுடன் இணையத்தில் உள்ளது. 20014 இல் வெளிவந்த இந்த திரைப்படத்தின் இயக்குநர் விகாஸ் பஹ்ல் , இசை அமித் திரிவேதி. மொத்தமே மூன்று பாடல்கள். கதையும் பொருந்துகின்ற பாடல்களும் பயன்படுத்தப்பட்டுள்ள இசைக்கருவிகளும் இத்திரைப்படத்தின் மிகப்பெரிய பிளஸ். கங்கணா ரணாவத் இத்திரைப்படத்தின் முக்கிய பாத்திரமான ராணி மெஹ்ரா இல் நடித்துள்ளார். இதை விட வாழ்ந்துள்ளார் என்பது மிகப்பொருத்தமானது. 

ராணியின் திருமணத்திற்கான மெஹந்தி நிகழ்வில் தான் திரைப்படம் ஆரம்பமாகின்றது. கலகலப்பான சூழ்நிலையில் ஆரம்பித்தாலும் அடுத்த சில நிமிடங்களில் ராணிக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட விஜயின் அழைப்பின் பெயரில் அவரைச்சந்திக்கும் ராணியிடம் திருமணத்தினை நிறுத்தும் படி விஜய் கோரிக்கை விடுப்பதுடன் ஆரம்பித்த கலகலப்பு சூழல் மாறிவிடுகின்றது. சரியான காரணமின்றி தடுமாற்றத்துடன் விஜயினால் திருமணம் நிறுத்தப்படுவதுடன் முன்கதைச்சுருக்கத்துடன் தொடர்கின்றது கதை. ராணி- விஜய் இருவரது தந்தையர்களும் நண்பர்கள். ராணியின் குடும்பத்தினரால் நடாத்தப்படுகின்ற கடைக்கு வருகின்ற விஜய் ராணியை முதல் பார்வையில் பிடித்துப்போய் பின்தொடர ஆரம்பிக்கின்றார். ஹோம்சயன்ஸ் படிக்கின்ற ராணியை தொடர்ந்தும் வற்புறுத்தி காதலிக்க ஆரம்பிக்கின்றனர். அதன் பின்னர் விஜய் படிப்பதற்கு வெளிநாடு சென்று விடுகின்றார். அவர் நாடு திரும்பும் போது ஏற்கனவே இரு குடும்பத்தினரும் பேசியற்கமைய திருமணத்திற்கான ஆயத்தங்கள் இடம்பெறுகின்றன. இதன் போது தான் வலுவான காரணமின்றி திருமணம் விஜயினால் நிறுத்தப்பட்டு விடுகின்றது. திருமணம் நிறுத்தப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீள்கின்ற ராணி ஏற்கனவே திருமணத்தின் பின்னர் தேனிலவிற்காக செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த பாரிஸ்ற்கு தனியாக பயணப்படுகின்றாள். அங்கு பல்வேறுப்பட்ட நபர்கள், நண்பர்கள் என புதியதொரு சூழலிற்குள் காலச்சூழலில் இழுத்துசெல்லப்படுகின்றாள். 

தனியாக கனத்த மனதுடன் பயணிக்கின்ற ராணியின் செயற்பாடுகள், உடையமைப்பு , சிந்தனைகள் எல்லாம் மாற்றமடைகின்றது. இதனை அவதானிக்கின்ற விஜய் மீண்டும் தன்னுடனான உறவுநிலையை புதுப்பித்துக்கொள்ள முற்படுவதும் அதற்கு ராணியின் பதில் எவ்வாறமைகின்றது என்பதும் மீதிக்கதை. இத்திரைப்படம் வெளிவந்த காலப்பகுதியில் பல்வேறுப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன், பெண்கள் தம்முடைய சூழலிலிருந்து மீண்டெழுவதற்கான உத்வேகம் தருகின்றதொரு திரைப்படமாகவும் இது பேசப்பட்டது. அனாவசிய கதாபாத்திரங்கள் இல்லை. அனாவசியமான காட்சியமைப்புக்கள், கதை வசனங்கள் இல்லை.

“ஒரு பெண் காதல் அல்லது திருமணம் நிச்சயிக்கப்பட்ட சூழலில் இருந்து விலகும் போது தன்னுடைய சுயகௌரவத்தினை, சுயமரியாதையினை எவ்வாறு மீட்டெடுக்கலாம் அல்லது இத்தகையதொரு உடைவிலிருந்து மீண்டெலலாம் என்பதையும், இத்தகைய உடைவுகள் ஒரு பெண்ணுக்கு நிகழும் போது சமூக கண்ணோட்டம் எவ்வாறிருக்கின்றது" என்பதையும் மிகவும் அழகாக பேசுகின்றது இத்திரைப்படம்.” 

 

அடுத்த திரைப்படம் கடந்த 7 ஆம் திகதி வெளிவந்த “The Girl Friend”. இதற்கான எழுத்து - இயக்கம் ரகுல் ரவீந்திரன். இசையமைப்பு ஹேஷம் அப்துல் வஹாப் மற்றும் பிரசாந் விகாரி. “நீயே… நீயே ஒளி…” பாடல் அருமை. ஒளிப்பதிவு கிரிஷ்ணன் மற்றும் சோட்டா. காட்சியமைப்புக்கள் அருமை. இத்திரைக்கதையின் முக்கிய பாத்திரமான பூமா(தேவி) பாத்திரத்தினை ரஷ்மிக்கா நடிப்பாளுகை செய்திருந்தார். 

தாயின்றி தந்தையிடம் வளருகின்ற பூமா பட்டப்பின் படிப்பிற்காக பல்கலைக்கழகத்திற்கு வருகின்றார். இரவில் நண்பியுடன் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது ஏற்படுகின்ற விபத்தின் போது தன்னுடைய பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற விக்கியை சந்திக்கின்றார். “தன்னுடைய தாய்” போன்று பூமா இருப்பதாக நினைக்கின்ற விக்கி பூமாவைத் தொடர்ச்சியாக வற்புறுத்தி காதலிக்க ஆரம்பிக்கின்றார்கள். தன்னுடைய அறையினை துப்பரவு செய்வது முதல் தனக்கு உணவை ஊட்டிவிடுவது வரை பூமாவை தன்வசப்படுத்திக்கொள்கின்றார் விக்கி. அதேவேளை விக்கியை துர்க்கா எனும் பெண்ணும் விரும்புகின்றாள். தானே வலிய வந்து விக்கியிடம் தன்னுடைய விருப்பங்களையும் சொல்கின்றாள். ஆனால் விக்கி துர்க்காவை நிராகரித்து விடுகின்றான். இரு வருடங்களாக தொடர்கின்ற இவர்களது காதல் பூமாவின் தந்தைக்கு தெரிய வருகின்றது. இதனால் விக்கிக்கும் அவருக்கும் இடையில் ஏற்படுகின்ற முரண்பாடும் இதன் நீட்சியாக பல்கலைக்கழகத்தினை விட்டு வரும்படி தன்னுடைய மகளை எச்சரிக்கின்றார். இதற்கிடையில் முரண்பாடு ஏற்பட்டவுடன் அவசரமாக திருணத்தினை நடத்துவதற்கு விக்கி முயல்கின்றான். 

இருவருக்குமிடையில் தவிக்கின்ற பூமா தன்னுடைய படிப்பை முடிப்பதற்கும் இதற்கு தடையாகவுள்ள காதலை விட்டுவிடுவதற்கும் தயாராகி அதனை விக்கியிடம் சொல்கின்றாள். இதனால் தன்னுடைய ஈகோ அடிபட்டுவிட்டதால் எப்படி விக்கி பூமாவை அவதூறு செய்து பழிவாங்குகின்றான் என்பதும் அதற்கு பூமாவின் பதிலடி என்ன என்பதும் மீதிக்கதை. 

ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்கவும் திருமணத்திற்கு தெரிவு செய்வதற்கும் பின்னாலுள்ள ஆணாதிக்க அரசியலை நுண்ணியமாக பேசுகின்றது இத்திரைப்படம். அதிலும் விக்கி தன்னுடைய தாயை தன் காதலியான பூமாக்கு அறிமுகம் செய்கின்ற காட்சி அலாதியானது. இன்னும் இப்படியான பெண்கள் நம்முடைய வீடுகளில் அடுப்படியைத் துடைத்துக்கொண்டுதானிருக்கின்றார்கள் என்பது கசப்பானதொரு உண்மை தான். 

இதில் விக்கி பூமாவை காதலிப்பதை அறிந்து பூமா மீது எரிச்சல்படுகின்ற துர்க்காவும் பூமாவும் நண்பர்களாக மாறுகின்றதொரு தருணம் அழகாக காட்சியமைக்கப்பட்டுள்ளது. கவர்ச்சியான நடிகை என வர்ணிக்கப்படும் ரஷ்மிக்கா இத்திரைப்படத்தின் பூமா பாத்திரத்தில் தன்னுடைய இன்னுமொரு பரிமாணத்தினை வெளிக்காட்டுகின்றார். இதில் கதாபாத்திரங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் கூட அர்த்தங்களுடன் தான் கொடுக்கப்பட்டுள்ளதாக தோன்றுகின்றது. அதுவொரு இடத்திலும் சுட்டிக்காட்டப்படுகின்றது. 


இத்திரைப்படத்தினை பார்க்கும் போது என்னுடைய பல்கலைக்கழக நாட்கள் ஞாபத்திற்கு வந்துபோனது. இதில் சித்தரிக்கப்பட்டுள்ளதை போன்று எப்போதும் அப்பாவியான, புத்திசாலியான பெண்களை அதிக ஆண்கள் துரத்தி திரிவதற்கும் வலுக்கட்டாயப்படுத்தி காதலிக்கவோ அல்லது திருமணத்திற்கு நிச்சயிக்கவோ முயல்கின்றதன் பின்னான ஆண் அரசியலை நானும் மீட்டிப்பார்க்கின்றேன். பல்கலைக்கழக நாட்களில் விடுதியில் தங்கியிருந்த போது முகநூல் பாஸ்வேட் கேட்டு விடுதியில் இருந்ததொரு அக்காவை அடித்த அந்த ஆணை நினைத்துப்பார்க்கின்றேன். தம்முடைய காதலை சொல்லும் போது நீ என்னுடைய அம்மா மாதிரியிருக்கின்றாய் என்று சொன்ன ஆண்களை நினைத்துப்;பார்க்கின்றேன். பரதநாட்டிய அரகேற்றத்தில் பார்த்த மாத்திரத்திலேயே அந்தப்பெண்ணை விரும்பி “நீ பல ஆண்களுக்கு ஒற்றைப்பெண், வீட்டை நன்றாக பார்த்துக்கொள்வாய், மென்மையாய் இருப்பாய்” என்று நிச்சயம் செய்துகொண்ட ஆணை கடந்திருக்கின்றேன். தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணானவள் பொறியியலாளர் என்றால் அது தொடர்பில் மட்டும் பணியாற்றினால் போதும் திரைப்படத்துறை எதற்கு? விவசாயம் எதற்கு? ஓவியம் எதற்கு? என்று தினமும் காயப்படுத்துகின்றதொரு ஆணுடன் பயணித்திருக்கின்றேன். சம்பந்தமேயில்லாமல் பொதுவெளியில் ஒரு பெண்ணை மட்டந்தட்டி, அடுத்தவர்களிடம் “என்னிடம் விருப்பம் கேட்டு நான் இல்லை என்று சொன்னேன்” என இன்னொரு பெண்ணிடம் நள்ளிரவில் அந்தப்பெண்ணை பற்றி முதுகுப்பின் பேசுகின்ற ஒருவரால் உடைந்திருக்கின்றேன். 


இறுதியாக மேடையில் நின்று பூமா பேசும் போது “எனக்கென்று ஒருவன் கிடைப்பான்டா, உன்னை மாதிரியில்ல ரொம்ப முதிர்ச்சியானவனா, டீசன்ட்டானவனா ஒருவன் கிடைப்பான்டா…..” என்று உரத்த குரலில் சொல்கின்ற வரிகள் மேற்சொன்னா அனைத்து  Toxic ஆண்களுக்குமானது. 

The Girl friend பெண்கள் பார்க்கவேண்டியதல்ல ஒவ்வொரு வயது வந்த ஆணும் பார்க்க வேண்டிய படம். 








Saturday, December 20, 2025

வினாக்களுக்கான பதில்கள்

Valentine Heart Arrow Images – Browse 157,241 Stock Photos, Vectors, and  Video | Adobe Stock 

வினா 06: 
மீரா டார்லிங் உனக்குப் பிடித்த விடயங்கள் 10 ஐ எனக்காக பட்டியலிட முடியுமா? நான் என்ன செய்தால் என்னை திரும்பிப்பார்ப்பாய்? திரும்பத்திரும்ப பார்க்க நான் என்ன செய்ய வேண்டும்.? 

 
பதில் : அதெற்கென்ன இதோ அந்த பட்டியல்……..
1.    காட்டூன்  மற்றும் க்ரைம் திரைப்படங்கள் பார்ப்பது
2.    புத்தகங்கள் வாசிப்பது
3.    குழந்தைகள் மற்றும் குட்டி நாய்கள் 
4.    மழையில் நனைவது, அதற்காக வீட்டில் திட்டு வாங்குவது
5.    குடும்பத்தினருக்காக சமைப்பது, அவர்கள் சாப்பிடுவதற்கு பரிமாறுவது
6.    கடற்கரையில் காலார நடப்பது 
7.    முழு நாளும் இசை கேட்பது
8.    குளிக்கும் போது சத்தமாக பாடல் பாடுவது
9.    ஓவியக் கண்காட்சிகளுக்குப் போய் மணிக்கணக்கில் ஓவியநுட்பங்களை இரசிப்பது
10.    பேரூந்து ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணிப்பது

10 மட்டும் தான் கேட்டிருப்பதால் இத்தோடு நிறுத்தி விடுகின்றேன். உண்மையில் 1000 பிடித்தவைகள் உண்டு. 

நான் திரும்பிப்பர்க்கனும் என்றால் என்னை பின்னால் இருந்து கூப்பிட வேண்டும். :P நான் திரும்பத்திரும்ப உங்களை பார்க்க வேண்டும் என்றால் கறுப்பு அல்லது கருநீல நிறத்தில் டீசேட் அணிந்து ST Dupont Paris Saint Germain for Men or Amouage Opus V for Men இந்த இரண்டு Perfume இல் ஒன்றை பாவியுங்கள்  போதும்……. But எனக்கு நீங்கள் ஒருமையில் அழைப்பது மட்டும் பிடிக்கவில்லை. 

வினா 07: உங்களை எப்படி அன்பாக அழைப்பது பிடிக்கும்? உங்களவர் எப்படியிருக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?

 
பதில்: “கண்ணம்மா” என விளிப்பது மிகவும் பிடிக்கும். அம்மா என்னை பெரும்பாலும் “ராஜாத்தி” என்று அழைப்பார் அது மிகப்பிடிக்கும். மற்றும் படி என்னுடைய க்ரஸ்கள் லட்டு, ஹனி, டார்லிங், டியர், செல்லம் என்று அழைக்கின்றார்கள். இவைகளும் பிடிக்கும். என்னை மீரா என்றழைப்பது அனைத்தையும் விட மிக பிடிக்கும். என்னுடைய வாழ்க்கையில் ஒருவர் என்னை “கேஷாயினி” என்று முழுபப்பெயர் சொல்லி அழைப்பதுண்டு. மின்னஞ்சலில் கூட ஆங்கிலத்தில் ஒரு எழுத்து கூட விடாமல் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இது மிகமிக பிடித்திருந்தது கடந்த ஆவணி மாதம் வரை.


என்னவன் பற்றி சொல்வதென்றால்…………….? ம்ம்ம்ம்……. எனக்கு பெரிதாக ஒருவரின் உருவம் அல்லது அவரது இயக்கதிறன் சார் எதிர்பார்ப்பில்லை.  மற்றப்பெண்களைப் போல் தலையில் முடியில்லை, கருப்பு அல்லது முகவெட்டில்லை என்றெல்லாம் ஒருவரை அவரது வெளித்தோற்றம் கொண்டு நேசிக்கவோ அல்லது நிராகரிக்கவோ நான் தயாரில்லை. ஆனால் ஒழுக்கம் , உணர்வுகள் சார் எதிர்பார்ப்புக்கள் நிறையவே உண்டு. முக்கியமாக மண் பற்று உள்ளவராக, உரிமைகளுக்கும் விளிம்புநிலையினருக்காகவும் குரல் கொடுப்பவராயிருக்க வேண்டும். பெண்களை மதிப்பவராகவும் பெண்கள் அவரை மதிப்பவராகவும் இருக்க வேண்டும். 
 

மெல்லுணர்வு என்று பார்க்கும் போது கடல், நிலவு, இசை, ஓவியங்களை இரசிப்பவன், பயணங்களை விரும்புபவன், முரட்டுத்தனங்களுடன் பாசமாயிருப்பவன், என் குடும்பத்திற்கு இன்னுமொரு மகனாயிருப்பவன்….. முக்கியமாக என்னுடைய கிறுக்கல்களை இரசிப்பவன். தவறுகளை சுட்டி காட்டுபவன்.  நிறைய குட்டி குட்டி சண்டைகள் போடுபவன். என்னைச் செதுக்குபவன்...... யாராவது பெண்கள் அவனது பதிவுகள் அல்லது புகைப்படத்திற்கு hearten போட்டு அதற்காக நான் சண்டை போட்டால் பொறுத்துக்கொள்பவன். 

பிற்குறிப்பு : தொடுக்கப்படுகின்ற பெரும்பாலான கேள்விகள் என்னுடைய சுயம் பற்றியதாக இருக்கின்றதை பார்க்கும் போது யாரோ ஒருவர் தான் பல்வேறு மின்னஞ்சல்களிலிருந்து கேள்விகளை கேட்கின்றீர்களோ என்றிருக்கின்றது

 




Tuesday, December 9, 2025

வினாக்களுக்கான பதில்கள்



 முற்பகுதி 

 
வினா 03: 
மீரா நீங்கள் கோவக்காரி, பிடிவாதக்காரி என்றறிந்தேன் இதில் உண்மையுள்ளதா? கோபம் போன பின் என்ன செய்வீர்கள்? உங்கள் சமூகஊடகங்களை பின்தொடர்ந்த வகையில் அப்படித்தெரியவில்லையே அன்பே….

பதில் : சமூக ஊடகங்களில் பின்தொடர்ந்தால் தெரியாது தான். என்னை நேரில் தொடர்ந்தால் தான் என்னைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். எல்லோரும் நடத்தைப் பிறழ்வு காட்டுவது போன்று நானும் சிலநேரங்களில் அந்நியன் போல் நடப்பதுண்டு. நீங்கள் அறிந்ததை போன்று கோபம், பிடிவாதம் கொஞ்ஞ்ஞ்ஞ்…….சம் கூட தான். ஆனால் எல்லா இடங்களிலும், எல்லா நேரத்திலும், எல்லோரிடமும் நான் கோபம் கொள்வதில்லை, பிடிவாதம் பிடிப்பதில்லை. சாது மிரண்டால் காடு கொள்ளாது மாதிரி எப்போதாவது கோபத்தின் உச்சத்திற்கு போவதுண்டு. நிச்சயம் இச்சந்தர்ப்பங்களில் சுற்றியுள்ளவர்களை ஆழமாக காயப்படுத்துவதும் உண்டு. ஆனால் பிடிவாதம் மட்டும் எப்போதும் உண்டு. சின்னச்சின்ன விடயங்களில் கூட பிடிவாதம் பிடிப்பதுண்டு. நான் குழப்படி செய்து அம்மாவிடம் வாங்கிய அடிகளை விட பிடிவாதம் பிடித்து வாங்கிக்கட்டிக்கொண்டவை அதிகம். 


அநேகமாக கோபத்தில் யாரையாவது காயப்படுத்திவிட்டால் கோபம் குறைந்த பின் தனியே இருந்து அழுவதுண்டு. இன்னும் மனதிற்குள் சஞ்சலம் இருந்தால் கடற்கரைக்குச் சென்று காலார நடப்பதுண்டு. அதுவே நெருக்கமானவர்களை காயப்படுத்தி விட்டால் ஏதாவது கிறுக்குவதுண்டு. 
மிகவும் சலிப்பான நேரங்களில் ஏதாவது பேரூந்தில் ஏறி அது பயணிக்கும் கடைசி இடம் வரை பயணித்து அங்கு இறங்கி எங்காவது ஓரிடத்தில் நல்ல கோப்பி ஒன்று குடித்துவிட்டு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு வருவேன். எப்போதும் மன சஞ்சலங்களை காயப்படுத்தல்களை ஆசுவாசப்படுத்துவதில் கோப்பி, பயணம், கடல், வர்ணங்கள் என்பவற்றிற்கு பாரிய பங்குண்டு.
 

என்னுடைய கோபம் பற்றி அறிய வேண்டும் என்றால் என்னுடைய அலுவலகங்களில் கேட்டுப்பாருங்கள். கோபத்தில் விசிறியடிக்கின்ற தாள்களை அநேகமாக சேர்த்தெடுப்பவர்கள் அவர்கள் தான். இனிமேல் என்னைத் தெரிந்துகொள்ள சமூக ஊடகங்களிலன்றி நேரில் தொடருங்கள் அன்பே…. சிலநேரங்களில் நீங்களும் வாங்கிக்கட்டிக்கொள்ள கூடும். 


வினா 04: எப்போது நல்ல செய்தி சொல்லப்போறீர்கள்? மனம் + மனம் திருமணம் மூன்றாம் பாகம் எப்போது வெளிவரும்?

பதில்: அநேகமாக அடுத்த வருடம் பல நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். மகரராசிக்கு இனித்தான் நல்ல காலம் பிறக்கவுள்ளதாம் என்று சோதிடரும் சொல்கின்றார். வாழ்க்கை நடப்பும் அப்பிடித்தான் சொல்கின்றது. 

விரைவில் எழுதுகின்றேன் நண்பி. காலம் நேரமும் கூடி வரவேண்டுமல்லவா……. முதல் இரு பாகங்களும் இரு தலைமுறையின் கதைகள். முடிந்து போன பின் எழுதப்பட்ட கதைகள். ஆனால் இனி எழுதவுள்ள மூன்றாம் பாகம் நடந்துகொண்டிருக்கும் கதை. முடிவினை அறுதியிட்டு கூற முடியாத கதை. எனவே மூன்றாம் தலைமுறையினதை எழுத நேரம் அதிகம் தேவைப்படுகின்றது. அதனால் தான் தாமதமாகின்றது.

வினா 05: முன்னைய காலங்கள் போன்று தற்போது கவிதைகள் எழுவதில்லையா மீரா? உங்கள் கவிதைகளின் வரிகளைத் திருடி காதல் வளர்த்தவன் நான்….. 

பதில்: கவிதை எழுத மனதுள் மெல்லிய உணர்வு வேண்டும். தற்போதெல்லாம் வன் உணர்வகள் தான் பெரும்பாலும் தலைதூக்கி நிற்கின்றன. ஊடகவியலும் பொறியியலும் தான் தற்போது என்னை நீரோட்டத்தில் இழுத்துச்சென்று கொண்டிருக்கின்றன. பரபரப்பும் அழுத்தமும் நிறைந்ததாக என் நாட்கள் நகர்கின்ற இதில் கவிதை வருவதெப்படி? 

பரவாயில்லையே தெரிந்தோ தெரியாமலோ பல காதல்கள் என் கவிதையால் வாழ்ந்துள்ளன, வளர்ந்துள்ளன என்பது பெருமையே… அதுசரி நீங்கள் இன்னும் கவிதைகளை மட்டுமா கொடுத்துக்கொண்டிருக்கின்றீர்கள்… வளர்ந்த / வளர்த்த காதல் என்னாச்சு?  ஆத்மார்த்தமாக கதைப்பதென்றால் இதில் சில கவிதைகள் என் நண்பர்கள் தங்கள் காதலர்களுக்கு கொடுப்பதற்காக கேட்டு நான் எழுதிய கவிதைகள். சிலது எனக்கே எனக்கானவை….. 





Tuesday, December 2, 2025

வினாக்களுக்கான பதில்கள்

 

வணக்கம் நண்பர்களே>

நீண்ட நாட்களின் பின்னர் நேரங்கிடைத்துள்ளது. பயணங்களினாலும் குடும்பத்திற்கான நேர ஒதுக்கல்களினாலும் நிரம்பிவிட்டது என்னுடைய நாட்குறிப்பு. இந்த இடைவெளியில் 177 வினாக்களை அனுப்பியுள்ளீர்கள். அன்பிற்கும் அக்கறைக்கும் நன்றிகள். அதில் பெரும்பாலானவை ஒத்த தொனியிலானவை மேலும் சில பதிலளிக்க முடியாதவை.  எனவே அனுப்பியவற்றிலிருந்து பதினைந்து முக்கிய கேள்விகளை தேர்ந்து அதற்கு பதிலளிக்க விழைகின்றேன். 

வினா 01: மீரா நீங்கள் இரு கைகளாலும் எழுதுபவர். வரைபவர் என்று அறிந்தேன் உண்மையாகவா? AK எனும் பெயரில் நீங்கள் பல வருடங்களாக வரைந்து வந்ததாகவும் தற்போது வரைவதில்லை என்றும்> உங்கள் ஓவியங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்றும் அறிகின்றேன். இது உங்கள் காதலுடன் தொடர்புடையது என்றும் கூறப்படுகின்றதே இவையெல்லாம் உண்மையா?

பதில்: பரவாயில்லையே நண்பரே என்னை குறித்து ஆய்வே செய்துள்ளீர்கள் போல. நீங்கள் அறிந்தது உண்மையே. ன்னால் இரு கைகளாலும் வரைய முடியும். ஆனால் இடது கையால் தெளிவாக எழுத முடியாது. இவ்வாறு இரு கைகளாலும் எழுதுபவர்கள் உலகில் ஒரு சதவீதமானவர்கள் என்று குறிப்பிடப்படுகின்றது. எம்மைப் போன்றவர்கள் 

Ambidexterity என்று அழைக்கப்படுகின்றார்கள்.  AK  எனும் பெயரில் கிறுக்கியுள்;ளேன். பpன்னர் அவற்றினை முற்றாக நீக்கியதும் நானே. கடந்த வருடம் சில கிறுக்கியுள்ளேன். என்னுடைய இன்ஸ்ராகிராமில் உள்ளது. அதனை மீண்டும் கடந்த ஆகஸ்ட் 8 உடன் நிறுத்தி விட்டேன். ஓவியம் என்பது என்னளவில் மனதுடன் இணைந்த விடயம். மேலும் கட்டடப்பொறியில் சார் ஓவியங்கள் மட்டும் வரைகின்றேன். வரைவேன். ஆக நீங்கள் அறிந்தவை உண்மையே. எப்போதும் கலைஞர்கள் ஒவ்வொருவருள்ளும் ஒரு கிறுக்குபுத்தி ஒளிந்திருக்கும் என்பதையும் உங்களுக்கு சுட்டவிரும்புகின்றேன். இவ்வாறு நான் மட்டுமல்ல வரலாற்றில் பலர் செய்துமுள்ளார்கள். சுய அழிப்பு இது. 

வினா 02: நீங்கள் உங்கள் வாழ்வில் மிகவும் கேவலமான மனிதரை சந்தித்தித்துள்ளீர்களா?

பதில்: நான் கேவலமான மனிதரை சந்திக்கவில்லை. நான் சந்தித்தவர் கேவலமானவர். ஓரு கதை சொல்லவா? 

ஒரு இளம் பெண்> படித்த> பண்பான குடும்பத்தினை சேர்ந்தவள், குடும்பத்தில் பல ஆண் சகோதரர்களுக்கு ஒரு பெண்ணாக பிறந்தவள் அரசியல் ஆர்ப்பாட்டங்களில் ஒருவரை அடிக்கடி சந்திக்கின்றாள். அவரைப் பற்றிவிசாரிக்கும் போது அவருக்கு காதலி இருப்பதாக அறிகின்றாள். தனக்கும் அவருக்குமான வயது வித்தியாசம் பற்றியும் தெரிந்துகொள்கின்றாள். விலகி நடக்கின்றாள். இருவருமே ஒரு தளத்தில் இயங்குபவர்கள். ஆக விரும்பியோ விரும்பாமலோ குறித்த நபர் பற்றிய விடயங்கள் அவளுக்கு அறியக்கிடைக்கின்றது. சில மாதங்களின் பின்னர் அவர் வேற்றின பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக அறிகின்றாள். திருமணம் அன்றும் யாருக்கும் தெரியாமல் அந்த நிகழ்வில் அண்மித்திருந்து அழுகின்றாள் கடந்து விடுகின்றாள். ஆனால் சிலரின் மனம் கண்ணாடி இல்லை தானே மாற்றி மாற்றி முகம் பார்த்துக்கொள்வதற்கு. இதே காலப்பகுதியில் அரசியல் காரணங்கள், தனிப்பட்ட குடும்ப பிரச்சினைகளால் வெளிநாடு சென்று விடுகின்றாள். மீண்டும் அவள் நாடு திரும்பும் போது நிகழ்வொன்றில் அவளைக்காணும் குடும்பமொன்று தானாகவே வீடேறி பெண் கேட்க வீட்டவர்களின் விருப்பத்திற்கு தலையசைத்துவிடுகின்றாள். ஆனால் எல்லாம் பொருந்திய அந்த திருமண ஒழங்கில் இருவருக்கும் மணப்பொருத்தம் குறைவாகவிருக்கின்றது. இதனால் நிச்சயார்த்தம் பிற்போடப்படுகின்றது. தளும்பலுடன் நகர்கின்றது இந்த உறவு. இப்படியிருக்கும் கால கட்டத்தில் ஒரு பயிற்சியில் மீண்டும் அந்த முதல் நபரை எதிர்பாராமல் சந்திக்கின்றாள். அந்த பயிற்சியின் மூன்று நாட்களும் மிகுந்த பதற்றத்துடன் எதிர்கொள்கின்ற அவள் அந்த நபர் விவாகரத்து பெற்றுவிட்டதை எதேச்சையாக அறிகின்றாள். மீண்டும் மனம் முருங்கை மரமேறி விடுகின்றது. ஆனால் எந்த கட்டத்திலும் காயப்படுத்திவிடவோ அவரது பழைய காயங்களை பற்றி பேசிடவோ விரும்பாது பழக ஆரம்பிக்கின்றாள். பின்னர் தான் அவருக்கும் பல பெண்களுக்குமான உறவுகளை புரிந்தும் தெரிந்தும் கொள்கின்றாள். இதனால் அவர் மனஆழுத்தங்களால் காயப்படுத்தும் போதெல்லாம் தாங்கிக்கொள்கின்றாள். இதன் போது அவரின் கடுஞ்சொற்கள்> தூக்கியெறிதல்கள் > அவமானப்படுத்தல்கள் என எல்லாவற்றினையும் கடக்கின்றாள்.

ஆனால் எல்லாவற்றிற்கும் ஓர் எல்லை உண்டல்லவா? ஓரிரவு இந்தப்பெண் விருது பெறும் நிகழ்வில் தன் மாணவியுடன் கலந்துகொள்கின்றாள். இதன் போது முகநூலில் அந்த நபர் மாணவியுடன் உரையாடுவதை அறிகின்றாள். அந்த மாணவியும் வேற்றினத்தை சேர்ந்தவர்> விவாகரத்து > பல தொடர்புகள் என பிரச்சினைகளுக்குறியவர். இருவரும் நள்ளிரவில் உரையாடுகின்றனர். இங்கு அந்தப் பெண்ணைப்பற்றி அந்த நபரும் அந்தப்பெண்ணின் மாணவியும் பேசிக்கொண்டது மிக முக்கியமானது. ஆனால் அறமும் நேர்மையுமற்ற உரையாடல் அது. தன்னிடம் அந்தப்பெண் விருப்பம் கேட்டதாகவும் தான் இல்லையென்று சொன்னதாகவும், அந்தப்பெண்ணுக்கு வேறு யாரும் கிடைக்காமல் தன் பின்னால் அலைவதாகவும் சொல்லிவிடுகின்றார் அந்த நபர். இதனை அந்த மாணவி அந்தப்பெண்ணை அவமானப்படுத்தும் நோக்குடன் பொதுவில் சொல்லி விடுகின்றாள்.

போராட்ட குணம் கொண்ட அந்தப்பெண் தனக்கு நடந்ததை உரத்துசொல்லியிருக்க முடியும். ஆனால் அந்த நபர் பிறந்தநாளன்று காயப்படுத்திவிடக்கூடாதென நினைத்து சில நாட்களின் பின்னர் இது குறித்து மின்னஞ்சல் செய்கின்றாள். இன்று வரை அந்த நபர் அந்தப் பெண்ணிடம் ஒற்றை மன்னிப்பு கூட கேட்கவில்லை. இதை விட முரண் என்னவென்றால் சமூக ஊடகங்களில் நீதி. நேர்மை என்று வெட்டிப்பிளக்கும் அந்த நபர் தான் செய்த நேர்மையற்ற செயலை எண்ணி தலை குனியாதது.

ஆனால் இதற்குப் பின்னரும் சமூக ஊடகத்தில் இந்த நபரைப்பற்றி தரக்குறைவாக பேசப்பட்ட போது அந்தப்பெண் தன்னுடைய சுயகௌரவத்தினையும் மீறி இந்த நபருக்கு அழைப்பெடுத்துள்ளார். அதற்கும் பதிலளிக்கவில்லை. கள்ளமனங்கள் அப்படித்தானிருக்கும். தன் முன்னால் தான் விரும்பிய நபர் அவமானப்படுவதை பொறுக்காது தற்காலிகமான தன்னுடைய சமூக ஊடகங்களை அப்பெண் நிறுத்தி விடுகின்றாள். அப்போது கூட தன்னுடைய முகநூலில்  “எல்லாம் சுபம்” என்று அந்த நபர் பதிவிடுகின்றார்.

நீங்களும் கூட அவர் சொன்னது போல அவளுக்கு வேறு யாரும் கிடைக்கவில்லை என்பது தான் சரி என்று நினைக்கின்றீர்களா? அல்லது அந்தப்பெண்ணுக்கு குறையுள்ளது என்பது உங்கள் அபிப்பிராயமா? அந்தப்பெண் இந்த வருடம் உலகில் உள்ள வடிவமைப்பாளர்களில் 100 பேருக்குள் வந்துள்ள அறிவாளி> அவளுக்கு நிச்சயிக்கப்பட்டுள்ளவர் இன்னும் சில வருடத்தில் உலகின் தலைசிறந்த சந்திரசிகிச்சை நிபுணராகவுள்ளவர். பல சந்தர்ப்பங்களில் இப்படித்தான் நம்மிடம் எளிமையாக நடமாடுபவர்களை> எளிமையாக உடுத்துபவர்களை> அதீத அன்பாக உள்ளவர்களை குறைத்து மதிப்பிட்டு விடுகின்றோம். தில் கறைபட்டாலும் கழுவிவிட இரசாயனம் இருக்கின்றது. ஆனால் மனதில் ஒரு கேவலமானவனை நினைத்து அதற்காக சுயகௌரவம் இழந்து இன்று வருத்தப்படுகின்ற அந்த பெண்ணின் மனதை கழுவ ஏதும் மருந்திருக்கின்றதா? இப்போது சொல்லுங்கள் அந்த மனிதன் கேவலமானவர் இல்லையா? குறைந்த பட்சம் தான் செய்த தவறை கூட உணராதவன் மனிதனுள் அடங்குவானா? இது நமக்கு தெரிந்ததொரு சம்பவம். இதனைப் போன்று எத்தனை பெண்களின் வாழ்க்கை இவரால் சீரழிக்கப்பட்டிருக்கும்? இரவில் 10.45க்கு ஒரு பிரச்சினைக்குறிய பெண்ணிடம் தன்னை நேசித்த பெண்ணைப் பற்றி அறமின்றி கதைப்பவன் எப்படி நேர்மையாளனாக இருக்க முடியும்?

இவரைத்தான் நான் சில வருடங்களுக்கு முன்னர் வீதியோர போராட்டத்தில் முதன்முறை சந்தித்திருந்தேன்.

மீதி வினாக்களுக்கான விடை சில தினங்களில்....  

 

 

 

மனசாட்சி

  கடந்த ஒரு வருடமாக வருகைதரு விரிவுரையாளராக பணியாற்றி வருகின்றேன். விரிவுரையாளர் என்றாலே முகத்தை உர் என்று வைத்துக்கொள்ள வேண்டும், பாடத்தை ம...