தன்னுடைய கணவனின் தந்தையை வைத்து பராமரிக்க முடியாது என மனைவி: தாயை இழந்து சிறுவயதிலிருந்தே தன்னை வளர்க்கும் தன் தந்தை தன்னுடன் தானிருக்க வேண்டும் என் வாதிடும் கணவன் என ஆரம்ப காட்சியே குடும்ப நீதிமன்றத்தில் இருவரும் வாதிடம் காட்சியுடனேயே ஆரம்பிக்கின்றது அஸ்கர் பிராடி (Asghar Farhadi) இயக்கியுள்ள எ செப்ரேஷன் (A Separation) . 2011 இல் வெளிவந்த இந்த ஈரானிய திரைப்படம் குறித்த என்னுள்ளான தாக்கமே இப்பதிவு...
நீதிமன்ற காட்சியை தொடர்ந்து வீட்டுக்கு செல்லும் மனைவி தன்னுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறி விடுகின்றாள். அலுவலகம் செல்லும் தானும் பாடசாலை செல்லும் தனது 11 வயது மகளும் வெளியேறிய பின் தன் தந்தையை பராமரிக்க ஒரு வேலைக்கார பெண்ணினை நியமிக்கின்றான் கணவன். பாலர் பாடசாலை செல்லும் தன் மகளுடன் அந்த வயோதிபரை பராமரிக்க வருகின்ற அந்த வேலைக்கார பெண் ஒரு நிறைமாத கர்ப்பிணி. தன்னையே பராமரித்துக்கொள்ள முடியாத நிலையிலுள்ள அந்த வயோதிப தந்தையினை கடும் சிரத்தைக்கு மத்தியிலும் பராமரிக்கின்றாள் அந்த பெண். மூன்றாம் நாள் திடீரென வேலை விட்டு வரும் மகன் வீட்டில் யாரும் இல்லாதிருப்பதை கண்டு அதிர்ச்சியடைகின்றான். உள்சென்று பார்க்கும் போது தன் தந்தை கட்டிலிலிருந்து விழுந்து கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பதை கண்டு கோபம் கொள்கின்றான். அந்த நேரம் பார்த்து வெளியிலிருந்து வரும் வேலைக்கார பெண்ணினை கோபத்துடன் கடுமையாக பேசுகின்றான். தான் இரு நாட்கள் வேலை செய்ததற்கான பணத்தினையாவது தரும் படி அந்தப் பெண் வாக்குவாதப்படுகின்றாள். ஏற்கனவே தந்தையின் நிலையினை பார்த்து குழம்பியிருக்கும் அவன் அவளை வெளியே தள்ளி கதவை சாத்திவிடுகின்றான். அடுத்த நாள் அந்தப் பெண் தன்னுடைய கர்ப்பம் கலைவதற்கு அவன் தான் என்று முறையிடுகின்றாள். பலவித வாக்குமூலங்கள் மற்றும் குழப்பங்களுக்கு பின் மனைவியே நேரடியாக அந்தப் பெண்ணை சந்திக்கின்றாள். 'கர்ப்பம் கலைவதற்கு காரணம் அவனல்ல அவளுக்கு வீதியில் ஏற்பட்ட விபத்து என்றும் தன்னுடைய கர்ப்பம் தன் கவலையீனத்தினால் கலைந்துவிட்டதை தன் கணவன் கேட்டால் ஆத்திரப்படுவான் என்று அவள் பொய் சொல்லியுள்ளாள்' என்பதனையும் அறிந்துகொள்கின்றாள். அந்தப்பெண்ணின் மேல் பரிதாபம் கொண்டு தன் கணவனிடம் 'நீ தான் காரணம் , பணத்தினை கொடுத்து சரி செய்துவிடுவோம்' என் பொய் சொல்லி பணம் கொடுக்கவும் ஏற்பாடு செய்கின்றாள். பணங்கொடுக்கும் முன் குறானில் சத்தியம் செய்யும் படி விவாகரத்து செய்யவுள்ள கணவன் கேட்கின்றான். பொய் சொல்லவும் முடியாமல் உண்மை சொன்னால் தன் கணவன் கோபப்படுவான் என்றும் மௌனம் சாதிக்கின்றாள் அந்த வேலைக்கார பெண். பிறகு என்னாகின்றது என்பதுடன் ஆரம்பத்தில் குறிப்பிட்ட கணவன் - மனைவிக்கான விவாகரத்திற்காக அவர்களுடைய மகள் யாருடன் போக தீர்மானிக்கின்றாள்? என்பதாக முடிவுறுகிறது இத்திரைப்படம்.
இத்திரைப்படத்தில் என்னைப்பாதித்த இரு பாத்திரங்கள் விவாகரத்திற்காக விண்ணப்பித்த தம்பதிகளின் 11 வயது மகளும் வேலைக்கார பெண்ணின் 4 வயது சிறுமியும். இந்த நான்கு வயது குழந்தை தனக்கு ஒரு தம்பி வேண்டும் என்று மேடுட்டுள்ள தன் தாயின் வயிற்றை தடவி அந்த பெண் குழந்தை கேட்பதும், வயிற்றுள் குழந்தை அசைவதை தொட்டுணர்வதும் ... தன்னுடைய சித்திர கிறுக்கல்களில் எல்லாம் தனக்கருகில் குட்டி உருவம் ஒன்றை வரைவதும்... ஒருவிதமான கவிதை. வயோதிபரை பராமரிக்கும் தன் தாய் அவரை கழுவுவதற்காக குளியலறையினுள் செல்லும் போது ' அப்பாவிடம் சொல்ல மாட்டேன்' என்று சொல்லுமிடத்தில் அந்த சமூகத்தில் உள்ள ஆணாதிக்கங்கள் எவ்வாறு குழந்தைகளையும் அவர்கள் உணர்வுகளையும் ஆக்கிரமிக்கின்றன என்பதை சொல்லாமல் சொல்கின்றன. இரு குடும்பங்களும் வாக்குவாதப்பட்டுக்கொண்டிருக்கும் போது உள் சென்று அந்த வயோதிப தந்தையுடன் இந்தக் குழந்தை கதைக்கும் காட்சி அவர்களது கள்ளமற்ற மனதை அழகாக காட்டி நிற்கின்றது.
வயோதிப தந்தையை அவரது கடைசிக்காலத்தில் வைத்து பராமரிக்க வேண்டும், நியாயமற்ற முறையில் எதனையும் செய்யக்கூடாது என்று நினைக்கின்ற அப்பாவிற்கும், எப்பாடுபட்டாவது ஒரு பெண்ணின் எதிர்காலத்தினை காப்பாற்ற வேண்டும், அடுத்தவர் சந்தோஷத்திற்கான அதர்ம வழியில் போனாலும் பரவாயில்லை என்று நினைக்கின்ற அம்மாவிற்கும் இடையில் உணர்ச்சிகளுக்குள் சிக்கித்தவிர்க்கின்றதொரு பாத்திரம் 11 வயது பெண்ணுடைய பாத்திரம். அம்மாவும் நல்லவள் தான் என்று தெரிந்த போதும் அப்பா – மகளுக்கு இடையிலானதொரு பிணைப்பினால் தன் தந்தையுடன் தங்கிவிடுமுகின்ற அந்த வயதுக்கேயுறிய ஈர்ப்பினை அழகாக காட்டுகின்றார் அஸ்கர் பிராடி. இறுதியில் யாருடன் போக விருப்பம் என்று நீதிபதி கேட்கும் போது தடுமாறுகின்ற இந்தப்பாத்திரம் நிச்சயம் ஒவ்வொரு பெண் குழந்தைகளினதும் மனதினையும் அதன் போராட்டங்களை பிரதிபலிக்கின்றது என்று தான் நான் நினைக்கின்றேன். இதே ஒரு ஆண் குழந்தை எனில் இந்தளவு தடுமாற்றம் ஏற்படுமா? என்பது கேள்விக்குறியே...
நம்முடைய குழந்தை பருவத்தினை எடுத்துக்கொள்ளுங்கள்.. சிறு வயதில் யாராவது நம்மிடம் அம்மாவுடன் விருப்பமா? அப்பாவுடன் விருப்பமா? என்று கேட்டால் எமது பதிலினை அந்த நிமிடம் மட்டும் தான் கட்டாயம் தீர்மானிக்கும் ( அதட்டுகின்ற அம்மா தூரப்போய் சொக்லட் தருகின்ற அப்பா பதிலுக்கான விடையாகுவார் அல்லது அப்பாவிடம் அடிவாங்கி அழுகின்ற போது அரவணைக்கின்ற அம்மா பதிலாகிப்போவார்) அதுவே சற்று பருவ வயதை அடைந்துவிட்டால் ஆணென்றால் 'அம்மா' என்றும் பெண்ணென்றால் 'அப்பா' என்றும் நம் பருவ உளவியல் ஆர்வங்கள் தீர்மானிக்கும்... நான் அப்பா பிள்ளை என்றோ அம்மா பிள்ளை என்றோ சொல்வதில் ஒருவித கர்வம் கூட இருக்கும்... இதே கேள்வி 16 வயதினை தாண்டியபின் யாராவது கேட்டால் சட்டென்று பதில் வராது சற்று நிதானித்தே அந்த பதில் வெளிப்படும். 25 வயதின் பின் கேட்கப்பட்டால்....? பல மௌன நிமிடங்கள் தேவை நம் ஒரு வார்த்தை பதிலுக்கு. அதில் கூட ஏகப்பட்ட தடுமாற்றங்கள் இருக்கும்... சொல்கின்ற பதில் கூட தனிமையில் நம்மை பல நேரங்களில் சிந்திக்க தூண்டும். சில வேளைகளில் இதற்கு பதில் தெளிவாகுவது கூட இல்லை.
நம் தமிழ் சினிமாப்படங்கள் மட்டும் தான் என்றும் மகன் - தந்தை அல்லது மகள் - தாய் உறவு என எதிர்பால் உறவினை மையப்படுத்திய திரைக்கதைகளுடன் வெளிவருகின்றன. இதையே நம் படைப்பாளிகள் எடுத்திருந்தால் பெற்றோரின் கையை அந்தக்குழந்தை பிடித்துக்கொண்டு போவதாக அல்லது யாராவது ஒருவர் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என் பஞ்ச் டயலொக் சொல்லி சேர்த்து வைப்பதாக தான் முடிவிருந்திருக்கும். ஆனால் நூற்றிற்கு தொன்னூறு குடும்பங்களில் இதற்கான சாத்தியக்கூறுகள் உண்டா என்பது ஆய்வுக்குறியதொன்று... எ செப்ரேஷன் திரைப்படத்தின் இறுதிகட்டம் போன்று விடை தெரியா குழந்தைகளே அதிகம் என்பது என் கருத்து. திரைப்பட இறுதியில் கண்ணாடி தடுப்பிற்கு ஒரு பக்கம் தந்தையும் மறுபக்கம் தாயும் என முடிவுறும் இப்படத்தின் காட்சி போலவே மனதும் தராசு தட்டாக எந்தப்பக்கம் தாழ்வது என்று ஊசலாடிக்கொண்டிருக்கும்.
விவாகரத்தாகும் பெற்றோருக்கு இடையில் உணர்வுகளுள் சிக்கி தவிர்க்கும் குழந்தைகளின் மனநிலையை இதைவிட அழகாகவும் ஆழமாகவும் தெளிவாகவும் காட்டிட முடியாது என்று தான் கூறவேண்டும். அதைவிடவும் இதற்கு முடிவு எழுதாமல் எம்மிடமே அஸ்கர் பிராடி விட்டுவிடுகின்றது தான் இந்த திரைப்படத்தின் வெற்றி என்றும் சொல்ல வேண்டும்.
திரைப்படம் பார்த்ததிலிருந்து பல நாட்கள் இதன் தாக்கம் மட்டும் என்னுள் தொடர்கின்றது. இப்போது என்னையும் இந்த வினா கடந்து கொண்டு தானிருக்கின்றது... நாளை என் குழந்தையையும் இந்த கேள்வி கடக்கத்தான் போகின்றது... கூடவே உங்களையும்....
No comments:
Post a Comment