Wednesday, September 4, 2013

அண்ணாவின் அழகி


அநேகமாக ஒரு காலத்தில் பலரின் தூக்கங்களை கெடுத்த பெண்கள் பின்னர் சப்பை பிகராவதும் பாடசாலைக்காலத்தில் சப்பை பிகரா இருக்கும் பெண்கள் சூப்பர் பிகராவதும் யதார்த்தமங்க.. ஆனால் பாருங்க எந்தப் பொண்ணும் அவங்க அண்ணன்களுக்கு எப்போதுமே அழகிகள் தான். அது உள்ளுர் கிழவி என்றாலும் அவ கூட ஒரு அண்ணாவிற்கு உலக அழகியாத் தான் இருந்திருப்பா!!!

பெரும்பாலும் இளைய சகோதரனுக்கு தன் சகோதரி மேல் இருக்கும் பாதுகாப்பு உணர்வை விட மூத்த சகோதரனுக்கு தங்கை மேல் இருக்கும் பாசமே தனி தாங்க… இதுக்கு உளவியல் காரணம் கூட உண்டு. பெரும்பாலும் நம்மை விட வயதில் மூத்த ஆண் சகோதரனுக்கு தன் வயதை ஒத்த நண்பர்கள் அடுத்த பெண்ணை எவ்வாறு பார்க்கின்றான் என்பது பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும் என்பது தான் அது. (இவருக்கும் ஒரு நண்பன் இருந்திருக்கும்…. அவனுக்கு ஒரு தங்கச்சி இல்லாமலா இருந்திருக்கும்…. நம்ம அண்ணாவும் தன்னுடைய நண்பன் தங்கச்சிய லுக்கு விட்டிருப்பாரில்லையா????) 

இனி தான் நான் என் வீட்டுப்பிரச்சினைக்கு வரப்போகின்றேன். நமக்கும் ஒருவர் இருக்காரில்ல…. அவருடைய இம்சை இருக்குதே….. அதிலும் உயர்தரம் படிக்கும் போது பிரத்தியேக வகுப்புகளுக்கு அண்ணாவுடன் தான் போவேன். அக்காலகட்டத்தில் (2007)  நீண்டதாகவும் கரையோரம் முக்கோணமாக வெட்டியது போன்றதான அமைப்புடன் ஒரு புதுவடிவமைப்பான பெண்களுக்கான பாவாடை வந்திருந்தது. அன்று காலையில் தான் அம்மாவுடன் போய் வாங்கியிருந்தேன். ஆக வழமை போன்று புது உடைகளை உடனேயே அணிகின்ற எனது மேம்பட்ட கொள்கையுடன் மாலை வகுப்பிற்கு அணிந்து கொண்டு அண்ணாவின் பைக்கிள் கால் வைத்தது தான் தாமதம்… “இறங்குறிங்களா பைக்க விட்டு…” என்று அண்ணா கத்தினார். “ஏன் அண்ணா…?” என்று அப்பாவித்தனமாய் கேட்டேன்….. “இப்ப இந்த ஸ்கேட்டுடன் காலைத் தூக்கி பைக்கிள் ஏறும் போது பின்னால் இருப்பவர்களுக்கு எல்லாம் தெரியும்…” என்றாரே பார்க்கலாம்… இனி என்ன மூச்சை கொஞ்சம் தூக்கிப் பிடித்துக்கொண்டு போய் சல்வார் அணிந்து தான் வகுப்பிற்கு போனேன்….

நான் கொஞ்சம் கம்பியூட்டர் படிப்பில வீக் (வேறென்ன எல்லாத்திலயும் பிர்லியண்டா இருக்க முடியுமா?) அம்மா நான் கத்த கதற அதற்கு காது கொடுக்காம கிளாசில சேர்த்துவிட்டாவா…. அன்று தொடங்கியது அண்ணாவின் அழிச்சாட்டியம். “ரொம் என்டா என்ன? ரம் என்டா என்ன?” என்று உயிரை எடுத்தார். (சத்தியமா எனக்கு இன்றும் இதற்கு சரியான விளக்கம் தெரியாதுங்க) இப்பவும் நம்ம குடும்ப சங்கம் கூடும் போது அண்ணாவும் தம்பியும் சேர்ந்தார்கள் என்றால் இத இப்பவும் கேட்டு என் மானத்தை வாங்குவதுண்டு….

முன் பந்தியில் சொன்னது போல நம்ம அண்ணாவும் நம்மள வேவு பார்த்தாரே அத எப்படி சொல்வது?.... என்னை வகுப்பிற்கு கொண்டு விடும் போது ஒரு நிற டீசேட்டும் பின்னர் வேவு பார்க்க வேறு நிற டீசேட்டும் போட்டு மறைந்து நின்று பார்க்கும் பழக்கம் நம் அண்ணாவிற்கு இருந்தது. (பெரிய சி.ஐ.டி. சுப்ரமணியம் , 007 என்டு நினைப்பு). எனக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கமுண்டு கொஞ்ச நாள் அத தேடித்திரிந்தாரு துப்பு துலக்குவதற்கு…

ஆனாலும் பாருங்க ஒவ்வொரு வில்லன் அண்ணாக்களுக்கும் (என்னை மாதிரி) ஒரு கிரிமினல் தங்கச்சி இருப்பா!! எங்களுக்கும் ஒளித்து வைக்கத் தெரியுமில்ல… எத்தனை தடவை பிழைகள் செய்து விட்டு அவர் தலைமீதே பொய்ச்சத்தியம் பண்ணியிருப்பன். (சத்தியம் பண்ணும் போது லைட்டா “அ” சேர்த்தா அது அசத்தியம் தானே…..) முட்டக்கண்ணீர் வடிச்சு சாதித்திருப்பன். எனக்கு தெரியும் அண்ணாக்கு நான் அழுதா பிடிக்காது என்று…. அவருக்கு தெரியாது அது பீலிங்கில் வந்ததுல்ல நான் ஒரே இடத்தை உற்றுப்பார்த்ததால வந்ததென்று… எது எப்படியோ நம்ம காரியம் ஆனால் சரிதானே.

இன்னொரு இரகசியம் தெரியுமா? எனக்குத் தெரியாமல் என் கைபேசியை நோண்டுவாரென்று எல்லா போய்ஸ் பெயரையும் பொம்பள ப்ரண்ட்ஸ் பெயரில தான் பதிந்திருந்தேன்… அல்லது “ரோங் நம்பர்” எப்புடி?

ஆனாலும் அண்ணா கொஞ்சம் பாசக்காரன் தான்…. காதலர் தினத்தில் யாராவது தங்கச்சிக்கு கிப்ட் குடுப்பாங்களா? ஆனா என் 007 எனக்கு தருவாரே… தம்பிக்கு தெரிந்து ஒன்று தெரியாமல் ஒன்று எனக்கு நிறைய சலுகைகள் காட்டுவார். நாங்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டு கொண்டிருந்தாலும் இருவருக்குமே “பொஸிவ்னஸ்” நிரம்ப இருக்குது. அண்ணாவை கடுப்பேத்த மற்ற அண்ணாக்களிடம் நான் ஓவரா அன்பு காட்டுவதும் என்னைக் கடுப்பேத்த ஒன்றுவிட்ட தங்கைகளை அண்ணா பைக்கிள் ஏற்றி ஊர் சுற்றுவதும் சகஜமானதொன்று…. இதற்காக அவள்களை நான் எத்தனை தடவை பழிவாங்கியிருப்பேன் தெரியுமா? அண்ணாவின் பைக்கை எத்தனை தடவை பஞ்சர் ஆக்கியிருப்பேன்….

இப்போதெல்லாம் நான் போகும் போது அண்ணா வீட்டிற்கு வருவதில்லை. அல்லது அண்ணா போகும் போது எனக்கு வேலையிருக்கும். இன்று நானிருக்கும் இடமும் அண்ணாவிருக்கும் இடமும் சில மைல் தூரங்கள் தான் என்றாலும் சந்தித்துக்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் மிகக்குறைவு. எப்போதாது சந்தித்தால் நிச்சயம் ஏதாவது ஸ்பெஷல் இருக்கும். நான் புளுகு குணத்தில் இதையெல்லாம் தொலைபேசியில் உடனுக்குடன் சொல்லி தம்பியின் வயிற்றெரிச்சலினை கிளருவதுண்டு. வீதியென்றும் பார்க்காமல் கட்டிப்பிடித்து முத்தமிடும் பழக்கம் கூட இன்றும் தொடர்கிறது.இப்போதும் அண்ணா என்னை வழியனுப்பிவிட்டு தான் தன் விடுதிக்கு போவார். நூறு தடவை கவனம் என்று சொல்லுவார். அடுத்தவர்களுக்கு தான் எனது பதவி, படிப்பு என் தைரியம் பற்றிய பார்வை. என் அண்ணாவிற்கு நான் என்றும் அன்பு குட்டி தங்கச்சி தான்.

வளர வளர நம் பொறுப்புகள் அதிகரிக்க பாசம் காட்டுவதற்கும் செல்லச் சண்டைகள் போடுவதற்கும் நேரம் இருப்பதில்லை. ஆனாலும் பழைய நினைவுகள் தினம் ஒரு தடவையாவது மனதில் மோதாமல் அதன் சாரல் அடிக்காமல் இருப்பதில்லை.

மறுபிறவி எடுத்தால் மீண்டும் தங்கையாகவே பிறக்க வேண்டும். மொக்க பிகர் என்று தெரிந்தும் தன் தங்கை தான் உலக அழகி என்ற எண்ணத்தில் 007 ஆக அண்ணா என்னை தொடர வேண்டும். நானும் அண்ணாவை அதட்டி, வெருட்டி நான் நினைத்தவைகளை சாதிக்க வேண்டும். தூக்கத்தில் அலங்கோலமாக தூங்கும் என் போர்வையை இழுத்துவிட்டு சரி செய்கின்ற அந்த கைகளையே மீண்டும் பற்றி நடை பயில்கின்ற வரம் வேண்டும்.

அண்ணா எனக்காக பாடும் பாடல் - http://www.youtube.com/watch?v=_W7ueHUwyCA

(லைட்டா பாசமலர் சிவாஜி – சாவித்திரியை  பார்த்த பீலிங் உங்களுக்கு வரலயா???)      
 

No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை