மீண்டும் குழந்தை ஆகிட வேண்டும்......

புத்தக சுமையில்லை
ஆசிரியரின் பிரம்படிகளிலில்லை
வீட்டு வேலைகளுக்கான நெருக்கல்கள் இல்லை
குழந்தையாகவே இருந்திட்டால்...

வீதியில் விடலைகளின்
பார்வையை சந்திக்க தேவையில்லை
பரீட்சை பெறுபேற்று பயமில்லை
முகத்தில் தோன்றும் பரு பற்றிய கவலையில்லை
தினமும் கண்ணாடி முன் காட்சி தர தேவையில்லை
குழந்தையாகவே இருந்திட்டால்..

பருவமாற்றத்திற்கான விளக்கங்கள் தேவையில்லை
அடக்கம் பற்றி அம்மாவின் நச்சரிப்பில்லை
வேவு பார்க்கும் அண்ணாவிடம் அச்சமில்லை
அப்பாவின் முறைப்புகளுமில்லை – நான்
குழந்தையாகவே இருந்திட்டால்..

சேலை கட்டும் உபத்திரவமில்லை
வேலை தேடும் கட்டாயமில்லை
காதல் கடிதங்களுக்கு பதில் போட தேவையில்லை
கணவனாக வரப் போகிறவன் பற்றிய கனவில்லை
குழந்தையாகவே இருந்திட்டால்...

சீதனப் பிரச்சினைகளில்லை
பிரசவ வலியில்லை
மாமியார் கொடுமையில்லை
பிறந்திட்ட பிள்ளைகளுக்கான பத்தியங்களில்லை
குழந்தையாகவே இருந்திட்டால்.....

மதமில்லை
இனமில்லை
வஞ்சகமில்லை
பயமில்லை...குழந்தைகளுக்கு


இறைவா!
யான் யாசிப்பதெல்லாம்
மீண்டும் பிறவிபெற்றால்
வளராத வரம் வேண்டும்!
கள்ளமில்லா சிரிப்புடன்
பகை மறந்து வாழும் - என்
குழந்தைப் பருவமே போதும்
நீ அருளிட்டால் - உனக்கு
தந்திடுவேன் - என்
இனிய மழலை முத்தங்கள்......

Comments

Popular posts from this blog

நிறம் மாறும் மனிதர்கள்

இரும்பில் முளைக்கின்ற இதயங்கள்

மனம் + மனம் = திருமணம் (02)