Sunday, June 11, 2017

தேசியத்திற்கு பின்……..


அப்பாடா ஒருமாதிரியாக பன்னிரண்டு மணிநேர பிரயாணம் முடிவிற்கு வந்து கட்டுநாயக்கா விமான நிலையத்தினை அடைந்தாயிற்று… 

அப்பாவையும் அம்மாவையும் தூரத்தில் கண்டவுடனேயே இனம்புரியாத தைரியம் மனதிற்குள் வந்த குடியேறிவிட்டது போன்றதான உணர்வு. வர்மனை தட்டி சொல்லி கையை காட்டியதும் என்னவருடைய தோளில் சாய்ந்திருந்த ஆதியும் என் கைவிரல் பற்றி தத்தி தத்தி நடந்து வந்துகொண்டிருந்த ஹரியும் யாரென புரியாவிட்டாலும் அவர்களும் கையசைத்துக்கொண்டார்கள். அப்பா, அம்மாவிற்கு பின்னாலிருந்த ஆஜானுபவமான உருவம் முன்னோக்கி வருவதும் தெரிகின்றது….யாரது? ஓ…. தம்பி….. இவ்வளவு வளர்ந்து விட்டானா? சின்ன வயசில் ஓட்டைப்பல்லுடன் ஒற்றை விரலை சூப்பிக்கொண்டு என்னுடன் சண்டை போட்டவனா இன்று இப்படி வளர்ந்து பனை மரம் போல…… எவ்வளவு தான் ஸ்கைப்பில் பார்த்துக் கதைத்தாலும் இந்த மூன்று வருட மாற்றம் நேரில் தான் சரியாகத் தெரிகிறது…
அருகில் வந்து அத்தான்.. அக்காச்சி என்று எம்மைத் தழுவிக்கொண்ட போது அவன் கண்களும் சற்று கலங்கித்தான் போனது…. பல வருட பிரிவுகள் கல்லூள்pமங்கன்களின் கண்களிலும் கசிவை கொடுத்துவிடுகின்றது போலும்…. அவன் கைகளில் ஆதியும் ஹரியும் மாறவும் நாம் அம்மா அப்பா நின்றிருந்த இடத்தை அடையவும் சரியாக இருந்தது. தழுவல்கள்….. ஆனந்த கண்ணீர்….. மூன்று வருட பிரிவு எல்லாமாக ஒருவித மௌனமும் சேர்ந்து கொள்ள “அண்ணா வரலயா?” என்னவரின் உரையாடல் தான் முதலில் அதைக் கலைத்தது. “வாகனத்தில் இருக்கிறான் தம்பி”…இது அம்மா!

என் அண்ணா தான்….. பள்ளிக்காலத்தில் பின்னாலேயே காவலுக்கு திரிபவர்….. என் மீதான தன் நேசங்களை கோபங்களாலும் முரட்டு;த்தனங்களாலும் மட்டும் காட்டத்தெரிந்தவர்….நான் வீட்டில் இருந்தவரை என் கையாலோ அம்மா கையாலோ பரிமாறினால் தான் சாப்பிடுவார். இன்று அந்த வரிசையில் அண்ணி இருக்கின்றார். எனக்கும் தம்பி மீது ஒருவகையான பாசம் என்றால் அண்ணா மீது சற்றே அதீத பாசம் தான். என் மீது போர்வை போர்த்திவிடுகின்ற  அந்த அக்கறைக்காகவே பல தடவைகள் பொய் நித்திரை கொண்ட நாட்கள் பலவுண்டு. 

அப்பாவும் அண்ணாவும் தானே ஒரு பெண்ணின் முதல் காதலர்கள்…… அண்ணாவின் முகத்தில் முதிர்ச்சி தெரிய தொடங்கிவிட்டிருக்கின்றது. அண்ணாவை தழுவிய போது அதே வாசனை… அண்ணா இன்னும் மாறவில்லை….
வாகனத்தினுள் ஏறி அமர்ந்தவுடனேயே தம்பியிடம் ஒட்டிக்கொண்ட ஆதியும் ஹரியும்  அம்மாவின் மடியில் ஒருவனும் தம்பியின் மடியில் ஒருவனும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். உருவத்தில் மட்டுமல்ல செய்கைகளிலும் பயங்கர ஒற்றுமை உணர்விலும் கூட…. தூக்கத்திலும் அந்த ஓருணர்வு தொடர்கின்றது. என்ன பல நேரங்களில் குழப்படிகள் செய்யும் போது அது எனக்கு தான் இரட்டிப்புச் சுமையாகியும் போகின்றது. 

என் அரட்டைகளை ஆரம்பித்துவிட்டேன். இன்னும் ஆறு மாதம் இங்க தான் இருக்க போறன் என்டாலும் உடனேயே பலதை எனக்கு அறிய வேண்டியிருந்தது. நான் தொலைபேசியில் அலட்டும் போது வர்மனும் பல தடவை ஏசியிருக்கின்றார். ஆனாலும் ஆர்வம் விடுவதில்லை. பக்கத்து வீட்டு ராணி அன்டீ, அம்மப்பா நாட்டியிருக்கின்ற முருங்கை மரம், என்னுடன் படித்த வித்யா, உயர்தரம் படிக்கும் போது பின்னால் திரிந்து அரியண்டப்படுத்திய மயூரன், “மணமகள்” புத்தக கடை அங்கிள், பெரியம்மாவின் குடும்பக்கதை ,வானதி டீச்சர் என இன்னும் இன்னும் பல…. என் வரிசையில் உண்டு. வர்மனும் வழமை போல் சம்பந்தன், சுமந்திரன் என ஈழ அரசியலை அப்பா, அண்ணா , தம்பியிடம் ஆரம்பிக்க நாம் வேறு கட்சியாகி கதைக்க தொடங்கிவிட்டோம். கதைகளோடு கதையாக அம்மா சொன்ன அபிக்குட்டியின் மரணச்செய்தியின் பின்னர் என்னலால் ஊர் வம்புக்கதைகளை தொடர முடியவில்லை. மௌனமாக வீதியோர காட்சிகளை பார்க்க ஆரம்பித்தேன். பயண களைப்பென அம்மா நினைத்திருக்க கூடும். அவரும் அமைதியாகிவிட்டார்.

அபிக்குட்டி……..
பல்கலைக்கழக விடுமுறையில் வீட்டு வந்திருந்த என்னிடம் தன் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த செல்வி அக்காவிற்கு பிள்ளை பிறந்திருக்கின்றது பார்க்க போகின்றேன் வருகின்றாயா என அம்மா என்னிடம் கேட்ட போது சும்;மா போய் பார்த்துவிட்டுத் தான் வருவோமே என்கின்ற எண்ணத்தில் வெளிக்கிட்டு போயிருந்தேன். அபிநயாவை கட்டிலில் தலையணைகளுக்கு மத்தியில் படுக்க வைத்திருந்தார்கள். பிங் நிற தலையணைகளுக்கு நடுவில் புத்தம்புதிய ரோஜா போல்…. தூக்க வேண்டும் என்கின்ற ஆவலிருந்தாலும் குழந்தைகளுக்கு இருக்கின்ற வழுவழு தன்மையால் கையிலிருந்து வழுக்கிடுவாளோ என்கின்ற அச்சம். செல்வியக்கா கேட்ட போதும் இடம்வலமாகத் தான் தலையாட்ட வைத்தது. ஆனாலும் செல்வியக்காவின் அனுமதியுடன்  அம்மாவிற்கு தெரியாமல் செல்போனில் இரண்டு மூன்று படங்கள் பிடித்திருந்தேதன். அந்தக்காலகட்டத்தில் தான் வர்மன் காதலை சொல்லி நானும் தலையாட்டி ஆறுமாதமளவில் கைகோர்த்து கடந்திருந்தோம். அபிக்குட்டியின் படங்களை நான் வர்மனுக்கு அனுப்பியதும் அதற்கு அந்த மனிசன் கடுப்பாகி “மீரா நாட்டில எவ்வளவோ பிரச்சினை. இப்ப இதை அனுப்பி அதைப்பற்றி கதைப்பது முக்கியமா?” என கொதியில் கத்தியதும் இந்த கதைக்கு அப்பாற்பட்ட விடயம். ஆனால் என்னுடைய  போனில் அபிக்குட்டியின் படம் தான் ப்ரொபபைல் பிக்சரா பல மாதங்கள் இருந்திருந்தது. 

ஓராண்டாக பார்க்க சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கவில்லை. ஆனால் செல்வியக்கா பேச்சு அடிபட்டால் அபியை மறக்காமல் கேட்டுக்கொள்வேன். மற்றும் படி நேரில் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. என்னுடைய இறுதியாண்டு படிப்பு ஒரு காரணமென்றால் எங்கள் காதலால் வீட்டில் ஏற்பட்டிருந்த குழப்பம் மற்றொரு காரணம். கொழும்பிலிருந்து வீடு செல்வதே ஒருவித பயத்தினை தோற்றுவித்திருந்த காலமது. வீட்டிற்கு போனாலே வீட்டாக்களுக்கும் எனக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுவிடும். சமயமும், சாதியும் வர்மனின் இயக்க ஆர்வமும் இருவருக்குமிடையான வயது வித்தியாசமும் பயங்கர எதிர்ப்பை தோற்றுவித்தது என்றால் என் அண்ணாவினது வர்மனினதும் முன்கோபப் பேச்சுக்கள் அதனை ஊதிப்பெருப்பித்துக்கொண்டிருந்தது. அவ்வாறானதொரு விடுமுறை நாளில் தான் இரண்டாவதாக தடவையாக பூங்காவில் அபிக்குட்டியை சந்தித்தேன். குட்டிக் ஸ்கேட்டும் சிவப்பு நிற டொப்பும் போட்டு இருந்த கொஞ்ச முடியை வாரி கிளிப் குத்திக்கொண்டு தன் அப்பாவின் கையை பற்றிக்கொண்டு தத்தி தத்தி நடந்து வந்துகொண்டிருந்த காட்சி இன்றும் கண்ணுள் இருக்கின்றது. அப்போதைய மனநிலையில் கன்னத்தில் மெதுவாக கிள்ளி சதீஸ் அண்ணாவுடன் ஓரிரு நிமிடங்கள் கதைத்துவிட்டு நகர்ந்து விட்டேன். இது நடந்து ஏழெட்டு மாதங்களில் சதீஸ் அண்ணா கடத்தப்பட்டதாகவும் தகவல் ஏதும் இல்லை என்றும் மீண்டும் வருவார் என்று சாத்திரி சொன்னதை செல்வியக்கா சற்று நம்புவதாகவும் அம்மா ஒரு நாள் போனில் பேசும் போது சொன்னார். பின்னர் செல்வியக்காவின் வயிற்றில் வளருகின்ற இரண்டாவது பிள்ளையின் ராசி தான் சதீஸ் அண்ணாவின் காணாமல் போதலுக்கு காரணம் என்று சொல்லி மாமியார் ஏச அக்கா அம்மாவிடம் குறைபட்டு அழுததாக ஒரு நாள் சொன்னார். “ஓம்… அப்ப மஹிந்த காரணமில்லையா?” என மாமியாரிடம் கேட்கச்சொல்லலாமே என நான் பதிலளித்ததும் இன்றும் ஞாபகமிருக்கின்றது. 

அதற்கு பிறகு செல்வியக்கா சதீஸ் அண்ணா இல்லாததால் பொட்டு வைத்தாலும் குற்றம்: வைக்கவில்லை என்டாலும் குற்றமாகி போனது குறித்த அலசல் அலுவலகத்தில் நிலவுவதாக அம்மா ஒரு நாள் குறைபட்டுக்கொண்டார். அபிக்குட்டிக்கு ஆறுவயதிருக்கும் என்று நினைக்கின்றேன். நான் உதவிப் பொறியிலாளராக பணியாற்றிக்கொண்டிருந்த காலம். வீட்டில் முழுச்சம்மதம் இல்லாவிட்டாலும் என் பிடிவாதத்தினாலும் அழுகையினாலும் எமது காதலுக்கு தலையாட்டியிருந்தார்கள். வர்மன் அரசியல் பிரச்சினைகளால் இலங்கை வரமுடியாது என்றாலும் அந்த மனிசனின் எமது மண்ணில் தான் நம் வாழ்க்கை தொடங்க வேண்டும் என்ற பிடிவாதம் காரணமாக அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அண்ணா முகத்தினை தூக்கி வைத்துக்கொண்டு தான் திருமண அழைப்பிதழ்கள் கொடுப்பதற்கு என்னை பைக்கில் ஏற்றி இறக்கினார். நாங்கள் செல்வி அக்காவிற்கு கொடுக்கச் சென்ற போது அவரும் அபிக்குட்டியும் இருக்கவில்லை. அவருடைய அம்மாவிடம் தான் கொடுத்துவிட்டு வந்திருந்தோம்;. அந்நேரத்திலும் அதற்கு பின்னரான நாட்களிலும் சரி அபியை குறித்த எந்த சிந்தனையும் இருந்திருக்கவில்லை எனக்கு… மணப்பெண்ணின் நிலையில் இருந்து பார்த்தால் உங்களுக்கே என் பதற்றம் புரிந்திருக்கும்.

நான் இறுதியாக அபிக்குட்டியை சந்தித்தது எமது திருமணத்தில் தான். பச்சை நிறத்தில் குட்டி பாவாடை தாவணி போட்டு தலைக்கு பூ வைத்து சலங்கைளும் அணிந்து பார்க்கும் போது சினிமாவில் நடிக்கின்ற குழந்தைகள் போல் தானிருந்தாள். எமது திருமணம் தேவாலயத்தில் மோதிரம் மாற்றிக்கொண்டு பின்னர் மண்டபத்தில் தமிழ் முறைப்படி நடைபெற்ற இரு சடங்கு திருமணம். உடைகள் மாற்றுவது முதல் சிரித்துக்கொண்டு கைகுலுக்கியது வரை மிகவும் பதற்றத்துடன் தான் அன்றைய நாள் கழிந்திருந்தது. இதில் தம்பியைத் தவிர மற்ற அனைவரது முகத்திலும் சிரிப்பு தொலைந்திருந்தது. எமது காதல் மீதான எதிர்ப்பையும் என் மீதான அதீத பாசத்தையும் முகத்தை தூக்கிப்பிடித்துக்கொண்டு கலந்துகொள்வதின் ஊடாக ஒருசேர காட்டியிருந்தார்கள். இதற்கு நடுவில் தான் அடிக்கடி ஓடித்திரிந்த குழந்தைகளை என் கண்கள் மேய்ந்து கொண்டிருந்தது. பதற்றங்களையும் கவலைகளையும் மறங்கடிப்பதில் குழந்தைகளை மிஞ்சுவதற்கு யாருண்டு? என்னால் மணமேடையில் இருந்து பார்க்க தான் இம்முறை முடிந்தது. ஓடிவந்த ஒரு குழந்தை விழுந்து அழுத போது அபிக்குட்டி தான் வந்து கைபிடித்து கூட்டிப்போனாள். பிறகு குடும்ப சகிதம் புகைப்படம் எடுக்க வந்த போது தான் விழுந்த குழந்தை அபியின் தம்பி என்று புரிந்தது. செல்வியக்கா நெற்றியில் பெரிதாக இருக்கும் பொட்டினை காணவில்லை. சற்று நிறம் குன்றி இளைத்திருந்தார். காதலித்து கைப்பிடித்த கணவன் காணாமலாக்கப்பட்டதன் பிரதிபலிப்பு நன்றாகவே தெரிந்தது. அந்த சிரிப்பு மட்டும் மாறவேயில்லை. அன்று அபிக்குட்டி கட்டிப்பிடித்து என்னை முத்தமிட்ட பின் கைக்குட்டையால் துடைத்த எச்சிலின் ஈரத்தினை இன்றும் கன்னத்தில் உணரமுடிகின்றது. வழமை போல் வர்மன் சிரிப்புகளுடன் நிறுத்தி விட்டார். அவருக்கு தான் இயற்கை, குழந்தைகள் போன்ற மென் இரசனைகள் இருந்ததில்லையே. காதலித்த மூன்று வருடங்களிலும் சரி கல்யாணத்திற்கு பின்னராக மூன்று வருடங்களிலும் சரி அவரிடம் ஏற்படுத்த முயன்று நான் தோற்ற விடயங்களில் இதுவும் அவரது முன்கோப குணமும் அடங்கும். ஒருவேளை எதிர்முனைகள் என்பதால் தான் கவரப்பட்டமோ என்னவோ…. செல்வியக்கா குடும்பம் மேடையை விட்டு இறங்கிய பின் வர்மனிடம் “ஞாபகமிருக்கா முதலொருக்கா படம் அனுப்பினன்………” என்று எப்படியெல்லாமோ அபிக்குட்டியை ஞாபகப்படுத்த முயன்றதும் “அத விடுங்கள் மீரா….” என்று அவர் சொன்னதும்…. “இப்ப ஏதாவது இயக்க கத, பாட்டு என்டா ஞாபகம் இருந்திருக்கும்…..”என்று நான் முனுமுனுத்ததும் நினைவிருக்கின்றது. அதற்கு பின்னர் மூன்று மாதங்களுக்குள் நானும் புலம்பெயர்ந்தாகிவிட்டது. அடுத்த ஒரு வருடத்திற்குள் ஆதித்தன், ஹரிகாலன் பிரசவம். அப்பாவையும் அம்மாவையும் அழைப்பதற்கான ஆயத்தங்கள் செய்தபோதும் எடுக்க முடியவில்லை. என் மாமியார் தான் பெறாத தாயாக இருந்து பிரசவம் பார்த்தவர். 

இந்த மூன்று வருடங்களில் புலம்பெயர் நாட்டில் காலூன்றுவதற்கான பாடுகள் பல….. இரட்டை குழந்தைகளை வளர்ப்பதிலான சுகமான சுமை…..குடும்பத்திலும் வர்மன் மீதான கோபங்கள் குறைந்திருக்கின்றது. அப்பாவும் அண்ணாவும் பெரிதாக பேசுவதில்லை என்றாலும் அம்மா மட்டும் அடிக்கடி “தம்பி எங்க?” என்று கேட்டுக்கொள்வார். ஒருவகையில் இந்த சிடுமூஞ்சுடன் அந்த கோபக்காரர்கள் பேசாமலிப்பதும் நல்லதே. இல்லாட்டி அம்மாக்கும் எனக்கும் இதுகளை சரிசெய்யவே நேரம் போதாமலிருந்திருக்கும். பல ஊர்க்கதைகளை நானும் அம்மாவும் கதைத்திருக்கின்றோம் அப்போதெல்லாம் அம்மாவும் கூட அபிக்குட்டியின் மரணம் பற்றி சொல்லவில்லை. நானாவது கேட்டிருந்திருக்கலாம். ஒருவேளை அபியுடன் என் உறவு இன்னும் நெருக்கமானதாயிருந்திருந்தால் கேட்டிருப்பேனோ என்னவோ…… 
இன்று அம்மா சொன்னது மீண்டும் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றது. பாடசாலை முடிந்து அபியை கூப்பிட போன செல்வியக்காவின் அப்பாவிடம் குழந்தை போய்விட்டது என வகுப்பாசிரியர் சொல்லியிருக்கின்றார். அவர் மீண்டும் வீடு வந்து பார்த்திருந்திருக்கின்றார். குழந்தை வந்திருந்திருக்கவில்லை. நேரம் செல்லச்செல்ல விபரீதம் புரிய ஆரம்பித்திருந்திருக்கின்றது. பொலிஸில் முறைப்பாடு செய்திருந்திருக்கின்றார்கள். மூன்று நாட்களின் பின் பாழுங்கிணற்றிலிருந்து குழந்தையின் உப்பிய நிர்வாணமான உடல் கிடைந்திருந்திருக்கின்றது……. எனக்குள் ஏதோவொரு வெறுமை படர்வதை போலிருக்கின்றது. கண்களை மூடி பக்கத்தில் இருந்த அப்பாவின் தோளில் சாய்ந்துகொண்டேன். எனக்கும் அபிகுட்டிக்கும் அப்படியொன்றும் பெரிய பழக்கம் இருந்திருக்கவில்லை என்றாலும் அந்த வட்டமுகம்… எப்போதும் கனவுகள் மிதக்கின்ற பெரிய கண்கள்…… உதட்டோர சிரிப்பு… அள்ளித்தூக்கி முத்தமிட வேண்டும் என சிந்திக்க வைக்கின்ற அந்த சின்னஞ்சிறு உருவத்தினை மறந்திட முடியவில்லை என்பது தான் உண்மை. ஏதோவொரு நாளின் பின்னிரவில் வர்மனுக்கும் எனக்கும் பெண் குழந்தை பிறந்தால் எப்படியிருக்கும் என கற்பனை செய்த போது அதில் அபிக்குட்டியின் சாயல் இருந்திருந்தது. இன்று வலியுடனான வெறுமை ஒரு புறம் இதை பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்கின்றதான என் ஊடக புத்தி ஒருபுறம்…..கட்டாயம் தெரிந்துகொண்டேயாக வேண்டும். அந்த எண்ணமே ஏதோவொரு சிறு ஆறுதலாக அமைய சிந்தனை தீர்மானமாகிவிட்டது. 

மட்டக்களப்பு வீட்டிற்கு வந்தாயிற்று. வந்த ஒரு வாரம் வரை மாற்றி மாற்றி உறவினர்கள், அயலவர்களது வருகையில் சிந்தனையை செயலாக்க முடியவில்லை. இதில் ஆதி, ஹரியின் இடமாற்றத்தினால் வந்த உடல் உபாதைகள் வேறு… எல்லாவற்றினையும் சீர்செய்ய சில நாட்கள் பிடித்துக்கொண்டன. பின்னரான ஒரு நாளில் தம்பியுடன் போய் செல்வியக்காவை சந்தித்தேன். வாசல் ஏறிய போதே முன்னால் அபிக்குட்டியின் பள்ளிச்சீருடையுடனான புகைப்படம் தொங்கவிடப்பட்டிருந்தது. பேச்சுவாக்கில் குழந்தை காணாமல் போனதற்கு அடுத்த நாள் தனக்கு அநாமதேய இலக்கத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், கேட்கும் பணம் தரும் பச்சத்தில் விடுவிப்பதாக தெரிவித்ததாகவும்,  எவ்வளவு பணம் தருவதாயினும் பரவாயில்லை ஆனால் என் குழந்தை என்னுடன் பேச வேண்டும் என தான் கூறியதாகவும், அதற்கு பின்னர் வந்த பல அழைப்புகளுக்கும் தான் இவ்வாறு தான் பதிலளித்ததாகவும், ஆனால் குழந்தையை இறுதிவரை பேசவைக்கவில்லை என்றும் சொன்னார். சடலம் கண்டுபிடிக்கப்பட்டதற்கு இரு தினங்களின் பின்னர் குற்றவாளிகளை பொலிஸார் சுட்டுக்கொண்டதாகவும் அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் தங்களது நெருங்கிய உறவின பொடியன் ஒருவன் இருந்தாகவும் மேலும் சொல்லி அழுதார். 

அதன் பின்னர் பொலிஸ், செல்வியக்காவின் உறவினர்கள், நண்பர்கள், என் ஊடக நண்பர்கள் என்று பல தரப்பினரையும் சந்தித்து பார்த்து விட்டேன். சம்பந்தப்பட்ட இளைஞர்கள் போதைக்கு அடிமையானவர்கள், குழந்தையை கடத்தி பணம் சம்பாதிக்க நினைத்திருந்தார்கள், தகப்பன் காணாமல் போனதற்கும் இதற்கும் தொடர்பு உண்டு, இச்சம்பவத்திற்கும் பல பெரிய புள்ளிகளுக்கும் தொடர்பிருப்பதால் தான் உடனடியாக சுட்டுக்கொல்லப்பட்டார்கள் இப்படி ஏகப்பட்ட ஊகங்கள், நிரூபிக்க முடியாத ஆதாரங்கள், பல வினாக்களுக்கான விடை இன்றும் தெரியாமலேயே… 

கடைசியானதான முயற்சியாக கொல்லப்பட்டவர்களில் ஒரு பொடியனின் நண்பனை சந்தித்து உருப்படியான தகவல் ஏதும் கிடைக்காத அலுப்பிலும் விடை தெரியான கேள்விகளுடனும் வீடு திரும்பியிருந்த தருணத்தில் வர்மன் என் அப்பாவிடம் “அப்படி சொல்ல முடியாது மாமா… தமிழ்தேசிய ஒருமைப்பாடு சிந்திக்கும் போது இந்த கடத்தல், பாலியல் வன்முறை எல்லாம் சின்ன விஷயம். இதுகளையெல்லாம் தூக்கிபிடிச்சா எப்படி போறது… அரசியல் நடத்திறது….?....” என்று ஏதோவொரு சம்பவத்தை ஒட்டி கதைத்தது என் காதிலும் விழுந்தது. “உங்கள் அரசியலும் நீங்களும்” என ஓவென்று கத்தவேண்டும் போலொரு உந்துதல்… கடத்தப்பட்டிருந்த மூன்று தினங்களிலும் குழந்தையை என்ன செய்திருப்பார்கள்? உடைகள் கழற்றப்பட்டு கொல்லப்பட்ட அந்தக் கணங்களில் அபிக்குட்டி எப்படியெல்லாம் கத்தியிருப்பாள்? உயிர் பிரிந்த அக்கணத்திற்கு ஒரு கணம் முன்னர் அக் குழந்தை என்னவெல்லாம் சிந்தித்திருக்கும்? 

நாளை வர்மனுக்கும் இந்த மீராவிற்கும் கூட அபிக்குட்டி மாதிரி ஒரு பெண் குழந்தை பிறக்க கூடும். ஒருவேளை அதற்கு என் கற்பனையில் உள்ளதான படி மீனாட்சி என்றோ தமிழரசி என்றோ பேர் சூட்டிக்கொள்ளலாம்….. அந்தக் குழந்தைக்கு ஏதுமாகிவிடும் ஒரு கணத்தில் வர்மனுக்குள்ளான வரிசையில் தேசியம் பின்தள்ளப்பட்டு தன் மகளின் உயிர் பெரிதாகலாம். ஆனால் அது வரை எத்தனையோ அபிநயாக்கள்….. மன்னியுங்கள் அபிக்குட்டிகள் மரணித்து மண்ணாகி போயிருப்பார்கள். 

(2009 மட்டக்களப்பில் பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கதை. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)


No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை