ஒரு பெண்ணுக்கு எவ்வளவு தான் பொன் பொருள் கொடுத்து அனுப்பினாலும் பெற்றோர் கொடுக்காமலே அவள் புகுந்த வீட்டுக்குச் கொண்டு செல்லும் சொத்து அவளது பிறந்த வீட்டு ஞாபகங்கள்….. அப்பாவின் கோபங்கள் அம்மாவின் திட்டுக்கள் , அண்ணாவின் எச்சரிக்கைகள் , தம்பியின் சண்டைகள் என்று அவளின் ஞாபகக்குறிப்பின் பக்கங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
திருமணத்திற்கு முன் அப்பாவின் இளவசிகளாக அம்மாவின் ராஜாத்தியாக வலம் வரும் பெண்கள் திருமணத்தின் பின் நிச்சயம் பிறந்தகத்திலிருந்து ஒரு விலகலை உண்டாக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவது நிஜம். அதிலும் வீட்டாரை எதிர்த்து திருமணம் செய்தால் கேட்கவே தேவையில்லை… புதிய உறவினால் தாய் - தந்தை – மகள் உறவானது சிறிது விலகிலாலும் அநேகமாக முதல் பிரசவத்துடனோ அல்லது குடும்பத்தின் நல்லது கெட்டதுகளிலோ இணைவதுண்டு. ஆனால் சகோதர பாசமானது பந்த உறவுகளினால் நிச்சயம் பந்தாடப்பட்டு விடுவது பரவலான ஒன்று… நாம் இன்னொரு வீட்டிற்கு விளக்கேற்ற போவது போல் நம் அண்ணன் தம்பி குடும்பத்திலும் விளக்கேற்ற வரும் குத்துவிளக்குகளால் ஒரு நூல் அளவிலான விலகலாவது வராவிட்டால் அது குடும்பமாகவே இருக்காது.
தன் தங்கையை முன் பின்னாக காவல் காத்த அண்ணன்கள் இன்னொருவன் கையில் ஒப்படைத்த திருப்தியுடன் தன் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதும்… அக்காவை சதா சீண்டிக்கொண்டிருக்கும் தம்பிமார் அக்காவின் திருமணத்தின் பின் ஒரு இடைவெளியை பின்பற்றுவதும் எல்லா வீடுகளிலும் நடக்கும் விடயம். அதேபோல் அண்ணாக்களுக்கு பயந்தும் தம்பிகளுக்கு உச்சியில் குட்டிக்கொண்டும் திரியும் பெண்கள் அடக்கமாக கணவனே உலகம் என்று வாழத்தொடங்கிவிடவதுண்டு.
ஆனால் நம் வட்டங்கள் மாறத்தொடங்கினாலும் நம் சகோதரங்களுடனான செல்லச்சண்டைகளும் , கணநேர கோபங்களும் எப்போது புரட்டினாலும் இனிமை தரும் தருணங்கள்.
நீங்கள் டொம் அண்ட் ஜெர்ரி காட்டூன் பார்த்திருப்பீர்கள். இரண்டும் எப்பொது பார்த்தாலும் சண்டை போட்டுக்கொண்டு இருக்கும் இரு குணச்சித்திரங்கள். இப்படித் தாங்க என் வீட்டிலும் ஒரு டொம் இருக்கிறது. என்னுடன் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டும் எடக்குமொடக்காக பேசிக்கொண்டும்… பின்நோக்கி செல்கின்ற என் இனிய அன்புள்ள எதிரி டொம் இன் சில நினைவுகள்..
தம்பிக்கும் எனக்கும் இரு வருடங்கள் வயது வித்தியாசம். அவர் பிறந்திருக்கும் போது நான் பொறாமையில் அவர் தொட்டிலில் தூங்கும் நேரம் பார்த்து கிள்ளிவிட்டு ஓடிவிடுவேனாம். வீறிட்டு அழும் அவனை தாலாட்டிக்கொண்டே அம்மா அப்போதே சொல்லுவாராம் “தம்பி வளர்ந்த பின் உனக்கு அடிப்பான்” என்று. இதை கேட்டு வளர்ந்;ததாலோ என்னவோ அவன் வளர்ந்த பின் அவனிடம் நிறையவே அடிகள் வாங்கி அழுதிருக்கின்றேன்.
தம்பிக்கும் எனக்கும் இரு வருடங்கள் வயது வித்தியாசம். அவர் பிறந்திருக்கும் போது நான் பொறாமையில் அவர் தொட்டிலில் தூங்கும் நேரம் பார்த்து கிள்ளிவிட்டு ஓடிவிடுவேனாம். வீறிட்டு அழும் அவனை தாலாட்டிக்கொண்டே அம்மா அப்போதே சொல்லுவாராம் “தம்பி வளர்ந்த பின் உனக்கு அடிப்பான்” என்று. இதை கேட்டு வளர்ந்;ததாலோ என்னவோ அவன் வளர்ந்த பின் அவனிடம் நிறையவே அடிகள் வாங்கி அழுதிருக்கின்றேன்.
இரவில் அம்மாவிற்கு இருபுறமும் தூங்கிக்கொண்டு யார் காலை அம்மா மேல் போடுவது என்று பிடிக்கும் சண்டை கனவில் கூட தொடருவது இனிமை….
நான் பாடசாலை மாணவியாக இருக்கும் போது என்னுடன் காவலுக்கு வீட்டார் என் தம்பியைத் தான் அனுப்புவார்கள். இருவரும் இரு குட்டி சைக்கிள்களில் வீதிக்கு குறுக்கும் நெடுக்குமாக போட்டிக்கு சைக்கிளோட்டிக்கொண்டும் போவதுண்டு அவ்வாறு ஒரு நாள் போகும் போது ஒருவன் என்னை பகிடி பண்ணிய போது வழமையான துடுக்குத் தனத்தில் சைக்கிளை விட்டிறங்கி (சொர்ணா அக்கா ரேஞ்சில்) “என்னடா பயமுறுத்திறாயா? “ என்று கேட்ட போது “அக்காச்சி வாங்க போவம் எனக்கு பயமாயிருக்கு…” என்று சொன்ன என் வீரத்தம்பி இவரை நம்பித் தாங்க அப்போதெல்லாம் என் கூட அனுப்புவாங்க… அவரும் ஏதோ இளவரசியை காக்கின்ற பூதமாட்டம் தான் பில்டப் காட்டுவாரு… இப்போது அவர் பின்னால் பைக்கில் இருந்து போது அந்த நாட்களை நினைத்துக்கொள்வதுண்டு.
வீட்டில் கணவாய் கறி சமைக்கும் நாட்களில் கைகளில் மோதிரம் போன்று அவற்றை அடுக்கி யாரிடம் கூடுதலான மோதிரம் உண்டென சண்டை பிடித்த நாட்கள் பலவுண்டு
எத்தனையோ டீசெட்டுக்கள் உள்ள போதும் டெனீஸ் ப்ரக்டீஸ்க்கு போகும் போது தம்பியின் டீசெட்டை உடுத்திக்கொண்டு போவதிலுள்ள இன்பம் புது டீசேட்டில் கூட கிடைப்பதில்லை. அதை கழுவி தரும்படி அவன் பிடிக்கும் சண்டைகள் அதை விட அருமை.
தொலைக்காட்சியில் கிரிக்கெட் ஒளிபரப்பாகும் நாட்களில் எம்முள்ளும் ரிமோட் கண்ரோலுக்கான சண்டை ஒளிபரப்பாக தொடங்கிவிடும். சுண்டை உச்சமடையும் போது அம்மா இருவரையும் படிக்க அனுப்பி “வடை போச்சே” என்று நினைத்த நாட்களுமுண்டு…
பாடசாலை விடுமுறைகள் இருக்கிறதே… அவை தான் எமது யுத்தகாலங்கள். எம்மிருவரதும் சண்டைகள் முற்றும் சமயம் அம்மாவை தொலைபேசியில் அழைத்து கோள்மூட்டுவதுண்டு. சிலவேளை தொலைபேசியை அணைத்துவிடும் அம்மா மாலை வீடு திரும்பியவுடன் நன்றாக இருவருக்கும் சாத்துவதுமுண்டு.
ஆனாலும் ஒரு உண்மையை சொல்லித்தாங்க ஆகனும் எனக்கு விஞ்ஞான ஒப்படைக்கு கருவிகள் செய்து தருவது அவன் தான்… ஒரு காலத்தில் ஒப்படைக்கு சிவப்பு நிறம் அடிக்கப்பட்டதற்கு அவனது கைவண்ணம் தான் காரணம். (காலம் கடந்த உண்மை)
இப்போதும் விடுதியிலிருந்து வீட்டிற்கு போகும் போது “ அம்மா இந்த ஊத்த மண்ணுக்கு (என்னைத் தான்) விலையேறிட்டு… எப்படியிருந்தவள் இப்படியாகிட்டாள்…” என்றும் நான் கண்ணுக்கு மையடிப்பதை பார்த்து “ஐயோ பேய் மாதிரியிருக்கு…” என்றும் கலாய்க்க தவறுவதில்லை.
ஏனோ இப்போது தூரத்திலிருப்பதாலோ என்னவோ முன்னர் போன்று குடும்பிச் சண்டைகள் பிடிப்பதில்லை. கூடவே இருவரும் வளர்ந்து விட்டோம் என்பதால் ஏற்பட்டுள்ள முதிர்ச்சி, பருவத்தின் அடுத்த படிக்கான முன்செல்லல் என்று தம்பிக்கும் எனக்குமான டொம் - ஜெர்ரி தொடர் வெகுவாக குறைந்துவிட்டது.
ஆனாலும் இப்போதெல்லாம் விடுதி வாழ்க்கையின் தனிமையில் அன்று தொல்லையாக தெரிந்த தம்பியின் சீண்டல்கள் , செல்லச்சண்டைகளை மிஸ் பண்ணுவதை போன்றதொரு பீலிங்… ஆனால் இவையெல்லாம் வெறும் கடதாசியின் பக்கங்களாக இல்லாமல் கல்வெட்டின் செதுக்கல்களாகவே என்றும் இனிக்கும் நிமிடங்கள் என்பது மட்டும் உண்மை.
No comments:
Post a Comment