Thursday, April 10, 2014

ஊடகப்பெண்களும் ஊரார் பார்வையும்....

சுயம் - 01
அன்று காலையில் எனது தொலைபேசிக்கு வந்த அழைப்பு நான் எதிபாராத ஒன்று மட்டுமல்ல. ஊடகபெண்கள் எவ்வாறெல்லாம் ஊரார் பார்வைக்கு தீனியாகின்றார்கள் என்று எனக்கு சொல்லிய முதல் அழைப்பும் கூட

நான் ஹலோ சொன்னதுமே மறுமுனையிலிருந்த பெண்குரல் கேட்ட கேள்வி நீ நேற்று இரவு ….. என்பவருடன் தங்கினாயா? என்பதே. இந்தக்கேள்வியை இன்று கேட்டிருந்தால் என் பதில் வேறாயிருந்திருக்கும். ஆனால் இது கேட்கப்பட்டது இரு வருடங்களுக்கு முன்னர். அதாவது நான் ஊடகதுறையில் காலடிவைத்த நேரமது. வாயில் வார்த்தைகள் வரும் முன் கண்களுள் கண்ணீர் தான் முதலாக வந்தது அந்த நிமிடத்தில். மறக்க மட்டுமல்ல மனதிலிருந்து மறக்க முடியாத நிமிடங்கள் அவை. என்னுள் ஏற்பட்ட பதற்றத்தில் தொலைபேசியை நிறுத்தி விட்டு என்னுடன் சம்பந்தப்படுத்தி பேசப்பட்ட நபருக்கு அழைப்பினை ஏற்படுத்தினேன். அதன் பின்பு அந்தப்பெண்ணுடன் பேசினேன்.

இப்படி பல அழைப்புக்கள் ஏற்படுத்தியதன் விளைவாக இறுதியில் “ அவர் தனது காதலர் என்றும், பல வருட காதலில் தானும் அவரும் பல தடவை உடலுறவு வைத்து கருக்கலைப்பு செய்ததாகவும் தற்போது அவர் சாதியைக்காட்டி தன்னை உதறிவிட்டு வீட்டில் பார்க்கின்ற வேறு பெண்ணை திருமணம் செய்யவுள்ளதாகவும் அவர் இல்லாமல் தன்னால் வாழமுடியாது தற்கொலை செய்ய போகின்றேன்” என்று பெண் தெரிவித்தாள். தான் “பத்திரிகை ஆசிரியராக இருந்த போது வறுமையால் மேடையில் பாடிய அந்த பெண்ணை தான் பத்திரிகை அலுவலகத்தில் இணைத்ததாகவும்  தன் பணத்திற்காக அவள் தன் பின் அலைவதாகவும்,  அப்படி தன்னை அடுத்தவர்களுடன் இணைத்து பேசும் அந்தப்பெண்ணுடன் என்னால் சேர்ந்து வாழமுடியாது. நான் அவளை காதலிக்கவும் இல்லை” என்று அந்த நபர் சொன்னார். இருவரது வாக்குமூலங்களும் இவ்வாறிருக்க நான் எங்கே இதில் வந்தேன்? என்று ஆராய ஆரம்பித்தேன்

என்னுடன் பணிபுரிகின்ற பெண்ணொருவர் எனக்கும் அந்த நபருக்கும் தொடர்புடையதாக சொல்லிய தகவலே இந்த தொலைபேசி அழைப்பிற்கு மூலம் என்பதை பின்னர் அறிந்தேன். இது உயர்மட்டம் வரை போய் மன்னிப்பு கேட்க வைத்ததுடன் முற்றுப்பெற்றது. ஆனால் நெருப்பில்லாமல் புகையாதல்லவா? இதற்கு நெருப்பு என்ன தெரியுமா? அவர் என் நண்பர் என்பதுடன் இருவரும் ஊடகத்தில் இருக்கின்றோம் என்பதே.

ஆண் - பெண் என்கின்ற நட்பினைத்தாண்டி ஊடகப்பெண்கள் குறித்த ஊரார் பார்வை தான் இன்று என்னை எழுத்தத்தூண்டியுள்ளது. அன்று ஒரு நண்பி பேசும் போது “நான் ஊடகத்துறையில் இருக்கின்றேன். அதனால் என் திருமணம் தள்ளிப்போகின்றது” என்று தன்னைத்தானே நொந்துகொண்டார். இன்னுமொரு சந்தர்ப்பத்தில் என்னிடம் பேசிய ஒருவர் ஒரு பெண்ணைப்பற்றி விமர்சிக்கும் போது “ இது மீடியாவில இருக்கிறது தானே… அப்படித்தான் இருக்கும்” என்றார். அன்றைய நிலையில் என்னால் பேசமுடியவில்லை. அப்போதிருந்த சூழ்நிலை அப்படி. ஆனாலும் பல தடவை மனதுள் செருப்பினால் அடித்திருக்கின்றேன். ஒருவேளை அந்த நபர் இந்தப்பதிவினை முகநூலில் பதியும் போது பார்க்கவும் கூடும்.

இவ்வாறு ஆண்களின் பார்வையில் ஊடகப்பெண்கள் இருக்கும் போது சில பெண்களும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். குறிப்பிட்ட என் நண்பனுடைய முகநூல் Hack  பண்ணப்பட்டிருக்கிறது. இந்த கைங்கரியத்தினை செய்த நபர் முகநூலில் உள்ள என் நண்பனுடன் பணிபுரிகின்ற ஊடகபெண்களின் படத்தினையே Copy பண்ணி என்னுடைய நண்பனின் முகநூலில் போட்டிருக்கின்றார். இதில் வேடிக்கை என்னவென்றால் என் நண்பனின் தங்கையின் படத்தினையும் “காதலிகள்” என்ற பெயரில் போட்டிருப்பது…. ஆக சகோதர உறவினை மதிக்க தெரியாத கயவரிடம் நட்பை புரிவார் என எதிர்பார்ப்பது மடத்தனம் என்பது ஒருபுறமிருக்க தமது தனிப்பட்ட உறவுகளினால் அடுத்தவர் வாழ்வினை எவ்வாறு நாசமாக்குகின்றோம் என்பதே இங்கு நோக்கப்படவேண்டியதான விடயம்.

இன்னுமொரு விடயமும் இருக்கு பாருங்கோ இன்று சில முன்னணி ஊடக நிறுவனங்களில் பாலியல் இலஞ்சங்கள் கோரப்படுகின்றதுடன் முன்னுக்கு வர எத்தனிக்கும் பெண்களுக்கு பின்னால் கதைகளும் கட்டப்படுகின்றன. இதற்கு பல காரணங்கள் ஒன்று தமது வலையில் குறிப்பிட்ட பெண் சிக்காமை… இன்னொன்று எங்கே தம்முடைய இடம் பறிபோய் விடுமோ என்கின்ற பயம்.. அல்லது தாம் எட்டமுடியா இடங்களை எட்டிவிடும் அடுத்தவர்களை மானபங்கப்படுத்தி பார்க்கின்ற ஒருவித குரூரமானநிலை….

ஊடகத்தில் பணிபுரியிறது என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாதொரு விடயம். அதிலும் பெண்களை ஊடகத்தில் பணிபுரிய அனுப்ப பெரும்பாலான குடும்பங்கள் விரும்புவதில்லை… காரணம் அரசியல் பிரச்சினை என்பதை தாண்டி தம் பிள்ளைகள் அசிங்கப்பட்டு நிற்குமோ என்ற பயம்…. குறிப்பாக பெற்றோருக்கு தம் மகளை ஊடகப்பணிக்கு விடுவது என்பது இலங்கை கலாசாரத்தில் வேப்பங்காய் போன்றதொன்று. இதையும் தாண்டி பல பெண்கள் தம் இலட்சிய கனவிற்காக ஊடகப்பணியில் இணைவதுண்டு. இவ்வாறு பல தடைகளையும் தாண்டி தமது இலட்சியத்திற்காக போராடுகின்ற பெண்கள் தம் இலக்கினை அடைகின்றார்களா என்பது பெரியதொரு வினா?

பெண் என்பதால் குட்டப்பட்டார்கள்... இன்று ஊடகப்பெண் என்பதால் குட்டப்படுகின்றார்கள் ... நாம் குரங்கிலிருந்து கூர்ப்படைந்துவிட்டோமா என்பதை நாம் ஒவ்வொருவரும் நிலைக்கண்ணாடி  முன்னால் நின்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளவேண்டும்.

பிற்குறிப்பு - என்னுடைய அடுத்த பதிவில் இவ்வாறான சில சம்பவங்களினை பெயர்களுடன் பதியவுள்ளேன். ஆதாரங்களும் முன்வைக்கப்படும்.
 


1 comment:

அதிகம் வாசிக்கபட்டவை