பராமரிக்கப்பட்டுக்கொண்டுதானிருக்கின்றேன்
தங்கமூலாம் பூசப்பட்டதல்ல என் கூடு
நம்புங்கள் முற்றும் தங்கத்தாலானது…
எனக்களிக்கப்படும் பாலும், பழமும்
அன்றன்று எனக்காகவே பறிக்கப்பட்டவை – அல்லது
பணம்கொடுத்து வாங்கப்பட்டவை…
பெறுமதிமிக்கவை…
என் முன்னுள்ள கிண்ணத்து நீரை
நான் பருக நினைக்க முன்னே
நிறைத்தும் விடுகின்றார்கள்
என்ன குறை எனக்கு…?
சற்றே ஏறக்குறைய சொல்வதானால்
என் கூட்டின் கம்பிகளுக்கிடையான
இடைவெளி மட்டும் நெருக்கமானவை
அதற்கும் அவர்களே சொல்லிக்கொள்கின்றார்கள்
ஏதாவதொரு பூனை
அல்லது ஜந்து
என்னை கடித்துவிடாதிருக்கத்தான்
இந்த குறைந்த இடைவெளிகள் என்று…..
என்ன குறை எனக்கு….?
அப்பப்போ என் கூடு கூட
திறக்கப்படுகிறது…. நான்
வெளியே வரலாம்….
ஏன் முகத்தில் கூட்டுக் கம்பிகளை
தாண்டி வரும் காற்றினை தவிர்த்து
வெளியே தலை நீட்டும் போது
முகத்திலறைகின்ற தென்றலை
அனுபவிக்கும் சுதந்திரம் வரை எனக்குள்ளது......
ஆனால் என் உலாத்தும் எல்லைகள் மட்டும்
கூண்டுக்கதவு திறக்கும் போது
என் காலில் கட்டப்படுகின்ற
நூலின் நீளத்தில் மட்டும்
தீர்மானிக்கப்பட்டு விடுகின்றது.
எல்லைகள் வரையப்பட்டு விடுவதால்
சுதந்திரம் இல்லை என்றிட முடியுமா….
வகுத்த எல்லைக்குள் அலைந்தாலும்
கூடு திறக்கப்பட்டால் அதுவும்
சுதந்திரம் தானே- அவர்களே பேசிக்கொள்கின்றார்கள்..
என் இறக்கை மீதான
அவர்கள் கரிசனையும் அலாதியானது…
வாராவாரம் எண்ணை என் இறக்கைகள் மீது
தடாவப்படும்….
பல நிறங்களிலான என்
இறக்கைகளின் உரோம வளர்ச்சிக்காக…
அது பல்லாயிரம் கொடுத்து வாங்கப்பட்டு
பல கைகள் மாறி
எனக்கே எனக்காக தருவிக்கப்பட்டதாம் -என
என்மீது பூசும் போதெல்லாம்
பூசும் கைகளுக்குச் சொந்தக்காரர்கள் பேசிக்கொள்கின்றார்கள்
அதென்னவோ பெறுமதிக்கேற்ப
இறகுகளின் அடர்த்தியும்
அதிகரிக்கின்றது தான் - ஆனால்
நுனி மட்டும்
அவ்வப்போது வெட்டப்பட்டுவிடுகின்றது….
"இறக்கை வளர்ந்தால்
பறந்துவிடும் இந்த பறவை"
இதுவும் அவர்கள் சொன்னது தான்
எனக்குப் புரிவதில்லை
ஏன் வளர்க்கின்றார்கள்….?
ஏன் வெட்டுகின்றார்கள்…..?
வளர்த்து வெட்டுகின்ற
முரண்கள் ஏன்…..?
தடவிக்கொடுத்து என்னை நோகடிப்பதேன்….
என் மொழியில் நானும் கேட்டுக்கொண்டுதானிருக்கின்றேன்….
வழமைபோன்று அவர்கள் மொழி மட்டும்
எனக்கு விளங்கித்தொலைகின்றது - என்
மொழி மட்டும்
அவர்களுக்கு விளங்குவதில்லை.....
சொன்னால் நம்புங்கள் - என்
கூண்டின் ஓரத்தில் சாவியையும்
தொங்க விட்டிருக்கின்றார்கள்
சற்றே உயரமாகத்தான்…..
எம்பினால் எட்டிவிடும் தூரத்தில் தான்
அதுவும் நெகிழ்ந்திருக்கும்
இத்துப்போன கயிற்றில்….
எனக்கு தான்
சாவியால் திறந்து கொண்டோ…
அவர்கள் கையில் எனை எடுக்குபோது
உதறிக்கொண்டோ பறந்திட
விருப்பமில்லை……
இங்கு நான், சாவி, கூடு –
என் பறத்தல்
எல்லாமே உவமானங்களே….
No comments:
Post a Comment