தலைப்பினை பார்த்ததும் ஏதோ வேற்று மொழி பேச தொடங்கிவிட்டேன் என்று விகல்பமாக யோசிக்காதீர்கள். கா.மு – என்பது காதலுக்கு முன் கா.பி என்பது காதலுக்குப் பின் என்பவற்றின் சுருக்கமே. இந்தப்பதிவினை இன்றைய காலகட்டத்துடன் சம்மந்தப்படுத்தியும் உளவியல் ரீதியாகவும் அணுகுவதே இக்கட்டுரையின் நோக்கம். இப்பதிவினை என் கண்ணோட்டத்திலும் என் சார்ந்தவர்களை மையப்படுத்தியுமே எழுதுகின்றேன். யாரையும் காயப்படுத்துவதோ அல்லது பெண்ணியம் பேசுவதோ இதன் நோக்கமல்ல.
“காதல்” என்பது இன்று பலவித பரிணாமங்களை கடந்துவிட்டது. முன்னர் நம்முடைய தாத்தா – பாட்டி காலத்தில் ஒருவருக்கொருவர் பார்த்துக்கூட இருக்கவில்லை. அவர்களுக்கு இடையில் தொடர்பாடல் சாதனங்களும் இருக்கவில்லை. ஆனாலும் அவர்களது காதல் மிகவும் தூய்மையானதொன்றாக இருந்தது. அவர்கள் காதல் கைகூடாவிட்டால் தற்கொலை செய்து கொண்டார்கள் அல்லது காலம் முழுவதும் ஒருவர் மற்றவருடைய நினைவுகளுடனேயே காலம் கழித்தார்கள். அக்காலத்தில் எல்லாம் ஒரே காதல் என்ற கருத்து தான் நிலவியது. காதலிக்கும் போது எவ்வாறானதொரு புரிந்துணர்வுடன் காதலித்தார்களோ அதே காதல் கைபிடித்த பின்னும் குறைந்திருக்கவில்லை.
இன்று சமூக ஊடகங்கள் மூலமாக நமக்குறியவர்களை தேடி திருமணம் செய்யுமளவிற்கு நாம் வளர்ந்திருக்கின்றோம். நம்முறவுகளை வளர்த்துக்கொள்ள பல தொடர்பாடல் நுட்பங்கள் நம்மிடையே பெருகிக்கிடக்கின்றன. ஆனாலும் தற்போதைய காதலர்களிடையே புரிந்துணர்வு என்பது பஞ்சமாகவே இருக்கின்றது. ஒரு பெண்ணோ அல்லது ஆணோ தம் காதலை எதிர்பாலினர் ஏற்கும் வரை கொஞ்சிக்குழாவுகின்றோம், பல மணி நேரங்கள் காத்திருக்கின்றோம், சில தவறுகள் நம்மிடம் இல்லாவிட்டாலும் பொறுத்துப்போவோம், பல தியாகங்கள் செய்கின்றோம். ஆனால் இதுவே காதலிக்க தொடங்கிய பின் படிப்படியாக மாற ஆரம்பிப்பதேன்?
உளவியல் ரீதியாக நோக்கும் போது ஒரு பொருள் அல்லது நபர் நம்முடைய உடமையாகும் போது அதன் மீதான உரிமை அதிகரிக்கிறது. இதனால் கூட இவ்வாறானதொரு மனநிலை உருவாகக்கூடும். இதையே நமது மொழிநடையில் சொல்லப்பொனால் “கிணற்றுத் தண்ணீரை வெள்ளமா கொண்டு போய்விடும்?’ என்ற மனநிலையே இது. இப்படியானதொரு சிந்தனை நம்மில் பல மாற்றங்களை கூட ஏற்படுத்துகிறது.
- நமது காதலுக்கு முந்தைய குணவியல்புகளில் மாற்றம் (முன்னர் வழிகின்ற நாம் சிடுமூஞ்சாகின்றோம்)
- சிறு பிழைகள் கூட பூதாகரமானதொன்றாக தோன்றும்
- முன்னர் நாட்கணக்கில் அவள் அல்லது அவன் ஒரு வார்த்தை பேசமாட்டாரா என்று ஏங்கும் நாம் சிறுநேர தாமதத்தினை கூட பாரியதொரு பிரிவிற்கான தொடக்கபுள்ளியாக்குவோம்
நம்மில் ஏற்படுகின்ற இம்மாற்றங்கள் எதிர்பாலரிடமும் சில தாக்கங்களை உளவியல் ரீதியாக ஏற்படுத்த கூடும்.
- திடீரென்றான மாற்றங்கள் ஒருவித பய மனநிலையை தோற்றுவிக்க கூடும்
- தம்மில் தான் ஏதும் தவறோ என்ற குற்றவுணர்வினை ஏற்படுத்தக்கூடும்
- தம் மீதான அன்பு குறைவடைகிறதோ என்கின்ற சந்தேகத்தினை உண்டாக்கும்.
- சுற்றியுள்ளவர்களிடமிருந்து விலகி தனிமையை நாடுகின்ற தன்மையை அல்லது மனவழுத்தத்தினை ஏற்படுத்த கூடும்
- மாற்று அன்பை தேட கூடும்.
- ஏனையவர்களுடன் தன் காதலை ஒப்பிட்டு பார்க்க தூண்டும்.
ஆகமொத்தத்தில் காதலில் சிறு கீறல்களை உண்டாக்க ஆரம்பிக்கும். நாம் எப்போதும் தோற்பது காதலில் அல்ல நாம் காதலிப்பவர்களை தெரிவுசெய்வதில் தான் தோற்கின்றோம். நம்முடைய எதிர்பார்ப்புகள் என்ன? நமது எதிர்பார்ப்பு ஏற்ற வகையில் காதலன் அல்லது காதலி அமைவாரா? என்று சிந்திக்க வேண்டும். எப்போதும் தெரிவுகள் நம் கையில் தானிருக்கின்றன.
பலவிடங்களில் “அன்புள்ள அல்லது உரிமை உள்ள இடத்தில் தான் கோபம் உண்டாகும்” என்று வாசித்தும், கேட்டுமிருக்கின்றேன். எனக்கு இக்கருத்தில் உடன்பாடில்லை. அன்பை அன்பாக தான் காட்ட வேணுமுங்க…. ஏன் ஒருவரை காயப்படுத்தி தானா நம் அன்பை வெளிப்படுத்த வேண்டும்? சிறு தண்டணைகள், பழிவாங்கல்கள் மூலமாகத்தான் நமது உரிமையை நிரூபிக்க வேண்டுமா? அன்பால் இவற்றினை செய்தால் என்ன? காதலில் சம்மதங்களை தெரிவிக்கும் முன் அன்பை கொட்டுகின்றோம் தானே பின்னர் ஏன் அது குறைவுபடுகிறது? முன்னைய அன்பில் சிறு மாறல் ஏற்படுமாயினும் அது உண்மை அன்பில்லை என்பது என் கருத்து. நாம் சம்மதங்களை பெறுவதற்கு வேஷமிட்டிருக்கின்றோம் என்பது தான் இதன் அர்த்தம். ஒருவரை புரிந்துதான் காதலிக்க ஆரம்பிக்கின்றோம் என்றால் ஏன் நம் காதல் மாறுபட வேண்டும்?
- நம்மவர் நம்மை சந்திக்க வராதவிடத்து “ஏன் நீ வரவில்லை?” என்று கேட்டதல்ல “ஏதோ நடந்துவிட்டது அதனால் தான் வரவில்லை” என்று சிந்தித்தோமென்றால் அதுதான் புரிந்துணர்வு.
- “என்னைப்பற்றி நினைத்துப் பார்த்தாயா?” என்பதல்ல “என்னையே நினைத்துக்கொண்டிருப்பா(ள்)(ன்)” என்று சமாதானமாகிவிடுவோமே அது தான் பாசம்
- “நீ செய்தாய் நானும் செய்கின்றேன்” என்பதல்ல “நீ என்ன செய்தாலும் நான் உண்னை அதே அன்புடன் நேசிப்பேன்” என்பதே அன்பு
- எடுப்பதல்ல கொடுப்பதே காதல்
கல்யாணத்தில் முடிந்தால் மட்டும் காதல் இல்லைங்க…. அதே கா.மு இருக்கும் அன்புடன் கா.பி இருப்பார்கள் என்றால் அது தாங்க வெற்றியடைந்த உண்மைக்காதல். இந்தக்காதல் கல்லறை வரை தொடருமுங்க… (இது இல்லாட்டி தான் அம்மா,அப்பா கைகாட்டுபவருக்கு கழுத்தை காட்டலாமே… என்னத்திற்கு காதலிக்கனும்…….? அழுது அடம்பிடித்து மூக்கால் வடிந்து எல்லாம் கஷ்டப்பட்டு கைப்பிடிக்கனும்……????)
நம்மவர் மனதில் ஒரு கஷ்டம் என்றால் நமது இதயத்திற்கு வலிக்கனும்!!!!
No comments:
Post a Comment