இன்று உலக சுற்றுலா தினம். இன்றைய சமூக ஊடகங்களில் தினங்களின் பெறுமதிகள் தெரியாமலேயே பகிரப்படுகின்றன. முக்கியமான தொனிப்பொருள்களுக்காக தினங்கள் பிரகடனப்படுத்தப்படுகின்றமைக்கான காரணங்கள் உண்டு. முதலாவது குறிப்பிட விடயம் தொடர்பாக விழிப்புணர்வூட்டுவது, இரண்டாவது எமது பங்களிப்பினையும் அவ்விடயங்கள் தொடர்பில் நல்குவது , மூன்றாவது இது தொடர்பிலான அபிவிருத்திகளுக்கான வழிகளை ஒருங்கமைத்து முன்னேற்றகரமாக முன்னகர்த்திச் செல்வது என தினங்களின் பிரகடனங்களின் பின் காரணங்கள் உள்ளன.
ஆனால் சுற்றுலா என்றதும் என்னுடைய ஞாபகத்தில் பல நிகழ்வுகள் வந்து போவதுண்டு. முதலாவது எனக்கு பயணங்கள் என்றால் நமது மொழியில் சொல்வதாயின் ஊர் சுற்றுவதென்றால் மிகவும் பிரியமானதொரு விடயம். சின்ன வயதில் எப்படியாவது அழுது புரண்டு அம்மாவின் பைக்கின் பின்னால் அமர்ந்துவிடுவதுண்டு. போகுமிடமெல்லாம் நானும் போகவேண்டும். சிலநேரங்களில் இதற்காக பிடிவாதம் பிடித்து வாங்கிக்கட்டிக்கொண்டதும் உண்டு. பின்னர் அண்ணா பைக் வாங்கியவுடன் அண்ணாவிடம் சென்டிமென்டாக கதைத்து அல்லது அழிச்சாட்டியம் பண்ணி ஊர் சுற்றுவதுண்டு. அதுவும் நல்லா வேகமாக ஓடுங்கள் என்று பின்னாலிருந்து அண்ணாவை நச்சரிப்பதுண்டு. அத்துடன் வருடத்தில் ஒரு தடவையாவது எல்வோருமாக திட்டமிட்டு ஏதாவதொரு இடத்திற்கு ஒரு நாள் பயணம் போய் வருவதுண்டு. அவ்வாறு பயணம் போகும் தினம் நான் பண்ணுகின்ற அட்டகாசங்கள் நிறையவுண்டு. காலையில் அம்மா எழுப்பினால் கும்பகர்ணி போல் தூங்கும் நான் பயணம் போகும் நாளன்று மட்டும் யாரும் எழுப்பாமல் எழும்பி குளித்து வெளிக்கிட்டு தயாராகிவிடுவதுண்டு. முதல் நாள் வயது போன குடும்ப அங்கத்தவர்களிடம் ஒரு விசிட் அடித்து காசும் சேர்த்து விடுவேன். அதை தம்பியிடம் காட்டி அழவைத்து அடுத்தநாள் நன்றாக செலவழித்து நான் காட்டும் படம் பெரிதாயிருக்கும்.
பாடசாலை காலங்களில் சுற்றுலா செல்வதென்றால் முதல் ஐந்து பேர்களில் என் பெயரிருக்கும். வீட்டாக்கள் இலகுவில் எனக்கு அனுமதி தந்து விடுவதில்லை. இதனால் சாப்பிடாமல் அழுது ஒப்பாரி வைத்து முகம் வீங்கி, அடி வாங்கி கடைசியில் அம்மா கண்கலங்கிய படி தலையாட்டும் வரை என் பிடிவாதங்கள் வலுப்பெற்றிருக்கும். அப்போதே பாடசாலை சுற்றுலா போவதென்றால் எனது வீட்டாக்கள் பொரியல், அச்சாறு என்று வைத்து சாப்பிடக்கூடிய உணவுகள், தேவையான உடைகள் என அவர்களே எல்லாம் தயார் செய்துவிடுவார்கள். போகும் போது முழுக்குடும்பமும் வழியனுப்ப வந்து மற்றவர்கள் என்னை பகிடி செய்வதற்கு வழிசெய்வார்கள். ஏதோ நான் வெளிநாடே போவது போல் இருநாள் சுற்றுலாவிற்கு என்னை கொஞ்சி, பல முறை கவனம் சொல்லி, வருகின்ற ஆசிரியர்களிடம் சிறப்பு எச்சரிக்கை கொடுத்து என்னை அனுப்பி வைப்பார்கள். படிக்கும் போது விளையாட்டுப் போட்டிற்காகவும், இசை நிகழ்விற்காகவும் மூன்று நாடுகள் பயணித்திருக்கின்றேன். ஆனால் அது சுற்றுலாவிற்குள் அடங்காது. கிளியை கூட்டில் வைத்து கொண்டு போய் சீட்டெடுக்கச்சொல்லி பின்னர் மீண்டும் கூட்டுக்குள் அடைப்பது போன்ற அனுபவங்கள் அவை.
பின்னர் உயர்கல்வி பயில ஆரம்பித்த போது மாற்றி மாற்றி பரீட்சைகள், பிரத்தியேக வகுப்புக்கள் என்று எல்லோரும் சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பல்கலைக்கழக காலத்தில் எனக்கான கட்டுப்பாடுகள் அதிகரித்துவிட்டிருந்தன. இதனால் எங்கும் போக அனுமதியில்லை. என்னுடைய உச்சபட்ச பயணம் Waters Edge - Film Cooperation வரை தான் நீண்டிருந்தது. பின்னர் தான் பொற்காலம் ஆரம்பமாகியது பல நாடுகளுக்கான பயணங்கள். இவை தான் என்னுடைய உலகத்தை விரியச்செய்தவை. அம்மாவும் என் குடும்பமும் தம்முடைய கைகளுக்குள் பொத்திவைத்திருந்த என்னுடைய கையை சற்றே தளர்த்திய தருணங்கள். ஆனாலும் சில மணிநேரங்களுக்கொரு தடவை இன்று வரை என்னை தொடர்புகொண்டுகொண்டே இருப்பதுண்டு. பரவாயில்லை இதுவும் அன்பினொரு வடிவமே..
என்னைப் பொறுத்தளவில் சுற்றுலா என்பது வெறும் பயணங்கள் அல்ல. இதுவரை பதினான்கு நாடுகள் பயணித்துள்ளேன். ஏதிர்வரும் மாதம் மேலும் இரு புதிய நாடுகள் பயணிக்க வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இப்பயணங்களில் நான் சில விடயங்களை முன்னதாகவே தயார் படுத்தி விடுவதுண்டு.
- பயணத்தில் நோக்கத்தின் அடிப்படையில் சில நிகழ்வுகள் முன்கூட்டியே ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும். அதனை குழப்பாத வகையில் வேறு நிகழ்வுகள் நான் தங்கியிருக்கும் நாட்களில் நடைபெறுமா என ஆராய்ந்து அதிலும் பங்குபற்றுவதற்கு திட்டமிட்டு விடுவேன்.
- அந்நாட்டிலுள்ள முக்கிய இடங்கள், அருங்காட்சியகங்கள் இருப்பின் அவற்றிற்கான பயணங்களை ஒழுங்கமைப்பு செய்வேன்.
- குறிப்பிட்ட நாட்டிலுள்ள என் நண்பர்கள், தொழில்சார் நபர்களை தொடர்புகொண்டு அவர்களுடனான சந்திப்புக்களை ஒழுங்குபடுத்துவேன். அத்துடன் யாராவது கிரஷ் இருந்தால் சேர்ந்து பயணிக்க கேட்பேன்.
- நிச்சயம் அந்நாட்டின் பிரபலமான புத்தகம் ஒன்றினை வாங்கிவிடுவேன். குறைந்தது ஒன்று கூடியது எத்தனை புத்தகமாகவும் இருக்கலாம்.
- என்னுடைய குடும்பத்தினருக்கு நான் பரிசளிக்க நினைக்கும் நினைவுப்பொருட்களைத் தேடி வாங்குவதுண்டு. கூடவே “என்னவர்”க்காகவும் சில கலைப்பொருட்களை வாங்கிவருவதுண்டு. சேமித்தும் வைத்துள்ளேன். நிச்சயம் நம் ஆள் கலை ரசனை உடையவராகவிருப்பார் என நம்பிக்கை உண்டு. (வேறென்ன கலை இரசனை உடையவர்கள் தமக்கானவர்களையும் இரசிகர்களாகவே தான் தேடிக்கொள்வதுண்டு)
- சிறு வேலைகள் கிடைத்தால் சில மணிநேரங்கள் மட்டும் வேலை செய்து சம்பாதிப்பேன். அது எனக்கு மிகவும் பிடித்த விடயம். இது பணத்திற்கானதல்ல ஒரு நாட்டின் பண்பை அம்மக்களது வாழ்வியலை அறிவதற்கானதொரு வழி.
- மிக முக்கியமாக அந்நாட்டின் பிரதான உணவுகளை தேடிச் சுவைப்பதுண்டு. முடிந்தால் செய்முறைகளையும் தெரிந்து குறித்துக்கொள்வேன்.
- கட்டாயம் Bike Ride போய்விடுவேன். எனக்கு மிக மிக பிடித்த விடயங்களில் ஒன்று இந்த பயணம். பின்னால் அமந்து எதிர் காற்று முகத்தில் அன்பாக அறைய அதை அனுபவித்து பயணிப்பது என்னுடைய நாட்குறிப்பின் முக்கியமானதொரு பகுதி.
ஆக என்னுடைய சுற்றுலா என்பது மனிதர்களைப் படிப்பதாக, என்னுடைய துறைசார் விடயங்களை கற்பதற்கான மற்றும் என்னுடைய நாட்களை இரசனையாக மாற்றுவதற்கானதொரு வெளி என நான் நினைக்கின்றேன். பயணியுங்கள்… பயணங்களை விட மனிதர்களை அவர்களது வாழ்வியலை அறிமுகம் செய்யும் ஆசான் வேறெதுவுமில்லை. என்னுடைய கற்பனைகளில் என்னுடைய துணைவரும் அவ்வாறே அமைய வேண்டும் என பிராத்திப்பதுண்டு. இருவரும் இணைந்து சுற்ற வேண்டும். குழந்தைகளையும் உணரும் பருவம் வந்தவுடன் நிறைய பயணங்கள் கூட்டிச்செல்ல வேண்டும் என இப்போதே கற்பனைகளில் நினைத்துப் பார்க்கின்றேன். பயணம் அவர்களுக்கும் கற்றுக்கொடுக்கும்….
இந்தப்பாடல்களும் அதையே தான் சொல்கின்றன.
- https://www.youtube.com/watch?v=SdcAN3dobz4&list=RDSdcAN3dobz4&start_radio=1
- https://www.youtube.com/watch?v=bDorKQg8Uyc&list=RDbDorKQg8Uyc&start_radio=1
- https://www.youtube.com/watch?v=QrLrsWwUp04&list=RDQrLrsWwUp04&start_radio=1
- https://www.youtube.com/watch?v=OTsOIpHd7_M&list=RDOTsOIpHd7_M&start_radio=1
- https://www.youtube.com/watch?v=M-B1kXj1iEY&list=RDM-B1kXj1iEY&start_radio=1
Safe Journey.....