Thursday, January 24, 2013

அன்பானவர்களுக்காக சில நிமிடங்கள்


இன்று உலகம் ரொம்ப சுருங்கி விட்டது என்கின்றோம். ஆனால் அதனுடன் கூடவே அன்பும் சுருங்கிவிட்டது என்று நினைக்கத் தோன்றுகின்றது. முன்னர் எல்லாம் தொடர்பாடல் வசதிகள் ஈரக்கவில்லை ஆனாலும் அன்பு பறிமாற்றல்கள் நிறைந்திருந்தன. எனது குடும்பத்தில் அநேகமானவர்கள் காதலித்து திருமணம் செய்தவர்கள். அவர்கள் தங்களவர்களுக்கு செய்த அன்பின் பரிமாற்றங்களை இன்றும் கூறி பெருமைப்பட்டுக் கொள்வதை பார்த்திருக்கின்றேன். ( அம்மா கூட அப்பா தன்னை கிறிக்கட் விளையாடும் சாட்டில் சைட் அடித்ததாக கூறியிருக்கிறார்) எனினும் இன்று பலவித தொழில்நுட்ப தொடர்பாடல் முறைகள் உருவாக்கப்பட்டுள்ள போதும் அன்புப்பறிமாற்றல்கள் மிகவும் குறைந்தளவே காணப்படுகிறது.
அன்புக்கு “நீர்த்தன்மை” இருக்குதுங்க. மரத்திற்கு ஒரு வேளை நீர் ஊற்றாவிட்டால் இறந்து விடாதாயினும் வாடல் நிச்சயம் ஏற்படும் அதேபோன்று எந்த உறவுமுறையிலும் அவர்களுக்கான நேர ஒதுக்கல்கள் குறையும் போது புரிந்துணர்வுகள் குறைந்து அன்பில் விரிசல்கள் ஏற்பட தொடங்குகின்றன.
நாம் எவ்வளவோ பெரிய மேலதிகாரியாக கூட இருக்கலாம் ஆனால் குடும்பத்திற்கும் , நமது நண்பர்களுக்கும் , உறவுகளுக்கும் அது அப்பாற்பட்ட விடயம். அலுவலத்தில் மட்டும் தான் நமக்கு கீழ் பலர் நமது பதவிக்கு தலைவணங்க கூடும் ஆனால் உறவில் அன்பு தாங்க பிரதானம். “எனக்கு வேலைப்பளு இருக்கின்றது” என கூறுகின்றபவர்களின் தலையில் நூறு தடவையாவது குட்ட வேண்டும். நம் அன்பைக் கூட வெளிப்படுத்த முடியாதளவு ஒரு அலுவலகப்பணியோ அல்லத நமது பதவியோ அமைகின்றது என்றால் அதைவிட கூலி வேலையாவது செய்து கூழ் குடித்துக்கொண்டு அன்பான , ஆரோக்கியமன வாழ்க்கை வாழ்வது மேல்.
ஆனால் இன்று பல வழிகள் அன்பை வளர்க்க இருக்கின்ற போதும் மனதில் தான் இடமில்லாமல் இருப்பதாக தோன்றுகின்றது. எவ்வளவு தான் வேலைப்பளு இருந்தாலும் ஒரு நிமிடம் கிடைக்காமல் தான் போய் விடுமா என்ன? இதில் இன்னொரு வகையும் இருக்கின்றது. இன்று அநேகர்கள் மதுவைப் போன்று சமூக ஊடகங்களுக்கும் அடிமையாகவுள்ளனர். அதிலும் சிலருக்கு முகநூலிற்கு (FaceBook) போகாவிட்டால் தூக்கமே வராது. அதிலும் தன் குடும்பத்தினருடன் ஒரு வார்த்தை பேச நேரமில்லை: அன்பானவர்களுடன் பேசுவதற்கு நேரமில்லை. சிலருக்கு குடும்பத்தில் என்ன தான் நடக்கிறது என்பதும் தெரிவதில்லை. அவர்களை சார்ந்த உறவுகள் தம்மை நினைத்து வருந்துவதையோ தமக்காக ஏங்குவதையோ உணர்வதுமில்லை. ஆனால் முதுகு சொறிவதை கூட முகநூலில் இடுவதற்கு நேரம் எப்படியாவது கிடைத்துவிடுகிறது. பலநேரங்களில் அவர்களை பற்றி தெரிவதற்கு முகநூல் கணக்கினை தான்  திறக்க வேண்டியிருக்கின்றது இதென்ன வாழ்க்கை?  “நமக்காக தான் சமூக ஊடகங்களே தவிர அவற்றிற்காக நாமில்லை” என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஊடகங்களை நீங்கள் கையாள கற்றுக்கொள்ளுங்கள்.
அதற்காக எந்த நிமிடமும் நம்மவர்களை கொஞ்சிக்கொண்டிருப்பதுவும் வாழ்க்கையல்ல. ஆனால் அதுவும் வாழ்வின் ஒரு பகுதி என்பதை மறவாதீர்கள்.
தினமும் எம் அன்பானவர்களுக்கு “Good Morning ” சொல்வதற்கோ அல்லது ஒரு “Hai ” சொல்வதற்கோ எவ்வளவு நேரம் செலவாகிடப் போகின்றது? பணத்திற்காக மட்டும் ஓடிக் கொண்டிருக்காமல் பாசத்திற்காகவும் நேரம் ஒதுக்குங்கள். முன்னரெல்லாம் மார்க்கங்கள் இருக்கவில்லை ஆனால் நிறைய பாசம் மனிதரிடையே இருந்தது இன்று நிறைய மார்க்கங்கள் இருக்கின்றன ஆனால் பாசம் காட்டுவதற்கு தான் நேரம் கிடைக்கவில்லை என்கின்றோம். நாம் எவ்வளவு தான் சாதித்தாலும் அன்பினால் உறவுகளை கட்டியெழுப்பாது விட்டால் மிஞ்சுவது எதுவுமில்லை.
நேரம் மீதமாக இருக்கும் போது நம்மவர்களுக்காக ஒதுக்குவதை விட வேலைப்பளுவின் போதும் ஒரு நொடியாவது அவர்களுக்காக செலவளிப்பது தான் உறவுகளுக்கிடையில் பிணைப்பினை வலுப்படுத்தும். அவர்களுக்காக பணம், பொருட்களை கொடுப்பதை விட சில அன்புப்பறிமாற்றங்கள் தான் அன்பை அதிகரிக்கும். ( இது அன்பிற்காக ஏங்குபவர்களுக்கு மட்டும் பணம், பதவி பார்த்து பழகுபவர்களுக்கல்ல )
வாழ்க்கையில் சாதிக்க நினைப்பவர்கள் உறவிலும் சாதிக்க நினைக்க வேண்டும். குடும்பம் மற்றும் எம்மை சூழவுள்ளவர்களுடன் அன்பானதொரு உறவை கட்டியெழுப்பும் போது அது கூட நம்மை இன்னும் சாதிக்க வைக்கும்.
வாழ்க்கையை வாழ்ந்து கடந்த கால பக்கங்களை புரட்டும் போது பல சந்தோஷங்கள் , சில துக்கங்கள், இனிய நினைவுகள் இருக்க வேண்டும். நமது குழந்தைகளுக்கு “பாட்டி வடை சுட்ட கதை” சொல்வதை விட நமது அன்பின் நிமிடங்களை சொல்ல வேண்டும். “இது என்ன வாழ்க்கை?” என்று இருக்க கூடாது “இது தான் வாழ்க்கை” என்று இருக்க வேண்டும். வாழ்க்கை என்பத அழகிய கவிதையாக இருக்கவேண்டும் வாழ்தல் என்பது கலையாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை